இத்தொகுப்பினை வாசிக்கையில் எந்தப் பள்ளத்தாக்கிலும்
வீழ்ந்துவிடாமல் பயணம் சென்று கொண்டிருப்பதாய் உணர்ந்தாலும், நான் கடல் மட்டத்தின்
கீழே இருக்கும் உலகில் தான் பயணித்துக் கொண்டிருந்தேன் என்பதை தாமதமாகத் தான்
உணர்ந்தேன், இப்போது எனக்கு மேலே தான் அந்த அந்தர மீன் தெரிகிறது. மெதுவாய் கவிஞரின்
இத்தொகுப்பில் பிரதானமாக நான் காண்பதெல்லாம் ஒரு தனிமைத் துயரின் அகயிருப்பும்,
அறிவிற்கும் புறத்தே அல்லது கடந்திருக்கும் தீராத தேடல்களுமாக இரு கோடுகளாய் ஒரு
தண்டவாளம் செல்கிறது. இவற்றை இணைக்கும் கற்களாக காதல் நினைவுகள், முத்த உஷ்னங்கள்,
பார்த்துச் சிலிர்க்கும் பயணங்கள், இயற்கையில் மயங்கும் புவியீர்ப்பு, கடந்தேயாக
வேண்டிய புறவாழ்வின் துன்பங்கள் என ஒரு நெடிய பயணத்தை ஒரு வாசகனுக்கு தருகின்றன.
ஆனால் இந்த பயணம் சலனமற்று இருக்கிறது.
புவியின் வெற்றிடம் புயலால் நிரம்ப,
அகத்தின் வெற்றிடம் கலையால்.
சலனமற்று இருப்பதால் அந்த நிசப்தம் புலன்களைச் சேராமல் போய்
விடுமா என்ன? , முதல் கவிதையில் வரும் ஜன்னலின் சலனங்கள் அப்படித்தான் இருக்கிறது ! அவர் தன்
வீட்டு வாசலில் நின்று யாரையும் வரவேற்க காத்திருந்தாலும், அவரின் சன்னல்கள்
தட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன, அதில் சில பலத்த தட்டல்கள், சில கீறல் சப்தம், சில சின்ன சுண்டிவிடும்
ஒலிகள் கூட அவருக்கு பேரிரைச்சலாக இருக்கின்றது, அவர் தனிமையை முன்னிருத்துகிறது. தனிமை இருந்துவிட்டால் அப்படித்
தான் நிசப்தமே காதை பிளக்கும் வாதையாக இருக்கும். ஒரு கதவைத் திறந்தும், மறு
கதவையும் மூடியும் நீள்கிறது அந்த இரவு.
கவிஞரின் காதல் சில நேரம் அவருக்குப் பேருவகையாக இருக்கிறது,
அது பழம்பெரும் பாடல்களையெல்லாம் கொண்டு வருகிறது, பின்னர் துரோகத்தின் நினைவாக
அவளை மறக்கத் துடிக்கிறது, அது தோல்வியின் தழும்பாக மாறும் முன்னே முதலில்
விருந்தளிக்கிறது பின்னர் அவரை கவிதை எழுதச்
சொல்கிறது வார்த்தைகளை விரவி தேவையான சொற்களை மட்டும் பொறுக்க சொல்கிறது, சிலவற்றை
ரகசிய கேப்சூல்களாக மாற்றிவிட்டு கவிகளில் இருந்து மறைத்துவிடுகிறது.
“உனக்குப் பதில் ஒரு புறாவைக்
காதலித்திருக்கலாம்
துரோகம் என்றே
வைத்துக்கொள்
நீ கூட ஒரு
மன்னாந்தையைக் கொஞ்சலாம்”
என்று
புழுங்கிடும் ஒரு காதலனாகவும்
“ காதலின்
பெரும் பாடலொன்றில்
கவிந்திருக்கும் என் மோனம்
பிறிதொரு சமயம்
இடமாற்றம் கேட்டு என் முன்
நிற்கும் சிப்பந்தியிடம் சொல்கிறேன்
உன்னை இழப்பது எவ்வளவு துக்ககரமானது” என்று காதலில்
உள்ள உறவு எனும் புதிரில் விடை தெரியாத நிலையில் நம் நினைவுகளையும் தட்டி
எழுப்புகிறார்.
மற்றொரு கவிதையில் உலகயியக்கங்களில் தன் அகத்தொடர்பை
அறுத்துவிட்ட ஒருவனாய் சில பெண்களை பார்க்கிறார், அவர்கள் அன்பற்றவர்களாகவும், பல
ஆண்களைக் கடந்து வந்தவர்கள் போலவும் இயங்கினார்கள்.
“சில அடிகளுக்குப் பின்னால் தொடர்ந்தவன்
நிலவொளியில் மிக
மெதுவாக
‘கராமி’ என்று
அழைக்கிறான்”
இந்த அழகுக் கவிதையில் இந்த வரிக்கு பின் அவள் என்னவெல்லாம் செய்திருப்பாள் என்று எண்ணிப் பார்த்தாள் !!
இந்த அழகுக் கவிதையில் இந்த வரிக்கு பின் அவள் என்னவெல்லாம் செய்திருப்பாள் என்று எண்ணிப் பார்த்தாள் !!
*அதற்குப் பின்னால் அவள் வேறெங்கோ செல்வதும்,
*அவன் அழைப்பதை கவனித்து அவன் அருகில் வந்திருக்கலாம்,
*இல்லை அவள் வேரொருத்தியாய் இருந்திடும் சம்பவம் கூட வந்துவிடலாம். ஆனால் “கராமி” என்று அழைத்ததிலேயே
கவிதை முற்றிற்று,
"உலகிலுள்ள ஒரே ஒரு சுதந்திரம் காதல்தான். ஏனென்றால், சமுதாய
சட்டங்களையும், இயற்கையின் விதிகளையும் மீறச் செய்து உயிரை மேலுயர்த்துவது அது
ஒன்றுதான்" –என்று சொன்ன கலீல் கிப்ரானாக இந்த கவிதையில் அவர் தன்னை பாவித்ததை இப்போது உணர்கிறேன்.
ஒருவேளை அவளும் கிப்ரானை அறிந்திருந்தால்??(ஒரு நல்ல காதல் நாவலுக்கான தங்க
முடிச்சு இங்கே சுருண்டுக் கிடக்கின்றது). பின்னொரு கவியில் “தன்னைக் களைந்த காதல் விளையாட்டில்
தோற்றுப்போனது தான் மட்டும் அல்ல என்பதை, அவள் தன் சீட்டாட்டத்தில் கைவிட்டுப் போன
ரம்மியை இழந்துவிட்டதைக் கொண்டு தன்னை இழந்தது போலச் செய்கிறார் கவிஞர் .
காதல் - நிலம் தவிர்த்த மற்ற கவிதைகளில் இந்த கவிஞரின் மொழி சிக்கலற்ற சிக்கலைக்
கொண்டுவருகிறது. ஆம், எளிய வார்த்தைகளில் சொல்லிப் போகும் அநேகக் கவிதையில் மந்திர
வார்த்தைக்கான தவமோ, பிரயர்த்தனமோ இல்லை, ஆனால் அதன் பௌதிக இயல்பின் பின்னால்
மறைந்திருக்கும் உளவியல் பிம்பங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில கவிதைகளில்
வரும் மீனும், கனவும் நவீன ஓவியங்களின் வண்ணங்கள் போல் இருக்கிறது, ஆம் சில ஓவியங்களில்
வலி, காமம், பசி போன்ற உணர்வுகள் வெறும் வண்ணமாக ஊற்றியிருப்பது போல் மீன் என்ற
பதம் அந்தரத்தில் தொங்குவதாய் சொல்லும் இடத்தில் (பக்கம் 20) இங்கே அந்தர மீனாக
மனிதனின் தவிப்பை உணர்கிறேன், அந்த தவிப்பு துள்ளிக் குதித்தலில் முடிந்து விடத்
தான் வேண்டும், அப்படித் தான் முடிந்தும் விடுகிறது. ஆனால் துள்ளிக் குதித்து
விழுந்த பின்னும் தவிப்பு மட்டும் அந்தரத்திலேயே இருக்கிறது. அது மறுபடியும்
எம்பிக் குதிக்கச் செய்யும்.... தொடர்ந்து கொண்டே இருக்கும்.
காதல் என்ற வெளியைக் காண துள்ளிக் குதித்து விழுந்தது மீன்,
வானம் பார்த்த மீன் கீழே விழுந்தது- அதன்
தவிப்பு மட்டும் காதல் வெளியில் உறைந்தது,
மீன் வேறு மீனின் தவிப்பு வேறு அல்ல,
என் காதல் தான் "அந்தர மீன்".... என்று அந்தர மீனாய் அந்தரங்கமாக சிலாகிக்கவும் வேண்டியிருக்கிறது.
இவரது பயணங்களாக வெறும் கவிதைகளை நான் சிலாகிக்க ஒரு காரணம், தமது பணி,
கிடைத்திருக்கும் வாய்ப்புகள் வாயிலாக தன் கவிதைகளில் ஒரு சிங்கப்பூர் மது
விடுதியையோ, இல்லை ஏதாவது அரசு விடுதிகளில் கிடைத்த ஓய்வையோ, அல்லது தம் நெடிய
பயனத்தில் பார்த்திருக்க வாய்ப்பிருந்த காஷ்மீர் ஆப்பிளையோ இல்லை அதை விற்கும்
பெண்களையோ தம் கவிகளில் பதிந்திடாமல், தமது சக்கரத்தில் சுருண்டு கொண்டிருக்கும்
பயணத்தை எல்லாம் நகரத்தை தொலைக்கவே விரும்புகிறார் அவர் பதிவதும் கூட கண் திறக்காத
வாத்துக் குஞ்சையும், தென்னையில் பூத்திருக்கும் கொக்கையும், காரின் கதவுகளை
முட்டுவதாய் தோன்றும் கடந்து வந்த ஆடுகளையும், உடன் பயணிக்க வேண்டிய பெண்ணின்
வெற்றிடத்தையும் தான்.
“ திரும்புவதெனில்
போய்ச் சேரும் இடமா
வந்து சேரும் இடமா?
பூமி சுற்றும் போது
சாலை எந்தத் திசையில் நகரும் ?”
அவரது பயனத்தில் அடுத்த தலைமுறையின் வாழ்வு இந்தக் கோடையில்
எப்படியிருக்கும் என்று தான் சேமித்து வைத்த தண்ணீர் குடுவை வழியாக வாழ்வைப்
பார்த்து கொண்டே வலம் வருகிறார்.
சோற்றுக்காக தன் இடத்தை மாற்றிக் கொண்ட சிங்கமும், அதன்
எஜமானனும் சேர்ந்து எழுப்பிய கரகோஷம் நேஷனல் சர்கஸில் கேட்கின்றது, வாழ்வின்
மிகப்பெரிய பலவீனம் பசியா? காமமா?
அவரது பணிச் சூழலோடு வரும் கவிதைகளிலும் முதலில் பாதிப்பது
அவர் காதலே, இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும் பணி என்பது கூடுதல் வலியாகிறது, தன்
சிப்பந்தியுடனே தன் காதலைப் பற்றி பேசுகிறார். அவளை சந்திக்கும் எத்தனிப்புகளில்
எல்லாம் அலுவலக தணிக்கை நேரங்கள் வந்து விடுகின்றன. ஆளுக்கு ஒரு சொல்
வைத்திருக்கும் உலகில் தம்து சொற்கள் எங்கேயே மறைந்து கிடைப்பதாய்ச் சொல்கிறார்.
தமது அலுவல்களில் மறைந்துவிடும் சொற்களை, தம் கவிதைகளுக்கு கொண்டுவராமலும்
பார்த்துக் கொள்கிறார். அவர் வீடுகள் நடமாடிக் கொண்டிருக்கின்றன, சதா
இடமாற்றமாகிக் கொண்டிருப்பதால் எல்லாமுமே தற்காலிகமான முகவரி ஆகின்றன என்றாலும்
தம்மை யாவரும் இந்த நகரத்தில் எளிதில் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கவே செய்கிறது
என்று எண்ணினாலும்,
“எப்படி
நகர்ந்தாலும் ஏதேனும் ஒன்று
மையத்தில்
நிற்கும்போது நிகழ்வதுதானே
தற்காலிகமாகிறது??” பதிகிறார். இடம்
மாறும் பறவைகளில் தனது தவிர்க்க முடியாத இழப்புகளை சொல்கிறார் அதில் வலி
கனத்திருக்கிறது.
கவிதைகளை நுகர்வு மட்டும் செய்யும் வாசகனின் பண்பு ரசனையைத்
தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? படிமங்கள், குறுக்குவெட்டுத் தோற்றம்,
நவீனத்துவம், காட்சி சித்தரிப்புகள் போன்ற எதனையும் விட ஒரு வாசகனுக்குப் பிரதானம்
ரசனை தானே!! ரசனை ஒன்று தானே எல்லா இயங்களையும் தாண்டி பல்லயிரம் ஆண்டுகளாக மாறாத கலையின் எதிர்வினை.
இத்தொகுப்பில் சில கவிகளில் வரும் காட்சிகள் கண்ணில் வந்து
ஒட்டிக் கொள்கின்றன, அல்லது நம் பார்வையாக இருக்கும் கோணத்தில் சில காட்சிகள்
வருவது. கடைசிக் கவிதையான மாடு மேயும் பரப்பில் வரும் வட்டங்கள், கயிற்றில் கட்டிய
பசுவிற்கு அனுமதிக்கப் பட்ட வட்டம், அதனுள் தன்னால் வாழ முடிகின்ற வட்டம் அதாவது
அதன் மையம் விலகாத தன்மை, பசுமாட்டின் பார்வையில் இருக்கும் வட்டம், அதன் வால்
சுழித்துக் கொண்டிருப்பதால் அமைந்த வட்டம் என மையம் குறித்துப் பதிவிடுகிறார். “செயல்
மையமாகின்றபோது எல்லாம் நடக்கிறது” அதுவே கவிதையை ஆகச் சிறந்ததாகிறது, ஒவ்வொரு வட்டமுமே தத்துவமாகிறது.
அத்துவான வெளி எனும் கவிதையில் வரும் கிராமங்களில் இருக்கும்
மனிதர்களின் துயர வாழ்வோடு சம்பந்தமிருக்கின்ற சிறுதெய்வங்களின் இன்றைய நிலையை
சொல்கிறார் எந்த ஒரு வருமையிலும் மாடன் பெரும்பசியாற்றிவிடுகிறான், நல்ல தங்காள்
இன்னும் தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொண்டே இருக்கிறாள், சாமியாடும்
மாரியாத்தக்களுக்கு டைம் கீப்பரா??? மறுபடியும் கிராமம் சென்று அதைப் பார்க்க
வேண்டும்.
வாழ்வுதனில் எல்லொருக்குமே இருக்கும் ஒரு நிலையாமை
நம்பிக்கையாகவும், அவநம்பிக்கையாகவும் மாறிக்கொண்டேயிருக்கின்றது. இந்த நிலை/அநிலை
எனும் கவிதையில் மனதுடன் உருவகப் படும் குரங்கும், அதன் சொற்களும் மாறி வந்து ஊஞ்சலாடிக் கொண்டே நிலைத் தன்மையின், நிலையாமையைச் சுட்டிக் காட்டுகிறது. என் மனமோ குரங்கின் பிம்பமாய் பிம்பமாக நகர்ந்து
கொண்டிருக்கிறது. இத்தொகுப்பில் என்னை மிகவும் ஈர்த்த கவியாக “காட்டிக் கொடுத்தல்” வருகிறது, அதனை வாசித்தலை விட வேறு என்ன சொல்வது ? (பக்கம் :32). ஒரு மனிதனாக நாம் எப்போழுதும்
பூமிக்கு நம்மால் முடிந்த ஊறுகளைத் தான் விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்று கவிதையில் உணர்ந்தாலும்,
அதை உணர்ந்தும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறோம் என்பது தான் உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக