வியாழன், 8 நவம்பர், 2012

கவிஞர் வேல்கண்ணனின் “பச்சையம்”


பச்சையம்

(உயிரெழுத்து - நவம்பர் இதழில் வந்த வேல்கண்ணனின் கவிதை ஏற்படுத்திய தாக்கம் குறித்து என் பதிவு)

வலி தரும் என்றூ வாசிக்கின்ற எல்லாக் கவிகளுமே வலியைத் தருவதில்லை, கவிதையில் வரும் வலி, ரணம் என்ற சொற்களெல்லாம் வலியை காட்சிப் படுத்த விரும்பியவையே, அதனால் உணர்த்த முடிவதில்லை என்பது என் எண்ணம்!! நம் வாழ்கையில் நடந்த துயரங்களை கவிதையாய் சொல்லும் போது கூட  பெரும்பாலும் அது செய்தியாகத் தான் இருக்கிறது. ஏன் இதைச் சொல்கிறேன் என்று தெரியவில்லை. வலியை அறிவுக்கு உணரச்செய்வதற்கும் வலியை கடத்துவதற்குமான ஆழ்ந்த வித்தியாசத்தை இன்று நான் உணர்கிறேன்


பச்சையம் 

அவனின் மருத்துவப் பரிசோதனையின் 

முடிவிற்கு காத்திருந்தது 
இந்த ஆற்றங்கரையோர 
மரத்தனடியில் தான் 
முடிவில் மரம் அதிர்ந்தது 

அவனின் தொடர் சிகிச்சையில்  
இளைப்பாறலும் 
வலி குறைந்த நேரங்களிலும் 
இங்கே தான் நின்றிருப்போம் 
மொத்தப் பிணியையும்  
இம்மரமே உறிஞ்சிக்கொள்வதை 
போல  சாய்ந்தே நின்றிருப்பான் 

அவனின் 
அறுவை சிகிச்சையின் 
போது நின்றிருந்தேன் 
தனியாக தளிர்களையும் கிள்ளாமல்

அவனின்
சாம்பலை ஆற்றில் கரைக்கும்
இந்த கணம்
மரம் பச்சையத்தை கவிழ்க்கிறது



கவிஞர் வேல்கண்ணன்
ஒவ்வொரு விடியலிலும் தொடங்கும் ”நம் அஸ்தமனத்திற்கான பதில் இன்றுதானா ?”  என்ற மறைந்திருக்கும் கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாத புதிர் தான் , (அதில் சிலருக்கு ”ஆம்” என்ற பதில் வெகு சீக்கிரம் வந்துவிடுகிறது).உலகில் உள்ள யாவரும் தன் வாழ்நாளில் மரணத்தின் கால்களுக்கு மண்டியிட்டு தானே பணிய வேண்டும் என்றுணர்ந்தால் ”தான்” எனும் கர்வம் அழிந்துவிடும். 


      நம் மனவோட்டத்தோடு மரங்களும், காற்றுமாகிய இயற்கை உரையாடும் திறன் பெற்றது தான் என்று நாம் எப்போதாவது உணர்ந்திருப்போம். இந்தக் கவிதையில் இதைப் போன்று தான் மரணம் குறித்து எதிர்பார்க்கப்பட்ட ஒரு தகவலால் அந்தக் குடும்பம் உறைந்து போகும் நிலையினை ஒரு மரம் மீது ஏற்றப்பட்டு நின்றுக் கொண்டிருக்கிறது, அந்த மரத்தின் வாயிலாக சோகமும், வேதனையும் நமக்கு பரிமாறப் படுகிறது.

நம் வாழ்வில் என்றோ பாதித்த மரணத்தின் நிழல் எல்லாம் கண்முன்னே வந்து போகிறது. இந்த transformation தானாகவே நிகழ்கிறது. காரணம் கவிதையின் மையம் உறவின் மரணத்தைப் பற்றுக் கொண்டதால் தான். மரம், பச்சையம்,இலை,காலம் என எல்லாமே உலகிற்காக மறைந்துவிட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது... 

//அவனின் 
  அறுவை சிகிச்சையின் போது 
  நின்றிருந்தேன் தனியாக 
  தளிர்களையும் கிள்ளாமல்//  நோய்மையை எதிர்கொள்வதற்கு நிகரானது அதனை தன் தோள்களில் தாங்கிக் கொள்வது, எந்த தளிரையும் கிள்ள முடியாத அளவு தன் தவிப்பை எழுதும் நிலை தான் கவிதையிலேயேபாரம் மிக்கது.


அண்ணனின் பிணியைத் தாங்கி நின்ற மரம், உண்மையில் அவர் பிரிவுக்குப் பின்பு அந்த மரத்தினை அவர் தழுவியிருப்பதாய்க் காட்டுகிறது. வேல்கண்ணனின் இந்தக் கவிதை மிக முக்கியமானதாக பலரால் கவனிக்கப் படும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இந்தக் கவிதை மூலம் அவரது தொகுப்பை வெகு சீக்கிரம் கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என்று பதிவு செய்கிறேன். அவர் அண்ணனின் ஆசிர்வாதம் அதை  நல்லபடியாக சாதித்துக்காட்டும்.


நன்றி.

(பிழை இருப்பின் மன்னிக்க)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக