சனி, 10 நவம்பர், 2012

(பஜ்ஜி-சொஜ்ஜி-5) சிவகாசி தீபாவளிப் பட்டாசுஇப்போதெல்லாம் தீபாவளியைக் கொண்டாடுவதில் பழைய நாட்டம் இருப்பதில்லை, சென்ற வருடம் வரை தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்கும்,  திரும்பி வருவதற்கும் டிக்கெட் எடுப்பதே பிரம்ம பிரயர்த்தனம். இதில் கூடுதல் லீவு, அலுவலகத்தின் வேலைகளை சரி கட்டுதல், பற்றாக்குறை போனஸ் போன்ற விஷயங்களையும் சகித்துக் கொண்டு ஊருக்குச் சென்று இங்கே பார்க்கும் அதே பட்டிமன்றம், சிறப்பு படம் பார்த்து அலுத்து போய் திரும்பி வருகிறோம், தீபாவளி மீதே ஒரு எரிச்சல் வந்து விடுகிறது.

என் பள்ளிக் காலங்களில் எல்லாம் தீபாவளி என்பது ஒரு வருடத்திற்கான கொண்டாட்டத்தின் கனவு, பொங்கல், தேர் திருவிழா, கார்த்திகை தீபம் என எல்லாவற்றையும் தாண்டி தீபாவளி மேல் ஒரு மோகம் இருந்தது. என் நண்பர்கள் சிலர் வீட்டில் அன்று தான் காலை டிஃபனாக இட்லி/தோசை கிடைக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் (அது வறுமை என்று சொல்லிட முடியாது, அவர்களின் உழைப்பிற்கு என்றுமே சோறு தான் உகந்ததாகக் கருதுவதால், இட்லி,தோசை,பூரி போன்றவை மற்ற நாட்களில் செய்வது கிடையாது).

ஆடி மாசமே துனி எடுத்து தைப்பவர்கள் தான் புத்திசாலிகள், எங்களைப் போன்று போனஸ் வந்து தான் துனி எடுக்க வேண்டும் என்றால் மிகப் பெரிய தடை ஒன்று இருக்கும், அது டைலர் எனும் திடீர்க் கடவுளின் அனுக்கிரஹத்தைப் பொருத்தது. அவசரகதியாய் அவரை பின் தொடர்ந்து நச்சரித்து வந்தால், பேண்ட் ஜிப்பை உள்ளே வைத்து தைத்துக் கொடுத்துவிடுவார்,  “அண்ணே! அண்ணே!” என்று கெஞ்சிக் கூத்தாடி வாங்க வேண்டும், என் வாழ்க்கையில் இப்படிப் பட்ட அலைக்கழித்தலில் இரண்டுமூன்று தீபாவளிகள் கொடுமையாய் சென்று விட்டன. 

ஒரு தீபாவளியன்று, நாங்கள் எடுத்திருந்த எம்.ஜி.ஆர் பேண்ட் சர்ட்(சிவப்பு மேல் சட்டை,கருப்பு கால் சட்டை) துனி தீபாவளி காலை அன்று தான் தருகிறேன் என்று குடுத்த வாக்குறுதியை அந்த டைலர் நிறைவேற்ற வில்லை. எங்கள் வீட்டில் எல்லாம் புதுத் துனியுடுத்திய பின்பு தான் பட்டாசு வெடிக்கனும் என்று அம்மா சொல்வார்கள்.ஆனால் அன்று காலை டைலர் கடைக்கு சென்ற பின்,  அவர் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வாஎன்றபடி சொல்லிக் கொண்டே இருந்தார். என் அம்மா கூட  “இந்த தடவை நீ பட்டாசு வெடிச்சுக்க அப்புறமா புதுத்துனியுடித்துக்கலாம்என்று சமாதானம் சொன்னாலும் நான் கேட்கவில்லை, கண்ணீர் தாரை தாரையாக வடிந்துக் கொண்டிருந்தது. ஒரு இருபது, இருபத்தைந்து முறை டைலர் கடைக்கு சென்றிருப்பேன், அன்று கிடைக்கவில்லை. வேறு வழியின்றி என் தம்பியுடன் சென்று அன்றிரவு பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிட்டோம். டைலரை மன்னித்தாகிவிட்டது, துனியும் அடுத்த நாள் தான் வந்தது. யாருமே புதுத் துனி அணியாத கார்த்திகை தீபத்தில் நாம் அணியலாம் என்று சமாளித்துக் கொண்டேன். ஆனால் அந்த அனுபவமே பிற்பாடு என் வாழ்க்கையில் கடன் கேட்டு நிற்க வேண்டிய சூழல்களில் எல்லாம் பொறுமையைத் தந்தது. அவர்கள் என்னைக் காத்திருக்கும் வேளையிலெல்லாம் நான் ’அண்ணா டைலரை’ தான் ஞாபகப் படுத்திக் கொள்வேன்.

தீபாவளி வருகிறது என்றால் ஒரு மாதம் முன்பே அதன் கொண்டாட்டம் எங்களுக்குள் ஆரம்பித்துவிடும், நம் அண்டை வீட்டில் யாராவது துப்பாக்கி வாங்க மாட்டார்களா என்று எதிர்பார்ப்போம், அப்படி வாங்கி விட்டால் தானே நம்மாலும் அடம் பிடிக்க முடியும். நம் வாலிப வயதில் கொண்டாட்டங்கள் வேறு மாதிரியாக இருக்கும்,வெடியைக் கையில் தூக்கிப் போடுவது, பற்ற வைத்துவிட்டு மெதுவாக நடந்து வருவது, புதுத் துனியுடுத்தியதை அவளுக்கு காண்பிக்க கிறுக்குத் தனம் செய்வது, அவளின் புத்தாடையை நண்பர்களுக்கு வர்ணிப்பது என்று பட்டியல் நீளும், இதில் சினிமா ரசிகனாக மாறிவிட்டால் அது வேறு மாதிரியான கொண்டாட்டத்திற்கு இட்டுச் செல்லும். ஆனால், இங்கே நகரத்தில் இவையெல்லாம் இருந்தும் இல்லாமல் போனது போல் இருக்கிறது, தியேட்டரையும்,டீவியையும் தாண்டிய கொண்டாட்டங்கள் எதுவுமே தென்படவில்லை, ஒவ்வொரு வீட்டிலும் வான வேடிக்கை நிகழ்கிறது, நாலாயிரம்ஐந்தாயிரம் என பட்டாசிற்கு செலவு செய்கின்றனர். ஆனால் அதற்கு நிகரான மகிழ்ச்சியைத் தருகிறதா என்ன?? 

சில தீபாவளிகளில் நிறையப் பட்டாசு வகைகள் இருக்கும், அண்டை வீட்டினரோடு, நண்பர்களோடு சேர்ந்து தான் வெடித்திருக்கிறோம், இன்று சில அபார்ட்மெண்டில் அப்படிப் பட்ட மனப்பாங்கு இருப்பதைப் பார்க்கும் போது சந்தோஷமாகத் தான் இருக்கிறது. ஆனால் சிவகாசி வெடி விபத்து போன்ற காரணங்களை முன் வைத்து தீபாவளியைத் தவிர்ப்போம் என்ற கூச்சல்களையும் கேட்டுக் கொண்டு தான் சகித்திட முடிவதில்லை. பட்டாசு வெடிக்கும் பழக்கம் இன்று தீபாவளிக்கு மட்டுமில்லை, எல்லாப் பண்டிகைகளுக்கும், விழாக்களுக்கும் , கொண்டாட்டங்களுக்கும் பயன்படுத்துகிறோம்

சிவகாசிகோவிபட்டி போன்ற கந்தக பூமியில் இது போன்ற பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள் ஒன்றும் அரசால் உருவாக்கப் படவில்லை, விவசாயம், பிற தொழில்கள் என்று எதுவுமே நிலையாக இல்லாத இந்த மண்ணில், பட்டாசுத் தொழில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளை வைத்து உருவானது தான். அந்த மண்ணில் இயற்கையாகவே கடின உழைப்பாளிகளாகப் பிறந்த மக்கள் அந்தத் தொழிலைப் பிடித்துக் கொண்டனர், இது கந்தக பூமி வேறு. அவ்வூர் மக்களாலேயே திறந்து வைக்கப் பட்ட சந்தையாக, சிறு முதலீட்டில் ஆயிரக் கணக்கில் தொழிற்சாலைகளைத் தொடங்கினர், அங்கே ( நாற்பது, ஐம்பது வருடங்கள் முன்) தொழிலாளர்களுக்கு இணையான உழைப்பை முதல் போட்டவனும் செய்து வந்தான். அந்த மண்ணில் வறுமைக்கு இதுவே மிகப் பெரிய தீர்வாக பல ஊர்களில் மக்களைப் புலம் பெயராமல் காத்தது. ஒரு பெரிய சமூக முதலீட்டில் (social capital) தான் சிவகாசி, கோவில்பட்டி போன்ற கிராமங்கள் இன்று தலை நிமிர்ந்து இந்திய வரை படத்தில் தங்கள் பெயரையும் காட்டிக்கொண்டன. அரசு செய்ததெல்லாம் வரிவிதிப்பு மட்டுமே.

இப்படி ஒரு வறண்ட பிரதேசத்தில், அந்த மண்ணின் மைந்தர்களாளே உருவாகிய ஒரு தொழில், ஒரு உழைப்பைச் சார்ந்து (labour intensive), தங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை (infrastrucure)உருவாக்கிய, மேலும் கல்வி நிறுவனங்கள் பலவற்றை அன்று கொடையளித்த தொழில் (நாடார் சமூக கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு ஒரு அரசின் செயல்பாட்டைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது) என்பது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை. சிவகாசி மட்டுமல்ல, கரூர், திருப்பூர் போன்ற எந்த தொழில் நகரமும் நம் நாட்டில் அரசால் உருவாக்கப் படவில்லை, இந்த SEZ, SIPCOT போன்ற மண்டலங்கள் எல்லாம் சமூகமே தனக்காக உருவாக்கியவை தான்.

இப்படியெல்லாம் தொடங்கிய போதிலும், அதன் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணம் தான் பிரச்சினைக்குரியது. அடுத்த தலைமுறை முதலாளிகளாக தங்கள் தொழிலை நகர்த்திய போது அவர்களுக்குச் சமூகம் மீது இருந்த அக்கறை இருக்கவில்லை, இங்கு தான் அரசு தன்னை நுழைத்திருக்க வேண்டும். ஒரு பொருளாதார மண்டலம் உருவாகுவதை மட்டும் ஒரு அரசு உணர்ந்தால் அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், வேலையில் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப் படுத்தியிருக்க வேண்டும். இங்கே முதலாளிகளுக்கும், உழைப்பவர்களுக்கும் இடைவேளை வந்து விடுகிறது, அது பெரிதாகிக் கொண்டும் இருக்கிறது. அரசு தன் கடமைகளை வெறும் ஒரு சம்பிரதாயமாகவே கையாண்டிருக்கும் குட்டி சிங்கப்பூர் என்று சொல்லப் பட்டாலும், சில சொகுசு பீ.எம்.டபுல்-யூ கார்களுக்குப் பின் இருப்பதெல்லாம் வறுமையின் கால் தடங்கள் தான்.

எனக்குத் தெரிந்து ஒரு எட்டாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெரும் விபத்தில் சுதாரித்திருந்தால் கூட இன்று ஒரு பெரிய விபத்து நிகழ்ந்திருக்காது. இப்படி மறுபடியும், மறுபடியும் பொய்ச் செய்தியை பத்திரிக்கைகளுக்கு சொல்லும் அவசியம் இருக்காது. எனக்குத் தெரிந்த ஒரு உள்ளூர் வாசியின் மூலம் நான் கேட்டிருந்த உயிரிழப்போடு, ஊடகங்களில் வந்த பட்டியல் மிகச் சொற்பம் தான். ஒரு வாரம் கழித்து மருத்துவமனையில் பிரிந்த உயிருக்கு இழப்பீடு கிடைக்காது போயிருந்தால்?? நீங்கள் பார்த்திருக்கீர்களா பட்டாசுத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் Staff busஇல் செல்வதை? கைகளில் கொரியன் மொபைலில் பாட்டுக் கொண்டே பயணிக்கின்றனர். அவர்கள் வாழ்வு இன்னும் அதே ஆபத்தில் இருப்பதை யாரும் மறுக்க இயலாது. அதை விடப் பெரிய ஆபத்தும் வரப் போகின்றன.

சீனா பட்டாசுகள் சந்தைக்கு வந்துவிட்டன, சில தனியார் ஜாம்பவான்கள் சீன நிறுவனங்களுடன் கூட்டு வைத்து தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டன, நம் நாட்டின் 800 கோடி ரூபாய் சந்தை இன்னும் சில நாட்களில் சிலர் கைகளுக்குச் சென்று விடும். அது போலவே சீனப் பட்டாசுகளின் மோகம் நம் பண விரயத்தின் அளவை நீட்டிக்கலாம். இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் அந்தத் தொழிலாளர்களின் நிலை எப்படியிருக்கும் ? இந்தத் தொழில் வளரத் தொடங்கியக் காலக் கட்டத்திலோ அல்லது 1990-91 போன்ற கட்டத்திலோ எந்த ஒரு தேவையான செயல்பாட்டையும் செய்யாத அரசைத் தான் சொல்ல வேண்டும்.

மற்றபடி உங்கள் தீபாவளியில் புதிதாக வாங்கியிருக்கும் எல்.சீ.டீ டீவியில், குளோப் ஜாமூனைக் கடித்துக் கொண்டு எந்த நிகழ்ச்சியைப் பார்த்துச் சந்தோசமடைந்தாலும் எனக்கும் மகிழ்ச்சியே!! என் அம்மா இன்று கத்திரிக்காயில் பஜ்ஜி போடலாமா என்று முயற்சிக்கிறார் நான் பீ.டீ கத்திரிக்காய் பற்றி அடுத்த தொடரில் சொல்கிறேன், வரட்டுமா!!

பஜ்ஜி -சொஜ்ஜி இன்னமும்
ஜீவ.கரிகாலன்1 கருத்து:

  1. Anna this is tooooooo good.....

    Awesome anna.....


    Still I remember the Old style Diwali and All those enjoyments... And Yes The things You told about Sivakasi and Cracker Industry are facts...

    But Bajji- Sojji Arumaiyo Arumai.... See you On Deepavali.............

    பதிலளிநீக்கு