மெய்யுலகு
புருரவஸின் தீராத
சோகம் என்று அவனால் நம்பப்பட்டது ஒருநாள் பொய்த்தது என்று காளிதாஸ் எதை வைத்து உறுதியாகச்
சொன்னானோ ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால், அது இத்தனை நூற்றாண்டுகளாய் ஒவ்வொரு மனிதனும்
சாகும் வரைக்குள்ளாக தீராத தேடலை அவர்களுக்குள் விதைத்து வைத்திருக்கிறது கண்ணம்மா..
சொல்வதைக் கேள் கண்ணம்மா இது அவர்களைப் பற்றியக் கதையில்லை என்று முன்குறிப்பு தருகிறேன்.
இருந்தபோதும் இதில் மரணத்திற்கு அப்பாலே தான் அது கிடைக்கும் என்று முடித்துக்கொள்பவர்களைப்பற்றி
முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு எழுதுகிறேன். மரணம் என்கிற……….. என்ன உருவகப்படுத்த,
அது வரும் வரையிலும் ஒவ்வொரு மனிதனும் தேடிக்கொண்டிருப்பது மனித நாகரிகத்திற்கான சுவடுகளில்
ஒன்று. சிலருக்குக் கிடைக்கிறது, பலரும் கிடைத்திருப்பதை அறியாமலேயே மரித்துப்போகிறார்கள்.
ஆனால் இவர்கள் யாரைப் பற்றிய கதையும் நான் சொல்லப்போவதில்லை கண்ணம்மா. நான் உனக்கு
நடந்தவற்றைக் கூறப்போகிறேன். நீ என்னை மெய்யுலகுக்கு அனுப்பி வைத்த கதையினை உனக்கே
சொல்லப்போகிறேன்.
கனவுகளில் ஓங்கி
உயர்ந்திருந்த கோட்டைகளும், மிதந்துக் கொண்டிருந்த மாளிகைகளும், நேர்த்தியான தெருக்களில்
ஒருங்கே அமைந்த கடைத்தெருவும், குடியானர்வர்களின் இல்லங்கள் எல்லாம் அமையப்பெற்ற ஒரு
திட்டமிட்ட நகரத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் சில மரங்களுக்கு நடுவே வேயப்பட்டிருக்கும்
பறவைச்சப்தங்களால் மூடப்பட்டிருக்கும் குடிசையைப் போன்ற ஒரு தனியுலகம் அது. நீ தான்
அனுப்பி வைத்தாய், கதவைத் திறந்ததும் அந்த உலகம் கண் முன்னே தெரிந்தது.
நீ கொடுத்தனுப்பிய
முத்திரை மோதிரத்தை அவ்வூருக்குள் நுழைந்தவுடன் எதிரே நின்றிந்த யட்சியிடம் கொடுத்தேன். ஆச்சரியம் என்னவென்றால் , அந்த யட்சி நம் உலகத்திலும் யட்சி தான் கண்ணம்மா. எனக்கு ஒரு
மாலைப் பொழுதின் மயக்கத்தை கலைக்கக் கொடுத்த சுலைமானித் தேநீர் போல மெய்யுலகின் தொடக்கத்திலேயே
யட்சியைப் பார்த்த மகிழ்ச்சி. அந்த ஆண் தேவதை என் இரண்டாம் கதையிலிருந்து மேலெழுந்து
என்னோடு பயணிப்பான் என்று ஆசிர்வாதம் செய்தாள் யட்சி.
என்னை மெய்யுலகிற்கு
அனுப்புவதாய் சொல்லிவிட்டு எங்கே அனுப்பினாயோ என்று உன்மேல் கோபம் கொண்டேன் கண்ணம்மா.
ஐயோ நான் உண்மையைச் சொன்னதற்காகக் கோபம் கொண்டு என்னை ப்ளாக் செய்யாதே. இந்தக் கதையை நான் உனக்குக் கூறியே ஆக வேண்டும்.
ஐயோ நான் உண்மையைச் சொன்னதற்காகக் கோபம் கொண்டு என்னை ப்ளாக் செய்யாதே. இந்தக் கதையை நான் உனக்குக் கூறியே ஆக வேண்டும்.
அது கனவா? பாதையா?
ஒளியா கண்ணம்மா….
என்னை எது? எப்படி?
எங்கிருந்து? எங்கு? எதற்காக இயக்குகிறது கண்ணம்மா? கூறியது கூறல்
நன்றாக இருக்காது என்று புலம்பும் வாசகனைச் சாபமிடு கண்ணம்மா. அவனும் உன்னையே துதிபாடட்டும்.
ஆண் தேவதையை வழிகாட்டிட
அனுப்பிய யட்சி, என்னிடம் இறுதியாக ஒன்றைக் கூறினாள் “எல்லாவற்றையும் யோசித்து முடிவெடு”
என்று.
எப்படி யோசிக்க,
யோசிக்க என்பது விளைவுகளைப் பற்றியா? விளைவுகளைப் பற்றி யோசிப்பவனுக்கு விடைகள் கிடைத்துக்கொண்டே
இருக்கும், ஆனால் வினை புரிய இயலுமா. ஒரு வேளை எளிதாக ஒரே வார்த்தையில் விடை கிடைத்தாலும்
கூட HENCE PROOVE என்று அடுத்த விளக்கமான பதிலுக்கான கேள்வியாக ஒரு சமன்பாட்டைக் கேட்டுவிடும் இரக்கமற்ற வாழ்க்கை. வழக்கம் போல தேர்வெழுதிவிட்டு வெளியே வந்து போட்டுப்பார்க்கும் விடையே சரியாக இருக்கும்
என்பதால் நான் எதனைத்தான் நம்ப?
நல்லவேளை கண்ணம்மா,
உன்னைப்போலவே அந்த இரண்டாம் கதையிலிருந்துக் கிளம்பிய ஆண் தேவதையை யட்சியும் நம்பினாள்.
நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம். சுவாரஸ்யம் என்னவென்றால், வேதாளம் என்றால் தான் நான் சுமந்து செல்லவேண்டும், இது
தேவதை என்பதால் நான் அவனுக்கு சுமையானேன். ஆனால் நான் வேதாளமாக மாறிக் கேள்விகள் கேட்டுக்கொண்டே
அவனோடு வந்தேன். அவன் நான் செல்லுமிடத்தின் காலநிலை, வெப்பநிலை, கொதிநிலை பற்றிய ஆருடங்கள்,
கணிதத்தேற்றங்கள், புள்ளியியல் மாதிரித் தரவுகள், அனுகூல பலன்கள் ஆகியவற்றைச் சொல்லியபடி
வந்தான். நான் கொட்டாவியை மறைத்து அவனிடம் நல்லபடி நடித்து வந்தேன்.
இத்தோடு என் வேலை
முடிந்தது என்று ஒரு எல்லைக்கல்லில் நின்றுவிட்டான், அதில் இருந்த எழுத்துகள் என்னால் வாசிக்கமுடியவில்லை கண்ணம்மா. இந்த மத்திய சர்கார் ஏன் இப்படி வன்மம் கொண்டு அலைகிறது கண்ணம்மா, எல்லைக் கல் என்ன
சொல்கிறது என்பதை இந்த ஊரில் பயணிப்பவனது மொழியில் தானே சொல்ல வேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரியாதா?
கோமாளிகள் அங்கதம் தான் செய்ய வேண்டும், ஆட்சியாளர்கள் செய்யக்கூடாது என்று நீ அவ்வப்போது சொல்வதை நினைத்துப் பார்த்தேன் கண்ணம்மா. நானே நடந்து சென்றேன், மீண்டும் ஒரு கதவு - திறந்தேன். திறந்ததும் வீசிய காற்றில் என் உறக்கத்திற்கும் முன்னரே வேலையைக் காட்டும் கனவின் நாற்றம் வீசியது.
கோமாளிகள் அங்கதம் தான் செய்ய வேண்டும், ஆட்சியாளர்கள் செய்யக்கூடாது என்று நீ அவ்வப்போது சொல்வதை நினைத்துப் பார்த்தேன் கண்ணம்மா. நானே நடந்து சென்றேன், மீண்டும் ஒரு கதவு - திறந்தேன். திறந்ததும் வீசிய காற்றில் என் உறக்கத்திற்கும் முன்னரே வேலையைக் காட்டும் கனவின் நாற்றம் வீசியது.
கடந்தேன் அதை.
ஒரு கேள்விக்குறியும், ஆச்சரியக்குறியும் எனது ஆழ்மனதில்
பதிந்திருந்த காட்சிகளையே என் கனவில் பிரதிபலிப்பதால் அது ஷ்ருஷ்டித்திருந்த தேவதைகளுக்கு
இறக்கைகள் இருந்தன. அம்மூ இதைத்தான் WESTERN INFLUENCE என்பாள் கண்ணம்மா. கீழைத்திய
நாடுகளான சீனாவிலும், ஜப்பானிலும் கூட இப்படி மாறிவிட்டதாம் கண்ணம்மா.
நான் பார்த்துக்கொண்டிருந்தது
ஒரு பெரிய சமவெளி, அழகிய வெள்ளை வீட்டைக்கொண்டிருந்த ஒரு பெரிய சமவெளி. உண்மையில் அது
சமப்படுத்தப்பட்டிருந்த வெளி. அந்த தேவதைகளால் சமப்படுத்தப்பட்டிருந்தது. என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த நிலத்தில் வேலை
பார்த்துக்கொண்டிருந்த தேவதைகள் இருவர் மட்டுமே என் கண்களுக்குத் தென்பட்டார்கள். நிலத்தில்
உழுது வேலை பார்ப்பவர்கள் யாவருமே தேவதைகள் தான் கண்ணம்மா. ஆனால் இங்கே தேவைதைகள் உழவு
செய்கின்றன. இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று சொன்னாலோ, தேவதை என்ற ஒன்றே இல்லை
என்று சொன்னாலோ உன்னை அந்தக் கட்சி தன் ஆஸ்தானப்பிரச்சார பீரங்கி ஆக்கிக்கொள்ளும்,
ஆனால் நீ தான் பொய் சொல்லமாட்டாயே.
துளிர்த்துக்கொண்டிருந்த
ஒவ்வொரு செடிகளும் அவைகளால் தொட்டுப்பார்த்த பரவசத்திலோ அல்லது பார்ப்பார்கள் என்கிற
பரவசத்திலோ காத்துக்கொண்டிருந்தது. ஒரு விசயம் கவனித்தாயா கண்ணம்மா, இரண்டு பரவசமும்
சமமாக இருந்தது.
நேராக மூத்த தேவதையிடம்
நின்றேன், என் கண்களில் தெரிந்த யட்சியின், ஆண் தேவதையின் செய்திகளைப் புரிந்துகொண்டாள்
கண்ணம்மா. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், நீ தந்த செய்திகளை ஏன் அவள் புரிந்துகொள்ளவில்லை
கண்ணம்மா? ஒருவேளை அவளுக்குப் புலப்படவில்லையா அல்லது அது நமக்கான பிரத்தியேக மொழியா.
என்னை சோதித்துப்பார்க்க
விரும்பும் என்று யட்சி சொல்லிவைத்திருந்தாள், அந்த ஆண் தேவதை அந்த தேவதைகளைச் சோதித்துப்பார்க்கச்
சொன்னது.
நாற்றம் வாசனையாக
மாறும் ரஸவாதத்தை இரண்டு பெரிய கதவுகளுக்குப் பின்னால் நின்று கொண்டும், சாவகாசமாக
பன்னீர் பட்டர் மசாலா செய்துகொண்டும் நீ செய்ததை என்னால் அப்போது உணரமுடிந்தது கண்ணம்மா.
மூத்த தேவதை என்னை
வீட்டிற்குள் அழைத்துச் சென்றது, அதன் கரங்களைத் தொட்டுப்பார்த்தேன், மிகப்பெரிய நிலத்தில்
மேடுகளைப் பள்ளைங்களைத் திருத்தி சமப்படுத்து மண்ணின் கசடுகளைப் பிரித்தெடுத்து வளமாக்கி
அவ்வப்போது முத்தங்கள் கொடுத்து நிலத்தை பசுமையாக்கிய தேவதையின் உழைப்பை ரேகைகளுக்கு
இணையாக சொரசொரப்பாக்கி இருந்தது அதன் விதி.
தேவதையாதல் கூட விதி தானோ கண்ணம்மா?
யட்சியும், ஆண்
தேவதையும் சொன்னது அனைத்தையும் மறந்துபோனேன் என்பதை மட்டும் மறக்காவிடில், என் நினைவுகளே
என்னைத் தோற்கடித்திருக்கும். ஆனால் நான் கனவுக்குள் பயணிப்பதைப் போன்றே லகுவாக உணர்ந்தேன்.
அவள் நீட்டிய விரலின் நுனி ஒரு கதவினைச் சுட்டப்பட்டு இருந்தது. நேரே திறந்தேன். நான்
வரும்போது உள்ளே சென்ற அந்த இன்னொரு தேவதை என்னைப் பார்க்காமல் குனிந்த படி, யாரிடமோ
பேசிக்கொண்டிருந்தது. உள்ளே சென்றேன், கதவு சாத்திக்கொண்ட சப்தம் என் நினைவில் இருந்து
செவிகளை அறைந்தது. திரும்பிப்பார்த்தேன் கதவு அப்படியே திறந்து தான் இருந்தது.
ஆனாலும் என் செவிகளை
நம்பச்சொல்லி, அந்த மெல்லிய மல்லிகை வாசனை அறிவுறுத்த கட்டுண்டேன்.
அந்த தேவதை – மிக
அழகாக இருந்தது. அழகிய தேவதை என்பது தேவதைகள் அழகிற்கு அப்பாற்பட்டவர்களா? அல்லது தேவதைகளில்
சிலர்தான் அழகாக இருப்பார்கள் என்கிற உண்மையா?. இரண்டும் வேண்டாம், அவளை அழகிய தேவதை
என்றே அழைப்பது சிறப்பு, அவள் குனிந்துப் பேசிக்கொண்டிருந்தது இன்னொரு தேவதையோடு.
அவளுக்கு நிறைய
கடமைகள் இருப்பதால், அவள் தன் துயரத்தையே இறக்கைகளாய் கொண்டிருந்தாள். உனக்கு ஞாபகிமிருக்கிறதா,
உன்னிடம் நான் சொல்லியிருக்கிறேன் – தேவதைகள் வரமளிப்பவர்கள், ஆனால் தேவதையாய் வாழ்வது
சாபமென்று. அது மீண்டும் நினைவில் வந்துபோனது.
அகச்செவி அறை சாத்தப்பட்டிருப்பதாய்
உணர்த்த அவளைப் படுக்கையில் கிடத்தினேன் கண்ணம்மா? அவள் அந்த சிறு தேவதைக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.
அந்தக் கதையில் ஒரு ஆச்சரியமிருக்கிறது, அதைச் சொன்னால் நீ கோபித்துக்கொள்ளக் கூடாது.
அது உன்னைப் பற்றிய கதை ஒன்று, உன்னைப்பற்றிய கதையில் ஏதோ ஒரு பக்கத்தில் என் பெயரும்
எழுதப்பட்டிருப்பதை அறிந்து அந்த தேவதை வாசிப்பதை நிறுத்து முயன்றேன் கண்ணம்மா.
அவளோடு நானும்
சேர்ந்து படுக்கையில் அமர்ந்தேன். மும்முரமாகச் சொல்லிக்கொண்டிருந்த கதையைக் கேட்டபடி
அந்தப் பேரழகு தேவதை தூங்கிக்கொண்டிருக்க அவள் தலையைக் கோதிவிட்டுக்கொண்டிருந்தாள். நான் அவள் பின்னே அமர்ந்து அவளைக் கட்டிப்பிடிக்க
முயன்றபோது தான் தெரிந்து கொண்டேன், தேவதையாய் வாழ்வது எத்தனை சாபமென்று.
ஒன்று எனக்கும்
இறக்கை முளைக்கவேண்டும், இல்லாவிட்டால் அவள் இறக்கைகளைப் பிய்த்து எறிய வேண்டும் என்றுத்
தோன்றியது. அவள் காதுகளில் மெல்ல அவற்றைச் சொன்னேன். அவளால் அதை பிய்க்க முடியாதென்று
என் உதவியை நாடினாள்.
தேவதையின் இறக்கைகள்
பிய்த்தெறியப்பட்டாள் அவள் என்னைப்போன்ற மனிதராகிவிடுவாள் என்று தோன்றியது. எப்படியோ
எட்டிப்பிடித்து அவள் காதுமடல்களை முத்தமிட்டபடி, ஒரு இறக்கையை பலம் கொண்டு பிய்த்து
எறியத் தயாரானேன். அப்போது உன் குரல் கேட்டது. அதனால் தான் என்னவென்று கேட்க அங்கிருந்து
இப்போது வந்துவிட்டேன் கண்ணம்மா.
அந்த தேவதைகள்
ஒரு வனத்தை உருவாக்கப் போகிறார்கள் என்று உன்னிடம் சொல்லமறந்துவிட்டேன் கண்ணம்மா, அந்தக்
குழந்தைக்குச் சொன்னக் கதையின் முடிவை நினைத்துப்பார்க்கிறேன்.
தேவதையாய் வாழ்தல்
சாபம் தான் கண்ணம்மா. அவளை நான் ஒரு மனுஷியாக்கப் போகிறேன்
ஜீவ கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக