திங்கள், 28 செப்டம்பர், 2015

எதற்காக காமிக்ஸ்




இந்த நான்கு வருடங்களின் முப்பத்தி சொச்சக்கூட்டங்களில், எங்கள் இரண்டாம் வருடத்திலிருந்தே காமிக்ஸிற்கான கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்கிற தாகம் தீர்வதற்கு சற்றே அதிக காலம் தான் ஆகிவிட்டது என்றாலும், இடையில் ஆறு மாதங்கள் நிகழ்வுகளை சற்று தள்ளிப் போடலாம் என்று நினைக்கும் போதே “காமிக்ஸ்” தான் ரீ எண்ட்ரிக்கு சரியாக இருக்கும் என்று தோன்றியது.

காமிக்ஸை ஒட்டி நிகழ்வுகள் நடத்தினாலும், அது வெறுமனே வாசகர்களின் பகிர்வாக இருக்கக்கூடாது என்பதில் தான் தெளிவாக இருந்தோம். இதற்குக் காரணம் என்னுடைய நண்பரும், எழுத்தாளருமான பாலசுப்ரமணியம் பொன்ராஜ், அவர் தீவிர இலக்கிய வாசிப்பும், காமிக்ஸ் வாசிப்பும் உடையவர் – காமிக்ஸ் கான் போன்ற நிகழ்வு எல்லாம் இங்கு சாத்தியம் தானா, நம்ம ஏதாவது ஒரு வொர்க் பண்ணுவோம் என்றென்னை அதிகம் தூண்டியிருக்கிறார். ஆனால் அதற்கான ஒரு சரியான டீம் நாமில்லை, நாம் வெறும் உதிரிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

காமிக்ஸ் பற்றிப் பேசினாலே, NOSTALGIAவாக வாண்டுமாமா கதைகளையோ , சித்திர, ராணி காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி என்றெல்லாம் பேசி நேரத்தைக் கடத்துவது எளிமையான செயல் தான். ஆனால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, அதுவும் அதைப் பற்றி என்னைப் போன்றவர்கள் பேசினால்.

பொதுவாகவே தமிழின் செவ்விலக்கியப் படைப்புகளில் பிரதானமாக காதலும், வீரமும் மட்டுமே இருக்கிறது என்கிற தீவிரமான வாதம் ஒன்றை நாமெல்லோரும் நம்புகிறோம். (இப்ப மட்டும் என்னவாம்??) இன்று காதல் காமம்னு பிரிச்சு வச்சு வேணும்னா ரெண்டு வகைப்பாடு இருக்குன்னு சொல்லலாமே தவிர வீரம் பற்றி பேசும் காலத்திலோ அல்லது தகுதியுடையவராகவுவோ நாமில்லை என்பது வேறு விஷயம், அதில் அரசியல் இருக்கிறது. காதல் தவிர மிஞ்சியிருப்பது நம் பெருமிதங்களும் நினைவுகளும் தான். அப்படி ஒரு கூட்டமாக காமிக்ஸ் படித்ததை, சிலாகித்தை வைத்தெல்லாம் கூட்டம் போடுதற்கு நாங்கள் முனையவில்லை.

ஓவியர் மருதுவின் பேச்சுகளில் காமிக்ஸ்களுக்கான உரிய இடம் தரப்படாமல் இருப்பதை வேதனையாகத் தான் கடந்து செல்ல வேண்டியிருந்தது, ஒற்றை மனிதராக இத்துறையில் மிகுந்த சிரத்தையோடும் கவலையோடும் பல இடங்களில் பதிவு பண்ணி வரும் இவரோடு கைகோர்த்து நிற்க மனித வளமும் தேவைப்படுகிறது. அதற்கு ஒரு SYDICATE அமைய வேண்டும்.

காமிக்ஸ் Syndicate
பிரகாஷ் பப்ளிஷர்ஷின் இதழ்களிலேயே - பேனா நண்பர்களாக அப்போதிருந்தே ஒரு வாசகர் வட்டம் உருவாகி இருந்தது நாம் அறிந்தது தான். அ.கொ.தி.க, தமிழ் காமிக்ஸ் உலகம் போன்ற BLOGகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக ஒரு வாசகர் வட்டம் உருவாகிக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் காமிக்ஸ் பற்றி இங்கொன்றும் அங்கொன்றுமாய் வந்து கொண்டிருந்த பலவீனமான கட்டுரைகளாலும் அதன் பிழைகளாலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குழு இன்று களத்தில் இறங்கிக் கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம் என்றே சொல்ல வேண்டும், அதை வரவேற்க நாம் தயாராக வேண்டாமா – அது தான் இந்தக் கூட்டம்.

சென்ற வாரம் ஓவியர் மருது என்னிடம் சொன்னது போல, காமிக்ஸ்களுக்கான இடமென்று ஒரு நிரந்தர இடம் வாசிப்புலகில் இல்லாமல் போனதில் ஏற்பட்டிருந்த விளைவுகள் பற்றி பேசியவை அதிர்ச்சிகரமானவை தான். அதை ஒரு Disconnection என்று சொல்கிறார், உண்மையில் இந்த இடம், அதாவது தொடர்பறுந்து போதல் மிகத்தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய இடம். அவர் கண்டுவரும் கனவும், பார்வையும் (Dream & Vision) இன்றைக்கிருக்கும் சில இளைஞர்களின் செயல்பாட்டின் வழியாக சாத்தியப்படும் என்று நம்புகிறார். இவர்கள் அந்த CREWவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர் PINPOINT பண்ணியது விஷ்வாவகத் தான் இருக்கக்கூடும் என்று நினைத்தேன் - கிங் விஷ்வா – இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் பண்ணிக்காதவர், தொடர்ச்சியாகவும் , தீவிரத்தன்மையோடும் Dedicated ஆகவும் அவர் செய்து கொண்டிருக்கும் பயணம் மிக முக்கியமானது.  விஷ்வா காமிக்ஸ் ரஸிகர்களுக்கான ஒரு பெருங்கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார். நிறைய ஓவியர்களிடம் இருந்தும், கதாசிரியர்களிடம் உரையாடுகிறார், தகவல்களை சேமிக்கிறார், இயங்குகிறார்.

Popular art பற்றி நாமெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம், கலை வரலாறு தெரிந்தவர்கள் பின்னவீனத்தின் ஆரம்ப கட்டங்களாகத்தான் பாப்புலர் ஆர்ட்டை சொல்வார்கள். காமிக்ஸ், மினிமலிஸம் போன்ற போக்குகள் எல்லாம் நவீன யுகத்தின் போக்குகளை காலாவதியாக்கியவை, இதை சரியாக உள்வாங்கிக் கொள்ளாத, இடம்தராத படைப்புலகம் தான் ஓவியர் மருது சொன்ன தொடர்பற்றுப் போனதன் காரணமாக, அந்த DISCONNECTING FACTORஆக இருக்குமோ என்கிற ஐயமாக மாறியிருக்கிறது.

இன்றைக்கு இவர்கள் உருவாக்க நினைக்கும் இந்த தளம் எத்தனை CHALLENGESஐ அவர்களிடையே வைக்கிறது என்பதும் தனி பிரச்சினை. அந்த காலத்தைப் போல ஜாம்பவான்களான ILLUSTRATORகள் சொற்ப வருமானத்திலும் மிக முக்கியமான செயல்பாடுகளை செய்து வந்தனர்.
இன்றைய கணினியுகம் வரைகலையை (GRAPHIC ART) அதன் வீரியத்தை, செயல் வேகத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கும் விதத்திற்கு ஈடாக ILLUSTRATORகளை மிகவும் EXPENSIVE ஆகவும் ஆக்கிவிட்டிருக்கிறது.

இதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், தமிழ்ச்சூழலில் – வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து கொண்டிருக்கும் சூழலில், இருக்கின்ற வாசக எண்ணிக்கையால் விளைந்த ஒரு சிக்கலாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் கடக்க வேண்டுமென்றால், FREE LANCERகள் மட்டுமன்றி, தீவிர இலக்கிய உலகில் இயங்கும் குழுக்களைப் போன்ற செயல்பாடுகள் அவசியமாகும். இப்போது காமிக்ஸ் தளத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்களும் சமகால இலக்கியவாதிகள் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை. வெகுஜன இதழ்கள் வாசிப்பவர்கள் போல காமிக்ஸ் வாசகர்களை பார்ப்பதும், இந்த வயசிலும் காமிக்ஸ் வாசிக்கிறியா என்று கேட்பதுமான கேள்விகளை அபத்தமென்று சொல்லலாம். ஏனென்றால் இன்றைய உலகில் அப்படியான பொதுவான அளவுகோல்கள் என்றில்லாமல் எல்லாமுமே காலியான இடங்களை நிரப்பிக் கொள்ளும் இயக்கம் பெற்றிருக்கின்றன. காமிக்ஸ் ஒரு மேம்பட்ட ரசனையைத் தேடும் வாசகர்களுக்கு வரப்பிரசாதம். இந்த POPULAR ARTன் சிறப்பம்சங்கள் – தமிழ் காமிக்ஸ் உலகம் தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு,  வாசிப்பையும் பரவலாக்க வேண்டுமென்றே விருப்பம் மேலோங்கி இருக்கிறது. அப்போது தான் BALANCEDஆன வாசகர் உலத்தை ஒரு மொழி பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.

வெகுஜன, தீவிர இலக்கியத்தைப் போன்றே காமிக்ஸும் ஒரு தனி இலக்கிய வகை என்று முன்னிறுத்த உலக வரலாற்றிலும் சமகாலத்திலும் இடமிருக்கிறது. காமிக்ஸ் வெறும் குழந்தை இலக்கியத்தோடு மட்டுமாக நில்லாமல், அது தனித் துறையாக எல்லாவிதமான படைப்புகளும் பாவிக்கப்படவேண்டும் என்பது தான் நாம் எல்லோரின் பொதுவான விருப்பமாக இருக்கக் கூடும். சமகால உலகின் அறிவுச் சூழலில், இலக்கியத்தில் காமிக்ஸை எங்கே Locate செய்யப்படவேண்டும் என்பது தான் விவாதிக்கப்பட வேண்டும், அதை ஜாம்பவான்களிடம் முன் வைக்கின்றேன்.

ஆக இந்தக் கூட்டம், கிராஃபிக் நாவல்களை நேரடியாக எடுத்துப் பேசாமல், BASICSஇல் இருந்து தெரிந்து கொள்வது தான் நல்லது என்று சிறப்பு அழைப்பாளர்களின் கருத்தையே முன்வைக்கிறது. இந்தக் கூட்டம் ஒரு நல்ல BEGINNING ஆகவும் Re-Entryஆகவும் இருக்கக்கூடும் காமிக்ஸ் வாசகர்களுக்கும், தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கும், யாவரும் நிகழ்வுகளுக்கும்.


-ஜீவ கரிகாலன்

                


1 கருத்து:

  1. @ ஜீவ கரிகாலன்

    கிராபிக் நாவல்கள் பற்றிய நிகழ்ச்சி என்றதும்..அது வெளிநாட்டு படைப்பும், காதுகளில் நுழையாத ஆங்கில பெயர்களின் பட்டியல்,அவர்களின் வரலாறு,புத்தகங்கள் பெயர்,வெளிவந்த பத்திரிக்கை என தகவல் பரிமாற்றமாக மட்டும் இருக்குமோ என சின்ன சஞ்சலம் இருந்தது..! ஆனால்..

    //ஆக இந்தக் கூட்டம், கிராஃபிக் நாவல்களை நேரடியாக எடுத்துப் பேசாமல், BASICSஇல் இருந்து தெரிந்து கொள்வது தான் நல்லது என்று சிறப்பு அழைப்பாளர்களின் கருத்தையே முன்வைக்கிறது. இந்தக் கூட்டம் ஒரு நல்ல BEGINNING ஆகவும் Re-Entryஆகவும் இருக்கக்கூடும் காமிக்ஸ் வாசகர்களுக்கும், தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கும், யாவரும் நிகழ்வுகளுக்கும்.//

    மேற்கண்ட உங்கள் முடியுரை அருமை..! மகிழ்விக்கும் வரிகள்..! வாழத்துக்கள் நண்பர்களே..!

    பதிலளிநீக்கு