இந்த குஜிலி டைட்டில்களுக்கும் நமக்குமான பூர்வ ஜென்ம பந்தம் என்ன? ஏது? என்று யோசிக்கும் போது ஆல்ட் F4களால் இந்தக் கட்டுரை நிறைவடையலாம் என்றாலும். கஸ்தூரிபா
நகரிலிருந்து கருமாரியம்மன் கோயில் வரை பயணம் செய்து முடிக்கும் வரை, நாங்கள் உண்டதாய்
நினைவில் இருந்த ஒரே ஒரு சாம்பார் வடை எந்த ஹோட்டலில் இருந்து என்று யோசித்தேன், பெயர்
ஞாபகத்தில் வரவில்லை. நினைவில் இருந்ததெல்லாம் என்னிடம் காபியைக் கலந்து கொடுக்க வேண்டிய
கபாலி ஒரு டபராவில் ஸ்ட்ராங் டிக்காஸனும், இன்னொன்றில் கட்டிப்பாலையும் மிகுதியாகச்
சேர்த்தது எதற்கு என்று தான். ஒரு வழியாக அது விஷ்ராந்தி என்று நினைவில் வரும் போது
என் இலக்கு வந்துவிட்டது.
மாமன் மகள் படத்தில் கவுண்டமனி, கூர்கா, சேட் மட்டும் சத்யராஜின்
மாமியாரிடம் அடிவாங்கிய எரிச்சலை விட, அப்பொது ஒலித்த டெலிபோன் மணியின் சத்தம் சென்சார்
வசனமாக மாறும் அளவு இருந்ததில் ஆச்சரியமில்லை. அப்படி யாரேனும் என்னை ஜீவ கரிகாலன்
என்று அடையாளம் கண்டு ஜீக்கு முன்னரே என்னை நலம் விசாரித்தார்கள் என்றால் நானும் கவுண்டமணியின்
செயலைப் போலே இந்தக் கட்டுரையே சென்சார் செய்திருப்பேன்.
எங்கே இருக்கிறீர் என்பதே ஆதி வார்த்தையாக செல்போன வந்தபின்
கருதிக்கொண்டிருக்கும் சமூகத்தில், எல்லோரும் எளிமையானவர்களே என்று கற்றுக் கொடுத்த
கற்பிதங்கள், என்னைக் கடந்து சென்ற ரகுமானை, ரகுமான் என்று சொன்னாலும், பிளாஸ்டிக்
சேரில் உட்கார்ந்திருக்கும் ரகுமான் தானே என்று எங்கள் பகுதி புரொபசனல் கொரியர் குமாஸ்தாவை
நினைத்துக் கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
சமூக இயக்கத்தின் இரத்த ஓட்டத்தினை, நரம்புகளை, சதைகளைப்
பற்றி அறிந்திடாமல் தோல் எனும் மொழி அணிந்திருக்கும் மேல்சட்டையையே தோலெனக் கழட்டாது
பிழைக்கும் எனக்கு எழுத்துக்காரனாகிய நான். ஒரே ஒரு சாம்பார் வடை மட்டுமே போஜனமாக வாங்கிக்
கொடுத்துவிட்டு என்னிடம் பேசுவதற்குத் தயராக இருந்த மனிதரோடு பேசும் போது மெய்மறந்தது
ஆச்சரியமல்ல, மெய்யினை பசி மறந்ததே!!
உயிர் பிரபஞ்சத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் போது மெய்யின்
பசி, அகங்காரத்திற்கே தெரியாது போகும். அகங்காரம் அற்ற நிலையில் த்ரிவிக்ரம உருவம்
கண்களுக்குப் புலனாகும் என்பது மாமல்லைபுரத்திற்கு காதலியோடும், செல்ஃபி எடுக்க விரும்பாதோருக்குமே
சாஸ்வதம். அகங்காரமற்ற நிலைக்கும், அகங்காரம் கொண்டிருக்கும் நிலைக்கும் வித்தியாசம்
தெரியாத எழுத்துக்காரன் த்ரிசங்க சொர்கத்தில் தான் வாழ்வான் அல்லது கட்டுரையின் கிரந்த
ஒலியைக் கண்டு ஆவேசமாகி என்னை தேச பிருஷ்டம் செய்யத் துணிவான். துணியட்டும் துணிவே
துணை.
ஒவ்வொரு 350 வார்த்தைகளிலும், 550 வார்த்தைகளிலுமாக பதடிக்கும்
சீனிவாசன் ஜியின் நூலுக்காக ஒரு வடிவம் பற்றி யோசித்து வைத்ததைச் சொல்லிய சந்தோஷம்
மட்டுமே இன்றைய உண்டியல் காசாக சந்தோசப் பட வைக்கிறது என்றாலும். போலச்செய்யும் சந்தோஷம்
எப்படியானது என்று உணரும் பொழுது, அர்விந் யுவராஜோடு 12 மணிக்கு ஃபேஸ்புக்கில் மால்ட்வாதம்
செய்து கொண்டிருந்தேன்..
கலைகளை போஷிப்பவன் எப்படி நடந்து கொள்வான் என்று தெரிய வைக்கவேண்டுமென்று,
“ஓ” போட்ட நண்பரின் கரிசனம் அளப்பரியது தான். “அளப்பரியது” என்பதை ஓசைக்காகத் தான்
பயன்படுத்தினோம் என்று காலரைத் தூக்கிவிட்டுச் சொன்னால் ஒரு கவிஞனுக்கு, ஒத்துக்கொள்வதால்
இழப்பது என்னவாம்? என்று மனதில் சிறு கிலேசம் இருப்பது உண்மையே. இது எல்லாம் டிசைன்லயே
இருக்கு என்பது ரேஷனல் அறிவு இல்லாவிட்டால் தலவிதி என்று சென்று விடலாம்.
எந்த ஒரு சந்திப்பிலும், சரியாகக் கிளம்ப வேண்டும் என்கிற
நேரம் மிச்சமிருக்கின்ற கேள்வி தான் மிக நேர்மையான ஒன்றாக இருக்க முடியும். கைகளில்
கொடுக்கப்பட்ட பெரும் பொறுப்பை வைத்துக் கொண்டு, பச்சைத் துண்டி வாங்கிவிட்டால் விவசாயம்
செய்யலாம் என்ற மனதோடு நின்று கொண்டிருந்தேன் கேள்வியுடன். இந்தச் சமூகத்திற்கு எந்த
சிந்தனையை ஒரு ஊடகம் / இயக்கம் / அமைப்பு முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது, எது
ஒட்டுமொத்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் மாற்றம் என்று சொல்லும் போது கிடைத்த பதில்
நம்பிக்கையளித்தது.
சாதியத்தில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில்
மாற்றங்கள் எப்படியான மாற்றங்களைக் கொண்டிருக்கிறது என்று யோசிக்க வைத்தது. மிகவும்
மெதுவாக வண்டியோட்டும் நான் அப்போது தான் அண்ணா பல்கலைகழகத்தை தாண்டியிருந்தேன். விதைத்து,
வளர்ந்து, உபயோகமற்றுப் போன பபூல் மரம் பற்றிய ஒரிஸா கதை ஒன்று நினைவில் வந்தது தற்செயல்
தான். சாய்நாத்தின் பயணம் போலே ஒரு பயணம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தேவையானது தான்.
கவிதைத் தொகுப்பு ஒன்றைப் போடுவதற்காக அதிகம் பிரயர்த்தனப்பட்ட பதிப்பாளர் என்கிற விருது
பெற்ற நண்பர் அவர், அடுத்ததாக அவர் பதிப்பிக்கத் தயாரான கவிதைத் தொகுப்பிற்கான வடிவம்
நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. ஆர் ஆர் என்னிடம் “இருந்துட்டு போகட்டும்” என்று சொல்லிப்
போனான்.
எந்த எதிர்பார்ப்புகளுமற்ற, எந்த நிபந்தனையற்ற அன்பும் –
எந்த சமரசமுமற்ற விமர்சனமும் பெருக்கெடுத்து வருவது ஒரே சுனையிலிருந்து தான். அது அண்டத்தையும்,
பிண்டத்தையும் ஒன்றாகப் பார்க்கச் செய்யும் ஊற்று, தெள்ளத் தெளிவான நீர், எல்லோருக்குமான
நீர், எல்லா நிலத்துக்குமான நீர் – வான் வழி உலகம் முழுதும் பரவும் புனித நீர். மண்
சுரண்டும் சமூகத்தின் தாகத்திற்காக இன்னும் ஊறிக் கொண்டிருக்கிறது.
மூன்றாவதாக ஒரு ஆள் இருந்தால் கூட ஒரு நல்ல உரையாடல் நிகழ்வது
இல்லை என்று சொல்லக் கேட்டிருப்பது எத்தனை உண்மை. சுவற்றில் லேயர் லேயராக வரைந்து வைத்திருக்கும்
தம்பிக் குட்டியும் தர விருப்பமில்லாத இடம் ஒன்றைத் தான் அவ்வளவு சாதாரணமாக உணர வைத்த
நேரம், எழுந்த சிரிப்பொலி இரவை நீட்டித்தது. தோள்களில் கைகள் போட்டுக் கொண்டு கற்றுக்
கொடுக்கும் மனப்பாங்கு இங்கு யாவருக்கும் எளிதில் கிட்டுவதில்லை என்று ஒரு ஐஐடி சூழலில்
இருக்கும் பேராசிரியர் ஒருவர் சொல்லாமல் சொல்லிப் போனதில் பாக்கியவானாய் உணரும் நேரம்,
இன்னும் அந்த வாயில் நுழையாத விஷ்ராந்தி உணவகத்தின் மோர்குழம்பு போண்டா இல்லாததற்கு
காரணம் என்ன என்று ஜீயின் தகவலால் குழம்பிய நான், அங்கு கைகழுவும் நேரம் புரிந்து கொண்டேன்.
பெரும்பாலோனோர் டிக்காஷன் கம்மியான காபியையே விரும்புகிறார்கள்
போலும். வடவேங்கடத்துக்கு வெளியே தான் எதையாவது உருப்படியாக செய்ய முடியும் என்று சொன்ன
தோழியின் வாக்கில் சத்தியமிருந்தது. 16ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் அதிக பலமிக்க
ஆரியநாத முதலியார் செய்த சேவையை வைத்துக் கட்டமைத்த காலனிய கல்வி முறைமைகளை ஆவனப்படுத்தியிருக்கிறதா
தெரியவில்லை, ஆர். ஆர் மறுபடியும் “இருந்துட்டுப் போகட்டும்” என்று சொல்லிப் போய்விட்டான்.
எனக்கோ, போலச்செய்த கட்டுரையின் WORK OF ART கண்டு பரமதிருப்தி.
“ஜீ – WORD COUNT – 630 வார்த்தைகள்!!”
- ஜீவ கரிகாலன்
படிச்சாச்சு படிச்சாச்சு :)
பதிலளிநீக்குஐயோ பாவம்
நீக்கு