வியாழன், 29 நவம்பர், 2012

பஜ்ஜி-சொஜ்ஜி-08/ தேசிய முதலீட்டு வாரியம்


ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.(குறள் 740, அதிகாரம் - நாடு )

சமீபத்தில் மத்திய அரசின் திட்டக் குழுப் பரிந்துரைத்த புதிய வாரியம் பற்றிய அறிவிப்பைக் காண்கையில், பொய்யா மொழிப் புலவர் இன்றைய நிலையை உணர்ந்து தான் அன்றே இப்படி சொல்லியிருப்பாரோ? என்று இந்த குறள் ஞாபகம் வருகிறது. இக்குறளுக்கு விளக்கம் இக்கட்டுரையின் இறுதியில் விளங்கும். தினமும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் இயற்கை வளங்கள் மிக்க பாரதத் திருநாட்டின் இன்றைய நிலையில், மக்களுக்காக சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் ??!! திட்டக் குழுவை சேர்ந்த மான்டெக் சிங் அலுவாலியா அவர்களின் மற்றுமொரு மக்கள் விரோத திட்டம் தான் இந்த தேசிய முதலீட்டு வாரியம் எனப்படும் National Investment Board(NIB) உருவாக்குவது. இன்று காங்கிரஸ் அரசிற்குள்ளே புகைச்சலை கிளப்பியிருக்கின்றது, மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் திருமதி.ஜெயந்தி நடராஜன் இதற்கான முதல் எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறார்.

NIB என்றால் என்ன?. முதலில் இது சிறிய தொழில் நிறுவனங்களுக்கோ அல்லது நேரடியாக மக்களுக்குப் பயன்படும் என்ற எந்த நம்பிக்கையையும் கொள்ள வேண்டாம். அதாவது பெரிய அளவில் முயற்சித்து கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள் எல்லாம் தேசத்தின் வளர்ச்சியைப் பின்நோக்கிக் கொண்டு செல்ல, தேசிய ஜன(பண)நாயக கூட்டணி இப்பொழுது தன் கவனத்தை உள்கட்டமைப்பில் தீவிரம் செலுத்தி வருகிறது. இது போன்ற முதலீட்டோடு உள்கட்டமைப்பு என்ற மாயத் தோற்றத்தில் தான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வரப்போகின்றது என்பது ஏற்கனவே நாம் அறிந்த ஒன்று தான். ஆனால்இதே வாயிலை சற்று அகலப் படுத்தி, சாலை அமைத்தால் என்ன? என்று விவாதித்து கொண்டு வந்துள்ள மற்றுமொரு அபாயம் தான் இந்த வாரியம். இவ்வாரியம், நம் நாட்டிற்குள் ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும் எந்த ஒரு பணிக்கும் அல்லது திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கும் எதேச்சையான அதிகாரம் வழங்கும் அமைப்பாக இருக்கம்படி நம் திட்டக் குழுவானது பரிந்துரைத்துள்ளது.

இந்த திட்டமானது சாலைகள், சுரங்கங்கள், மின்சாரம், இயற்கைவாயு, பெட்ரோலியம், துறைமுகம் மற்றும் ரயில்வே போன்ற திட்டங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று வரையறுத்துள்ளது. அதாவது, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்படவேண்டிய முக்கியத் துறைகளுக்கு வாங்க வேண்டிய ஒப்புதல்களை எந்த அமைச்சகத்திற்கும் செல்லாமல் நேரடியாக இந்த புறவழிச் சாலை மூலம் (bye pass road) இந்த வாரியத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதை மக்கள் மற்றும் தேச நலனுக்காக அறிவித்த மத்திய அரசிற்கு, எதிர்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் முன்பே தன் அமைச்சகத்திலும், கூட்டணியிலும் புகைச்சல் கிளம்பியது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த திட்டம் கிட்டதட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக பெரிய முதலீட்டாளர்களால் கோரப்பட்டு வந்துள்ளது. இதற்கான அடித்தளம் கடந்த ஜூன் மாதமே நமது பிரதமரால் உருவாக்கப்பட்டுள்ளது, அதாவது ஆயிரம் கோடிக்கு மேலாக முதலீடு செய்யும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான முதலீட்டை கண்கானிக்கும் திட்டம் (Investment Tracking System) ஒன்றை அமைக்கும் பொழுது யாருக்கும் இது போன்ற ஒரு வாரியம் ஒன்று அமைக்கப் படும் என்கிற எச்சரிக்கை வரவில்லை, இப்போது இந்த வாரியம் பிரதம்ர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கேபினட் அமைச்சர்களையும் உறுப்பினராகக் கொண்டு செயல்படும் நிலையில் இருக்கிறது.

பத்திரிக்கைகள் மற்றும் எதிர்கட்சிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கையில் இதை வளர்ச்சிக்கான படியாக எடுத்துரைக்கிறது மக்கள் நலனையும், தேசிய நலனையும் தனித் தனியாக பாவிக்கும் திட்டக் குழு. இதற்காக மத்திய அரசு முன் வைக்கும் காரணங்களாக சில புள்ளி விவரங்கள் தருகிறது. அதாவது உலகிலேயே தொழில் தொடங்குவதற்காக மிகவும் கடினமான முறைகளைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் (185 நாடுகள்) நம் நாடு 132ஆவது இடத்தில் இருக்கிறது என்று உலக வங்கியின் புள்ளிவிவரத்தினை முன்வைக்கிறது. பெரிய அளவில் நம் தேசத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் முறைகளை இந்தத் திட்டம் மாற்றிவிடும் என்றும் சொல்கின்றனர். நிதியமைச்சகம் கைவந்த வேகத்தில் கொண்டு வந்திருக்கும் இந்த திட்டம் நேரடியாக மற்ற அமைச்சகங்களின் அதிகாரத்தைக் குறைப்பதோடு, யாருடைய கருத்தையும் கேட்கப் போவதில்லை அதுபோல சுற்றுச்சூழல் விஷயங்கள், நில ஒதுக்கீடு, மக்களை வேறு இடங்களில் இடம் பெயரச் செய்யும் அதிகாரம் என மிக சக்தி வாய்ந்த அமைப்பாக இருக்கும். இதன்படி தனித்தனி அமைச்சகம், மாநில அரசு மற்றும் உள்ளூர் அமைப்புகளின் எந்த ஒரு தலையீடும் இனி இருக்காது.

இந்த வாரியத்தின் பெயர் ஒன்றே போதும் இதன் விளைவுகளைத் தெளிவாக நமக்கு உணர்த்தும். இது வெறும் தேசிய முதலீட்டு வாரியம் தான், தேசிய ஒப்புதல் வாரியமோ அல்லது உள்கட்டமைப்பு வாரியமோ அல்ல, அதாவது முதலீட்டை மட்டுமே மையமாக வைத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாரியமானது ஒரே தேனீர் விருந்திலோ இல்லை கேபினட் சந்திப்பிலோ எல்லா அமைச்சர்களையும், சில அதிகாரிகளிடமும் கையெழுத்து வாங்கி எந்த ஒரு பூதத்தையும் கிணறு வெட்ட கிளப்பிவிடும். இந்த வாரியம் பெரிய முதலீடுகளை செயல்படுத்துவதில் இருக்கும் களைகளாகக் கருதுவது பல்வேறு மையங்களில் இருக்கும் அனுமதியைத் தானே தவிர, வேறு எந்த அடிவேரில் இருக்கும் பிரச்சனைகளையும் அல்ல.

ஒரு உதாரணமாக தற்பொழுது மத்திய அரசு தொடங்கவிருக்கும் நியூட்ரினோ அணு ஆராய்ச்சிக் கூடம்(neutrino obsevatory) தேனி அருகேயுள்ள மலைப்பகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை எடுத்துக் கொள்வோம், இதைச் செயல் படுத்தும் ஏழு அணுவாராய்ச்சி நிறுவனங்களும் இந்தத் திட்டத்தை (1350 கோடி) தொடங்கும் முன்பு பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப் பட்டு சுற்றுப் புறச் சூழல் அனுமதி, பழங்குடியினரை அப்புறப் படுத்தும் நடவடிக்கை எனப் பல்வேறு காரணங்களினால் தாமதமாகி, நீலகிரி மலையில் செயல்படுத்த முயற்சித்து அதுவும் முடியாமல், சுருளி அருவியிருக்கும் வனப் பகுதியிலும் அணுமதி கிட்டாது போகவே இறுதியாக போடி மலைப் பகுதியில் எல்லா அனுமதியையும் பெற்றது. இப்போதும் பல ஆபத்துகள், கிட்டதட்ட நாற்பது அணைகள், வனப் பகுதி, பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்கின்ற அருகிலே இருக்கும் சதுரகிரி மூலிகை மலைத்தொடர் போன்றன இருந்தாலும், இதுவே NIB போன்ற வாரியம் இருந்திருந்தால் மக்கள் வாழும் பகுதிகளில் கூட இந்த ஆய்வுக் கூடம் செயல்படும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்க முடியும். இந்த மிகப் பெரிய ஆபத்தைக் கொஞ்சம் கூட உணரவில்லையெனில் கூடங்குளம் போன்ற எந்த ஒரு பகுதியிலும் மக்களை அப்புறப்படுத்தவும், அவர்கள் நிலத்தை கையகப்படுத்தவும் ஜனநாயக ரீதியான மரபு பற்றிய பேச்சே எழாது என்பது மிகப் பெரிய அச்சமாகிறது. இன்று தேசிய நலன் என்ற போதிலும் உள்ளூர் மக்களின் உரிமைகளுக்கு கொடுக்கப் பட வேண்டிய முக்கியத்துவம் இனி தார்மீக ரீதியாக (பெயரளவிலும்) கொடுக்க வேண்டியதில்லை.

இதுவரை மக்களுக்குப் பயன்படும் சேவைகளான் மின்சாரம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து, நிலக்கரிச் சுரங்கங்களில் எல்லாம் PPP எனப்படும் அரசு-தனியார் கூட்டு சரியாக செயல்படவில்லை என்ற குற்றம் வலுத்து வரும் நிலையில், இது போன்ற வாரியங்கள் அமைந்தால் இதை முழுவதுமாக தனியார் கைக்கு மாற்றுவதில் பெருத்த சிரமமிருக்காது, இதை அந்நிய நிறுவனங்களும் எளிதாக கைப்பற்றும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. இதற்கென   கிளம்பி வரும் எந்த எதிர்ப்பையும் சட்டை செய்யப் போவதில்லை நம் நடுவண் அரசு. “இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பெரிய முதலீடுகளுக்கான வாய்ப்பை உருவாக்காவிட்டால் உலகம் முழுவதும் இருந்து நமக்கு வர வேண்டிய முதலீடு வராமல் போகும்என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார்.

இதன் வாயிலாக நடுவன் அரசு மொத்த நாட்டையும் உலக வங்கியிடமோ, IMF-இடமோ அடகு வைப்பதற்குச் சமம் என்று இதை எதிர்க்கும் சில வல்லுனர்கள் முன் வைக்கின்றனர். மேலும் இதை “உலக வங்கியிடம் சரணடையத் தேவையான கடைசி முயற்சி என்று இதன் மூன்று நேரடி நடவடிக்கைகளை பட்டியலிடுகின்றனர்.
1.           உலக வங்கியிடம் உள்ள நடப்பு கணக்கில் பெரிய பற்றாக்குறையை உருவாக்கியது(2003-04). இதை தனது செயல் திறனற்ற கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் சாத்தியப்படுத்தியது.
2.           இரண்டாவதாக இதைத் தொடர்ந்து உருவாக்கிய நிதிப் பற்றாக்குறை. திவாலாகும் நிலை வந்துவிடும் என்று தெரிந்தும் கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு சரியான மாற்றுத் திட்டங்களையும் அறிவிக்காமல் அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் எப்படி தன் திட்டங்களை செயல் படுத்த விரும்பியதோ அதே வழியில் தொடர்ந்தது.
3.           கடைசிப் படியாக உள்கட்டமைப்புக்காக பெரிய அளவில் கடன் வாங்கியும், அயல்நாட்டு நிறுவனங்களை PPP (அரசு-தனியார் கூட்டு) மூலம் அனுமதித்து, அதை மத்திய லஞ்ச ஒழிப்புக் கமிஷன் மற்றும் மத்திய தணிக்கை அலுவலகத்தின் அதிகாரத்திலிருந்து விலக்கி வைத்துவிடும் பணியை செய்துக் கொண்டிருக்கிறது, பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து திரும்பப்பெறும் முதலீடு, IMF மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடமிருந்து பெறப் படும் கடன்கள் அந்நிய நிறுவனங்களிடம் சென்றுவிடும்.
(நாம் வாங்கிய கடனில், நல்ல லாபத்தில் தொழில் செய்து நம்மையும் கடனாளியாக்கிவிட்டு திரும்பவும் உலகவங்கியிடம் அடமானம் வைப்பது இதை உறுதியாக்கிவிடும்.) இதில் நிதியமைச்சர் சொன்ன பல லட்சம் கோடி முதலீடு என்பது மிகப்பெரிய கடன் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் தடையின்றி நிறைவேற்றிட உதவும் அமைப்பு தான் இந்த வாரியம் (NIB). இது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால் வேறு எந்த செயலகத்தின் தடையும் இருக்காது. இப்பொழுது மத்திய தணிக்கைக் குழு கொடுத்து வந்த இடர்களுக்காக, அதன் அமைப்பை மாற்றி அமைப்பது (பாம்பின் பல்லைப் பிடுங்குவதைப் போல), இனி கேள்வி கேட்பதற்கு யாருமற்ற நிலையைக் கொணர்ந்து விடும் என்பதும் உறுதி.

இறுதியாக இந்த வாரியம் அமைக்க நடுவன் அரசு சொல்லும் “வளர்ச்சி என்னும் சொல்லை சற்று ஆராய வேண்டும், நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக சொல்லும் காரணங்களில் மையமாக இருப்பது பொது மக்களின் நலன். பொது மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட இறுக்கமான கொள்கைகள் (tighten policies) யாவும் தேசிய வளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது என்று குறை கூறினால், நம் நாட்டை எந்தத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பது அதிமுக்கியம்  என்று கேள்வியெழுப்புதல் இங்கே அவசியம்.
முதலில் சொன்ன குறளுக்கு விளக்கம்: நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும். (குறள் 740). வள்ளுவர் சொன்னது பொய்யா மொழியே!!

***********************************************************

இதை ஹிந்து, பிசினஸ் லைன், சி.என்.பி.சி போன்ற மீடியாக்கள் வரவேற்கின்றன, இன்னும் நமது ஹைவேஸ் தன் கூட்டாளார்களுக்கு(contractors) 9000ஆயிரம் கோடி இன்னும் பாக்கி வைத்துள்ளது, அதன் காரணமாக எத்தனையோ வளர்ச்சிப் பணிகளும், உள்கட்டமைப்புகளும் நிறைவேறாமல் இருக்கின்றன என்று முன் வைக்கும் பிரச்சனைகளையும் மறுக்க முடியாது.


#TAG
இதைப் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலாக - மான்புமிகு நிதியமைச்சர் ப.சிதம்பரம், “இது போன்ற ஒரு வாரியம் மட்டும் நம் நாட்டில் விரைவாக ஆரம்பிக்கப் பட்டால், நம் நாட்டில் முதலீடு செய்வதற்காக தேங்கியிருக்கும் சுமார் 1.45 லட்சம் கோடிகள் உடனே வெளிவந்துவிடும் என்று சொல்கிறார். (அந்த 1.76 லட்சம் கோடிகளைப் பற்றிய உண்மை எப்போது வெளிவரும்?)

- ஜீவ.கரிகாலன்

நன்றி: சுதேசிச் செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக