ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

என்ன சம்பந்தம்??


கந்து வட்டி அசலுக்காக
தன் பெட்டிக் கடையை விற்றவனுக்கும்
சைபரஸில் வங்கியை முடக்கி வைத்திருக்கும்
ஐரோப்பிய யூனியனுக்கும் என்ன சம்பந்தம்??

புகழூர் தொழிற்சாலையில்
வேலை பார்த்துக் கிடைத்த உபகாரப் பணம் பற்றி
பனமாவில் முகவரி இல்லாத கம்பெனியின்
ஃபண்ட் மேனேஜருக்கு தகவல் எப்படிப் போய்
சேருகிறது?

தர்மபுரி ஜாதிக் கலவரத்திற்கு
கண்டனம் சொல்லும் பிரிட்டனின் சதுரங்கத்தில்
டெஸ்கோவுக்கும், ஆர்.பி.எஸ்க்கும், வேறு சிலவற்றிட்கும்
இந்தியாவின் பெயில் அவுட் கிடைத்துவிடுமா?

நோவர்டிஸை துரத்தி விட்ட
இந்தியாவின் கைகளில்
எத்தனை ஆராய்ச்சிக் கூடங்கள்
தமக்கு இத்தனை எலிகள் இன்னும் வேண்டும் என்று
ஆருடம் சொல்லப் போகின்றன??

மருத்துவ உபகரணம் என்று
இறக்குமதியாகும் பொம்மைகளில்
சுங்கவரித் துறையின் டார்கெட்டுகளை
எத்தனை ஆண்டுகளில் நிவர்த்தி செய்யும்
சீனா??

இன்று சாப்பிட்ட மோர் மிளகாய் வற்றலுக்கும்
நாளை நடக்கவிருக்கும் அண்ணாச்சியின் தற்கொலைக்கும்
அடுத்தநாள் பங்குச்சந்தைப் பட்டியலில்
சேரவிருக்கும் வால்மார்ட்டிற்கும் என்ன சம்பந்தம்??

--ஜீவ.கரிகாலன்

வியாழன், 25 ஏப்ரல், 2013

அவன்,இவன்,இன்னொருவன்


அவனுக்கும், இவனுக்கும், இன்னொருவனுக்கும்
தனித்தனியாகக் கூட்டம் இருக்கின்றது....

இவன் இங்கே கெட்டவன்,
அங்கே நல்லவன்,
இன்னொரு இடத்தில் அப்பாவி,
மற்றொரு இடத்தில் மகத்தானவன்.

அவன் இங்கே அப்பாவி,
அவன் அங்கே நல்லவன்,
அவன் இன்னொரு இடத்தில் கெட்டவன்,
மற்றொரு இடத்தில் மறைந்து வாழ்பவன.

இன்னொருவன் எங்கேயும் நல்லவன்,
எங்கேயும் கெட்டவன்,
இன்னொரு இடத்தில் அப்பாவி,
அதே இடத்தில் சதிகாரன்
மற்றொரு இடத்தில் கோமாளி

நீங்கள் எந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்??
எந்த நாட்டைச் சேர்ந்தவர்??


ஜீவ.கரிகாலன்

திங்கள், 22 ஏப்ரல், 2013

ஐயப்ப மாதவன் கவிதைகள் : நண்பனின் துயர்

எப்போதும் போலவே ரயில்களில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறாள்
மாதச்சம்பளத்தை எண்ணி வாங்குவதற்காகவே ராஜி
சில வருடங்களாகவே நன்கு பழகிவருகிறேன்
மிருதுகொண்ட உள்ளத்திற்காய்
எப்படியாவது பார்த்துபேசிவிடுவதுண்டு இருவருக்குமிடையிலான
தேநீர்கோப்பைக்களுக்கிடையில
ஒவ்வொரு உறிஞ்சுதலுக்குமிடையில்
நான் அவளுக்கான அன்பில் அக்கறைகொள்வேன்
அவள் எனக்கான அன்பில் அக்கறைகொள்வாள்
நான் அவள் காதலனுடன் நண்பனாக இருந்தேன்
அவள் என் காதலனுடன் தோழியாக இருந்தாள்
நண்பனும் தோழியும் எங்களுக்கிடையே
ஊடல்களை தீர்த்துக்கொள்ள விழைந்தனர்
ராஜி அவள் பெயரில் என் காதலை உணர்ந்துபோது
உயரப்பறக்கும் பட்டத்தின் வாலில் மகிழ்வேன்
திட்டமிட்டதுபோல் சில நாட்களாய் அழைத்திருக்கவில்லை
தேநீர் விடுதிக்கு வருபவள் வரவுமில்லை
அன்றிரவு ஆனால் நான் எதிர்பார்க்கவில்லை
ராஜி ஏறி இறங்கும் ரயிலின்
தண்டவாளத்திற்குள் உயிரை விடுவாளென்று
இரும்புச்சக்கரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவள்
தேநீர் பருக வரும் ராஜிபோல இல்லை
நான் அழவே இல்லை
இது வேறு ராஜி என்று நினைத்துக்கொண்டேன்
ஆனால் அவள் எனக்கு இப்போது அழைப்பதில்லை
அந்த தேநீர்கடைக்கு வருவதுமில்லை
என் ராஜிதான் இறந்திருப்பாள் போலும்
அவளைக் காணாத கண்களில் அவள் காதலுனும்
என் காதலியும் கரைந்துபோயிருந்தார்கள்.

நண்பனின் ஆறுதலுக்காய்.....

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 18 சந்தைப் பொருளாதாரமும் தலித் நலனும்


பஜ்ஜி-சொஜ்ஜி - 18 சந்தைப் பொருளாதாரமும் தலித் நலனும்


ஒரு கட்டத்தில் முழுக்க முழுக்க பொதுவுடைமைச் சித்தாந்தத்தை மட்டும் விரும்பி வந்தேன், அதுவே உண்மையான சமூக நீதியைப் பெற்றுத் தரும் என நம்பினேன். தனியார்மயமும், கட்டற்ற சந்தைப் பொருளாதாரம் நமது சமூகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து என்று நினைத்து வந்தேன்.
மராட்டியத்தின் சங்கிலி எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் தான் அஷோக் காடே, இன்று கிட்டதட்ட 5000 பேருக்கு மேல் அவரது பொறியியல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்(DAS Offshore Engineers Pvt Ltd ), மேலும் அவர் வைத்திருக்கும்  கார்ப்பரேட் பண்ணையிலும் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் அந்தப் பகுதியில் வாழும் உயர் சாதியினர் ஆவார்கள்.

அஷோக் காடே செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்த தந்தைக்கு மகனாகப் பிறந்தவர். வறுமையில் வாடிய குடும்பத்தில் அவர் தன் வெற்றிப் பயணத்தைத் தொடங்கிய இடம் இது தான்: ஒரு மழை நாளில் தொழில் செய்ய முடியாது போன தன் தந்தையால் அன்றைய உணவுக்கு வழி தேடிக் கொடுக்க முடியவில்லை, அடுத்த நாள் தன் கணிதத் தேர்வை வெற்று வயிற்றுடன் எழுதினார். அந்தக் கணிதத் தேர்வில் அவர் பசி அவருக்கு நூற்றுக்கு நூறைப் பெற்றுக் கொடுத்தது. ஆனால் அவர் வறுமை அவர் பள்ளியில் தொடர்வதைத் தடுத்து நிறுத்தியது.

அதில் சோர்ந்து விடாத அஷோக் காடே, வேலை தேடி மும்பை சென்றார், துறைமுகம் சார்ந்த பணியில் ஆரம்பித்த இவர் பயணம், ஜெர்மனியில் சில காலம் வேலை பார்த்து தன் திறன்களை, தொழிலறிவு போன்றவற்றை வளர்க்க உதவியது. அது அவரை 1992ல் தன் வேலையைத் துறந்து சொந்தமாக தொழிலைத் தொடங்கிட நம்பிக்கையைக் கொடுத்தது. இன்று 150க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கும் வேலை கொடுத்துள்ளது இவர் நிறுவனம். தான் வாழ்ந்த கிராம்த்திற்கு திருப்பி செய்ய வேண்டும் என்று விரும்பிய அஷோக் காடே அந்த ஊரில் 80 ஏக்கர் பண்ணையை நிறுவி தன் கிராம மக்களுக்கு வேலையளித்தார். அவர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட கோயிலையே அவர் புதிப்பித்து அந்தச் சமூகத்திற்கு சாதியிலிருந்து கிடைத்த சமூக விடுதலையை பதிவு செய்துள்ளார். அஷோக் காடே தலித் சமுதாயத்தின் மிகப் பெரிய தலித் தொழிலதிபராக இன்று முன்னுதாரணமாக வாழ்கிறார்.

பொருளாதாரத்தில், இப்படிப்பட்ட சாத்தியங்களை உருவாக்கிக் கொடுக்கும் சந்தை சாதிப் பிரிவினைகளிலிருந்து வெளி வரும் சூழலை உருவாக்குகிறது. இந்த தடைகளற்ற சந்தை யாரையும் உள்ளே வர, வர்த்தகம் செய்ய, முன்னேற வாய்ப்பளிக்கிறது என்றால் இந்த அமைப்பைக் குறை சொல்வது தவறு. அமெரிக்காவின் பென்னிசில்வேனியா பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் ,இன்று இதே சங்கிலி மாவட்டத்தில் 17க்கும் மேற்பட்ட தலித் தொழிலதிபர்கள் இருக்கின்றனர் என்றுத் தெரிய வருகிறது. இவர்கள் தொழிலில் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் உயர் சாதி வகுப்பினர்கள் வேலை பார்த்து வருகின்றனர் என்பது தான் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

உத்திரப் பிரதேசத்திலும் இன்றையப் பொருளாதாரச் சூழலில் தங்களது சமூக நிலைகளில் (தாழ்த்தப்பட்ட நிலை) இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட ஆய்வை CASI கண்டறிந்துள்ளது. தலித்துகள் கையில் இருக்கும் முதல், சாதிக்கு எதிரான ஆயுதமாக உபயோகிக்க முடியும் என்று சாத்தியப் படுத்தியுள்ளன இந்த ஆய்வுகள். மேலும் இந்த ஆய்வில், இன்று டெல்லியில் உள்ள நவீன வர்த்தகக் கட்டிடங்களில் பணியாட்களாக தலித்துகளின் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் தலித்துகள் அல்லாதோர் தான் இருக்கின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

தலித் நலன்களுக்காகவே உருவான DICCI எனப்படும் தலித்துகளுக்கான வர்த்தக மற்றும் தொழில் அமைப்பு இந்தியாவின் எல்லா மூலைகளிலும் தலித்துகளுக்கான தொழில் வாய்ப்புகளில் உதவி செய்து வருகிறது. சங்கிலி மாவட்டத்தைப் போல இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றம் நிகழுமாயின், மிகப் பெரிய அளவில் சாதி பற்றிய நம் வேற்றுமைகள் மறையும் என்பது நிதர்சனம். அதற்கு சந்தைப் பொருளாதாரம் மிக முக்கியமான பங்கை ஆற்றுகிறது என்பதை மறுக்க முடியவில்லை.

முதலாளித்துவமோ, தளர்த்தி வைக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரமோ தலித் நலனைக் கொள்கையாகக் கொண்டவையல்ல தான், ஆனால் சரியான முறையில் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் சாதிப் பாகுபாடுகளை, வேற்றுமைகளை ஏன் சாதியமைப்பையே மாற்றியமைக்கும் என்பதும் நிதர்சனம்.

- ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா, சந்திர பான் பிரசாத்தின்(தலித் இதழியலாளர்) பல்வேறு கட்டுரைகளை முன் வைத்து







பஜ்ஜி-சொஜ்ஜி

தொடரும்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

திசை



சரியாகச் சொல்லப் போனால் இந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் அவளிடம் நாற்பது ஐம்பது முறையாவது "ப்ளீஸ் கேட்டிருப்பேன், அவள் கண்டிப்பாக வந்துவிடுவாள் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.  அந்த ரெஸ்டாரெண்ட் உள்ளே அடிக்கடி சென்று அந்த டேபிளிள் யாராவது அமர்ந்து விடுவார்களோ என்று பார்த்துக் கொண்டேன். இழவெடுத்த மேனேஜர் “என்னாச்சு !! இன்னைக்கு என்ன கால்ஸ்என்று சேல்ஸ் ரிப்போர்ட் கேட்டுக் கொண்டிருந்தான். பதில் சொல்லி முடிக்கும் முன்னே அவள் சாலையில் வருவதைப் பார்த்துவிட்டேன்.

மானேஜரோடு பேசியதில் வியர்த்திருந்தது, அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். அவள் என்னைப் பார்க்கும் போது “என்ன நினைத்திருப்பாள்?. “இவனிடம் இப்படி மாட்டிக் கொண்டுவிட்டோமேஎன்றா?, “நறுக்குன்னு இன்னைக்கே எல்லாவற்றையும் தீர்த்துவிடனும் என்றா?, “பாவமாக இருக்கிறது, ஆனால் இரக்கப் பட்டால் அதை அவன் advantage  ஆக எடுத்துக் கொள்வானோ என்றா?. அவள் நினைப்பதை எப்படி என்னால் கண்டுபிடிக்க முடியும்?. அவள் என்ன லீனியர் ஈக்வேஷனா, இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என மாற்றி மாற்றி அவள் இதைத் தான் நினைத்திருப்பாள் என்று கூற.

 “வேலை இருக்கிறது, இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று என்னிடம் சொன்னாளே!! ஆனால் அவள் குறைந்தது அரை மணி நேரமாவது மேக்கப் போட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவள் எப்படி இருந்திருப்பாள், தளர்வடைந்திருந்த தோள்களில் சோர்வைக் கண்டுபிடிக்கத் தெரியாதவனா நான்?
இல்லை காது மடல்களைத் தாண்டி இறங்கியிருக்கும் முடிக் கற்றைகளின் எண்ணிக்கை அரியாதவனா நான்? மஞ்சள் சுடிதாரில் இன்று தான் அவளை நான் பார்க்கிறேன். மஞ்சள் சுடிதார், வெள்ளை துப்பட்டாவோடு, தன் கூந்தலை முடித்து வைத்திருந்த விதமும் இதுவரை நான் அவளிடம் கண்டிராதது. ஒருவேளை பியூட்டி பார்லர் போய் வந்திருப்பாளா

எந்த சினிமா காட்சியோடவும் இணைத்துச் சொல்ல முடியவில்லை, இந்த மாலை வேளையில் நாங்கள் பரிமாரிக் கொண்ட பார்வையைப் பற்றி எப்படி சொல்வது. பிண்ணனி இசையில்லை, ஸ்பெசல் எஃபக்ட்ஸ் இல்லை, கனவும் இல்லை. ஆனால், ஒரு பெண் எனக்காக சில மணித்துளிகளை ஒதுக்கியிருக்கிறாள் என்ற உணர்வு என்னை என்னவோ செய்துக் கொண்டிருந்தது. அதுவும் தன்னை அலங்காரம் செய்துக் கொண்டு. சில விழாக்களில் அவள் உதட்டுச் சாயம் பூசியிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று எனக்காக, நான் ரசிப்பதற்காக அல்லது நான் வருந்துவதற்காக. இன்னும் அவள் சாலையைக் கடக்கவில்லை, ஒன்றிரண்டு வாகனங்களை தன்னைக் கடந்து போக அனுமதித்தால். நகர்ந்து சென்ற வாகனங்களுக்கு ஊடாக அவள் புன்னகையை கவனித்தேன்.

இது வரை அவள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் எளிமையாக “ஹாய் சொல்லியிருக்கிறேன். இன்று எதற்காக அதைக் கூட சொல்லிப் பார்த்து ஒத்திகை செய்துக் கொள்கிறேன் என்று தெரியவில்லை. கடந்து வருகிறாள் சாலையை, ஒரு படி இறங்கி வந்து அவளிடம் “ஹாய் சொன்னேன். என் குரலை உற்று கவனித்ததில் நான் அவளிடம் இன்று பிச்சை கேட்கும் தொனியில் தான் பேசுகிறேன் என்று உணர்த்தியது. அவளிடம் தானே பரவாயில்லை. பதிலுக்கு ஹாய் சொன்னாள், புன்னகை செய்தேன். கைகளை முறுக்கினேன். “சரி லேட்டாகுது, நாம் அப்புறமா இன்னோர் நாள் பார்க்கலாமா ப்ளீஸ் என்றாள்.

 “என்னது லேட்டா!! அப்புறம் ஏன் இந்த மேக்கப்?? என்று அவளைக் கேட்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஆனால் கேட்க முடியவில்லை, அவளிடம் எப்படிக் கெஞ்ச வேண்டும் என்று யோசித்தேன். நான் இப்போது உணரும் அவஸ்தையை ஏ.ஆர். ரஹுமான் இசையில் ஒரு பத்து வருடம் கழித்து மணிரத்னம் தான் விசுவல் ஆக்க முடியும் என்று தோன்றியது. இன்னொரு தடவை “ப்ளீஸ் என்றேன், “இது தான் லாஸ்ட் என்றேன், அப்புறம் தலையை சொறிந்தேன்.சரி வா என்றாள்!!. அவள் முன்னே இறங்கி சென்றாள், பின்னே...அவள் பின்னே, நெருங்கியபடி நானும் தொடர்ந்தேன். அவள் மீது ஒரு செயற்கை மனம் இருந்தது, ஆனால் எனக்குப் பிடித்திருந்தது.  முக்கியமான ஒன்றை நான் என் நண்பர்களிடம் கேட்க மறந்துவிட்டேன். அது என்னவென்றால் காதலியைக் கூட்டிச் செல்கையில் அவளோடு ஒரே சீட்டில் அமர்ந்து சாப்பிடனுமா, இல்லை எதிர் திசையில் அமர வேண்டுமா ??.
எதிரெதிரே அமர்ந்தோம். இப்படித் தான் அன்றும் என் எதிரே அமர்ந்திருந்தாள்...........

(தொடரும்......)

#tag கதைகள்

முதல் பாகம்
இரண்டாம் பாகம்


###015

அவள் என் கவிதைகள் பிடிக்கவில்லை என்றாள் என உன்னிடம் சொன்னேன்
ஒருவேளை அவள் உன்னையும் மணந்து விட்டாளோ என்றாய் நீ
அவள் உன்னைப் பற்றி சரியாகத் தான் சொன்னாள் “அது பொல்லாதது” 

###016

அவள் திருமணத்திற்கு நினைவுப் பரிசு???என்றேன்.
”நான் அவளுடன் செல்கிறேன் ஸ்தூலமாய் இருந்து அவளை துன்புறுத்துவேன்” என்றாய் நீ..      நீ என்னுடனும் இருப்பாய்


###017

பிழைகளைக் காட்டி ”அவளைப் பற்றிய உன் கவிதைகள் வாசிக்க விரும்பவில்லை” என்றாய். நல்லது தான், உன்னிடமிருந்து விலகி
இனி என் பிழைகளில் மட்டும் அவள் இருக்கட்டும்.

###018

நாளை அவள் திருமணம் என்று சொன்னது, நீ உறங்கச் செல்கிறாய்.
நீ இரவில் தூங்கச் செல்வது இது தான் முதல் முறை.
நாளை காலை நான் நினைத்தபடி.....


###019
இத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தபோதும்,
அவள் கண்களில் நீ தழும்பாய் தெரிகிறாய்.
அதனால் தான் அவளைப் பார்த்ததை நான் உன்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன்.


###020

அந்த இரவு ஞாபகம் இருக்கிறதா,
அவளை என் வண்டியில் ஏற்றி வீடு சேர்த்தேன்
அன்று தான் நீ பிறந்தாய்!!

###021

இத்தனைக்கும் பின்னே,
அது எப்படி உன்னால் மட்டும் முடிகிறது??
அவள் பெயரை உச்சரிக்கும் போது அனுபவித்து, மெய்மறந்து, கண்களை மூடித் திறக்க.


###022

அன்று அவள் என்னிடம் கேட்டுக் கொண்டதைத் தான்
இன்று உன்னிடம் கேட்கிறேன் “நாம் நண்பர்களாக இருப்போம்”




பஜ்ஜி-சொஜ்ஜி - 17 ஜீன்ஸ் அணிவது ஆபத்து

(கடந்த ஆறு மாதமாக நான் ஜீன்ஸ் பேண்ட்டோ, டெனிம் சர்ட்டோ அணிவதில்லை -எதற்காக என்றால் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காகத் தான்)

Clothing isn't designed to give us a shape that we don't have, and that's where people get in trouble
- Some one
(*படங்களைப் பார்ப்பதற்கு படத்தை கிளிக் செய்யவும்)

பார்ட்டி வேர், கேசுவல்ஸ், செமி கேசுவல்ஸ் என்று உடைகளைப் பகுத்துப் பார்த்து நாம் அதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகின்றது. "வெறும் உடை தானே அதற்கு ஏன் இத்தனைக் கூப்பாடு?" என்று வியக்காதீர்கள். நமது அன்றாட வாழ்வில் ஜீன்ஸ் வெகு சாதாரணமாக உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது.  ஜீன்ஸ் நம் நாட்டின் பாரம்பரிய உடை என்று யாராவது வருங்காலங்களில் சொன்னால் கூட ஆச்சரியம் வருவதற்கில்லை.

ஜீன்ஸ் எனப்படும் பருத்தி ஆடைகள், மலைவாசத் தளங்களிலோ, குளிர் பிரதேசத்திலோ அணிந்து கொள்ளுதலை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.
மற்றபடி ஜீன்ஸ் மிக மிக ஆபத்தான ஒரு ஆடையாக அதைப் பற்றி தெரிந்து கொள்வது தேவையாயிற்று. ஜீன்ஸ் வந்த பிறகு இருபாலரும் அதை எளிதாக ஏற்றுக் கொண்டு தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர், இப்பொழுது மிக இறுக்கமான ஆடையாக அணிகிறார்க்ள். முதலில் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் வரும் ஆபத்துகளும், இரண்டாவதாக சுழலில், பொருளாதாரத்தில், செய்முறையில் உள்ள ஆபத்தையும் என விவாதிப்போம்.

இறுக்கமான ஆடையாக ஜீன்ஸை அணிவதில் என்ன பலன் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்துப் பார்த்தால், ஒரு பலனுமில்லை, எனும் பதில் தான் வருகிறது. கவர்ச்சி, அழகு எனும் பெயரில், ஜீன்ஸ் ஆடையை உடலோடு இறுக்கமாய் அணிவது, நமது உடல் அமைப்பை வெளியே எடுத்துக் காட்டும் வேலை ஒன்றை மட்டுமே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் நவீன யுகத்தில் இறுக்கமான ஆடை அணியும் வழக்கம் கலாச்சாரமாக மாறிட ஜீன்ஸின் பங்கு தலையாயது. இதனால் வரும் நோய்களின் பட்டியலும் மிகப் பெரியது.

*இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகள் தொடைகளில் ஏற்படுத்தும் வியர்வை மற்றும் அழுத்தம் காரணமாக பித்தப் பை, அண்டம் போன்றவற்றில் தொற்றுநோய் (infection) பரவலாம். அடிவயிற்று வலி காரணமாகக் குடல் வலி, ஆண்களுக்கு உறுப்புகளில் எரிச்சல், வியர்வைக் கொப்புளம் போன்றவற்றோடு விதைகளின் இடமாற்றம்meralgia paresthetica போன்ற நரம்புக் கோளாறுகள், lipoatrophia semicircularis என்பன போன்ற நோய்கள் வரும் அபாயம் இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டெலிகிரஃப் பத்திரிக்கைக்காக எடுத்த ஒரு ஆராய்ச்சியில் 2000 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டனர் (2012ல்). அவர்கள் இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளைத் தொடர்ந்து உபயோகப் படுத்த ஆரம்பித்தனர். அதன் முடிவில் பத்தில் ஒருவர் ஆடையை அசௌகரியாகக் கருதி அதைத் தவிர்க்கும் மனநிலையில் இருந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட பாதி பேருக்கு இரைப்பை மற்றும் பாலுறுப்புகளில் தொற்று நோயால்(infection) பாதிக்கப் பட்டனர், கால்வாசி பேருக்கு இரு தொடைகளுக்கு மத்தியில் படை இருந்தது, ஐந்தில் ஒருவருக்கு விதை இடமாற்றமாகியிருந்தது, பலருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டிருந்தது. இங்கிலாந்திலேயே இத்தனை ஆபத்துகளையும் தீங்குகளையும் தரும் ஜீன்ஸ் ஆடைகள் இந்தியாவின் தட்பவெப்பத்தில் எத்தனைக் கேடுகளைத் தரும் என்பது எல்லாருக்கும் எளிதில் விளங்கக் கூடியதே..

jeans weaving

சூழலுக்கும், பொருளாதாரத்திலும் எத்தனைக் கெடுதல் தருகிறது:


ஜீன்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு எத்தனைக் கெடுதல் தரும் என்று பார்க்கும் பொழுது முதலில் உலகின் ஜீன்ஸ் உற்பத்தியைப் பற்றிய விவரங்களைப் பார்க்க வேண்டும் (பார்க்க பட்டியல் 1). அவற்றுள் கிட்டதட்ட 60% சதவீத உற்பத்தியை ஆசிய நாடுகளே கொண்டுள்ளது. இந்த பட்டியல் வளர்ச்சியைக் கணக்கிட்டு ஒரு தொழிற் கூட்டமைப்பில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தான். ஆனால், இவை நமக்கு கொடுக்கும் அதிர்ச்சிகளோ ஏராளம். இதன்மூலம் வளர்ச்சி என்பது மிகவும் கேள்விக்குரியதாகிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். உலகில் உள்ள பிரபலமான எல்லா வகை ஜீன்ஸ் பிராண்டுகளும் நம் நாட்டில் உற்பத்தியாகிறது என்பது தெரியுமா (killer, denim, trigger போன்றன கர்நாடகாவில் தான் தயாராகின்றன)

1.உலகில் உள்ள நாடுகளில் 21% சதவீத உற்பத்தியும், 4.5 சதவீத வளர்ச்சியும் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது. மிகப் பெரிய தொழிற்துறையாகவும் ஜீன்ஸ் உற்பத்தி இருக்கின்றது.

2.ஒரு ஜீன்ஸ் துணிக்கான பருத்தியைக் உற்பத்தி/கொள்முதல் செய்ய 6800 லிட்டர் தேவைப்படுகிறது, ஒரு டெனிம் துணியினை நீலச் சாயத்தில் ஊறல் போட்டு நிறம் மாற்றிடத் தேவைப்படும் நீர் மற்ற துணிகளை சாயம் போடுவதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கின்றது.

3.ஜீன்ஸ் துணிக்கான கொள்முதல் செய்யப்படும் பஞ்சின் பற்றாக் குறையை, விலையேற்றத்தை சமாளித்துக் காப்பதற்கு பஞ்சின் தேவை அதிகமாகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளித்திட முதல் அழைப்பாக BT பருத்திகளை இறக்குவார்கள்.

4.இந்தியாவில் பருத்தி உற்பத்திற்கு 5% சதவீத நிலத்திலேயே பயரிடப்படுகிறது, ஆனால் இந்த உற்பத்திக்காக நாட்டின் 25% இருந்து 50% வரை சில பூச்சிக் கொல்லி மருந்து பருத்தி உற்பத்திக்காகவே பயன்படுத்தப் படுவதால் நிலத்தின் நச்சுத் தன்மை அதிகரிக்கிறது.

கடலில் கலக்கும் பியர்ல் ஆற்றின் நீல நிறம்
5.நீல நிறத்திறகாக எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறைகள் தான் மிக மிக ஆபத்தானது. இதற்காக உபயோகிக்கப் படும் சிந்தடிக் சாயங்கள் (முந்தைய காலத்தில் தாவரங்களிலிருந்து சாயம் எடுத்துவரப் பட்டது) பெரிய அளவில் ஆசியா நாடுகளில் நீர்நிலைகள் மாசுபடக் காரணமாக இருக்கின்றது. சீனா, இந்தோனெசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பாயும் நதிகளில் பல நிறங்கள் இருக்கின்றது. சீனாவில் Guang Zhou நகரில் உள்ள Pearl எனும் நதி நிறம் மாறிய அவலம் உலகின் மிகப் பெரிய தொழில் நகரம் என்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இந்நகரத்தின் வரலாற்றில் இருக்கிறது

6. ஆற்று நீரில் கலந்த சாயங்கள், பல குளங்களைத் தொடக் கூட இயலாதவாறு குடிநீர் பிரச்சனையையும், விவசாயம் பண்ண முடியாத சூழலையும் உருவாக்கிவிட்டது.

7.இதில் ஆபரணங்களாகத் தொங்கவிடப் படும் உலோக துணைக் கருவிகள் (accessories) தவறான உடைக் கண்ணோட்டத்தையும், ஆடை மீது அதிக விலை கொடுப்பதும் நடக்கின்றது.

8.ஜீன்ஸ் ஆடைகளை சாயமிட்டு முடித்தவுடன் செய்யப் படும் வண்ணநீக்கம் பற்றியும் 
sand blast
தெரிந்துக் கொள்ளவேண்டும், இதைSand Blast என்று சொல்லுவார்கள். அதாவது ஜீன்ஸ் ஆடை/துணி குழாய் வழியாக ஆடை மீது பக்குவப்படுத்தப்பட்ட மணலை ஆடைகளின் மீது சூடாக உயர் அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட குழாய் மூலம் செலுத்தி ஆடைகளில் நிறத்தை மங்கச் செய்கின்றனர். ஆனால் இந்த வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்கு நிறைய பக்கவிளைவுகளும், உடல் பிரச்சனைகளும் வருகின்றன. பல மேலை நாடுகளில் இந்த பணி செய்வதற்கு தடை வந்துவிட்டது, ஆகவே இதை முற்றிலுமாக ஆசியா நாடுகள் தான் செய்து வருகின்றன

 நமது பலம் என்ன? நமக்கு உகந்தது என்ன? என்றும் தெரியாமல் இருக்கின்றோம். இப்பொழுது eco-friendly ஜீன்ஸ் உற்பத்தி என ஆர்கானிக் காட்டன் மற்றும் உற்பத்தி முறையில் உள்ள மாற்றங்கள் செய்து சந்தையில் விலையுயர்ந்த ஜீன்ஸ்களை கொணர்ந்துவிட்டனர்.  

ஜீன்ஸ் ஆடையின் உளவியலே ஒரு வெளிக்காட்டுதலியல் (exhibitionism)  தான் அதாவது, ஜீன்ஸ் பேண்ட் என்றால் துணி என்பதற்கும் மேலே அதில் இருக்கும் லேபிள், உலோக பட்டன்கள், ஜிப் மற்றும் பட்டன்களின் அளவு, சில அலங்கார சங்கிலி, அலங்கார எம்பிராய்டரி மற்றும் பிரிண்டுகள் முதலியன சேர்ந்தது ஆகும். அதன் லேபிள் தான் ஜீன்ஸ் பேண்ட்டின் அதி முக்கிய பாகம் எனக் கருத முடியும், அதை வைத்து தான் பெரும்பான்மையான பேண்ட்கள் வாங்கப் படுகின்றன. அதாவது பிராண்ட் ஃப்ரீக்காக நம்மை வைத்திருக்கிறது.இதை வைத்துக் கொண்டு ஜீன்ஸ் ஆடைகள் வெறும் மோகத்தையும், பகட்டையும் அடிப்படையாகக் கொண்டது என்ற முடிவிற்கு எளிதில் வரலாம். ஏனெனில் இந்தியாவில் 80% ஜீன்ஸ் உற்பத்தி லேபிள் செய்து தான் விற்கப் படுகின்றன.

டாம் ரியான் என்பவர் கண்டுபிடித்துள்ள சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் ஜீன்ஸ் என்று டைட்டானியம் டை ஆக்ஸைடால் பூசப்பட்ட ஜீன்ஸ் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காது என்று ஜீன்ஸ் மோகம் கொண்டு வாதாடினால் மீண்டும் 2-8 வரை வாசிக்கவும்.


கோக், பெப்சி போன்ற பானங்களை ஒதுக்கும் விழிப்புணர்வு இப்பொழுது ஓரளவு இருப்பதால், ஜீன்ஸ் பற்றிய உண்மையைப் பரப்புவதும் அவசியமாகிறது. ஜீன்ஸ் அணிவது உங்கள் சுதந்திரம் தான், ஆனால் அது அவசியமா??

 பட்டியல் 1
பிரதேசம்
ஜீன்ஸ் துணி தயாரிக்கும்  டெனிம் தொழிற்சாலைகள்
ஆசியா (சீனா)
297
ஆசியா(மற்றவை)
104
வட அமெரிக்கா
019
ஐரோப்பா
41
லத்தீன் அமெரிக்கா
46
ஆப்பிரிக்கா
15
ஆஸ்திரேலியா
01
        ***மொத்தம் 543 தொழிற்சாலைகள்
நன்றி
ஜீவ கரிகாலன்

பஜ்ஜி-சொஜ்ஜி 
தொடரும்