Animal Farm (George Orwell) - புத்தக விமர்சனம்
கம்யுனிசம் -
நம் நாட்டில் சமூகம் பற்றி அக்கறையுடன் பேசும் யாரையும் "நீ என்ன கம்யுனிசவாதியா" என்று கேட்கும் வழக்கம் உள்ளது, நாட்டைப் பற்றி ஏதாவது நானும் புரட்சிகரமாய் பேசினால் என்னையும் அப்படித்தா ன் கேட்பார்கள், எனக்கும் அப்படிக் கேட்கும் பொழுது முன்பெல்லாம் சந்தோசம் தான் வரும். இந்த புத்தகத்தை வாசித்த பின்பு தான் உணர்கிறேன் இப்படிச் சொல்பவர்கள் ஜார்ஜ் ஆர்வெல்லின் இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டுத் தான் நம்மை இப்படி கேலி செய்கிறார்களோ?? என்று..
உலகம் நன்கு அறிந்த வெற்றிகரமான எழுத்தாளர்களுள் ஒருவரான ஜார்ஜ் ஆர்வெல்லின் மிகப் புகழ்பெற்ற நாவலான Animal Farm, மொழிபெயர்க்கப்பட்டு "விலங்குப் பண்ணை" என்ற பெயரில் வெளிவந்துள்ளது (கிழக்குப் பதிப்பகம்). இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வந்த வேறெந்த புத்தகமாவது இன்று வாசிக்கையில் இவ்வளவு எளிமையாகவும், சுவாரசியமாகவும் இருக்குமா என்பது கேள்விக்குறியே??
ஆங்கிலத்தில் "Satire" என்று சொல்லுவார்கள், நையாண்டித் தன்மையுடன் சமூகத்தின் அவலங்களை சுட்டிக் காட்டும் முறை என்று சொல்லலாம், ஹாஸ்யத்துடன் சேதி சொல்லும் அரசியல் கேலிச் சித்திரங்களைப் போல எழுதப்பட்டிருக்கும், மேலும் உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த Fairy tale நாவல், எளிமையான தமிழில் வந்துள்ளது. சரி,கதைக்குள் செல்வோம்.
கதை :-
இங்கிலாந்தில் உள்ள ஜோன்ஸ் "மோனார் பண்ணை " எனும் ஒரு பண்ணையின் முதலாளி, அவர் பண்ணையில் பன்றி , குதிரை , நாய் , மாடு , கழுதை, வாத்து , கோழி என சகல விலங்குகளையும் வளர்த்து வந்தார். எல்லா விலங்குகளும் தன் எஜமானனுக்கு அடங்கிய விலங்குகளாகவே வாழ்ந்து இருக்கும், அந்தப் பண்ணையில் ஓல்ட் மேஜர் என்றொருவர் இல்லாவிட்டால். ஆம், அந்தப் பண்ணையில் ஓல்ட் மேஜர் எனும் கிழட்டுப் பன்றியும் வசித்து வந்தது (கிழட்டுப் பன்றியை நீங்கள் லெனினுடனோ இல்லை முக்கியமாக காரல் மர்க்சுடனோ எளிதில் ஒப்பிடலாம் ).அது விலங்கினங்கள் மனிதனிடம் அடிமைப்பட்டு சந்தித்து வரும் பெரும் இன்னல்களை எல்லாம் வைத்து புதிய ஒரு சமுதாயம் பற்றிய சிந்தனையை உருவாக்கியது. ஒரு நாள், அந்தப் பண்ணையில் உள்ள எல்லா விலங்குகளையும் ஒன்று திரட்டி , விலங்குகள் மத்தியில் முதன்முறையாக அது உரை ஆற்றியது. "தோழர்களே!!" என்று ஆரம்பிக்கும் அந்தப் பன்றியின் பேச்சு மற்ற விலங்குகளுக்கு புதிதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது மற்ற விலங்குகளுக்கெல்லாம் ஒரு புது நம்பிக்கையை அளித்தது, புரட்சி, கலகம் (ஒரு வேளை நம் ஊரில் இந்த நாவல் எழுதப்பட்டிருப்பின் கலகத்துடன் கழகம் என்ற சொல்லாடல்களும் வந்திருக்கலாம்) என்கிற வார்த்தைகள் எல்லாம் புதிதாய் அவற்றிற்கு கற்றுக் கொடுக்கப் படுகின்றன.
புரட்சியைப் பற்றி கனவை விதைக்கும் ஓல்ட் மேஜர் பன்றி, திடீரென்று இறந்துவிட , அச்சிந்தனையை தன் மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியை இரண்டு பன்றிகள் கையில் எடுத்துக் கொள்கின்றன, முதல் பன்றி ஸ்நோபெல் (லியான் ட்ராட்ஸ்கி), இரண்டாம் பன்றியான
சர்வாதிகாரி நெப்போலியன் (ஜோசெப் ஸ்டாலின்) ஆகிய இரண்டும் ஜோன்சின் உடைமையான மேனார் பண்ணையில் புரட்சிக்கு வித்திடுகின்றன. எல்லா விலங்குகளும் எதிர்பார்த்தது மாதிரி திடீரென்று ஒரு நாள் கலகமும் ஏற்படுகிறது, அதன் விளைவாக 'மேனார் பண்ணை', விலங்குகள் வசமாக "விலங்குப் பண்ணை" ஆகியது.
விலங்குப் பண்ணையில் முதலில் ஸ்நோபெல் தலைமை ஏற்று நடத்துகிறது, விலங்குப் பண்ணையில் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. "இங்கிலாந்தின் தேசிய கீதமே!!" என்ற ஒரு பாடல் அப்பண்ணையின் தேசிய கீதமாகிறது, "நான்கு கால் நல்லது, இரண்டு கால் கெட்டது" என்ற வாக்கியம் ஒரு தாரக மந்திரமாகிறது.
ஒரு நாள் விலங்குப் பண்ணையின் மீது ஜோன்ஸ் தொடுத்த போர் கூட விலங்குகளால் முறியடிக்கப் படுகிறது. விலங்குப் பண்ணையின் புகழ் நாடெங்கும் பரவுகிறது. விலங்குகளின் ஒற்றுமை கண்டு மற்ற பன்னயாலர்களும் பயப்படுகிறார்கள் , தங்கள் பண்ணையிலும் கலகம் ஏற்பட்டுவிடுமோ என்று. ஆனால், விலங்குப் பண்ணையில் விலங்குகளின் அயராத உழைப்பிற்கு மத்தியில் சில மர்மங்களும் நடைபெறுகின்றன. ஒரு நாள் ஜெஸ்ஸி மற்றும் ப்ளூ பெல்லின் ஒன்பது குட்டிகளும் காணாமல் போகிறது. அதுபோலே ,அங்கு தினசரி கரைக்கப்படும் பால் கூட காணமல் போகிறது,அங்கே சில மர்மங்கள் நடப்பது வேறு எந்த விலங்குகளுக்கும் தெரியவில்லை.
ஒற்றுமையாய் வாழும் விலங்குகள் கடுமையாய் உழைத்து விவசாயத்தில் வெற்றி பெறுகிறது, ஸ்நோபெல் ஒரு காற்றாலைப் பற்றிய கனவினை மற்ற விலங்குகளுக்குத் தெரிவிக்க, முதலில் அதை எதிர்க்கும் நெப்போலியன் பன்றி, ஒரு நாள் தான் ரகசியமாய் வளர்த்து வந்த ப்லூபெல்லின் ஒன்பது நாய்க் குட்டிகளை வேட்டை நாய்களாக தன் படையாகக் காட்டி - ஸ்நோபெல்லைத் துரத்திவிட்டு; ஆட்சியைப் பிடித்து தன் மேனார் பண்ணை நிர்வக்கும் கதை தான் விலங்குப் பண்ணை.
ஒரு fairy tale நவீனம் மூலம் ஜார்ஜ் ஆர்வல் கம்யுனிச ரஸ்யாவின் மனித உரிமை மீறல்களையும், கம்யுனிசத்தின் அடிப்படை ஆபத்தாக தனிமனிதச் சுதந்திரம் பறிபோவதை மிக எளிமையாய்ச் சுட்டிக் காட்டுகிறார்.
விலங்குப் பண்ணையில் முதலில் ஓல்ட் மேஜர் உரை நிகழ்த்தும் போது விலங்குப் பண்ணை எனும் கனவு பொதுவுடமையைப் பற்றி நாம் முதன் முதலில் காணும் கனவை ஒத்தது.
ஒரு ஒப்பிட்டுப் பட்டியல் :
கதையில் வரும் எதைச் சொன்னாலும் தலையாட்டும் செம்மறியாடுகளைப் போலவோ , யார் ஆண்டாலும் நமக்கென்ன நமது வேலை பொதி சுமப்பது என்னும் கழுதைகளைப் போலவோ, கனவில் சுய சிந்தனை இழந்து வஞ்சகத்தை அறியாமல் ஒரு சித்தாந்தத்தை நம்பித் திசைமாறும்
குதிரை போலவோ, மட வாத்துகளைப் போலவோ; கோழிகளை போலவோ , நாம் ஏதோ ஒரு விலங்கின் சாரம்சமாக இருந்து வருகிறோம் என்பது இந்த நாவல்
உணர்த்தும் மற்றொரு உண்மை.
பொதுவுடைமை என்ற வார்த்தையால் மயங்கும் விலங்குகள், ஒட்டு மொத்த விலங்குகள் நலன் என்ற பெயரில் கடுமையாக உழைத்து வரும்போது, பன்றி இனம் மட்டும் மூளையால் வேலை செய்வதாக தங்களைக் காட்டிக் கொண்டு, மற்ற விலங்குகளைக் காட்டிலும் பன்றிகளே அதிகம் விலங்குப் பண்ணைக்காக உழைப்பதாகவும் -ஆதலால் தங்களுக்கு அதிக சலுகைகள் இருப்பது தான் நியாயம் என்று சொல்லிக் கொண்டன.
தங்கள் பண்ணை அமைக்கும் பொழுது வைத்திருந்த ஏழு சட்டங்களில் ஒவ்வொன்றாக மாற ஆரம்பித்தன,
1 .அதாவது "எந்த விலங்குகளும் படுக்கைகளில்(கட்டிலில்) உறங்காது "என்கிற சட்டம். எந்த விலகுகளும் கட்டிலில் மெத்தை (bed sheets ) மீது உறங்காது" என்று மாற்றம் செய்யப்பட்டது ,
2 .அது போல "எந்த விலங்குகளும் குடிக்காது" என்ற சட்டமும், "எந்த விலங்குகளும் அளவுக்கு மீறி குடிக்காது" என்றும் ;
3 . "எந்த விலங்கினமும் மற்ற விலங்குகளைக் கொல்லாது என்கிற சட்டம்", "எந்த விலங்கினமும் அவசியமின்றி மற்ற விலங்குகளைக் கொள்ளது என்றும் மாற்றப் படுகிறது.
உழைப்பாளர்களின் நலனைக் கொண்டு உருவாகிய பொதுவுடைமையில், வயதான விலங்குக்கு ஓய்வூதியத்துடன் பனி ஓய்வுத் தரப்படும் என்று முதலில் சட்டம் இயற்றிய பன்றிகள், ஒய்வு அளிக்கும் திட்டத்தையே புறக்கணித்தன. ஆண்டுகள் செல்ல செல்ல, விலங்குகள் "மனிதனிடம் அடிமையாய் இருந்தோம், இப்பொழுது சுதந்திரம் பெற்றுள்ளோம்" என்ற பாடத்தை(வரலாற்றைத்) தவிர இரண்டு வார்த்தைகளுக்கும் உண்டான வித்தியாசத்தை மறந்து விட்டன.
இங்கு நாம் , ஸ்டாலின் தன் ஆட்சிக் காலத்தில் தனக்குள்ளே முரண் பட்ட விசயங்களான: முதலில் " கடவுளை மக்கள் வணங்குவதை எதிர்த்ததும்", பின்னர் இரண்டாம் உலகப் போரில் மக்கள் ஆதரவிற்காக " சர்ச்சிற்கு செல்வதை ஆதரித்து
சர்ச்சுகளை மீண்டும் திறத்து விட்டதையும் , "ஒட்டுமொத்த மனித நல்லிணக்கம் என்னும் Totalarianism -த்தை ஆதரித்த ஸ்டாலின் பின்னர் அரசியல் கைதிகளான 25 ,700 பேரை கொன்றதையும் நாம் நினைவு கூறலாம்.
ஸ்பானிஸ் உள்நாட்டுப் போரின் போது, ஸ்பானியக் கம்யுனிசக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட NKVD எனும் ரஸ்சிய ராணுவ ஏஜன்சி மீது கொண்ட வெறுப்பில், ஸ்டாலினின் அக்கிரமங்களை சித்தரிக்க தன் நாவலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல், தன் எழுத்தின் மூலம் காலம் கடந்தும் உலகம் முழுமைக்குமான சேதிகளைச் சொல்லியுள்ளார்.
பொதுவுடைமை எனும் கொள்கையின் பற்றுதல் சர்வாதிகாரத்தில் தான் கால்கொள்கிறது. (சர்வாதிகாரம் இன்றி பொதுவுடைமை சாத்தியப்படாது), கம்யுனிச ஆட்சியில் (கலகக்காரர்களைத் தவிர்த்து) இருக்கும் பொதுமக்கள் அடிமை விலங்குகளுக்குச் சமானம் ஆவார்கள் (பட்டியல் ஏற்கனவே மேலே கொடுக்கப் பட்டுள்ளது) என்று தான் கதையும் மூலம் சொல்கிறார்.
இதன் தமிழாக்கம் பி.வி.ராமஸ்வாமி அவர்கள், இது அவரது முதல் தமிழாக்கம் இந்தப் புத்தகம் என்றாலும் ஆங்கில நாவலின் சுவை குன்றாமல் எழுதியிருப்பதை நீங்கள் உணரலாம். உதாரணமாக, விலங்குப் பண்ணையின் கட்டளைகள் சுவற்றில் எழுதப்படும் பொழுது, அந்த இடத்தில் வரும் சிறிதும் நகைச்சுவை உணர்வு குன்றாமல் இருக்க அவர் "அந்த எழுத்துக்களில் சந்திப் பிழைகளும், ஒற்றுப் பிழைகளும் இருந்தன" என்று நமக்கு எளிம்யைச் சொல்லும் இடம் மிக ரசனையானது.
ஆர்வெல், விவசாயிகள் எப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடமும் சுரண்டலுக்குள்ளாகிறார்கள் என்று நாவலின் இறுதியில் உணர்த்திவிடுகிறார். குழந்தைகள் முதல் அனைவரும் படிக்க வேண்டிய இந்நூல், பல இடங்களில் ரஸ்சிய அரசை மறந்துவிட்டு நமது நாட்டின் அரசின் செயல்பாடுகளோடு ஒத்துப் போவது போல தோன்றுவது தவிர்க்க முடியாதது, அதுதான் 1946 ல் வெளி வந்த அந்நூல் இன்றும் புத்துணர்வுடன் வாசிக்க வைக்கும் மூலப் பொருளாய் இருக்கிறது .
நாவலை முடித்தவுடன் நான் மேனார் பண்ணையில் இருந்தால் என்ன விலங்கினத்தைச் சேர்ந்தவனாய் இருந்திருப்பேன் என்று ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன் !!
Thank you :)
பதிலளிநீக்கு