வியாழன், 22 நவம்பர், 2012

பிதற்றல்கள் -3

வார்த்தை ஆதியிலே இருந்தது,
"ஆதி" வார்த்தையாய் இருக்கவில்லை.

சூட்சுமமான மொழி பிறந்தது
மொழிக்குள் சித்திரம் இருந்தது
சித்திரமே ஆதி மொழியாம் 

”இருந்தது” என்று சொன்ன காலம் 
இன்னமும் முடியவில்லை,
முடியவேண்டிய காலம் 
எப்போதோ தொடங்கிவிட்டது.

காலம் அலகிடவே வந்தது
வெறும் வார்த்தையாக,
வார்தைக்குள் அடங்கிய காலத்தில்
ஆதி என்பது மாயை

எல்லாமே மாயை
எல்லாமே கடவுள்
எல்லாமே காதல்
எல்லாமே வார்த்தை

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தனிமையில் காதல் அப்படித்தான் 
நிரம்பி வழிந்தாலும் கூட
வெறுமையைப் பற்றியிருக்கும்

வெறும் தனிமையிலோ
வெறுமையை ஊற்றினாலும்
தனல் எரிந்துக் கொண்டிருக்கும்

தனல் - அது 
காதலின் ஆல்டர் ஈகோ

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  அது உயிருடன் தான் நடமாடுகிறது
  அதன் நடமாட்டம் தான் உயிராகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 இது வெறும் வாழ்க்கை

 அது புயல் தான் - இன்று
 வெற்றிடம் தேடிக் கொண்டிருக்கிறது.
 அதுவும் தானாய் வருவதில்லை.

 அது இருந்தால் தான்
 இயக்கம்  உருவாகும்
 அதுவும் தீர்ந்திடத் தான்
 வெற்றிடம் உருவாகும்.

 ஒரே ஒரு இயக்கம் தான்
 முழுதாய் தீர்ந்திட வேண்டும்,
 இல்லாவிடில் -
 இயங்கிக் கொண்டே
 சாகக் கடவுக.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஜீவ.கரிகாலன்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக