வியாழன், 5 நவம்பர், 2015

Virtual Exhibition



http://timesofindia.indiatimes.com/india/Man-hurls-footwear-at-former-national-security-adviser-M-K-Narayanan-in-Chennai/articleshow/49663203.cms




Image 1
Medium: Oil on canvas
Dimensions: 18 x 21 3/4 in. (45.7 x 55.2 cm)
Classification: Paintings
Artist : Vincent Van Gogh
Title : Shoes











Image 2
Medium: Online user friendly app
Dimensions: Flexible
Classification: Fake Art 
Artist : Polling Joker
Title : Common Man's Politics







http://www.business-standard.com/article/current-affairs/i-have-a-file-on-you-m-k-narayanan-114070400684_1.html

புதன், 4 நவம்பர், 2015

ப.தியாகு - அவசரக்காரன்

யாரோடும் விரோதமில்லாதவன்
***

அக்டோபர் மாதக் கணையாழியில் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கும் முன் ஒவ்வொரு கவிதையாக வாசித்து வந்தார்கள். பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ப.தியாகுவின் இந்தக் கவிதை மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டது… 

இந்தக் கடைசி வரி இத்தனை வலி மிக்கதா? கண்களை மூடுவது – திறப்பதற்கு நண்பா!!...

“வெள்ளி இழைகளை”
விழிகளையுரசும் நெருக்கத்தில்
காணப்பிடிக்கும்
சேரும் இடைவெளியில்
தன்னை
வலுவற்றதாய் மாற்றிக்கொண்டு
குழந்தையின்
மென்கரங்களில் மோதி முறியும்
வெள்ளிக் கம்பிகளை அறிவேன்
ரயிலின்
ஜன்னலோர இருக்கையை
வேண்டிப் பெற்று
உச்சியில்
கிளைகள் போல் பரந்திருக்கும் வானை
தாங்கி நிற்கும் வெள்ளித் தண்டை
வியந்துகொண்டிருக்கையில்
தாழ மறுக்கும் என் இமைகளுக்கப்பாலும்
திணிப்பதற்கேயொரு
திரையிருப்பதை
பக்கத்து இருக்கையிலிருப்பவன்தான்
அறியத் தந்தான்
'மழை தெறிக்கிறதே
கண்களை
மூடிக்கொள்ளலாமா?'

நேரில் வந்து பரிசை வாங்குகிறேன் என்றவனிடம், வீண் செலவு செய்யாதே என்று கண்டித்தேன். உலகில் ஒருவனுக்காக நான், குணா, தியாகு ஆகியோர்கள் பேசிக் கொண்டிருந்த நினைவுகள் பாரத்துடன் அழுத்துகின்றன. உன் பெயர் எழுத வைத்திருக்கும் காசோலையில் யார் பெயரும் எழுதிட முடியாது. வெறுமனே சமூக ஊடகம் இணைத்து வைத்திருந்தது என்று சொல்ல முடியவில்லை தியாகு!! எல்லாவற்றையும் மறந்து, கடந்து செல்லப் பழக்கப்பட்ட மனம் தான் மனிதனுடையது. நான் கூட இதை எழுதுவது இவற்றைக் கடப்பதற்குத் தானா என்று அச்சமுறுகிறேன். 

மிருகங்களுக்கு இருக்கின்றதா என்று தெரியாது, இத்தகைய மரணங்களில் மனிதன் தன் இருப்பைப் பற்றிய பயத்தை அடைகிறான். அது மட்டுமே வலி என்பது உளவியல் கூறும் உண்மை.

நீயும் உன் நண்பனுக்காக எழுதியிருந்தாய்!!

சமாதானத்தின் மடி
***
சதா இரையும்
உன் பேத்தல்கள் அனைத்தும்
அடக்கிக்கொண்டுவிட்டன
சிறு முனகலில்
வேட்கையோடு நீ
சரித்துக்கொள்ளும் 'வோத்கா'
உள்ளத்து ரணங்களின்
சீழோடு வினையாற்றி
இமைப்பீலிகள் நனையப்பொங்கும் கண்ணீராகும்
வேதி விளைவுகளுக்கு
அவசியங்கள் இல்லை இனி
தங்க முட்டைகளென்று பொய்யுரைத்து
வாழ்க்கை உனக்குக் கையளித்த
வெறும் கூழாங்கற்களை
ஒற்றைத் தேகமாக்கி விட்டெறிந்து
பின் எங்குறைவாய் உயிரால்,
ஏமாற்றங்களும் வாதைகளும்
வந்து தீண்டா
மரணத்தின் மடியிலன்றி.

- (நண்பன் ராம்நாத்-ன் நினைவுக்கு)

சாதாரணமாகக் கடந்து சென்ற வரிகளெல்லாம் இன்று கணக்கிறதே நெஞ்சில். ஜாடைப் பேச்சு பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் என்னை வேறு ஏதோ சொல்லப் பணிக்கிறதே தியாகு.

'மழை தெறிக்கிறதே
கண்களை
மூடிக்கொள்ளலாமா?'

மழை இன்னும் வேகமாகப் பெய்கின்றது தியாகு…

ஞாயிறு, 1 நவம்பர், 2015

Interpretation of “Creation of Adam” by Michelangelo Buanarotti held at land mass near river Coovam




தேவாலயத்தின் ஆடம்பர தட்டுகள்
இரண்டினில்
கட்டளையின் பெயரில்
நமக்கு உணவு பரிமாறப்படுகிறது

அதை நான் மஃபின் என்றேன்
நீயோ அது கப்பிகேக் என்கிறாய்
இரண்டும் பேக்டு 
உணவு தானே என்றேன் -இருந்தும்
இரண்டும் வேறு வேறு 
கேக்ஸ் தானே என்றாய்
பிறகு
நீயாக வருத்தமடைகிறாய்
கோபம் கொள்கிறாய்        
டைனிங் டேபிளின்
எனது இருக்கையில் மை ஊற்றப்படுகிறது.

கிரீடம் உன் தலையில்

எப்படியோ தெரியவில்லை
உன் அரசாட்சியின் புதிய ஏற்பாடுகள்
அப்பத்தை இடம்பெயறச் செய்கின்றன
வைன் ஊற்றப்பட்ட கப்பிக் கேக்
புனிதமாக்கப்படுகிறது

ஜெர்ரி பழங்களில் இருக்கும் அக்ரலிக்
வண்ணங்களை
நான் விஷம் எனப் பிரச்சாரம் செய்கிறேன்.

நித்தமும் போஷித்து வரும்
உனது தற்கால எதிரியின்
வேண்டுகோள் இதுதான்.
சிலுவையில் அறை,
கல்லால் அடி,
எப்படியோ கொன்று போடு

ஆனால் சாப்பிட்டாயா என்று
மட்டும் கேட்காதே!!
***
க்ளிஷே இல்லை
இது வைனில் ஊற்றிவைக்கப்பட்ட

வந்தனம் – ஆமென்.

ஜீவ கரிகாலன்

வியாழன், 29 அக்டோபர், 2015

பஜ்ஜி-சொஜ்ஜி 85 // ஹடூப் என்கிற முரட்டுக்காளை

- ஜீவ கரிகாலன்
hadop stodgy
அந்த யானைப் படம் போட்ட புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு 10 மணிக்கு உண்ட உணவு செரிக்கும் வரை வாசித்து வருவான் என் தம்பி ஒருவன். அவனிடமிருந்து மற்ற தம்பிகளும் அதை உருட்ட ஆரம்பித்தனர், என்னடா சும்மா சும்மா ஒரு புக்கை கையிலெடுத்துப் படிக்கிறிங்க என்று கேட்டால் அதற்கு பதிலாக ஒரு நாள் “உங்க நண்பர் வா.மவும் அதைப் பத்தி தான் இன்னிக்கு ப்ளாக் எழுதியிருக்கிறார்” என்று சொன்ன பின்பு தான் அந்த ஆறெழுத்து வார்த்தை மனதில் நின்றது. “Hadoop”, இந்த சொல் தினமும் டி.எல்.அஃப் பார்க்கை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் நிறைய போஸ்டர்களைப் பார்த்ததுண்டு, இதைப் படித்தால் உடனே வேலை என்று கோச்சிங் சென்டர்கள் பிளிறிக் கொண்டிருக்கின்றன. எனது ஃபேஸ்புக்கிலும், ஈமெயிலிலும் கூட விளம்பரம் வந்து கொண்டிருக்கின்றன மானாவாரியாய்.

ஆனால், எனக்கும் வேறு சில நண்பர்கள் இருக்கின்றார்கள், முழுநேரம் விவசாயமும், சில்லறை வணிகமும் செய்யும் நண்பனின் வீட்டிற்கு சென்ற பொழுது, புது சிஸ்டமென்று ( Assembled PC) ஒன்றைக் காட்டியபோது சற்று மிரண்டு தான் போனேன். அவனிடம் கேட்டதற்கு, “இருந்தாலும் பழசுன்னா அப்படியே விட்டுட்டுப் போக முடியுமா, ஆளாளுக்கு எத்தனை FLOPPY வாங்கி வச்சுருப்போம். நான் இன்னுங்கூட எல்லாத்தையும் பத்திரமா வச்சுருக்கேன்” என்று புதிதாய் வாங்கிய கம்ப்யூட்டரில் நச்சரித்து வாங்கிய FLOPPY DRIVEனையும் காண்பிக்கும் போது அவை ஓட்டைக் காலணவுக்கான முன்னோர்களின் பெருமிதமாய் இருந்தது. இவனைக் குற்றம் சொல்லவில்லை, நான் வேலை செய்யும் நிறுவன்ம் மத்திய அரசாங்கத்தின் கலால் மற்றும் சுங்க அலுவலகங்களோடு தொடர்புடையது 2012 வரை FLOPPY பயன்பாட்டில் இருந்தது என்பது எத்தனை பேருக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது இப்போது என்னால். ஏதோ முந்தைய தலைமுறை ஆளினைப் போல் என் நண்பன் கண் முன்னே தோன்றினான்.

இத்தனை வேகமாக தன் தோலினை சட்டையாக உரித்துவிடும் சர்பமாக உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இழப்பதன் மதிப்பீடுகள் குறித்துக் கவலை கொள்வாரில்லை. ஸ்மார்ட் போனுக்கு மாறாதவர்கள் வேற்று கிரக வாசிகளாகத் தான் பார்க்கப்படுகிறார்கள். இன்னுமாடா நீ வாட்ஸப்பிலில்லை என்று சென்ற தீபாவளி வரை என்னை எத்தனை பேர் வெறுப்பேற்றி இருந்தனர் என்பது திரிபுர சுந்தரியின் (மிஸஸ் .காமேஸ்வரன்) மளிகைக் கடை லிஸ்ட் போல் மிகப் பெரியது. “ஃபாக்ஸ்புரோ” கோர்ஸ் முடித்து விட்டதற்காக மிகப்பெரிய ட்ரீட் கொடுத்த என் நண்பன், அதை உபயோகப் படுத்த முடியவில்லையே என்று மிகவும் வேதனையுடன் வருத்தப்பட்டப் பொழுது நான் சிரிப்பது குரூரமாய் எனக்குத் தெரியவில்லை.

மாட்டுக்கறி குறித்த செய்திப் பரபரப்பில், மாடுகளுக்கு பதிலாக ஆஜராகி வாதாடிக் கொண்டிருப்பவர்களில் அநேகம் பேர் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட போது அதனை ஆதரித்தவர்கள் தான் என்பதில் சமூல/அரசியல்/வியாபாரக் கணக்கு ஒன்று உண்டு. ஜல்லிக்கட்டுத் தடை உறுதி செய்யப்பட்ட நேரத்திலேயே வீரமாக சாதிப்பெயர் சொல்லி அழைக்கப்படும் காளைகளும், அவர்களின் முதலாளிகளும் உடனடியாக தங்களுக்கிடையான சிலவாயிரமாண்டு பந்தத்தை உடனேயே முடித்துக் கொண்டு, கேரளாவுக்கு லாரிகளில் ஏற்றிய சம்பவங்கள் பற்றிக் கேள்வி பட்ட போது இருந்த வலி இன்னும் நினைவில் இருக்கிறது. எத்தனை பிசகான அளவீடுகள் நம்மிடம் இருக்கின்றன. அரசும், சட்டமும் கூட வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்குமளவுப் பழக்கப்பட்டிருந்த யானைகளை காட்டு விலங்கு என்கிற பட்டியலில் இருந்து நீக்கியும், காளைகளை அந்தப் பட்டியலிலிருந்து நீக்காமல் வைத்திருப்பதனாலேயே அதனைத் துன்புறுத்துவது (ஜல்லிக்கட்டு எனும் பெயரில்) சட்டப்படிக் குற்றமாகி விடுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் ஏதாவது ஒரு இடத்திலாவது ஜல்லிக்கட்டு நிகழ்ந்திருந்தால் இன்றளவும் அந்த வழக்குகள் ஒரு முடிவை நோக்கி சென்றிருக்காது தானே.

சோழ மண்டலத்தில் முரளிதரன் அழகர் வைத்திருந்த அவரது தனிநபர் கண்காட்சி அந்த மதிப்பீடுகளின் பிரதிபலிப்பு தான். சின்னாளப்பட்டியைச் சேர்ந்த இம்மனிதர் மதுரை பாஷையை விழுங்கி மறைத்துக் கொண்டு வரவேற்றுப் பேசினார். வெவ்வேறு வகையான காளைகளில் இருக்கும் வித்தியாசங்களையும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியிருந்த முரளியின் draughtmanship, “அவ்ய்ங்க” என்று சொல்வதற்கும் முன்பாகவே அவர் மதுரைக்காரர் தான் என்று முடிவெடுக்க உதவி புரிந்தது.

“THE GAME BEGINS” என்கிற டைட்டில் கொடுக்கின்ற உற்சாகத்திற்கு எதிரான மனநிலையில் தான் அரங்கத்திற்குள்ளேயே செல்ல முடிந்தது. அரங்கின் வெளியேவே இந்த CONCEPTUAL வேலைப்பாடுகள் பற்றிய போஸ்டரில், “ஜல்லிக்கட்டு நின்று போன பின்பு” என்கிற வாசகம், சட்டத்தின் வழிகாட்டுதலால் வரலாற்றில் நிகழ்ந்தஅந்த மிக மோசமான முன்னுதாரங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்குத் தடை என்கிற நினைவின் வலி – தலைப்பிற்கான முரண்பாடு தான்.
ஆனால் முரளி, அங்கு வந்திருந்த பல நண்பர்களுக்கு ஜல்லிக்கட்டு நின்று போனதே தெரியாது என்று சொன்னதன் ஆச்சரியம் எனக்கு TRANSFORM ஆகவில்லை, வானகத்திற்கு அடுத்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்த என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பனொருவன் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவனாயிருந்தும், வானகத்தில் அத்தனை சாதனைகள் செய்து வந்த நம்மாழ்வாரை யாரென்று அறிந்திடாத வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கிறான் என்பதும், அவன் இயல்பாகத் தான் இருக்கிறான் என்பதும் அவனைத் தேடி வரும் செய்திகள் அவனுக்கு CUSTOMIZE செய்யப்பட்டு தான் அவனைச் சென்றடைகின்றன என்று சமூக அமைப்பினை, STRUCTURALஆகவே விளக்கிட நேரம் கூடிவரவில்லை. ஆனால் அந்தக் கண்காட்சிக்கு வந்திருக்கும் பல வெளிநாட்டினரும் “ஜல்லிக்கட்டுத் தடையை” நன்றாக அறிந்திருக்கின்றனர் என்று சொல்லும் போது அவர்கள் இந்திய ஆட்டோக்காரர்களின் மனநிலையைத் தவிர எல்லாவற்றையும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல வந்தும் சொல்லாமலிருந்தேன்.

வாட்டர் கலர் & சார் கோல், அக்ரலிக், மிக்ஸ்ட் மீடியா என்று ஜல்லிக்கட்டினை ஆவனப்படுத்தியிருக்கும் முரளி – சிலவற்றில் செய்திருக்கும் DRIPPING முயற்சிகளின் OUTCOME நன்றாக இருந்தது. அதில் இரண்டு அக்ரலிக் ஓவியங்கள் மட்டும் ஜல்லிக்கட்டுக் காட்சிகளாக அல்லாமல் மனித உடலும் காளையின் தலையுமாக இருந்ததை அவள் பார்வையாளர் ஒருவரோடு விளக்கிக் கொண்டிருக்கையில், PERSONIFIED என்று சொன்னதும், காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 2014க்குப் பின்பான அவரது படைப்புகளில் ஏதேனும் ஒன்றின் இருந்து அரசியலை எடுத்துக் கொள்ள முடிகிறதா என்று கவனித்தேன். அந்த வாய்ப்பினை காவியும் வெண்மையும் பின்புலத்தில் ஆக இருக்கும்படி வரைந்த ஓவியத்தைத் தெரிவு செய்தது. இத்தகைய CONCEPTUAL PRESENTATIONகளில் படைப்பாளி அவன் நம்புகின்ற அரசியலைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஒன்று வந்துவிடுகிறது. பசுவும், காளையும் தான் கவலைக்குரிய இனங்கள் என்கிற கற்பிதங்கள் ஒருபுறமிருக்க, எங்கள் ஊரூக்கு அருகிலுள்ள ஏதோ ஒரு கோயிலில் ஆயிரக்கணக்கான எருமைக் கிடாக்களை வெட்டி இறைச்சிக்குக் கூடப் பயன்படுத்தாமல் செய்யும் சடங்குகளுக்குப் பின்புலமாக, அதாவது ECOLOGICAL BALANCE முயற்சியாக அறிவியல் பூர்வமாக வாய்ப்பிருக்கின்ற போதும். இன்றையத் தேவை என்ன என்பதே நமக்கிருக்கும் TOP PRIORITY கேள்வி.

இனி இது போன்ற கண்காட்சிகளில் தான் இவற்றைக் காண முடியும் என்று உணர்த்திய முரளியிடம் விடைபெற்றுச் செல்லும்போது, ஓவியரும் நண்பருமான சீனிவான் ஜி அவர்களின் கருத்துகளை கண்ணதாசனோடு பரிமாறிக் கொண்டே அவனோடு பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.

TRADITIONAL DATA என்று பலவற்றிட்கும் EXPIRY கொடுத்த BIGDATA போன்ற அதிநவீனத் தொழிற்நுட்பங்கள் வழியாக இந்தியாவில் கட்டடக் கலை, கவின்கலைகள், அழிந்து கொண்டிருக்கும் எல்லா கலாச்சார, பண்பாட்டு அம்சங்களையும் இந்த தொழிற்நுட்பங்கள் வழியே பதிவு செய்யவேண்டுமென்கிற அவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் கருத்துகள் அவை. கலை கலைக்கானது என்று தன்னுள்ளேயிருந்து சொல்லும் கலைஞன் காலத்தில் எத்தனை முன்னோடியாகவும், மக்களுக்குச் செயல்படுபவனாகவும் இருக்கிறான் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.ஆனால் HADOOP போன்ற தொழிற்நுட்பங்கள் வெறுமனே தகவல் தொழில்நுட்பப் புரட்சியன்று என்றும் அதற்கான பல்வேறு வகையான பயன்பாடுகளை அவர் பட்டியலிட்டது நம்பிக்கை தரும் நாளாகத் தான் இருந்தது. அவர் சொல்வது போல ஜல்லிக்கட்டினை வேறு மாதிரியான இன்ஸ்டலேஷன்களில் காட்சிப்படுத்த முடியும் என்று மனதில் தோன்றியது (Facebookஆல் மட்டுமே நிறைய VISITORS சோழமண்டலத்திற்கு முதன்முறையாக வந்துசென்றது எல்லாம் டிஜிட்டலால் சாத்தியமானவையே).

அயற்சியின் மிகுதியில் சீக்கிரமாகவே இரவில் படுக்கச் சென்று கண் மூடிய அடுத்த நிமிடமே ஜல்லிக்கட்டுக் காளையின் பெருமூச்சு சப்தமும் அவற்றை லாரிக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கும் கிழிந்த ட்ரவுசர் க்ளீனரின் முகமும் கண்களில் தோன்றியது. இது நான் பார்ப்பதா அல்லது என் நண்பர் காட்டிக் கொண்டிருக்கும் LASER BEAM DOCUMENTARYஆ என்று உறுதியாகத் தெரியவில்லை, இந்த குழப்பங்களெல்லாம் காளிதாசனின் கனவிற்குள் இன்னொரு கனவு கண்டுகொண்டிருக்கும் ஜீவ கரிகாலனின் கனவு தான். காளிதாசனுக்கு எந்தச் சிக்கலும் இல்லை ஏனென்றால் அவனுக்கு HADOOP பற்றி ஒன்றும் தெரியாது.

(yaavarum.com வலைதளத்திலிருந்து - யாழி பேசுகிறது பாகம் 10)

நன்றி
ஜீவ கரிகாலன்

வியாழன், 15 அக்டோபர், 2015

இன்னுமொரு கடைசி விருந்து பாக்கியிருக்கிறது

சந்தோஷமாய் இருந்த முட்டாள் நான்

செல்லோவின் தந்தி மீட்டல்கள்
அபஸ்வரமாய் ஒலிக்கும் நாளொன்றில்
நாளொன்றைப் பரிசளித்தாய்
எனக்காய்.
அதில் ஸ்னேகமும், இறுதித் தழுவலும்
ஆறுதல்களாக இருக்காது
கோள்களின் அலைவரிசையில்
ஆர்பரிக்கும் கடல் சீற்றம்
சற்று முன்னர் இருந்த நிசப்தத்தில்
மடித்து வைக்கப்பட்டிருந்ததே.
பிசகிய மனமாக துடித்துக் கொண்டிருக்கும்
ரிக்டர் அளவுகோலின்
நீட்டிப் பிளந்த அதிர்வுகளின்
விளைவாக
புதையுண்டதும் உண்டு
கரை கண்டதும் உண்டு
பாதாதி கேஷம் பாடுவோனுக்கு
காலடிச் சுவடு தெரியமலா போகும்


அந்த விரல் அறுபடாது

வியாழன், 8 அக்டோபர், 2015

பஜ்ஜி-சொஜ்ஜி - 84


(இனிமே கொஞ்சம் அரசியலையும் தொட்டுக் கொள்ளலாமே என்று இந்த கட்டுரையை ஆரம்பித்து இருக்கிறேன். விவகாரமான தலைப்பு வைக்கும் போதே வில்லங்கங்களையும் எதிர் பார்த்து தான் தொடர வேண்டி இருக்கிறது.)

பிரியாணியும் கேஸ்ட்ரபிளும்

ஒகே விஜய் படமான புலி வராமல் இருந்திருந்தால், மொத்த கவனமும் இந்த சூட்டில் தான் தமிழ் கூறும் நல்லுலகத்தின்  இணைய உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து இருக்கிறது. படம் நல்லாயிருந்தாலாவது பரவாயில்லை, மக்களும் தலைப்புச் செய்திகளுக்கு செவி கொடுத்திருப்பார்கள்.

பாம்பேக்கு இரயிலில் செல்லும் பொழுது நான் பேசிய நண்பர்கள், வாசித்த புத்தகங்களை வைத்தும், கொஞ்சம் கதைத்ததை வைத்தும் என்னை எழுத்துக்காரன் என்று அடையாளம் பிடித்தவர்கள் இருவர். ஒருவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஜவான் ஒருவரும், மற்றொருவர் மும்பையில் பலகாலமாக வாழ்ந்து வரும் ஒரு தமிழர். இருவரும் என்னை எவ்வாறு பார்த்தனர் என்பது தான் சுவாரஸ்யம்.

இப்போது எல்லோரும் ஒரு கருத்து ஒன்றை தெரிவிக்க வேண்டும் என்கிற அசாதாரண சூழல் ஒன்று உருவாகியிருக்கிறது. அசாதாரணச் சூழல் என்றால், மூன்றாவதாக ஒரு நிலைப்பாடு என்பதை எடுக்கவே முடியாத அளவிற்கு ஒரு அழுத்தம். இணைய ஊடகங்களில் ஜீவிக்கும் அத்தனை மனிதர்களும் கருத்து சொல்ல வேண்டிய நிர்பந்தத்திலிருப்பவர்கள். 

உண்மையில் நடுநிலைவாதம் (unbiased stand) என்று ஒன்று இருக்கிறதா என்ன??

இதெல்லாம் ஒருபுறமிருக்க தமிழகத்தில் எழுத்தாளர்கள் தாங்கள் வாங்கிய சாகித்ய அகாதமியைத் தூக்கி எறிய வேண்டும் என்கிற கருத்து நயந்தாரா தன் விருதைத் திருப்பிக் கொடுத்ததன் வழியாக, சமூகத்தில் ஆளும் அரசுக்கு எதிரான தன் எதிர்ப்பைப் பதிந்தையே நம்மூர் ஆட்களையும் செய்யச் சொல்லி கேட்கும் கூவல்களையும் கேட்க முடிகிறது. நிச்சயமாக அரசிற்கு இது ஒரு அவமரியாதைத் தரக்கூடிய செயல் தான், அதிகாரத்தைக் கண்டிக்கும் செயல் தான் ஆனால் , தமிழ் சூழலில் - அதற்கான சமூக அமைப்பில் இருக்கின்ற மதிப்பீடு /CREDITS என்ன என்று யோசித்துப் பார்க்கும் போது தான் மேற்கண்ட என் பயணம் ஞாபகத்திற்கு வருகிறது.

சில கேள்விகள்  - கலை வரலாற்றை சமூக வரலாற்றோடு இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக நம்பும் நான், நயந்தாராவின் படைப்புலகம் குறித்த ஐயப்பாட்டை எழுப்பவில்லை, அது அங்கீகரிக்கப்பட்ட பின்னணி என்ன என்று பார்த்தால்..

  • நயந்தாரா - விருது கொடுத்த வருடம்  1986.
  • சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்பட்ட புத்தகம் 1985ல் வெளிவந்த RICH LIKE US எனும் நாவல்
  • 1986 ஐ ஒட்டிய தேசிய அளவிலான பிரச்சினை - 1984ல் சீக்கியக் கலவரம் (3000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்ட ஒரு அவமானகரமான காலக்கட்டம் )
  • இப்படியான காலக்கட்டத்திலும், அரசாங்கம் பல கலைஞர்களை கௌரவித்தும், கலைகளுக்கான நிறைய சலுகைகளையும் அறிவித்துக் கொண்டுதான் இருந்தது. இதே வருடத்தில் தான் (1986) எம்.எஃப்.ஹுசைன் காங்கிரஸ் சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக பார்லிமெண்ட் சென்றார்.
இணையம் வந்த பின்னர், எழுத்தாளர்களுக்கு பிளாட்பாரங்கள் தேவையில்லை, ART FOR ART, ART FOR PEOPLE என்று இங்கே ஏற்படும் பிளவினை கோட்பாடுகள் மூலம் ஆராந்து பார்ப்பதே நல்லது எனப்படுகிறது. விருதைத் திருப்பிக் கொடுத்தவர்களை சாடுவது நோக்கமுமில்லை, அதை எதிர்க்கவுமில்லை. கருத்து சொல்லாமல் ஒதுங்கி இருப்பவனை வம்பிழுக்கும் பல முட்டாள்தனமான வாதங்களைக் கண்டு பதில் சொல்வதற்கும் மனமில்லாமல், கவுண்டமனி நெல்லை சிவாவிடம் ஓசியில் கடலை வாங்கியதற்கு பிரதிபலனாக தான் அபிமானம் உள்ள கட்சி எதுவென கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லுமாறு அவஸ்தைக்குள்ளாகும் காட்சி வந்து போனது. 


தமிழ் சூழலில் எழுத்தாளர்களுக்கு இருக்கும் மதிப்பீடுகளும், அதைத் தருவதால் ஏற்படுத்தப் போகும் அழுத்தங்களும் என்னென்ன என்று யோசித்தாலும், அறிவியல் தேற்றங்களை எழுதச் சொன்ன பின்பான என் பேனா  படும் பாடு தான்

அடக் கடவுளே இந்த அவசரத்தில் பம்பாய் ரயிலில் நடந்த விசயத்தை சொல்ல மறந்துவிட்டேனே!! அவ்விருவரும் கேட்ட கேள்விகள்

1.மராட்டிய ஜவான் : உங்களோட ஒரு செல்ஃபி எடுக்கவா ?? – GREAT TAMIL WRITER right??
நான் : YES, GREAT TAMIL and a Tamil writer

2.மும்பை தமிழன் : நீங்க ஏதும் எழுத்தாளரா??
நான் : ஆமாங்க, வளரும் எழுத்தாளன்
மு. த: அதெல்லாம் சரிதான். “சோத்துக்கு என்ன செய்யுறிங்க”




!@#@$%!%%!%!@%

திங்கள், 28 செப்டம்பர், 2015

எதற்காக காமிக்ஸ்




இந்த நான்கு வருடங்களின் முப்பத்தி சொச்சக்கூட்டங்களில், எங்கள் இரண்டாம் வருடத்திலிருந்தே காமிக்ஸிற்கான கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்கிற தாகம் தீர்வதற்கு சற்றே அதிக காலம் தான் ஆகிவிட்டது என்றாலும், இடையில் ஆறு மாதங்கள் நிகழ்வுகளை சற்று தள்ளிப் போடலாம் என்று நினைக்கும் போதே “காமிக்ஸ்” தான் ரீ எண்ட்ரிக்கு சரியாக இருக்கும் என்று தோன்றியது.

காமிக்ஸை ஒட்டி நிகழ்வுகள் நடத்தினாலும், அது வெறுமனே வாசகர்களின் பகிர்வாக இருக்கக்கூடாது என்பதில் தான் தெளிவாக இருந்தோம். இதற்குக் காரணம் என்னுடைய நண்பரும், எழுத்தாளருமான பாலசுப்ரமணியம் பொன்ராஜ், அவர் தீவிர இலக்கிய வாசிப்பும், காமிக்ஸ் வாசிப்பும் உடையவர் – காமிக்ஸ் கான் போன்ற நிகழ்வு எல்லாம் இங்கு சாத்தியம் தானா, நம்ம ஏதாவது ஒரு வொர்க் பண்ணுவோம் என்றென்னை அதிகம் தூண்டியிருக்கிறார். ஆனால் அதற்கான ஒரு சரியான டீம் நாமில்லை, நாம் வெறும் உதிரிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

காமிக்ஸ் பற்றிப் பேசினாலே, NOSTALGIAவாக வாண்டுமாமா கதைகளையோ , சித்திர, ராணி காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி என்றெல்லாம் பேசி நேரத்தைக் கடத்துவது எளிமையான செயல் தான். ஆனால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, அதுவும் அதைப் பற்றி என்னைப் போன்றவர்கள் பேசினால்.

பொதுவாகவே தமிழின் செவ்விலக்கியப் படைப்புகளில் பிரதானமாக காதலும், வீரமும் மட்டுமே இருக்கிறது என்கிற தீவிரமான வாதம் ஒன்றை நாமெல்லோரும் நம்புகிறோம். (இப்ப மட்டும் என்னவாம்??) இன்று காதல் காமம்னு பிரிச்சு வச்சு வேணும்னா ரெண்டு வகைப்பாடு இருக்குன்னு சொல்லலாமே தவிர வீரம் பற்றி பேசும் காலத்திலோ அல்லது தகுதியுடையவராகவுவோ நாமில்லை என்பது வேறு விஷயம், அதில் அரசியல் இருக்கிறது. காதல் தவிர மிஞ்சியிருப்பது நம் பெருமிதங்களும் நினைவுகளும் தான். அப்படி ஒரு கூட்டமாக காமிக்ஸ் படித்ததை, சிலாகித்தை வைத்தெல்லாம் கூட்டம் போடுதற்கு நாங்கள் முனையவில்லை.

ஓவியர் மருதுவின் பேச்சுகளில் காமிக்ஸ்களுக்கான உரிய இடம் தரப்படாமல் இருப்பதை வேதனையாகத் தான் கடந்து செல்ல வேண்டியிருந்தது, ஒற்றை மனிதராக இத்துறையில் மிகுந்த சிரத்தையோடும் கவலையோடும் பல இடங்களில் பதிவு பண்ணி வரும் இவரோடு கைகோர்த்து நிற்க மனித வளமும் தேவைப்படுகிறது. அதற்கு ஒரு SYDICATE அமைய வேண்டும்.

காமிக்ஸ் Syndicate
பிரகாஷ் பப்ளிஷர்ஷின் இதழ்களிலேயே - பேனா நண்பர்களாக அப்போதிருந்தே ஒரு வாசகர் வட்டம் உருவாகி இருந்தது நாம் அறிந்தது தான். அ.கொ.தி.க, தமிழ் காமிக்ஸ் உலகம் போன்ற BLOGகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக ஒரு வாசகர் வட்டம் உருவாகிக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் காமிக்ஸ் பற்றி இங்கொன்றும் அங்கொன்றுமாய் வந்து கொண்டிருந்த பலவீனமான கட்டுரைகளாலும் அதன் பிழைகளாலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குழு இன்று களத்தில் இறங்கிக் கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம் என்றே சொல்ல வேண்டும், அதை வரவேற்க நாம் தயாராக வேண்டாமா – அது தான் இந்தக் கூட்டம்.

சென்ற வாரம் ஓவியர் மருது என்னிடம் சொன்னது போல, காமிக்ஸ்களுக்கான இடமென்று ஒரு நிரந்தர இடம் வாசிப்புலகில் இல்லாமல் போனதில் ஏற்பட்டிருந்த விளைவுகள் பற்றி பேசியவை அதிர்ச்சிகரமானவை தான். அதை ஒரு Disconnection என்று சொல்கிறார், உண்மையில் இந்த இடம், அதாவது தொடர்பறுந்து போதல் மிகத்தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய இடம். அவர் கண்டுவரும் கனவும், பார்வையும் (Dream & Vision) இன்றைக்கிருக்கும் சில இளைஞர்களின் செயல்பாட்டின் வழியாக சாத்தியப்படும் என்று நம்புகிறார். இவர்கள் அந்த CREWவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர் PINPOINT பண்ணியது விஷ்வாவகத் தான் இருக்கக்கூடும் என்று நினைத்தேன் - கிங் விஷ்வா – இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் பண்ணிக்காதவர், தொடர்ச்சியாகவும் , தீவிரத்தன்மையோடும் Dedicated ஆகவும் அவர் செய்து கொண்டிருக்கும் பயணம் மிக முக்கியமானது.  விஷ்வா காமிக்ஸ் ரஸிகர்களுக்கான ஒரு பெருங்கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார். நிறைய ஓவியர்களிடம் இருந்தும், கதாசிரியர்களிடம் உரையாடுகிறார், தகவல்களை சேமிக்கிறார், இயங்குகிறார்.

Popular art பற்றி நாமெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம், கலை வரலாறு தெரிந்தவர்கள் பின்னவீனத்தின் ஆரம்ப கட்டங்களாகத்தான் பாப்புலர் ஆர்ட்டை சொல்வார்கள். காமிக்ஸ், மினிமலிஸம் போன்ற போக்குகள் எல்லாம் நவீன யுகத்தின் போக்குகளை காலாவதியாக்கியவை, இதை சரியாக உள்வாங்கிக் கொள்ளாத, இடம்தராத படைப்புலகம் தான் ஓவியர் மருது சொன்ன தொடர்பற்றுப் போனதன் காரணமாக, அந்த DISCONNECTING FACTORஆக இருக்குமோ என்கிற ஐயமாக மாறியிருக்கிறது.

இன்றைக்கு இவர்கள் உருவாக்க நினைக்கும் இந்த தளம் எத்தனை CHALLENGESஐ அவர்களிடையே வைக்கிறது என்பதும் தனி பிரச்சினை. அந்த காலத்தைப் போல ஜாம்பவான்களான ILLUSTRATORகள் சொற்ப வருமானத்திலும் மிக முக்கியமான செயல்பாடுகளை செய்து வந்தனர்.
இன்றைய கணினியுகம் வரைகலையை (GRAPHIC ART) அதன் வீரியத்தை, செயல் வேகத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கும் விதத்திற்கு ஈடாக ILLUSTRATORகளை மிகவும் EXPENSIVE ஆகவும் ஆக்கிவிட்டிருக்கிறது.

இதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், தமிழ்ச்சூழலில் – வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து கொண்டிருக்கும் சூழலில், இருக்கின்ற வாசக எண்ணிக்கையால் விளைந்த ஒரு சிக்கலாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் கடக்க வேண்டுமென்றால், FREE LANCERகள் மட்டுமன்றி, தீவிர இலக்கிய உலகில் இயங்கும் குழுக்களைப் போன்ற செயல்பாடுகள் அவசியமாகும். இப்போது காமிக்ஸ் தளத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்களும் சமகால இலக்கியவாதிகள் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை. வெகுஜன இதழ்கள் வாசிப்பவர்கள் போல காமிக்ஸ் வாசகர்களை பார்ப்பதும், இந்த வயசிலும் காமிக்ஸ் வாசிக்கிறியா என்று கேட்பதுமான கேள்விகளை அபத்தமென்று சொல்லலாம். ஏனென்றால் இன்றைய உலகில் அப்படியான பொதுவான அளவுகோல்கள் என்றில்லாமல் எல்லாமுமே காலியான இடங்களை நிரப்பிக் கொள்ளும் இயக்கம் பெற்றிருக்கின்றன. காமிக்ஸ் ஒரு மேம்பட்ட ரசனையைத் தேடும் வாசகர்களுக்கு வரப்பிரசாதம். இந்த POPULAR ARTன் சிறப்பம்சங்கள் – தமிழ் காமிக்ஸ் உலகம் தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு,  வாசிப்பையும் பரவலாக்க வேண்டுமென்றே விருப்பம் மேலோங்கி இருக்கிறது. அப்போது தான் BALANCEDஆன வாசகர் உலத்தை ஒரு மொழி பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.

வெகுஜன, தீவிர இலக்கியத்தைப் போன்றே காமிக்ஸும் ஒரு தனி இலக்கிய வகை என்று முன்னிறுத்த உலக வரலாற்றிலும் சமகாலத்திலும் இடமிருக்கிறது. காமிக்ஸ் வெறும் குழந்தை இலக்கியத்தோடு மட்டுமாக நில்லாமல், அது தனித் துறையாக எல்லாவிதமான படைப்புகளும் பாவிக்கப்படவேண்டும் என்பது தான் நாம் எல்லோரின் பொதுவான விருப்பமாக இருக்கக் கூடும். சமகால உலகின் அறிவுச் சூழலில், இலக்கியத்தில் காமிக்ஸை எங்கே Locate செய்யப்படவேண்டும் என்பது தான் விவாதிக்கப்பட வேண்டும், அதை ஜாம்பவான்களிடம் முன் வைக்கின்றேன்.

ஆக இந்தக் கூட்டம், கிராஃபிக் நாவல்களை நேரடியாக எடுத்துப் பேசாமல், BASICSஇல் இருந்து தெரிந்து கொள்வது தான் நல்லது என்று சிறப்பு அழைப்பாளர்களின் கருத்தையே முன்வைக்கிறது. இந்தக் கூட்டம் ஒரு நல்ல BEGINNING ஆகவும் Re-Entryஆகவும் இருக்கக்கூடும் காமிக்ஸ் வாசகர்களுக்கும், தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கும், யாவரும் நிகழ்வுகளுக்கும்.


-ஜீவ கரிகாலன்

                


செவ்வாய், 8 செப்டம்பர், 2015

பஜ்ஜி - சொஜ்ஜி 83 / நேர்கோட்டில் இருக்கும் இரண்டு வருடத்துக் குழப்பங்கள்



ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு நீட்டித்த பயணத்தில் லீனியர், நான் லீனியர் வடிவமைப்பைப் பற்றி பேசுவதால் சுவாரஸ்யமற்ற விவாதமாகத்தான் போய்விடுமோ என்று மனதில் இருந்த அச்சம், இருந்த தடயமே இல்லாமல் போனதுக்கு காரணம் கிருஷ்ணப் பிரபுவின் பதிலிலிருந்து கிடைத்த சந்தோஷம், பின்னர் சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்டாடும் எங்களின் பழக்க தோஷத்தை ப்ளூடூத் வழியாக ஸ்பீக்கரில் போட்டு அனுபவித்துக் கொண்டிருந்தோம். தன்னை விட்டுச் சென்ற கி.பி மற்றும் ஜீயோடு என்னையும் அவன் திட்ட வேண்டியிருந்தது என்ன மாதிரியான DESIGN என்கிற கேள்விக்கு அடிகோலியது. ஏனென்றால் சிவப்புக் கார் தோழர்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் என்று ஜீ செய்த சத்தியம் தான். அதுவும் அச்சத்தியமும் மேடையிலேயே உணர்ச்சிவயப்பட்டு பேசிய தோழரின் நாமத்தில் என்பதால் நானும் நம்பியிருந்தேன், அவர் என்னை அழைக்கப்போவதில்லை அந்த மர்மப் பயணத்திலிருந்து என. வேடியப்பன் அப்பயணத்தில் இல்லாது போனது பல ரகஸியங்களைத் தவற விட்ட உளவுத்துறையின் கதியாக ஆனது.

இடைவிடாமல் இந்த ஒரு மாதத்திற்குள் தனித்தனியாக, வேறு வேறு காம்பினேஷன்களில், எல்லோருமாக என்று அந்த மனிதனை ஒரு மாதமாக நாங்கள் பாடாய்ப் படுத்தியிருந்தோம். தூக்கத்தைக் கெடுப்பதோடு, நீண்ட தூரப்பிரயாணங்கள், வகைவகையான உணவுகள் என இவற்றோடு திரவமாக திரவியமும் கரைந்து கொண்டிருப்பதும் ஒரு புறம். ஒரு சமயம் விமர்சங்களை மெய்யாக்கும் குழப்பங்களோடு அதே தயக்கத்தில் நிற்கும் போதெல்லாம், கலைக்கான கலை மற்றும் மக்களுக்கான கலை என வேறு நோக்கில் விவாதமாகியிருக்கும். கலைஞனின் வாழ்வு சமகாலச் சூழலில் எத்தனை முக்கியமானது என்று ஒரு மையத்தை காண்பித்தபடி, எம்மை யோசிக்கத் தூண்டிய கற்பிதங்களால் ஆன வாழ்வு எத்தனை அற்பமானதாக ஒரு அளவுகோலை வைத்திருக்கிறது என்கிற கேள்விதான் நாங்கள் திருப்பதியில் இருக்கும் பொழுது முடிவுக்கு வந்த விவாதத்துளி.

ஏஸியின் குளிர்மையால் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் துளிகளை வைப்பரால் துடைக்காமலேயே சாலையில் என்ன தெரிகிறது என்று கேட்டதால்,  என் மனம் ஒழுங்கு என்று நினைத்துக் கொண்ட கற்பிதத்தை நம்பி சாலையை வர்ணிக்கிறேன். சாலை, விளக்குக் கம்பம், ஒளி, பச்சை வண்ண போர்டுகள், கூடவே வரும் மெரிடியன் என்று என்னை நானே மிகவும் நேர்த்தியானவனாகவே நினைத்துக் கொள்ள முடிந்தது. இப்படித் தான் நான் தினமும் எழுதுபவனாக, தினமும் வாசிப்பவனாக, அசலானவனாக என்னைக் கற்பிதம் செய்து கொள்கின்றேனோ??.

சலானவை என்று நான் நினைப்பவைகள் எப்படி இருக்கிறது? யாரோ ஒருத்தி எங்கிருந்தோ எழுதும் கவிதைகள் 1400 கிலோ மீட்டர் பயணம் செய்து எனக்காக எழுதப்பட்ட கவிதையாக உணரும் வேளை, நான் அந்தக் கலையரசியின் மீட்டும் விரல்களைத் தொட்டுப் பார்த்த உணர்வாக அவள் கவிதைகளை சிலாகித்த போதோ அல்லது சமணப்படுக்கையில் நமச்சிவாய என்று சொல்லியதாலோ என்னவோ இறங்கும் வழி தெரியாது நானும் யுவபாரதியும் திக்குத்தெரியாது நிற்க எழுந்து நின்ற யானையாக இன்னும் உயரமானது குன்று அப்படியே புத்தகக் கண்காட்சிக்கு சென்று பாண்டியர்களை கபளீகரம் செய்துவிடுவோமா என்றேன். LAW OF DIMINISHING MARGINAL UTILITY எனும் கோட்பாடு உனக்குப் பொருந்தவே பொருந்தாதோ என்று எனக்குள் சொல்லியபடி உண்ட, அத்தனை கவளச் சோறுக்குப் பின்னும் நன்னாரி சர்பத் மிச்சமிருக்கிறது என்கிற கணம், அதே நிறத்தில் குங்குமம் வைத்து ஆசிர்வாதித்த மணியின் தாயார் செய்த ஆசிர்வாதம் தான் என்று முழு சர்பத்தையும் குடித்தேன். இது நேர்மையான பதிவு தானே தோழா!!

ஒரு நாளில் ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் கேமிராமேனாக மாறிய க்ருஷ்ணப் பிரபுவோடு நான் இத்தனை நெருக்கமானேன் என்பது என்னாலேயே நம்ப முடியாமல் இருக்கும் ஆச்சரியங்களில் ஒன்று, “ஜீவ கரிகாலனுக்கு இப்படியொரு நண்பரா ஆச்சரியமாக இருக்கிறதே”, “இந்த மனுஷன் எத்தனை நாளாய் எங்கிருந்தான்” என்று என்னை நோக்கியும் ஆச்சரியங்கள் இருக்கத்தான் செய்கிறது, ஆச்சரியத்துக்குக் காரணம் பாலசுப்ரமணியம் பொன்ராஜ் அவரோடு குறைந்தபட்சம் ஒரு பயணமாவது திட்டமிட வேண்டும் என்று காவு கேட்கும் முனியாண்டியாக மாறிய சமணத் துறவினை வணங்கி விட்டுத்தான் வந்திருக்கிறேன்.

வா.மணிகண்டனைத் தவிர வேறெந்தக் காரணமும் பிரதானமானதாக இல்லை நான் மூன்று வருடங்களாகப் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதற்கு, அங்கேயிருந்த பத்து புத்தகங்களையும் ஒரே விலை கொடுத்துவாங்கத் துணிந்து அதற்கு மேல் ஸ்டாக் இல்லாததால், ஒன்று மட்டும் வாங்கியதாய் சொல்லும் வாசகர்கள் உருவாகுவது எப்படி, தீவிர வாசிப்புக்கான தேவை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம், வாசிப்பு என்னும் பழக்கத்திற்கான முகாந்திரம் என்ன என்கிற நோக்கில் தான் என்னுடைய கவனம் குவிந்த வண்ணம் இருக்கின்றன என்று நான் நினைப்பது சரியா தவறா??

எப்படி திட்டமேயிடாமல் அற்புதமான தடாலடி விருந்து தயாராகிறது? சித்தரஞ்சன் பரவாயில்லை, பச்சை லைட்டு ஹோட்டல், கிழங்கு மாவில் செய்யப்படும் மிக்சர் பற்றிக் கூட தெரிந்து கொள்ளாத அளவுக்கு எங்கள் வாசிப்பும், எங்களை வாசிக்க வைத்தக் கல்வியின் தரமும் இருக்கும் நிலையை, யாரோட தவறாகச் சொல்ல முடியும். அரசியல் என்றால் என்ன ? என்று உங்களுக்குச் சொல்லத் தெரிந்தால் தான் COFFEE TABLE புத்தகங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுத முடியும் என்று உணர்ந்தேன்.

புத்தகங்களை மாற்றி மாற்றி அடுக்கும் போது, அரசியலும், வியாபாரமும், ஆன்மீகமும் தந்திரங்களாய் மாறிக் கொண்டிருப்பதாய் நான் எண்ணிக் கொண்டிருந்த வேளை, கை குவித்து காதுகளைச் சுருட்டிக் கேட்டது ஓசையா, மந்திரமா என்று நான் அறியேன். ஆனால் நேர்த்தியாக 630 என்கிற எண்ணைத் தேடிக் கொண்டு நீண்டு செல்லும் பாம்பு, சைரன் விளக்கொளியில் ஸ்தம்பித்த சர்பத்தின் நிலையல்ல, “WHY NOT” என்று என்னைப் பார்த்துக் கேட்ட EROTIC TANKன் சர்ப்பம். அந்த சர்ப்பம் தீண்டி நேற்றோடு இரண்டு வருடம் ஆகிவிட்டது. சர்பத்தை ஈஷாவஸ்ய உபநிடதம் கேட்காமலேயே கேட்டவர்கள் போலானவர்கள், தங்கள் கணையாழியில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தச் சர்ப்பம் – என்னைக் கணையாழியில்...

நான் லீனியரோ, லீனியரோ – என் மீது நம்பிக்கை வைத்திருந்தும் நான் பொறுமையாய் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கக் கூடும், நான் சில நூறுகளைச் சொல்லக்கூடும், சில பத்து காரணங்களை அவர் நம்பக் கூடும். ஆனால் அந்த ஒற்றை உண்மையான காரணம் எனக்கே தெரியாதது என்று அவர் தெரிந்து வைத்திருப்பார் என்றும் நான் புரிந்து கொண்டதற்கு. “யார் ரஸிகன், யார் சிறந்த ரசிகன்” என்று கேட்டக் கேள்விக்கு சொன்ன பதிலும், பின்னர் ஒரு உதாரணமும், அந்தக் கோட்பாடும். ரசனையின் மறுபக்கம் எத்தனை ஆற்றலிருக்கிறது என்று உணரச்செய்வதைத் தான் அந்த ஒரு உண்மை காரணத்தை அவர் தெரிந்திருப்பார் என்று நம்புகிறேன்.

நான் மட்டுமே திட்டமிட்டப் பயணத்தில், திரும்பி வரும் போது மூவராக வந்ததைப் போலே, நான் சென்ற இரயில் பயணமே இந்த விவாதங்களின் முன்விளைவாகத் தோன்றியது என்ன Pattern. ஏனென்றால் அந்த இரயில் தான் என் ட்ரெங்குப் பெட்டி.

ஜீவ கரிகாலன்


வெள்ளி, 4 செப்டம்பர், 2015

பஜ்ஜி - சொஜ்ஜி 82 கஸ்தூரிபா நகரிலிருந்து கருமாரியம்மன் கோயில் வரை.


இந்த குஜிலி டைட்டில்களுக்கும் நமக்குமான பூர்வ ஜென்ம பந்தம் என்ன? ஏது? என்று யோசிக்கும் போது ஆல்ட் F4களால் இந்தக் கட்டுரை நிறைவடையலாம் என்றாலும். கஸ்தூரிபா நகரிலிருந்து கருமாரியம்மன் கோயில் வரை பயணம் செய்து முடிக்கும் வரை, நாங்கள் உண்டதாய் நினைவில் இருந்த ஒரே ஒரு சாம்பார் வடை எந்த ஹோட்டலில் இருந்து என்று யோசித்தேன், பெயர் ஞாபகத்தில் வரவில்லை. நினைவில் இருந்ததெல்லாம் என்னிடம் காபியைக் கலந்து கொடுக்க வேண்டிய கபாலி ஒரு டபராவில் ஸ்ட்ராங் டிக்காஸனும், இன்னொன்றில் கட்டிப்பாலையும் மிகுதியாகச் சேர்த்தது எதற்கு என்று தான். ஒரு வழியாக அது விஷ்ராந்தி என்று நினைவில் வரும் போது என் இலக்கு வந்துவிட்டது.

மாமன் மகள் படத்தில் கவுண்டமனி, கூர்கா, சேட் மட்டும் சத்யராஜின் மாமியாரிடம் அடிவாங்கிய எரிச்சலை விட, அப்பொது ஒலித்த டெலிபோன் மணியின் சத்தம் சென்சார் வசனமாக மாறும் அளவு இருந்ததில் ஆச்சரியமில்லை. அப்படி யாரேனும் என்னை ஜீவ கரிகாலன் என்று அடையாளம் கண்டு ஜீக்கு முன்னரே என்னை நலம் விசாரித்தார்கள் என்றால் நானும் கவுண்டமணியின் செயலைப் போலே இந்தக் கட்டுரையே சென்சார் செய்திருப்பேன்.

எங்கே இருக்கிறீர் என்பதே ஆதி வார்த்தையாக செல்போன வந்தபின் கருதிக்கொண்டிருக்கும் சமூகத்தில், எல்லோரும் எளிமையானவர்களே என்று கற்றுக் கொடுத்த கற்பிதங்கள், என்னைக் கடந்து சென்ற ரகுமானை, ரகுமான் என்று சொன்னாலும், பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்திருக்கும் ரகுமான் தானே என்று எங்கள் பகுதி புரொபசனல் கொரியர் குமாஸ்தாவை நினைத்துக் கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

சமூக இயக்கத்தின் இரத்த ஓட்டத்தினை, நரம்புகளை, சதைகளைப் பற்றி அறிந்திடாமல் தோல் எனும் மொழி அணிந்திருக்கும் மேல்சட்டையையே தோலெனக் கழட்டாது பிழைக்கும் எனக்கு எழுத்துக்காரனாகிய நான். ஒரே ஒரு சாம்பார் வடை மட்டுமே போஜனமாக வாங்கிக் கொடுத்துவிட்டு என்னிடம் பேசுவதற்குத் தயராக இருந்த மனிதரோடு பேசும் போது மெய்மறந்தது ஆச்சரியமல்ல, மெய்யினை பசி மறந்ததே!!

உயிர் பிரபஞ்சத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் போது மெய்யின் பசி, அகங்காரத்திற்கே தெரியாது போகும். அகங்காரம் அற்ற நிலையில் த்ரிவிக்ரம உருவம் கண்களுக்குப் புலனாகும் என்பது மாமல்லைபுரத்திற்கு காதலியோடும், செல்ஃபி எடுக்க விரும்பாதோருக்குமே சாஸ்வதம். அகங்காரமற்ற நிலைக்கும், அகங்காரம் கொண்டிருக்கும் நிலைக்கும் வித்தியாசம் தெரியாத எழுத்துக்காரன் த்ரிசங்க சொர்கத்தில் தான் வாழ்வான் அல்லது கட்டுரையின் கிரந்த ஒலியைக் கண்டு ஆவேசமாகி என்னை தேச பிருஷ்டம் செய்யத் துணிவான். துணியட்டும் துணிவே துணை.

ஒவ்வொரு 350 வார்த்தைகளிலும், 550 வார்த்தைகளிலுமாக பதடிக்கும் சீனிவாசன் ஜியின் நூலுக்காக ஒரு வடிவம் பற்றி யோசித்து வைத்ததைச் சொல்லிய சந்தோஷம் மட்டுமே இன்றைய உண்டியல் காசாக சந்தோசப் பட வைக்கிறது என்றாலும். போலச்செய்யும் சந்தோஷம் எப்படியானது என்று உணரும் பொழுது, அர்விந் யுவராஜோடு 12 மணிக்கு ஃபேஸ்புக்கில் மால்ட்வாதம் செய்து கொண்டிருந்தேன்..

கலைகளை போஷிப்பவன் எப்படி நடந்து கொள்வான் என்று தெரிய வைக்கவேண்டுமென்று, “ஓ” போட்ட நண்பரின் கரிசனம் அளப்பரியது தான். “அளப்பரியது” என்பதை ஓசைக்காகத் தான் பயன்படுத்தினோம் என்று காலரைத் தூக்கிவிட்டுச் சொன்னால் ஒரு கவிஞனுக்கு, ஒத்துக்கொள்வதால் இழப்பது என்னவாம்? என்று மனதில் சிறு கிலேசம் இருப்பது உண்மையே. இது எல்லாம் டிசைன்லயே இருக்கு என்பது ரேஷனல் அறிவு இல்லாவிட்டால் தலவிதி என்று சென்று விடலாம்.

எந்த ஒரு சந்திப்பிலும், சரியாகக் கிளம்ப வேண்டும் என்கிற நேரம் மிச்சமிருக்கின்ற கேள்வி தான் மிக நேர்மையான ஒன்றாக இருக்க முடியும். கைகளில் கொடுக்கப்பட்ட பெரும் பொறுப்பை வைத்துக் கொண்டு, பச்சைத் துண்டி வாங்கிவிட்டால் விவசாயம் செய்யலாம் என்ற மனதோடு நின்று கொண்டிருந்தேன் கேள்வியுடன். இந்தச் சமூகத்திற்கு எந்த சிந்தனையை ஒரு ஊடகம் / இயக்கம் / அமைப்பு முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது, எது ஒட்டுமொத்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் மாற்றம் என்று சொல்லும் போது கிடைத்த பதில் நம்பிக்கையளித்தது.

சாதியத்தில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் மாற்றங்கள் எப்படியான மாற்றங்களைக் கொண்டிருக்கிறது என்று யோசிக்க வைத்தது. மிகவும் மெதுவாக வண்டியோட்டும் நான் அப்போது தான் அண்ணா பல்கலைகழகத்தை தாண்டியிருந்தேன். விதைத்து, வளர்ந்து, உபயோகமற்றுப் போன பபூல் மரம் பற்றிய ஒரிஸா கதை ஒன்று நினைவில் வந்தது தற்செயல் தான். சாய்நாத்தின் பயணம் போலே ஒரு பயணம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தேவையானது தான். கவிதைத் தொகுப்பு ஒன்றைப் போடுவதற்காக அதிகம் பிரயர்த்தனப்பட்ட பதிப்பாளர் என்கிற விருது பெற்ற நண்பர் அவர், அடுத்ததாக அவர் பதிப்பிக்கத் தயாரான கவிதைத் தொகுப்பிற்கான வடிவம் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. ஆர் ஆர் என்னிடம் “இருந்துட்டு போகட்டும்” என்று சொல்லிப் போனான்.

எந்த எதிர்பார்ப்புகளுமற்ற, எந்த நிபந்தனையற்ற அன்பும் – எந்த சமரசமுமற்ற விமர்சனமும் பெருக்கெடுத்து வருவது ஒரே சுனையிலிருந்து தான். அது அண்டத்தையும், பிண்டத்தையும் ஒன்றாகப் பார்க்கச் செய்யும் ஊற்று, தெள்ளத் தெளிவான நீர், எல்லோருக்குமான நீர், எல்லா நிலத்துக்குமான நீர் – வான் வழி உலகம் முழுதும் பரவும் புனித நீர். மண் சுரண்டும் சமூகத்தின் தாகத்திற்காக இன்னும் ஊறிக் கொண்டிருக்கிறது.

  
   மூன்றாவதாக ஒரு ஆள் இருந்தால் கூட ஒரு நல்ல உரையாடல் நிகழ்வது இல்லை என்று சொல்லக் கேட்டிருப்பது எத்தனை உண்மை. சுவற்றில் லேயர் லேயராக வரைந்து வைத்திருக்கும் தம்பிக் குட்டியும் தர விருப்பமில்லாத இடம் ஒன்றைத் தான் அவ்வளவு சாதாரணமாக உணர வைத்த நேரம், எழுந்த சிரிப்பொலி இரவை நீட்டித்தது. தோள்களில் கைகள் போட்டுக் கொண்டு கற்றுக் கொடுக்கும் மனப்பாங்கு இங்கு யாவருக்கும் எளிதில் கிட்டுவதில்லை என்று ஒரு ஐஐடி சூழலில் இருக்கும் பேராசிரியர் ஒருவர் சொல்லாமல் சொல்லிப் போனதில் பாக்கியவானாய் உணரும் நேரம், இன்னும் அந்த வாயில் நுழையாத விஷ்ராந்தி உணவகத்தின் மோர்குழம்பு போண்டா இல்லாததற்கு காரணம் என்ன என்று ஜீயின் தகவலால் குழம்பிய நான், அங்கு கைகழுவும் நேரம் புரிந்து கொண்டேன்.

  பெரும்பாலோனோர் டிக்காஷன் கம்மியான காபியையே விரும்புகிறார்கள் போலும். வடவேங்கடத்துக்கு வெளியே தான் எதையாவது உருப்படியாக செய்ய முடியும் என்று சொன்ன தோழியின் வாக்கில் சத்தியமிருந்தது. 16ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் அதிக பலமிக்க ஆரியநாத முதலியார் செய்த சேவையை வைத்துக் கட்டமைத்த காலனிய கல்வி முறைமைகளை ஆவனப்படுத்தியிருக்கிறதா தெரியவில்லை, ஆர். ஆர் மறுபடியும் “இருந்துட்டுப் போகட்டும்” என்று சொல்லிப் போய்விட்டான்.

எனக்கோ, போலச்செய்த கட்டுரையின் WORK OF ART கண்டு பரமதிருப்தி.

“ஜீ – WORD COUNT – 630 வார்த்தைகள்!!”

- ஜீவ கரிகாலன்




வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பஜ்ஜி -சொஜ்ஜி 81- மிச்சம் வைக்கப் பிடித்திருக்கிறது.




சென்ற சனிக்கிழமை மாலை உருவாக்கித் தந்த அற்புத வாய்ப்பினால் நிகழ்ந்த அப்பயணம் ஒன்றில் மனிதர்களை வைத்து அனுபவத்தின் வழியே கோட்பாடுகளை INSTALLATION செய்யும் ஒரு கலைஞனைப் பற்றி அறிவதற்கு மேலும் ஒரு பெரிய வாய்ப்பு கிட்டியதை ஹைவேயில் இருக்கும் அந்த ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி – ஒன்லி காஃபி மேல் சத்தியம் செய்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

இப்படியாக ஒரு கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் போதே மிஸ்டர் வேல்கண்ணன் அவர்கள் முதல் பத்தியிலேயே கோபம் கொண்டு வாசிக்காமல் போய்விடுவார் என்று நம்பியபடி இவ்வரிகளைத் தொடர்கிறேன். ஆம் இந்தப் பயணம் வேல்கண்ணனுக்கானது. அவ்வாறே இது எனக்கானதாகவும், எல்லோருக்குமானதாகவும் இருந்தது, ஒருவரைத் தவிர.

இன்னும் நிராகரிக்கப்படாத படைப்புகளை ட்ரெங்குப் பெட்டியில் போட்டு வைத்துக் கொண்டு, தர தரவென இழுத்துச் சென்று கொண்டிருக்கும் எனக்கு இது போன்ற கரிசனமான வாய்ப்புகள் இன்னும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதில் ஒரு நிம்மதி. காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்று சொல்வதைப் போலே காலம் என்பதே ஒரு வாய்ப்பு தான் என்று கருதுவதும் உண்மையானதே.

காலையில் தனியாக ஒரு அறுபது கிலோ மீட்டர் தந்த உற்சாகம் இல்லாதிருந்தால், அப்போது உண்ட உணவுக்கு மரியாதை கொடுத்து தூங்கச் சென்றிருக்கலாம். ஆனால் அதிகாலை தனியாகவேனும்  மாமல்லை போகவேண்டும் என்று தீர்மானித்து தான் கூடுதலாக ஒரு சட்டை ஒன்று எடுத்து வைத்திருந்தேன். ஃபலூடாவை சாப்பிடுவதற்கு அலுத்துக் கொண்டிருந்த க்ருஷ்ணப் பிரபுவோடு விளையாடிப் பார்க்கலாமே என்று தான் விளையாட்டாகக் கேட்டேன்.

“ஜீ போலாமா”
“நீங்க பைக்க நிறுத்திட்டு, நடந்து வாங்க நாங்க வெயிட் பண்றோம்”

திட்டம், ஆலோசனை, ஐடனரி, பவர் பாய்ண்ட் பிரசண்டேசன் எல்லாமுமே பயணத்துக்கானவை தான். ஆனால் பயணம் இவைகளால் தீர்மானிக்கப்படுபவையல்ல. அவருடன் ஆரம்பித்த எங்கள் பயணம் சௌகரியமாகத் தான் தொடங்கியிருந்தது, கால்நடையாகவே தன் சௌகரியங்களை இழப்பதில் வருத்தமேதுமில்லாமல் இலக்கியத்தின் பிடிமானங்களில் இருக்கும் துருக்களில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருப்பதை FUNஆகவும் செய்யாமல், பிரதிபலனும் எதிர்பார்க்காத உயிரி ஒன்றுடனும், அநேகமாக இன்னும் பத்தாண்டுகளுக்குள் 296 பருத்திவீரர்களாலும், தாமதமாய் எங்களுடன் வந்து சேர்ந்த அசல் பருத்திவீரன் ஒருவனாலும் அதிகம் வெறுக்கப் படப்போகின்ற வேல்கண்ணனுடனும் பயணம் தொடங்கியிருந்தது சௌகரியம் தான்.

புன்னகைகளும், லேசான ‘களுக்’ சிரிப்புமாய் மட்டுமே இருந்து கொண்டிருந்த அந்த ஓ.எம்.ஆர் பயணம் மாமல்லையை நோக்கித் தான் என நானும் அது வரை நம்பிக்கொண்டிருந்தேன். வெண்டோவின் ஸ்டியரிங்கைப் போலவே.

ரமேஷ் ரக்சனின் நினைவு வந்த கணம் – யூ டர்ன் அடித்திருந்தோம், யூகித்து வைத்த ஒரு மணி நேர கால் டாக்ஸி பயணத்திற்கு தோதாக, பங்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய மண்மேட்டில் ஒதுங்கிக் கொண்டோம். க்ருஷ்ணப் பிரபுவுடன் நான் அப்போது பேசிய ஒரு விஷயம் தான் முதல் பத்தியாக மாறும் என்பதை உணரும்போது ஃபேஸ்புக்கின் விநோத ஸ்டிக்கர் கமெண்டுகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

தொடங்கினால் முடிக்கத் தெரியாத ரமேஷ் எனும் பாலகன், சிக்னலைத் தாண்டுவதற்கு எங்கள் நால்வரையும் ஏக காலத்தில் வைய ஆரம்பித்திருந்தான். மாமல்லை என்றால் அர்ஜுனன் தபசு மட்டுமே இருக்கிறது என்று அறிந்திருந்த ரமேஷ், கூகிளில் சென்று கடற்கரைக் கோயிலைத் தேடப் போவதில்லை என்பதும் சாஸ்வதம். ஒருவேளை துரிதமாக கிழக்குக்கடற்கரைச் சாலை சரிசெய்யப்படிருந்தால் மாமல்லையைத் தாண்டி பாண்டிச்சேரிக்கே சென்றிருக்கலாம். ஆனால் ஓ.எம்.ஆரில் சென்று கொண்டிருந்த எங்களுக்கு ஹைவேயில் உள்ளே ஏதேனும் ஒரு கும்பகோணம் காபி கடை போதுமானதாக இருந்தது. மழை சற்றே தூரத் தொடங்கியிருந்த கணத்திலே அது உத்திரமேரூராக மாறியிருந்தது. அதிகாலைக்குள் வேல்கண்ணனையும், கிபியையும் வீடு சேர்ப்போம் என்று நம்பிக் கொண்டு அப்பாவிகளாய் தெரிந்தார்கள்.

நட்சத்திரங்களின் சுவடுகள் கூட இல்லாத அந்த மேகம் சூழந்த இரவின் ஒளியை சுற்றிலும் மலைகளுக்கு நடுவே இருந்த கணத்தில், ரமேஷ் தன் சிறுதுரும்பில் படங்கள் எடுக்க ஆரம்பித்திருந்தான். உத்திரமேரூருக்கு செல்லும் வழியிலேயே திசை மாறிச் சென்று கொண்டிருந்த எங்களை ஒரு தெருக்கூத்து ஒன்று சற்று நேரத்திற்கு நிறுத்தி வைத்திருந்தது. புதிதாய் ஊருக்கும் வந்திருக்கும் அந்நியர்களின் விவரங்களை கேட்காத ஊர்ப்பெரியவர்கள் வாழும் கிராமம் எவற்றையெல்லாம் தொலைத்திருக்கிறது என்று கூத்துக்காரர்களின் படைப்பு “கடல்” படம் பார்த்த சலிப்பாக மாறியது. அங்கிருந்து திரும்பும்போது, உத்திரமேரூர் பக்கம் சாதிக் கலவரம் நடந்து கொண்டிருப்பதாக ஒரு காவலர் தெரிவித்த தகவல், உத்திரமேரூர் தான் செல்ல வேண்டும் என்று ஜீயை, அவர் உறுதியைத் தூண்டியிருக்கும். மனதிற்குள் லேசான கிலி இருந்தாலும், காஃபிடே நிறுத்தம் ஒன்றில் போதிய அளவு பண்டங்களை நிரப்பிக் கொண்டு கிளம்பலானோம். டீசல் பற்றிய சிந்தனையே இல்லாமல்

உத்திரமேரூர் சாலையைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ரமேஷுக்கும் விவாதம் வந்தது. ஆம், இப்படி ஒவ்வொருவராக வம்பிழுக்கும் ரமேஷ் வராவிட்டால் இத்தனை சுவாரஸ்யமான பயணமாக அமையாது என்பது உண்மை தான் என்றாலும். அவனோட நேரடி டார்கெட்டில் இருப்போர் நிலைமை பரிதாபம் தான். வேல்கண்ணன் கைகளில் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலையும், கி.பி தமக்கென தாமாக வடிவமைத்துக் கொண்ட ஒரு மந்திரம் ஒன்றை ஓதி அவனைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். பல நேரங்களில் அஹிம்சை காலாவதியாகிவிட்டது என்கிற தத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் தூதுவனாகிய ஆர்.ஆர், கடைசி வரை பயணத்தை மிகச் சௌகரியமாகக் கழித்தவன் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த மொபைல் போனில் எடுத்த போட்டோக்கள் தான் பலருக்கு புரொஃபைல் போட்டாவாக இருக்கும் என்கிற காரணத்தால் தான் நட்பு பாராட்டுகிறோமோ என்கிற எண்ணமும் எழாமலில்லை.

இராஜராஜனின் குடவோலை சாஸனம் இருக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு இருக்கும் மண்டபத்தின் வெளிவாயிலில் நின்று கொண்டிருந்தோம். காலை வேளையிலேயே அந்த மண்டபத்திற்கு அனுமதியில்லை என்கிற நிலையில் ASIன் டெம்பிளேட் போர்டுக்கு அருகில் செல்ஃபி எடுத்துக் கொள்ளாமல், அத்தனைக் கொசுக்கடிக்கும் மதிப்பு கொடுக்காமல் சோடியம் வேப்பர் விளக்கொளியில் ஒரு போட்டோ ஷூட். இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எதிரெதிர் துருவங்களாய் வாழ்வியல் முறை, வாசிப்பு, எழுத்து, குணம், பழக்கவழக்கங்களில் இருக்கும் கிபிக்கும் ரமேஷுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி என்னென்ன விளைவுகளை உண்டாக்குமோ என்கிற ஆச்சரியம் ஒருபுறம், குறுநகையோடு சிகரெட்டின் கடைசிப் புகையை விடும்போது, வெடிச்சிரிப்பு எழும்பியது. இந்த ஊரிலும் யாரும் எங்களை எதுவும் விசாரிக்கவில்லை, எல்லா ஊர்களும் மெட்ராஸாக முயன்று கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

உத்திரமேரூர் – காஞ்சிபுரம் சாலையை நாங்கள் பார்த்த கணத்திலேயே “காஞ்சிபுரம் இட்லி சாப்பிட்டு இருக்கிறீர்களா” என்று ஒலித்த கேள்வியின் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்துவிட்டது. பயணத்தில் மீண்டும் மாறுதல் என்றதும்,  கி.பி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அடுத்த நாள் மாலையிலாவது வீடு சேர்த்தால் சரி என்று ஒப்புக் கொண்டார். வேல்கண்ணனுக்கு தலைவலி ஆரம்பித்து இருக்க வேண்டும். “பேபிமா பிலிவ் மி” என்று வடிவேல் சொல்லும் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது. காஞ்சிபுரம் வரை நாங்கள் சிரிப்பதற்காக மட்டுமே காரிலிருந்து ஆறு முறை இறங்கியிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது, எல்லோரும் அவரவர் பிரச்சினைகளையும் கைப்பையில் சுமந்துக் கொண்டு தான் அந்தச் சனிக்கிழமை மாலையிலும் சந்தித்தோம். ஜீ-யின் ஒரு கண முடிவில் 24 மணி நேரத்திற்கு அவற்றை வென்டோவின் டிக்கியில் போட்டு வைத்ததால் தான் அப்படிச் சிரிக்க முடிந்தது. ரமேஷோ தன் பிரச்சினைகளை பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்திருப்பவன், ஜீ அவனை “ஒழுங்கா வேட்டி கட்டிட்டு வா” என்று சொன்னதால் அவன் தன் பிரச்சினைகளை வீட்டிலேயே வைத்துவிட்டான். கிண்டலும், நையாண்டியுமாக கட்டுப்பாடற்ற  சிரிப்பில் இரவு உண்ட Heavyஆன உணவும் வேகமாகச் செரித்தது. அதுவும் சிரிப்பென்றால் ஒரு கிராமத்தின் மக்களை ஒட்டுமொத்தமாக எழுப்புமளவு சிரிப்பு.


அதிகாலை நான்கு மணிக்கு வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு முன்னர் வண்டி நிறுத்தப்பட்டிருந்த சமயம். மழை தன் வீரியத்தைக் கூட்டியிருந்தது. காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும் இடம் அது தானாம். எல்லோரும் தூங்க ஆரம்பித்திருந்தோம். அது பூனைத் தூக்கம், மீண்டும் ஒரு லாட்ஜைத் தேர்ந்தெடுத்து குட்டித்தூக்கம் போடலாம் என்று தீர்மானித்திருந்தார்கள் போலும், என்னை எழுப்பும் போது நகரின் வேறு எங்கோ ஒரு மூலையில் இருந்தோம். அறைக்கு செல்லும் போதே, ரமேஷை ஜீயுடன் தங்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இல்லாவிட்டால் அந்த சொற்ப நேர தூக்கமும் “மிஸ்டர் வேல்கண்ணன்” எனும் அவனின் நாமாவளியில் கெட்டுப் போயிருக்கும், எப்படியோ கதவை சாத்திவிட்டு காலை எழுந்தாகிவிட்டது.

கோயில்களின் நகரத்தில் ஏதாவது நான் ஆசைபட்டபடி கோரிக்கை வைத்திருந்தால் மூன்றுபேரின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமென்பதால், வாயை மூடிக்கொண்டேன். வேல்கண்ணன் ஏதாவது பேருந்திலாவது ஏற்று விடுங்கள் என்று கோரிக்கை, வேண்டுகோள், கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல் என்று தொனியை மாற்றிக் கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் ஒரு ஓவியர் ஒருவர் இருக்கிறார் என்று ஜீ சொன்னார். கிபி – ஜீகேவை தான் பார்க்க வேண்டும் என்று மனு கொடுத்தார். ரமேஷ் ஸ்டார் பிரியாணி என்று முடிவாய்ச் சொன்னான். ஏற்கனவே தன் நண்பனுக்கு கொடுத்த வாக்கு ஒன்றை நிறைவேற்றாமல், ஒரு ஆர்டிகள் ஒன்று எழுதுவதாய் பொய் சொன்ன பாவத்துக்கு அவனது கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன், பொய்க்கவில்லை.

வேல்கண்ணனிடம் முடிவு எடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஜீ நீட்டிய ஒரு விரல் கண்ணாடி அணிந்த வேல்கண்ணனுக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்குமே மூன்று விரல்களாய் தெரிந்தது. ஜீ.கே என்கிற ஜீ குப்புசாமி அவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். பத்து நிமிடம் மட்டுமே இருப்போம் என்று முன்னமே சொல்லி வைத்திருந்தோம். எங்கள் எல்லோரையும் விடவும் இளமையாகத் தெரிந்த மனிதராகக் காணப்பட்டார், எங்களை வரவேற்ற நர்மதா குப்புசாமி அவர்கள் பிரியாணி போட வேண்டும் என்கிற அக்கறையும் அவ்வப்பொழுது சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த வண்ணமே மும்முரமாயிருந்தார். சைவப்பட்சியான என் நாசியையும் துளைத்தது பிரியாணி வாசம். நான் சாப்பிடப் போறதில்லை என்றால் இந்த உலகத்தில் எனக்காக யாரும் வருத்தப்படப் போவதில்லை என்பது வரம் தான். சுவையான தேநீரைக் குடித்து முடிப்பதற்கு ஜெமோ பற்றிய பேச்சு உருவானது. நான்கு எழுத்தாளர்களுக்கும் மேல் சந்தித்துக் கொண்டால் – ஜெமோ எப்படி வராமல் போவார்.



கிபி அங்கேயும் ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்தார், க்ரூப் போட்டோ எடுத்தாலே அந்த அமர்வு நிறைவுபெறுகிறது போலும். எல்லோரிடமும் விடைபெறும் போது தான் ஜீகே எங்களை மொத்த கணையாழிக்கும் விருந்தளித்ததாகச் சொன்னது ஞாபகம் வந்தது. நாங்கள் எந்த ஒரு திட்டமும் இல்லாது கிளம்பிய பயணம், எங்களை ஏதாவது ஒரு வகையில் ஒருங்கிணைக்கிறதா என்று யோசித்தேன். சற்றைக்கெல்லாம் தீவிரமாக இலக்கியம் பக்கம் மாறிய பேச்சு அதை உர்ஜிதப் படுத்தியது.

இமயத்தின் ”எங் கத” குறித்த விவாதம் தீவிரமாகப் போக, அதை வாசிக்காத நானும் ஜீயும் அதைக் கொஞ்ச நேரம் கவனித்துக் கொண்டே இருந்தோம். அந்த ஒரு புத்தகம் குறித்த விமர்சனம், ஜீயின் கேள்விகளுக்குப் பின்னர் விமர்சனக் கோட்பாடுகள் பற்றிய பொதுமைப் பண்புகளைப் பேசும் தீவிரமான அமர்வாக மாறியது. இவற்றை வேடிக்கை மட்டுமே பார்த்தபடி இருந்த நான் ஒரு முருக்கு பாக்கெட்டை காலி செய்து முடித்த நொடி , என்னையும் இழுத்துப் போட்ட போது தான் உணர்ந்தேன்.

ஜீ இந்த விவாதத்திற்கான மனநிலையை  காலையில் இருந்தே உருவாக்கிக் கொண்டிருந்தார் என்பது தாமதமாகாத்தான் விளங்கியது, பார்க்கிங் டோக்கனுக்கு வசூல் செய்த ஒருவனோடு வம்பிழுத்ததிலிருந்து, சரவணபவனில் செய்த வாதங்கள், என்னையும் கிபியையும் இணைக்கின்ற புள்ளி ஒன்றில் இருக்கின்ற எங்கள் மனநிலையை கீறி விட்டது, பின்னர்  ஜீகே வீட்டிற்கு சென்றது என மாறிவிட்ட மனநிலை எப்படி வெறுமனே எப்படி களிப்புடன் மட்டும் ஒரு பயணத்தை நிறைவுபெற வைக்கும்.

ஆடிக்காற்றில் இலகுவாகிப் போன புழுதி மண்ணில் விதை தூவுவது எளிமை தானே.

அதற்குப் பின்னர் எங்கள் பயணம் அதிகம் மௌனமாகவே இருந்தது. எல்லோர் மனதிலும் ஜீயுடன் விவாதித்த கோட்பாடுகள் வேறு வேறு பரிமாணங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் ஒரு வெற்றிடம் கண்ணில் தெரிந்தது நிச்சயம், யார் அங்கே ஆக்கிரமிக்கிறார்கள் என்பது காலத்தின் கைகளில்.

கொஞ்சம் கருப்பு வெள்ளை காலத்திய இந்திப் பாடல்களும், தமிழ்ப் பாடல்களும் இதமாகியிருந்தது. வேல்கண்ணன் வீட்டிற்கும் முன்னரே என் வீடும் இருந்தது, எனினும் பயணத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்று மனதில் இருந்த ஆசைக்கு வெகுமதியாக A2Bயில் ஒரு மெதுவடையும், காஃபியும் கிடைத்தது.

சுமார் 500 கிலோ மீட்டர்களாவது கடினமான பயணம் செய்திருப்போம். இதெல்லாவற்றிட்கும் காரணம் ஜீ தான்.

அன்றிரவு பாண்டவர்கள் அனைவரையும் க்ருஷ்ணன் வண்டியில் ஏற்றிச் செல்வதாக கனவு ஒன்றைக் கண்டேன். எங்கள் நால்வரில் யார் அர்ஜுனன்?, யார் தர்மர்? என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஐந்தாவதான ஒரு சகோதரன் இல்லாமல் போனதில் வருத்தம் தான். அவர் யார் என்று உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.



மனிதர்களை வைத்து INSTALLATIONகள் உருவாக்கும் கலைஞன் என்று சொன்னேனில்லையா? அதை விளக்குவது மிகக் கடினம் தான் எனினும் அதற்கு இன்னும் சில பிரயாணங்கள் பற்றியும் சொல்ல வேண்டும், சில இனிமேல் தான். இதற்கு முந்தைய பயணங்கள் பற்றியும் சொல்லலாம் தான் – ஆனால் எனக்கு இன்னும் மிச்சம் வைக்கப் பிடித்திருக்கிறது.

- ஜீவ கரிகாலன்


(  24 மணி நேரம் - சுமார் 500 கி.மீ பயணத்தை சாத்தியப்படுத்திய அவர் கேட்டதெல்லாம் - “ இதைப் பதிவு பண்ணிட வேண்டும் ” என்று, நண்பர்களோடு செய்த ஒரே பயணம், எல்லோருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லை. இதை வாசிப்பதோடு மட்டுமல்லாது நண்பர்களின் வலைப்பூக்களையும் பாருங்கள் 1. http://thittivaasal.blogspot.in/2015/08/blog-post.html 2.http://rvelkannan.blogspot.in/)