வியாழன், 13 ஏப்ரல், 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 8

கழுத

அவரை அன்று பார்க்கும் போது மிகுந்த மலர்ச்சியுடன் காணப்பட்டார். உங்களைப் புரிய வைக்க ஏனோ உவமை கிட்டவில்லை. ஆமாம் நான் ஏன் புரிய வைக்கப் பிரயாசப்படனும். அவர் என்னை எப்போதும் ஒரு மண் சார்ந்த பிணைப்பு இருப்பதால் “தம்பீ” என்று தான் எப்போதும் அழைப்பார். அது என்னை, நான் பிறந்த மண்ணை, என் சமூகத்தை, என் வாழ்வியலை, நம்பிக்கையை எல்லாவற்றிட்கும் சேர்த்து இணைக்கின்ற ஒரு கயிறு. பிரித்தானிய பேக்கரியில் சுடச்சுட வாங்கிய மிருதுவான பன்னில் வெண்ணையைத் தடவும் உங்களுக்குக் கடுமையான பசியும், அதே சமயம் பன்னின் முதல் கடியில் ஈடுகட்ட இயலா சுவையை தியானித்து செய்யும் பொறுமை கொண்டவராக என்னை இந்த அரசியலில் என்னை வாரிக்கொண்டார். ஊருக்கு வரும்போதெல்லாம் போதனைகள் என்னை மிருதுவான ரொட்டித்துண்டைப் பார்ப்பது போன்ற கனிவு அவர் கண்களில் தெரியும்.

“தம்பீ!!”

“ஐயா சொல்லுங்க ஐயா.”

வீடு வரை அவரை இறக்கிவிடுமாறு கேட்டிட தான் என்னை அழைப்பதாகப் புரிந்தது. என் தாமதத்தை வீட்டிற்குத் தெரியப்படுத்தினேன்.
காரில் ஏசியைத் தன்பக்கம் திருப்பிக்கொண்டார்.

“தம்பி…”

“ஐயா”

“தலைவரிடம் உன்னைப் பத்தி நேத்து திடீர்னு பேச வேண்டியிருந்துச்சு”

திடீரென்று தலைவரிடம் என்னைப்பத்தி என்றவுடன், மகிழ்ச்சியில் வாகனம் மழையில்லாமல் வைப்பரைப் போட்டது.

“தலைவரிடம் சொல்லிவிட்டேன்.. தம்பி நம்ம ஆள்தான் என்று… தம்பிக்காக ஒரு முக்கியமான வேலை ஒன்றைக் கொடுக்கனும்னும் சொல்லிருக்கேன்”

தலைவர் என்ன சொன்னார் என்று கேட்கவில்லை. தலைவரிடம் எந்தன் பெயர் சொன்னால் போதாதா?. எத்தனை நாட்கள் அவரை வியந்து பார்த்திருப்போம். இன்று நம் பெயரை தலைவரிடம் சொல்லிவிட்டாரே. இதற்கு என்ன கைமாறு செய்யலாம். பணமெல்லாம் கொடுத்தா கோபப்படுவாரே என்று தோன்றியது.

“தம்பி கைவசம் ஏதாவது காசு வச்சுருக்கியா.. ஒரு பத்தாயிரம் தேவை”
என்னடா இது நம் மனதில் நினைக்கவும். அவர் கேட்கவும் அதிசயமாக இருக்கிறதே. என்னை அறிமுகப்படுத்தியதாகச் சொன்னதற்கு பணம் கேட்கிறாரா. இல்லவே இல்லை. அவர் அப்படியானவர் இல்லை. ஏதோ ஒரு பிரச்சினையாக இருக்கும் , நமக்காக இவ்ளோ செய்பவர் இது கூட செய்யாவிட்டால் எப்படி. கட்சியின் மூத்த பேச்சாளர் இவர். இருந்தாலும் வண்டிக்கான மாதத் தவணை கெட்ட இன்னும் ஒருவாரம் இருக்குது. ஓய்வில்லாம ஓட்டுனா பணத்தை கொடுத்திடலாம். தலைவர்கிட்ட சொன்னதுக்கு பணத்தைக் கடனாவ கேக்குறது.

“ஐயா வீட்டுல. பணம் இருக்கு. எடுத்துக்கொடுத்துட்டு ட்ராப் பண்றேன்”
வீட்டிற்குள் சென்று பீரோவில் எடுத்து எண்ணிவிட்டு வந்தேன். காபியைக் குடித்துமுடித்தவர்.

“பாப்பா ரொம்ப அழகா இருக்க.. இப்பதான் தம்பிய பத்தி தலைவர்கிட்ட சொல்லிருக்கேன், தம்பி நம்ம ஆள்தான்னு.. முக்கியமான வேலைகேட்ருக்கேன். நம்மாளுக்கு நாம செய்யாம எப்படி… நகைநட்டு வாங்கனும்ல”

“ஐயா அவ க்ரிஸ்டியன்” இரவில் விற்காத காய்ந்து போன ரொட்டியை, அடுத்த நாள் காலை ஆகாரமாக வெறுமனே சாப்பிடக்கொடுத்தால்?

காரில் அவர் வீட்டுக்கு....
நாட்டு நடப்புகளைப் பேசியபடி வந்தார். அவர் வீட்டிற்கு அருகிலே வந்து, இறக்கிவிட்டேன்

“தம்பி”

“சொல்லுங்க ஐயா”

“ஒரு முக்கியமான விஷயம்”

“ரகசியமா இருக்கனும்”

“சொல்லுங்க ஐயா.. கண்டிப்பா வெளிய போகாது”

“தலைவர்… சில முக்கியமான பொறுப்புகளை நம்மாட்களுக்குகொடுக்கனும்னு திட்டம் போட்ருக்கார்…. நான் உன் பேரை சொல்லலாமான்னு யோசிக்கிறேன். நாளைக்கு நமக்கும் சொந்தமா நாலு தொழில் வேண்டும்ல.. ”

“….”

“ இதத்தான் கார்ல ஏறுனப்பவே சொல்லனும்னு நெனச்சுக்கிட்ருந்தேன்… இப்பவாச்சும் ஞாபகம் வந்துச்சே.. நாளைக்கு காலைல போன் பண்ணு. தலைவர பாக்கும் போது ஏதாச்சும் சொல்லி வைப்போம்.” படக்கென்று காரிலிருந்து கீழே இறங்கி கால்களின் விழுந்தேன்..

“நமக்குள்ள என்னப்பா நீ என் புள்ள மாதிரி.. ஒருநா உங்க வீட்டுக்கு வாரேன். அப்ப வெலாவரியாப் பேசுவோம்”

பிக்கப்பிற்காக கால் வந்தது, மொபைல் போனில் அக்செப்ட் பண்ணினேன். ஜீ.பீ.எஸ்ஸில் காட்டிய இடத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். முட்டுச்சந்து வந்தது, வந்த வழியே திரும்பும்போது. ஐயா சொன்னது ஞாபகம் வந்தது.. இருந்தாலும் ஏதோ இடிப்பது போல தோன்றியது.

காரை ஓரங்கட்டிவிட்டு போன் பண்ணினேன் மனைவிக்கு
“கழுத… விஷயம் தெரியுமா…”

“சொல்லு”

“ஐயா என்னைப் பத்தி இன்னைக்கு தலைவர்கிட்டப் பேசுனாறாம்.”


- ஜீவ கரிகாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக