செவ்வாய், 4 டிசம்பர், 2012

நீர்ப் பறவை


இந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது? இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா மக்களிடமும் கொண்டு போய் சேர்ப்பதே எவ்வளவு கடினம் என்று யோசித்துப் பார்த்ததால் இதன் குறைகளைச் சொல்வதற்கு மனம் வரவில்லை. ஆனால் இந்த படம் பேசிக் கொண்டிருக்கும், சந்தித்திருக்கும், சந்திக்கின்ற அரசியல் என்னைத் தூண்டுகிறது.

இந்த படம் வெளிவரும் முன்பே கிறுத்தவ அமைப்புகளிடம் இருந்து வந்த கடும் எதிர்ப்பு ஒரு வகையில் கடலோர அரசியல் குறித்து நிறையப் பேசும் என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பியது. பகுத்தறிவு பேசும் அறிஞர்கள் இந்த நாட்டில் முழுமையாக தன் கருத்தில் நிலையாக இருக்க முடியாது என்று காண்பிக்கிறது. எந்த கலையாக இருந்தாலும் அது எல்லோரையும் திருப்திப் படுத்தும் என்று உறுதியாக சொல்ல முடியாது. நிர்வாணங்களை சிலைகளாக சுமந்து கொண்டிருக்கும் கோயில்களில் வாழும் தேவ/தேவியரை நவீன ஓவியமாக கேன்வாசில் வரையும் பொழுது எதிர்ப்புகள் வரவே செய்யும்,  ஆனால் கலைஞன் அதற்கு மன்னிப்பு கேட்கும் சூழல் மிகக் கொடிது, அதற்கும் அரசியல் ஆதாயம் காரணமாக இருந்தால் அது அதனினும் கொடிது.

 ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சினை பற்றி ஒரு குரல் ஒலிக்கிறது என்ற
எதிர்பார்ப்பே இந்தப் படத்தை பார்க்கும் படி செய்துவிட்டது. சென்சாரைத் தாண்டி ஒரு படம் மீனவர் பிரச்சனையை இந்த அளவிற்கும் பேசும் என்று எதிர்பார்க்கவில்லை அதற்காகவே இந்தக் குழுவைத் தனியாக பாராட்டலாம். மீனவர்களின் சமகாலப் பிரச்சனைகளை ஆவனப்படுத்தும் பொழுது இரண்டு பிரச்சனைகள் வரும், 1. சென்சாரைத் தாண்டாது,  (மலையாளத்தில் ஒரு படத்தில் ஈழத்திற்கு ஆதரவாக செயல்படும் ஒரு தமிழனிடன் IPKF பிரதினிதியாக மம்முட்டி பேசும் வசனங்களுக்கு நம்மால் திரைப்படத்தில் ஒரு பதில் சொல்ல முடியுமா என்ற ஏக்கம் பல நாளாக இருக்கிறது - காரணம் சென்சார் தான்). 2. இப்படி மீனவர் பிரச்சினைகளை சொல்லும் பொழுது அது ஆவனப் படம் பார்க்கும் சாயலைக் கொடுத்துவிடும், பின்னர் அதை போக்க சில கிளை கதைகளை உருவாக்க வேண்டியிருக்கும் (அங்காடித் தெரு போல) இதனால் படத்தின் மையத்தில் ஒரு குழப்பம் வந்து விடும். 

இந்த இரு பிரச்சனைகளையும் களைய சமுத்திரக்கனியின் பாத்திரம் படைக்கப் பட்டுள்ளது இயக்குனரின் புத்திசாலித் தனம், அதே சமயம் அதை டீக்கடையில் வைத்து விவாதம் செய்யும் காட்சிகளில் நிறைவு இல்லை, வேறு மாதிரியாக அருளிற்கும்(விஷ்னு), சமுத்திரக்கனிக்கும் இடையில் வரும் சம்பாஷனைகளாக அரசியல் பேசியிருக்கலாம் என்று தோன்றியது. 

மீனவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய கிறுத்துவ ஆலயத்தின் செயல்பாடுகளை காண்பித்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது, அவர்களின் வாழ்க்கை முறையில் எல்லா நிகழ்வுகளோடும் தேவாலயத்தின் தொடர்பு இருப்பதை மிக அருமையாக காண்பித்திருக்கிறார். அசன விருந்து, பஞ்சாயத்து, கதாபாத்திரங்களோடு உரையாடும் எல்லா இடத்திலும் பங்குத் தந்தையாக வரும் இயக்குனர் அழகம் பெருமாள் கச்சிதம்.

சுட்டிக் காட்டவே தேவயற்ற மிகப்பெரிய குறை சுனைனாவின் கதாப்பாத்திரத்தில் வயதானவரான தோற்றத்தில் நந்திதா தாஸை வைத்திருப்பது. நந்திதாதாஸ் ஒரு தேர்ந்த நடிகர் என்பதில் யாருக்கும்  சந்தேகம் இல்லை, ஆனால் சுனைனா, எஸ்தர் எனும் கேரக்டரில் ஒன்றியிருக்கும் விதத்தில் அங்கு நந்திதாதாஸ் தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதுவும் கதையின் இடையிடையே வந்து செல்லும் கதை சொல்லியாக அவர் வந்து செல்வதால் கேரக்டரில் ஏற்படும் இந்த உருவ மாற்றம், சுனைனாவின் நேர்த்தியான நடிப்பில் நந்திதாவிடம் ஏமாற்றம் கிட்டுகிறது. விஷ்னுவின் கதாப் பாத்திரம் அவர் கொடுத்ததை நன்றாகச் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. சுனைனாவைக் காதலிக்கத் தொடங்கும் தருணம் ( விஷ்ணு போதையில் இருக்கும் போது) சித்தரிக்கப் பட்ட விதம் நம்மைத் தொடவில்லை, ஒரு தலைமை கதாப்பாத்திரத்தின் மனமாற்றம் (காதல் அரும்பும் நேரம்) வெறும் காமிரா சுற்றி வரும் விதத்தில் காட்சிப் படுத்துவது மிகவும் பழைய பாணி, குறைந்தபட்சம் வேறு ஏதாவது காட்சியை வைத்திருக்கலாம், பைபிள் வசனத்தில் சதா குடித்துக் கொண்டிருப்பவன் காதலிக்க ஆரம்பிப்பது ஏனோ ஒட்டவில்லை. இருந்தாலும் அவர்கள் வரும் மற்ற காட்சிகள் நன்றாக இருக்கின்றது.

படத்தில் சரண்யா வரும் காட்சியில் நமக்கு எதிர்பார்ப்பு இருக்கின்றது, ஒரு சில காட்சிகளில் ( அடி வாங்கிய தன் மகனை அழைத்துக் கொண்டு வரும் பாடல் காட்சி) அது நிறைவேறுகிறது. ஆனால் தன் மகனை திருத்திட சேர்த்திருக்கும் போதை மறுவாழ்வு மையத்திலும் அங்கிருக்கும் உதவியாளரிடம் காசு கொடுத்து தன் மகனுக்கு சரக்கு வாங்கிக் கொடுக்க சொல்லும் இடத்தில் களவானி அம்மாவைப் போலவே  இருக்கிறார். யார் இந்த லூர்து சாமி ? (பூ ராம்) மிகக் கனமான பாத்திரப் படைப்பு மீனவனாக, பாசமுள்ள தந்தையாக மிக அற்புதமாய் கதையில் ஒன்றியிருக்கிறார், தன் மகனின் சடலத்தைப் பார்த்து நெகிழ வைக்கும் காட்சிகளில் பூராம் சரண்யாவை ஓவர் டேக் செய்கிறார் என்பது உண்மை.

பிண்ணனி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. பல கோணங்களில் சர்ச்சைக் காட்டியிருக்கும் விதம், கடற்கரையை காட்டியிருக்கும் விதம் அருமை. ஆனால் இயற்கை படத்தில் வந்தது போல கடல் சப்தங்கள் மனதில் தங்கவில்லை - குறை சொல்வதற்காக என்று சொல்லவில்லை அது போன்ற கிராமங்களில் சில நாட்கள் தங்கியிருப்பதால் அந்த அலைகளின் சப்தம் என்னவென்று உணர்ந்திருந்ததைச் சொல்கிறேன், அருள் காணாமல் போனது வரும் பாடலுக்கு பதிலாய் வெறும் வயலின் BGM மட்டுமிருந்தால் சோகத்தின் வீரியம் குறைந்திருக்காது, இருந்தாலும் சுனைனாவின் பிரயர்த்தனம் நமக்கும் இரு துளி வந்துவிடுகிறது.

வசனம் ஜெயமோகன் ???? ஒவ்வொரு கதாப் பாத்திரமும் மற்றொன்றை முழுப் பெயருடன் அழைக்கும் போதெல்லாம் ஆச்சரியம் வருகிறது “ஏன் இவ்வளவு சிரமம்” என்று?? “அருளப்பசாமி”, “பிரேம் நசீர்”, “எபெனேசர் அக்கா”. இந்த பெயர் உச்சாடனமே இயல்பாக பேசும் சம்பாஷனைகளாக வசனங்களை அமர்த்தாமல் போய்விட்டது.வசனம் ஜெயமோகன் ???? சர்ச் பஞ்சாயத்திலும் வசனங்களில் கூர்மை இல்லை. அது போல நகைச்சுவை துணுக்குகள் தேவையற்றவை.

இவ்வளவு குறைகள் இருந்தபோதும் அங்கே அருமையான காதல் இருக்கிறது, சொல்லப்படாத நம் சோகம் இருக்கிறது, கண்டிப்பாக சொல்ல வேண்டிய கடல் அரசியல் இருக்கிறது, அழகான பாடல் இருக்கிறது இவை போதாதா இதை ஒரு நல்ல படம் என்று சொல்ல, இந்த பிரயர்த்தனங்களில் திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியதும் மகிழ்ச்சியே. அதற்கான credits உதயநிதிக்கு தான் என்பதும் மறுக்க முடியாதது தான்.

//இந்திய அரசால் மற(றை)க்கப்பட்ட தமிழக மீனவர்களில் ஒருவனின் வாழ்க்கையை திரையில் காட்டிய பெருமை கலைஞரின் பேரனுக்கே சாரும்.  இவர் சம்பந்தப்படாவிட்டால் இப்படிப் பட்ட கதையை யாராவது தமிழில் எடுக்க முன்வருவார்களா என்றால் சந்தேகமே. இப்படி ஒரு தயாரிப்பாளர் மசாலா படம் எடுக்காமல் இப்படிப்பட்ட கதையை இயக்க சீனு ராமசாமி போன்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதால் இன்னும் பாராட்டுக்குரியவர் உதயநிதி ஸ்டாலின் //

இப்படியெல்லாம் பாராட்டும் பொழுது தான், இன்றைய மாறிவிட்ட கார்ப்பரேட் திரையிடுதலில், இது போன்ற சுழலை உருவாக்கிய புன்னியவான்கள் இவர் குடும்பத்திலும் உள்ளார் என்பதை மறுக்க முடியுமா ? அப்படி மாறாமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனை படைப்புகள் வெற்றி பெற்றிருக்கும்? இது போன்ற கதை சொல்லும் தைரியம் எத்தனை பேருக்கு வந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். 

1. உச்சிதனை முகர்ந்தால்
2. பாலை 

என்ற படங்களெல்லாம் வந்து போனது






3 கருத்துகள்:

  1. படகை,
    தண்ணீரில் மிதக்க வைத்தாய்
    எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தீர்கள்
    சிரிப்பும் சிந்திக்க வைத்தது, சிந்தனை சிதராமல்
    மறக்க முடியுமா கதாநாயகன் முயற்சியை இது நீர்பறவை அல்ல
    கண்ணீர்பறவை

    பதிலளிநீக்கு
  2. Arumaiyana alasal/vimarsanam. Hats off to the team of Neerparavai, esp Seenu Ramasamy ! I think U.stalin is different from his family members, he appreciates different genre of movies !

    பதிலளிநீக்கு