இது முதல் பக்கம்,
பால் மனம் வீசாத
குழந்தைமையை நீங்கள்
அவனிடம் மட்டுமே
பார்க்கலாம் !!
அடுத்த பக்கத்திலே
இக் குழந்தைக்கு
மீசை முளைக்க;
அவன் காதல் பாடுவான் ,
காதலியின் கரம் சேர்க்க
வானவில்லை
வளையாய்க் கொடுப்பான்
அடுத்த பக்கத்தில்
அவன் சிறுவனாய் மாறிட,
அரைக் கால் சட்டையில்
ஒரு நாய் மீது அமர்ந்து
ராஜாவாக
நகர் வலம் செல்வான்
அதற்கு அடுத்த பக்கத்தில்
அக்குழந்தைக்கு
விபத்து வந்திடும்
இரத்தம் கசியும்
வலியின் கணக்குகள்,
அவன் சொல்ல ஆரம்பித்ததும்
அடுத்த பக்கம் செல்வேன் .
அங்கு நான் இடறி விழுவது
புத்தனின் மடியில் ,
கண்கள் மூடியிருக்கும் போது கூட
அவன் விழிப்பாய் இருக்கிறான்.
ஒரு கல் இறந்துபோனதாய்ச்
சொல்லும் இவன்
விஞ்ஞானியா ? மூடனா ??
ஜன்னலின் வழியே
புது உலகம் சமைக்கும்
சமையல்காரனா !!??
பசி பற்றி சொல்லும் நரனாக,
அந்நடுப்பக்கத்தில் அவன்
அவனையே விழுங்கி விட்டான்!
அடுத்த பக்கத்தில்
நித்தமும் ஏமாற்றும் சமூகப்
பிறழ்வுகளில் எச்சில் உமிழ்ந்தான்
கடைசிப் பக்கத்திற்கு முந்தையப்
பக்கம் கலவி பற்றி பேசுவான்! -அதில்
கட்டிலிலே மகரந்தப் பொடியின்
எண்ணிக்கை பற்றி சொல்லுவான்
இறுதியிலே கடவுளின் மரணம்
பற்றி சொல்லுவான்.
மீட்பராய்த் தன்னைக் காட்டுவான்
என் தூசி படிந்த பரணிலே
அலங்காரமாய் வீற்றிருப்பான் - அவன்
கவிதையாய் வாழும் கவிஞர்கள்
சிற்சிலரில் ஒருவனாய் .......
அவன் .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக