புதன், 4 நவம்பர், 2015

ப.தியாகு - அவசரக்காரன்

யாரோடும் விரோதமில்லாதவன்
***

அக்டோபர் மாதக் கணையாழியில் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கும் முன் ஒவ்வொரு கவிதையாக வாசித்து வந்தார்கள். பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ப.தியாகுவின் இந்தக் கவிதை மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டது… 

இந்தக் கடைசி வரி இத்தனை வலி மிக்கதா? கண்களை மூடுவது – திறப்பதற்கு நண்பா!!...

“வெள்ளி இழைகளை”
விழிகளையுரசும் நெருக்கத்தில்
காணப்பிடிக்கும்
சேரும் இடைவெளியில்
தன்னை
வலுவற்றதாய் மாற்றிக்கொண்டு
குழந்தையின்
மென்கரங்களில் மோதி முறியும்
வெள்ளிக் கம்பிகளை அறிவேன்
ரயிலின்
ஜன்னலோர இருக்கையை
வேண்டிப் பெற்று
உச்சியில்
கிளைகள் போல் பரந்திருக்கும் வானை
தாங்கி நிற்கும் வெள்ளித் தண்டை
வியந்துகொண்டிருக்கையில்
தாழ மறுக்கும் என் இமைகளுக்கப்பாலும்
திணிப்பதற்கேயொரு
திரையிருப்பதை
பக்கத்து இருக்கையிலிருப்பவன்தான்
அறியத் தந்தான்
'மழை தெறிக்கிறதே
கண்களை
மூடிக்கொள்ளலாமா?'

நேரில் வந்து பரிசை வாங்குகிறேன் என்றவனிடம், வீண் செலவு செய்யாதே என்று கண்டித்தேன். உலகில் ஒருவனுக்காக நான், குணா, தியாகு ஆகியோர்கள் பேசிக் கொண்டிருந்த நினைவுகள் பாரத்துடன் அழுத்துகின்றன. உன் பெயர் எழுத வைத்திருக்கும் காசோலையில் யார் பெயரும் எழுதிட முடியாது. வெறுமனே சமூக ஊடகம் இணைத்து வைத்திருந்தது என்று சொல்ல முடியவில்லை தியாகு!! எல்லாவற்றையும் மறந்து, கடந்து செல்லப் பழக்கப்பட்ட மனம் தான் மனிதனுடையது. நான் கூட இதை எழுதுவது இவற்றைக் கடப்பதற்குத் தானா என்று அச்சமுறுகிறேன். 

மிருகங்களுக்கு இருக்கின்றதா என்று தெரியாது, இத்தகைய மரணங்களில் மனிதன் தன் இருப்பைப் பற்றிய பயத்தை அடைகிறான். அது மட்டுமே வலி என்பது உளவியல் கூறும் உண்மை.

நீயும் உன் நண்பனுக்காக எழுதியிருந்தாய்!!

சமாதானத்தின் மடி
***
சதா இரையும்
உன் பேத்தல்கள் அனைத்தும்
அடக்கிக்கொண்டுவிட்டன
சிறு முனகலில்
வேட்கையோடு நீ
சரித்துக்கொள்ளும் 'வோத்கா'
உள்ளத்து ரணங்களின்
சீழோடு வினையாற்றி
இமைப்பீலிகள் நனையப்பொங்கும் கண்ணீராகும்
வேதி விளைவுகளுக்கு
அவசியங்கள் இல்லை இனி
தங்க முட்டைகளென்று பொய்யுரைத்து
வாழ்க்கை உனக்குக் கையளித்த
வெறும் கூழாங்கற்களை
ஒற்றைத் தேகமாக்கி விட்டெறிந்து
பின் எங்குறைவாய் உயிரால்,
ஏமாற்றங்களும் வாதைகளும்
வந்து தீண்டா
மரணத்தின் மடியிலன்றி.

- (நண்பன் ராம்நாத்-ன் நினைவுக்கு)

சாதாரணமாகக் கடந்து சென்ற வரிகளெல்லாம் இன்று கணக்கிறதே நெஞ்சில். ஜாடைப் பேச்சு பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் என்னை வேறு ஏதோ சொல்லப் பணிக்கிறதே தியாகு.

'மழை தெறிக்கிறதே
கண்களை
மூடிக்கொள்ளலாமா?'

மழை இன்னும் வேகமாகப் பெய்கின்றது தியாகு…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக