புதன், 25 ஏப்ரல், 2012

காலங்களில் அவள் வசந்தம்

             அது ஒரு மாலை நேரம் மாலை வெயில் ஈரமான சாரலையும் சேர்த்து தூரிக்கொண்டிருந்தது. முடிந்த அளவு கரும்புகை கக்கி வந்த பெரிய முகம் வைத்த பச்சை நிறப் பேருந்து ஒன்று நெல்லைச் சீமையின் ஜங்சனில் "ப்பாம்" என்ற ஹார்ன் சப்தத்துடன் வந்திறங்கியது. அதிகக் கூட்டமில்லாத அப்பேருந்திலிருந்து , ஒரு கையிலே தண்ணீர் கூஜாவும் இன்னொரு கையில் ஒரு சிறு பையுடனும் உடலை ஒட்டிய வெள்ளை சட்டையும், சாம்பல் நிற பேண்ட்டும் அணிந்து தன்னை காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் ரவிச்சந்திரன் போல் தோற்றமளிக்க முயற்சிக்கும் வாலிபன் ஒருவன் அப்பேருந்திலிருந்து இறங்கினான். முகத்தில் கொஞ்சம் வெக்கமும், கொஞ்சம் காதலும் இழையோடிருந்தது, தனது பாக்கெட்டில் இருந்த கடைசி சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டே நடக்கலானான்,

         தலையை ஒட்டிச் சீவியிருந்த முடி சற்றுக் கலைந்ததை உணர்ந்து தன் சட்டைப் பையில் வைத்திருந்த சீப்பினால் தலையினை வாரிக்கொண்டே, கடை வீதிக்குச் சென்றான். நெல்லை அந்த மாலை வேலையில் வணிக முகம் கொண்டு பரபரப்பாய்க் காட்சி அளித்தது. அன்று, தெய்வமகன் படத்திற்காக சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை அறிவித்தது தினத்தந்தியில் தலைப்பு செய்தியாக வந்திருந்தது, அதற்குக் கீழே "கிழக்கு பாக்கிஸ்தானில் நடந்து வரும் மேற்கு பாக்கிஸ்தானைச் சேர்ந்த பூட்டோவின் அராஜகத்தினை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் சூளுரை " என்ற பெட்டிச் செய்தியை வாசிக்கும் பொறுமை இல்லாதவன், அருகிலிருந்த லாலாக் கடைக்குச சென்று ஒரு கிலோ அல்வா வாங்கினான். 


        தானும் அந்த அல்வாவைச் சூடாக சுவைப்பதற்காக ஒரு ஐம்பது கிராம் தனியாகக் கேட்டான், அப்பொழுதுதான் இறக்கிவைக்கப் பட்ட அந்த கோதுமை அல்வாவினை சிறியதாய் நறுக்கிய வாழை இலையில் வைத்துக் கொடுத்தார்கள். வாழை இலையின் பச்சைவண்ணம் பழுப்பு நிறமாய் மாறிக்கொண்டிருக்க,  அந்தச் சூட்டோடு அவசரமாக விழுங்கிக் கொண்டு நடந்தான்.நெல்லையப்பரை தரிசிப்பதற்காக வந்திருந்த வடநாட்டு பெருங்கூட்டம் ஒன்று ஹிந்தியோ/ சௌரட்டிரமோ பேசிக்கொண்டு அவர்களும் அல்வாவை வாங்கினர். அவர்களில் ஒருவன் ஆங்கிலத்தில் அல்வாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் ஊரில் இருந்து தான் இந்த ஊருக்கு அல்வா வந்தது என்று, "அல்வா என்பது தமிழ் வார்த்தையா ?வடமொழியா ?"என்று யோசித்துக் கொண்டே நகர்ந்தான், பின்னே கல்லூரியில் கிடைக்கும் விடுமுறையைக் கணக்கில் கொண்டு நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று போலீசிடம் அடி வாங்கி ஓடியவர்களில் ஒருத்தன் தானே இவன்?

              நெல்லைச் சீமை தன் கிராமம் போல் அல்லாது, தன்னைப் போல் பலரும் பேண்ட் அணிந்தே  நடமாடினர். தன் கிராமத்தில் பேண்ட் அணிந்து, தெய்வமகன் படத்தில் வரும் மகன் சிவாஜிகணேசன் போலே நகம் கடித்துக் கொண்டே வீதியில் நடந்து சென்றால், மொத்த கிராமமும் அவனை மட்டும் ஆச்சரியமாய் வேடிக்கை பார்க்கும். இங்கே இந்த நெல்லைச் சீமையிலோ  அவனைக் கண்டு கொள்வாரே இல்லை. சில இட்லிக் கடைகளில் வைத்திருக்கும் எள்ளு மிளகாய்ப் பொடியின் வாசம் அவனைச் சுண்டி இழுத்தது, ஆனால், அவனது கவனமோ அருகிலிருந்த மல்லிகைப்பூவின் மேலே சென்றது. அவன் சிறுவயதில் அவளுக்கு பூ வாங்கச் சொல்லி அம்மாவிடம் சொன்னது ஞாபகம் வந்தது , சிரித்துக் கொண்டான்.

                  சிவரஞ்சனிக்கு மல்லிகைப்பூ வாங்கலாமா என்று யோசித்தாலும், அதை கொடுக்கும் அளவுக்கு அவனுக்கு தைரியம் இல்லாததால் தன் நடையினை விரைவாகத் தொடர்ந்தான். பேட்டை எனும் பகுதியில் அவன் தாய் மாமன் வசித்து வருகிறார், அவனின் தாய் மாமனுக்கு மொத்தம் நான்கு பெண்களும் இரண்டு மகன்களும். அதில் தன் வயதுக்கு ஏற்ற மூத்த மகளின் பெயர் தான் சிவரஞ்சனி. ஆனந்தின் இளம் வயதில் அவனுக்கு இருந்த முக்கியமான எதிரி, காரணமே இல்லாமல் ஒரு பெண்ணை வெறுப்பது தானே மிகப் பெரிய ஆபத்தை தரும். அது இவன் வாழ்க்கையிலும் சரியாகப் பொருந்தும், தன் இளம் வயதில் விடுமுறை நாளில் வரும் அவளைக் கண்டாலே அவனுக்கு கொஞ்சம் கூடப் பொறுக்காது , அவர்கள் திரும்பச்  செல்லும் நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளுக்காகவே காத்துக் கொண்டே இருப்பான். இவனாவது பரவாயில்லை , அந்த சிவரஞ்சனிக்கும், ஆனந்த் என்றால் கொஞ்சம் கூட ஆகவே ஆகாது. எப்பொழுதும் அவனை கிண்டலடித்துக் கொண்டே இருப்பாள்.

               ஆனால் இன்று சிவரஞ்சனியைப் பார்க்க ஆனந்த் மிகுந்த ஆசையோடு சென்றுக் கொண்டிருந்தான், அவனுடைய  மாமன் வசிக்கும் வீட்டை விசாரித்து , அந்தத் தெருவில் நுழையும் பொழுது மாலை ஐந்தரை மணி இருக்கும். பொதுவாக அவன் ஊரில் உள்ள பெரும்பான்மையான பெண்மணிகளை சில சமயங்களில் மட்டுமே வீட்டை விட்டு வெளியே பார்க்க முடியும்.  பொதுவாக அதிகாலை எழுந்து கோலம் போடும் வேளையிலோ,  இல்லை தண்ணீர் பிடிக்க ஊரணிக்கு/கிணற்றுக்கு அல்லது கண்மாய்க்கு  செல்லும் வேளையிலோ தான் பார்க்க முடியும். அப்படியும் இல்லாவிட்டால், இந்த அந்தி மாலை நேரத்தில் பார்க்கலாம், அந்நேரத்தில் ஊரில் உள்ள எல்லோர் வீட்டினிலும் இருக்கும் பெண்கள் அவர்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து , வீட்டினில் லாந்தர் விளக்கினையும், பிற மண்ணெண்ணை விளக்கினையும் துடைத்து வைத்து, மண்ணெண்ணை ஊற்றி, கண்ணாடியைப் பொருத்தி இரவுக்குத் தயாராவார்கள். ஆனால், ஆனந்த் சென்றுகொண்டிருந்த அந்த தெருவிலோ அப்படி ஒரு சுவடே இல்லை.  ஏனென்றால், அவன் வசிப்பது  பட்டிக்காடு, ஆனால்அவன் வந்திருப்பது நெல்லைச் சீமைக்கு அல்லவா? எல்லோர் வீட்டிலும் பல்புகள் தங்கள் பணியைத் தொடங்கும் பொருட்டு தொங்கிக்கொண்டிருப்பது போல் அவனுக்கு தோன்றியது . 


        சிவரஞ்சனியைப்  பார்க்கும் ஆசையோடு வீட்டிற்கு அருகில் வந்த ஆனந்தைக் கண்டு, அவன் மாமன் பேரதிர்ச்சியுற்றார். அதை விட பன் மடங்கு ஆனந்துக்கு காத்திருந்தது, ஆம், அவன், அன்று அங்கே வந்திருக்க கூடாது தான், ஏனென்றால் அப்பொழுது தான் சிவரஞ்சனியை பெண் பார்க்க ஒரு கூட்டம் அவர் வீட்டிற்கு  வந்திருந்தது, எல்லோர் முகத்திலும் தெளிவாய் தெரிந்தது சங்கடம்..


1 . விதி, எப்படியெல்லாம் காலங்களோடு விளையாடுகிறது ??
2 . காலம் எப்படியெல்லாம் காதலோடு விளையாடுகிறது??
3 .காதல் -

எந்தக் காதலும் அவ்வளவு எளிதாக வடிவம் பெற்றுவிடுவதில்லை.
பழைய வாசகம் ஒன்று உள்ளதே ,'எல்லாக் காதலும் மோதலில் தான் ஆரம்பிக்கும் என்று 'அப்படி மோதல்களில் பரிணாமம் பெற்றது தான் இவர்கள் காதல். அவர்களின் பழைய மோதல்களுக்குள் செல்வோமா ??

-----------------------------------------------------------------------------------------------------
           
              "மழை என்றால் தீபாவளி அன்று மட்டும் வந்து தங்கள் மகிழ்ச்சியைத் தடுக்கும் இறைவனின் ஏற்பாடு" என்று பொறுமும் சிறுவர்கள் வசிக்கும் - ஆனந்தினுடைய கரிசல் காட்டுக் கிராமம், ஒவ்வொரு வருடத்திலும் மூன்று மாதங்களாவது குற்றாலச் சாரலைப் பெறும், தங்கத் தாமிரபரணி பாயும் எழில்மிகு மாநகரம் சிவரஞ்சனியின் வசிக்கும் திருநெல்வேலி. பட்டிக்காட்டில் வசித்தாலும் பண்ணையார் வீட்டு பிள்ளை போல் இருப்பவன் ஆனந்த், ஒரு சாதாரண போலிஸ் காரரின் மூத்த மகள் சிவரஞ்சனி, ஆனந்தின் முறைப்பெண். அதனால் தான் என்னவோஆனந்தினை கண்டால் முறைத்துக் கொண்டே இருப்பாள்.

        ஆனந்த், எப்படி இருப்பான்?? பதினான்கு வயது வரை வெறும் கால் சட்டை அணிந்தே இருப்பான், கால் சட்டைக்கு கீழே விழாமல் இருக்க அரைஞான் கயிறு இருந்தாலும், அந்த கால்சட்டையில் இருந்து இரண்டு பட்டைத் துணி தோள் பட்டையின் மேல் தாங்கிக் கொள்ளும் , நெற்றியிலே சுருண்டு விழும் மயிர்கள் சில, எப்பொழுதும் இடப்பட்டிருக்கும் நேர்த்தியான திருநீறு என்று கிராமத்து ஒல்லி தேகத்துடன் தோற்றமுடையவன்.

                 சிவரஞ்சனி கருப்பு நிறம், ஆனால் அந்தக் காந்தக் கண்கள், கருமையினால் உயிர்பெற்று ஆனந்தை அவ்வப்போது அடக்கும் சக்தி பெற்றது. அவளுக்கு இரட்டை சடைப் பின்னல் இரண்டாய் மடித்து தோள்களில் நிலை கொண்டிருக்கும். வித, விதமான சாந்து பொட்டுகள் சிவரஞ்சனியின் தனிச் சிறப்பு, படிப்பில் சுமார் தான் என்றாலும் ஆணவம் கொண்ட அறிவாளி போல எப்பொழுதும் செருக்குடன் தான் நடமாடுவாள்.இல்லையில்லை அவள் நடப்பதே இல்லை எப்பொழுதம் பாப்பா நொண்டி தான் அடிப்பாள், தன்னை மனதில் சரோஜா தேவியை பாவிப்பவள் அப்படித் தானே நடப்பாள்.

          மாமன் மகள் சிவரஞ்சனி நெல்லையில் பிறந்து வளர்ந்ததால் அவளுக்கு ஆனந்தை விட கொஞ்சம் உலக விஷயம் அதிகம். ஆனால், ஆனந்த் எஸ்.எஸ்.எல்.சி முடிக்கும் வரை அம்மாவின் முந்தானையை பிடித்து தான் வெளியே வருவான் அதனால அவனைப் பலர் கிண்டலடிப்பது உண்டு, ஆனந்திற்கு அம்மாவிற்கு நிகரான ஒரு அக்கா உண்டு. அந்த அக்காவிடம் சிவரஞ்சனி மிகவும் நெருக்கமாய் பழகுவாள், ஒவ்வொரு விடுமுறையும் தவறாமல் வந்துவிடுவாள். அவள் மட்டும் வந்துவிட்டால் போதும் ஆனந்த் யாருடனும் சரியாக பேசமாட்டான், அவன் அக்காவுடன் எரிந்து விழுவேன் , வேலை சொன்னால் செய்யமாட்டான். ஆனால் அவளோ அவனை வேண்டும் என்றே வம்பிழுப்பாள், அவனை பயந்தாங்கோலி , அம்மாபிள்ளை என்று பெயர் வேறு . ஆனதும் அவளை "ராட்சசி" என்று திட்டிய நாட்கள் பல உண்டு.

      ஆனந்த் அவளை வெறுக்க சில காரணங்கள் உண்டு,

காரணம் ஒன்று,

                            தென்காசியில் சிவரஞ்சனியின் அப்பா மாற்றலாகி வேலைப் பார்த்து வந்த போது, குற்றால சீசனில் வந்து கொஞ்ச நாள் இருந்து விட்டு வரலாமே என்று ஆனந்தை அழைத்துக் கொண்டு தென்காசிக்கு சென்றாள், அவன் தாய் இராசாத்தியம்மாள். மற்றக் குழந்தைகளை தன் மூத்த மகள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் ஆனந்தை மட்டும் கூட்டிக் கொண்டு தென்காசி கிளம்பிச் சென்றாள். ஆனந்த் தான் அம்மாவின் பிள்ளை ஆயிற்றே! அம்மாவின் காபி கூஜா ஒன்று, தண்ணீர் கூஜா ஒன்று என்று இரண்டு அடங்கிய கூடை ஒன்றையும் துணிகள் வைத்திருந்த கைப்பை ஒன்றையும் வைத்துக் கொண்டு அம்மாவுடன் சென்றான். தென்காசி வந்தவுடன் வீட்டிற்கு செல்லும் போது பலகாரம் வாங்கிக் கொண்டிருந்த  அம்மாவிற்கு, "பூ வாங்க வேண்டும்" என்று ஞாபகப் படுத்தினான்.


                         அண்ணன் வீட்டிற்கு சென்றவுடன்,  தயாராக இருந்த அவள் அண்ணி குற்றாலம் ஐந்தருவிக்கு சென்று குளிக்கலாம் என்று அண்ணன் ஏற்பாடு பண்ணி வைத்த வில்லுவண்டியைக் காட்டினாள். அருவி என்றவுடனே ஆனந்திற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது , பின்னே இருக்காதா ? கரிசல் காட்டில் பிறந்த அவன் - எப்போதாவது நிரம்பும் கண்மாயிலேயே கால் நனைக்கவே பயப்படுவான், நண்பர்களுடன் சென்றாலும் அவன் அங்கே குளிக்காமல் வேடிக்கை மட்டும் தான் பார்ப்பான். திடீரென்று ஐந்தருவி என்றதுமே அவன் ஊர் பேய்ப் புளியமரத்தை விட பயமாய் தோன்றியது. குற்றாலத்திற்கு கிளம்பலானர்கள். தன் இரு மகள்களுடன் கிளம்பிய சிவரஞ்சனியின் தாயார் மகாலெட்சுமி, ஆனந்தையும், ராசாத்தியம்மாளையும் வில்லு வண்டியில் முதலில் ஏற்றினாள். தன் இருமகள்களுடன் ஏறிய அவள், மூத்தவள் சிவரஞ்சனியை முன்னே அமரச் சொன்னாள். வண்டிக்காரனின் இரு மருங்கிலும் சிவரஞ்சனியும், ஆனந்தும் அமர்ந்தார்கள். வில்லு வண்டியும் தென் மேற்கு மலையை நோக்கி "ஜல் ஜல்" என்ற மாட்டின் சலங்கை சப்தத்துடன் கிளம்பியது. சின்ன சின்னதாய் காற்றுடன் சேர்ந்து வந்து விழுந்த குற்றாலத் தூறலும், வாழையும், மாங்காயும் பிசைந்த வாசமும் சேர்ந்து ஆனந்தை கிறக்கம் கொள்ளச் செய்தது, தன ஊரை இவ்வூரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான். பிரமாண்டமாய் மடிந்து உயர்ந்து இருக்கும் மேற்கு மலைத் தொடரின் முகட்டில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் அடர்மேகம் அவனுக்கு பயத்தையே அளித்தது .


                               சிவரஞ்சனி மஞ்சள் நிற சட்டையும் , ஊதாப்  பூ பிரின்ட் போட்ட  பாவடையும் அணிந்திருந்தாள். நேர்த்தியான வகிடு எடுத்து இரட்டை ஜடையுடன், மீன் போன்ற அச்சில் சாந்துப் பொட்டும், அந்தக் கண்களைக் கூர்மையாக்கும் கரு மையும் தீட்டிய அவளை, ராசாத்தியம்மாளின் கண்கள் ஆசையோடு பார்க்க வைத்தது. ஆனந்தோ வெள்ளை நிற மேல் சட்டையும், தோள் பட்டை வரை செல்லும் காக்கி கால் சட்டையும் அணிந்திருந்தான், அந்தப் புதுக் கால் சட்டை தொளதொளவென மூட்டு வரை நீண்டிருந்தது, ஆனாலும், அவர்கள் இருவரும் ஜோடியாகவே இரண்டு தாய்களின் கண்களுக்கும் தெரிந்தனர். அப்போது இராசாத்தியம்மாள் பெருமையாக , " மதினி !! ஒன்னு தெரியுமா ?? நான் கூட இங்கவரும் போது பலகாரம் மட்டுமே வாங்கியாந்தேன், ஆனந்துதான் மறந்துட்டியாம்மா என்று பூக்கடையப் பாத்து கை நீட்டினான் மதினி" என்று சொன்னாள். வண்டிப் போகும் பாதையை அமைதியாக பார்த்து வந்த ஆனந்த் தலைக் கவிழாமல் சிவ்ரஞ்சனியைப் பார்த்திருந்தால் வெட்கத்தில் சிவரஞ்சனியின் நெற்றியில் வைக்கப் பட்ட மீனின் உருவம் கொண்ட சாந்து அச்சு, மீன் நீந்துவது போன்ற காட்சியாய் பாத்திருப்பான். ஆனால் அவன் பார்த்ததோ எல்லாரும் ஆனந்தமாய் ஐந்தருவியில் ஓடி ஆடிக் குளிப்பதைத் தான். அவனைக் குளிக்கச் சொல்லி எல்லோரும் கேலி பண்ண, அவமானம் தாங்கமுடியாமல் ஐந்தருவியின் ஒரு அருவியோரம் சின்ன ஓடை போல வடிந்துக் கொண்டிருந்த பகுதிக்கு சென்று கைகளைக் கட்டியபடி நின்றான்.

                                   அந்த ஓடைத் தண்ணீரே முதுகில் ஈட்டி எறிவது போல் உணர்ந்த, அவன் "ஐயோ" என்று அலறியபடி அங்கிருந்து உடனே ஓடினான். முழுதும் நனைவதற்கு முன்பே, குளியலை முடித்துவிட்ட சிவரஞ்சனியும் அவன் தங்கை பத்மினியும் சேர்ந்து அவனை கிண்டலடித்து அழ வைக்காத குறையாய் பண்ணிவிட,  அதில் நேர்ந்த அவமானத்தால் அவர்களை வெறுக்க ஆரம்பித்தான். சகோதரிகள்  இரண்டு பெரும் சேர்ந்து அவனை "பயந்தாங்கொள்ளி அத்தான்" என்று வீடு வரும் கிண்டலடித்தனர்.இதைப் போருக்க முடியாமல், ஆனந்த் - தன் அம்மாவிடம் சென்று "அம்மா அவுங்க ரெண்டு பெரும் என்னைப் பார்த்து 'வெவ்வே ன்னு வலிக்கிறாங்க' " என்று அங்கலாய்த்தான். "எல்லாம் ஒரு முறைனு இருந்தா அப்படித்தான்டா இருக்கும், வேணும்னா நீயும்  வலி ச்சுக்கோ" என்று அவனை சமாதப் படுத்தினாள், அவனால் அது முடியவில்லை.

காரணம் இரண்டு


                          அது ஒரு கோடை விடுமுறையின் மாலை நேரம், ஆனந்த் தன் தங்கச்சிகளுக்கு கதை சொல்லிக் கொடுப்பது, புளியம் பழம் , கொடுக்காப்புளி பறித்துக் கொடுப்பது, வீட்டினில் இருக்கும் பஞ்சைத் திருடி விற்று ஓலைக் கொட்டான் நிறைய கருப்பட்டி மிட்டாய் வாங்கிக் கொடுப்பது, அவர்களுடன் "கல்லா?? மண்ணா??", "நொண்டி" என்று கூடவே விளையாடுவான். சிவரஞ்சனியிடம் யாரும் சேரக்கூடாது என்று தன் தங்கச்சிகளுக்கு சொல்லி வைக்க, சிவரஞ்சையோ ஆனந்தின் அக்காவுடைய சிபாரிசில் விளையாட்டில்  நுழைந்தாள். சதுரம் போன்று நான்கு வீடுகளுக்கு மத்தியிலமைந்த சாணத்தால் மொழுகிய மண் தரையில் தங்கைகளுடனும், சிவரஞ்சனி மற்றும் அவள் தங்கையுடனும் நொண்டி விளையாட ஆரம்பித்தான் ஆனந்த்.

                            அது சிவரஞ்சனியின் முறை அவள் வேறு யாரையும் குறிவைக்கவில்லை, நேராக ஆனந்தை விரட்ட ஆரம்பித்தாள், தன்னைத்தான் விரட்டுகிறாள் என்று கவனித்தவுடன் அவனுக்குப் பதட்டம் அதிகமானது , போயும் போயும் இவளிடம் நாம் மாட்டுவதா என்று வேகமாக ஓட்டம் பிடித்தான், அவளும் விடாப்பிடியாக துரத்த ஆரம்பித்தாள். ஆனந்தோ "இவளிடம் நாம் மாட்டினால் நமக்கு தான் பெருத்த அவமானம் மட்டுமே மிஞ்சும்" என்று நினைத்துக் கொண்டு வளைந்து வளைந்து ஓடினான். பதட்டத்துடன் ஓடிய ஆனந்தை மிக நிதானமாய் நெருங்கி வந்து, அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி ஒன்று வைத்தாள். தன் ஐந்து விரல்களும் பதியுமாறு ஓங்கி அடித்ததில் சிவரஞ்சனி உட்பட எல்லோருமே அதிர்ச்சியாய் பயத்தில் உறைந்துவிட்டனர். அவளும் அவ்வளவு சப்தத்துடன் அவன் முதுகில் தன கை படும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனந்தின் அக்காவும் , தங்கைகளும் அதிர்ந்து நின்றனர் , முதலில் ஒரு அடிச் சத்தம் கேட்டும், பின்னர் அங்கிருந்த நிசப்தத்தின் விளைவையும் கற்பனை பண்ணி எழுந்து வந்த அவன் அம்மா அங்கிருந்த எல்லாரையும் உற்று நோக்கினாள். அம்மாவைக் கண்ட ஆனந்த் அங்கு நேர்ந்த அவமானம் தாங்கமுடியாமல் "அம்மா என்று அலறிக் கொண்டே போனான்".

                          அதற்கு பின் அவர்கள் விளையாட்டு நின்றதோடு மட்டுமல்லாமல், சிவரஞ்சனியை வாயில் வந்த வார்த்தைகளைக் கொண்டெல்லாம் திட்டித் தீர்த்தாள். அவ்வளவு திட்டையும் பொறுமையாய் வாங்கிக் கொண்ட சிவரஞ்சனியின் கண்கள் சிவந்திருந்ததே தவிர கண்ணீர் வரவில்லை. அவள் கோபத்தை அடக்கிக் கொண்டு பற்களைக் கடித்தாள். அதை உணர்ந்த அவள் அத்தை, சிவரஞ்சனி மீது காட்ட முடியாத கோபத்தை ஆனந்த் மீது காட்டினாள், "பொட்டப் பிள்ளைங்களோட உனக்கு என்ன மயித்துக்கு வெளையாட்டு??" என்று அவனை இரண்டு தட்டு தட்டினாள்.

                 அதற்கு மேல் சிவரஞ்சனியால் பொறுக்க முடியவில்லை, தன் அப்பா அடுத்த நாள் வருவதாக சொல்லியிருந்தார், அவருடன் அன்றே கிளம்பிவிட  வேண்டும் என்றும் அதற்குப் பின்னர் இவர்கள் வீட்டிற்க்கே வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அவள் நினைத்ததை ஆனந்தின் அக்காவிற்கும் சொல்லிக் கொண்டிருந்தாள்.அதை ஆனந்தும் கேட்டுக் கொண்டிருந்தான், தன்னால் தான் அவளுக்கு இத்தனை அவமானம் நேர்ந்தது என்று எண்ணி வருத்தப் பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தான்.அவளும் இனி "அங்கே வரவேக் கூடாது" என்று எண்ணிக் கொண்டாள்.


               ஆனந்தும், சிவரஞ்சனியும்  பரஸ்பரம் எதிரியாய் தங்களை பாவித்துக் கொண்டு இருந்தனர். அதே சமயம் அவர்களின் பெற்றோர்களான, அண்ணன் தங்கை உறவிலும் சிறிது விரிசல் வர ஆரம்பித்தது. ஆகவே, ஆனந்த் மற்றும் சிவரஞ்சனி ஆகியோரது  பிரிவு இந்தக் கதையில் வரும் சாத்தியம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

உறவுகளுக்குள் விரிசல்கள் வருவதும் போவதும் சாதாரண விஷயம் தானே ! எவ்வளவு மாற்றங்கள் வந்துக் கொண்டிருந்தாலும், பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் நம் சமூகத்தின் பெருங்காரணம், அவர்கள் ஒரு மரத்தின் கிளைகள் என்று அறிய வைக்கும் அடிவேர் என்பது நம் கலாசாரம், நமது பண்டிகைகள், நம் வழிபாடுகள்.


                 அப்படித்தான் சிவரஞ்சனி பெரிய மனுஷியாய் ஆனபோது மீண்டும் அண்ணனும் த்னகயும் இணைந்தனர். அன்றும் அவன் தாய்க்கு துணையாய் அவனே வந்திருந்தான், அப்போது சிவரஞ்சனியின் அப்பாவிற்கு சங்கரன்கோயிலில் மாற்றல் , அன்று ராசாத்தியம்மாள் சங்கரன்கோயில் பஸ் ஸ்டாண்டில் இறங்கும் பொழுது உடன் வந்த ஆனந்தின் கையில் ஒரு பெரிய அண்டா முழுதும் சீனி லட்டுகள் அமர்ந்திருந்தன. மிளகாய் மண்டியில் அந்த வார பறிப்பில் விற்ற அத்துணை பணத்தையும் எடுத்துக் கொண்டு தன் அண்ணன் மகளை பார்க்க கிளம்பிஇருந்தால் ராசாத்தியம்மாள். காலேஜ்ஜில் பீ.யூ.சீ படித்துக் கொண்டிருந்த ஆனந்த்தும் பல வருடங்களுக்குப் பின்னர் அவர்கள் வீட்டிற்கு மீண்டும் வந்தான். சிவரஞ்சனியும் அவன் வேஷ்டிக் கட்டியிருப்பதை தன் தங்கை சொல்லி அறிந்தாள். ஆனந்தும் அவளை தண்ணீ ஊற்றுவதற்கு அழைத்து செல்லுகையில் அரை வினாடி பார்த்திருந்தான். அதில் எதுவும் அற்புதம் நிகழவில்லை. அற்புதம் நிகழ்வதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. அதனால், ஆனந்தின் அக்காவுடைய திருமனத்திற்கு அவள் வந்திருந்த போது தான் அவளை நன்றாக பார்த்திருந்தான்.

               அந்த வயதில் பார்த்த அதே திமிர் பிடித்த முகம் தான், மாறவில்லை, அதேப் பொலிவும், அழகும் இருந்தது. ஆனால் அவள் ஒரு மிகப் பெரிய திறமை ஒளித்து வைத்து வைத்திருப்பதை அவன் அன்று அறிந்துக் கொண்டான். அந்த வஸ்து தான் அவள் "குரல்", அந்தக் கல்யாண வீட்டில் எல்லா பெண்களும் ஒன்றாக அமர்ந்துக் கொண்டு பாட்டு பாடி விளையாட, சிவரஞ்சனியோ "பளிங்கினால் ஒரு மாளிகை " என்றக் கிறக்கம்  தரும்  பாடலை பாடியும் , ஆடியும் அவன் அக்கா, தங்கைகளுக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள். கதவுத் தாழ்வார ஓட்டையின் வழியாக ஆனந்தும் அவன் தம்பி சுந்தரமும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அண்ணனின் பார்வையை உணர்ந்த சுந்தரத்தில் கண்களில் அவள் அண்ணியாக மாறினாள்.

      இப்போது ஆனந்த் பீ.யூ.சீ முடித்து, B.A வை முடித்துக் கொண்டு வேலை தேடுவதற்காக அவன் அக்கா வசிக்கும் சென்னைக்கு சென்றுவிட்டான். அவன் செல்லாமல் இருந்தால் அண்ணனுக்கும் தங்கைக்கு இடையே பெரிய பிரச்னையாக உருவாகாமல் இருந்திருக்கலாம்.

        ஆனால், அப்படி இருக்கவில்லை ,ஆனந்தின் மாமன் தன் தங்கைக்கு கடனாய் கொடுத்த மூவாயிரம் ரூபாய் அவர்களிடையே பகையை புகையாய் வளர்க்க ஆரம்பித்தது. அந்தக் கரிசல் காட்டு விவசாயத்தில் ஆனந்தின் பெரிய வீட்டுப் பொருளாதராம் ஊதாரித் தனத்திலும், பொருப்பின்மையிலும் முக்கியமாய் மழையின்மையிலும் தேய்ந்துக் கொண்டிருந்தது. அந்த மூவாயிரத்தை வைத்து தென்காசியில் ஒரு மச்சு வீட்டையே விலைக்கு வாங்கியிருக்கலாம் என்று தன் ஆயுள் முழுதும் மகாலெட்சுமி சொல்லிக் கொண்டிருந்தாள். கடைசியாய் வந்தக் கடிதத்தில் அந்த மூவாயிரம் அவர்களுக்கு மிகவும் அவசரமாய் தேவைப்படுகிறது என்று மிகக் காட்டமாய் இருந்தது . மேலும், அதில் ராசாத்தியின் கணவரைத் திட்டியும் நாலு வரி இருந்தது.

                    அண்ணனின் கடிதம் கண்டு வெறுத்துப் போன அவள், அதற்கு அதே அளவு காரமான பதில் தர விரும்பினாள்."அடுத்த மிளகாய் அறுப்பு காசு வந்ததும் உன் எல்லா காசையும், உன் மொகத்துலே எரிஞ்சுடுறேன்" என்று அவள் கூறியதை அப்படியே சொல்வதற்கு, அப்போது ஊருக்கு வந்த ஆனந்தை அனுப்பிவைத்தாள். சென்னையில் மெரீனா, ஸ்பென்சர் என்று நவ நாகரிக உலகைக் கண்ட ஆனந்திற்கு, காதல் அரும்புவதும், தேவைப்படுவதும்  இயற்கை தானே. தன் தாய் சொல்வதை எல்லாம் கேட்கும் போது தன் காதல் கதை தொடங்கிவிட்டதாய் நினைத்துக் கொண்டே வந்தான். இப்பொழுதெல்லாம் அவன் அடிக்கடி கிசோர் குமாரின் இந்திப் பாடல்களைத் தான் பாடுகிறான்.

        நெல்லைக்குப் பேருந்தில் ஏறியவுடன் பல கனவுகள் இந்திப் பாடலின் பின் புலத்தோடு வந்தது, அவன் கனவில் அல்லது கற்பனையில் அவன் மாமன், அத்தை , சிவரஞ்சனியின் தங்கை , தம்பி என எல்லோரும் அவளை விட்டு விட்டு ஊருக்கு சென்றதாகவும் நினைத்துக் கொண்டே வந்திறங்கினான் நெல்லையில்.

----------------------------------------------------------------------------------------------------------

                                 ஆனால் இங்கோ அவளை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார்  வந்துள்ளார்கள் என்று தெரிந்தவுடன் ஆனந்தின் இதயம் வெடித்துச் சிதறியது. அதை வெளிக்காட்டாமல் தலை கவிழ்ந்த படி அவ்வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். தன் கடைசித் தம்பி, "ஆனந்த் அத்தான் நம்ப வீட்டுத் திண்ணயிலே இருக்கான் கா!" என்று சிவரஞ்சனியிடம் சொல்ல, சிவரஞ்சனி அவன் மீது கரிசனம் கொண்டாள், ஜன்னலின் வழியே அவனைப் பார்க்க முடியுமா என்று யோசித்தாள், யோசிக்க மட்டும் செய்தாள். பெருத்த ஏமாற்றத்துடன் ஆனந்தும் அங்கிருந்து திரும்பினான்.


                             வாழ்க்கை எப்பவும் அப்படித்தான்,  ஒரே புள்ளியில் மக்களை இணைத்துப் பிரித்து ,மறுபடியும் சேர்த்து வைத்து, தாயம் வீசும் பகடையைப் போலே நம்மை உருட்டி விளையாடுகிறது . வெறும் மூவாயிரம் ஏற்படுத்திய விளைவு தான் அவர்களுக்கு முதலில் உதவியாக, பின்னர் அதுவே உபத்திரமாக , பின்னர் தவிப்பாக, ஏமாற்றமாக இருந்து வந்தது. அவர்கள் அந்த மூவாயிரத்திற்கு அவசரம் காட்டியதன் காரணமும் அன்று தான் ராசத்தியம்மாளுக்கு விளங்கிற்று. "அந்தப் பணம் சிவரஞ்சனியின் கல்யாணத்திற்கு தான்" என்று, தன்னிடம் கூட ஒருவார்த்தை சொல்லாமல், தன் மருமகளிற்கு வரன் பார்க்கும் தன் அண்ணனிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்க அங்கு சென்றாள் ராசாத்தியம்மாள். இந்த முறை ராசத்தியம்மாளுடன் செல்வது ஆனந்த் இல்லை, அவள் கணவன்.

                        மூவாயிர ருபாய் விஸ்வரூபம் எடுத்தது , அவர்கள் பேச்சில் சிதறல்கள் வந்தன, பழையக் கதைகள் எல்லாம் விவாதம் செய்யப் பட்டன. திடீரென்று ராசாத்தியம்மாள் அழுதாள், மயங்கினாள், ஒரு லூட்ட காபி குடித்தாள். மறுபடியும் சண்டை, மறுபடியும் அழுகை தங்கை அழுதவுடன், அண்ணனும் அமைதியானார் வானிலை மாறியது.

           கரிசல் காட்டில் இருந்து சந்தைக்கு செல்வதற்காக மிளகாய் தோட்டத்தில் முதல் அறுப்பில் வந்த , காய்ந்துக் கொண்டிருந்த வரமிளகாயில் ஒரு கைப்பிடி எடுத்த ஆனந்தின் ஆச்சி பிச்சம்மாள்,  இன்னும் கொஞ்சம் உப்பையும் எடுத்து சேர்த்துக் கொண்டு , வண்டியில் இருந்து இறங்கி வந்த புதுமணத் தம்பதியான "ஆனந்த் , சிவரஞ்சனி" இருவரையும் மூன்று முறை சுற்றி , திருஷ்டிக் கழித்து பால் காய்ந்துக் கொண்டிருந்த மண் திட்டு அடுப்பினுள் தூக்கி எறிந்தாள்.


                 அடுப்பினுள்ளே, காரமான நெடியுடன் ஒரு கரிசல் மண்ணின் சோகக் கதை போல் அந்த விறகில் எரிந்துக்கொண்டிருந்த சிவப்பு நிற வரமிளகாய் வெடித்துக் குமுறிக் கொண்டிருந்தது, அந்த விறகின் மேலே இருந்த அடுப்பினுள் கொத்தித்துக் கொண்டிருந்தப் பாலின் அளவு அன்று அவர்கள் இரவு உணவு நிலாச்சோறு தான் என்பதையும், அன்று பவுர்ணமி என்பதையும் உறுதிப் படுத்தது ...


        எனது நெடுங்கதை ஒன்றும் அவர்களின் வாழ்க்கையோடு தொடங்குகிறது - ஜீவ கரிகாலன்

              "நிலாச்சோறும் , மிளகாய் வற்றலும்"



      

9 கருத்துகள்:

  1. Sooooper !! continue. Naangalum aavalaai irukirom aduthathu enna !!!

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. Interesting,I konw, that, this is your story writing.If you add, more dialogue, it will be give more impression to the story. Nice. Go on.
    My wishes!

    பதிலளிநீக்கு
  4. Interesting,I konw, that, this is your story writing.If you add, more dialogue, it will be give more impression to the story. Nice. Go on.
    My wishes! -Roger.

    பதிலளிநீக்கு
  5. very nice & interesting story...continue go on waiting for your story all the best...!

    பதிலளிநீக்கு
  6. Nice :)
    I go with the other comment, include more dialogues if possible :)

    பதிலளிநீக்கு
  7. சிவரஞ்சனி, ஆனந்தின் முறைப்பெண். அதனால் தான் என்னவோஆனந்தினை கண்டால் முறைத்துக் கொண்டே இருப்பாள்.
    good joke .
    வாழ்க்கை எப்பவும் அப்படித்தான், ஒரே புள்ளியில் மக்களை இணைத்துப் பிரித்து ,மறுபடியும் சேர்த்து வைத்து, தாயம் வீசும் பகடையைப் போலே நம்மை உருட்டி விளையாடுகிறது .sad . but good writing ..keep it up

    பதிலளிநீக்கு