குரோதம்
மாநகரத்தின் புகழ்பெற்ற அந்த ஷாப்பிங் மாலில் திடீரென அத்தனை களேபரம், பலரும்
என்னைச் சுற்றி ’உச்’ கொட்டியபடி, பரிதாபப்பட்டபடி, பகடி செய்தபடி சூழ்ந்துகொண்டிருக்க
பத்துபதினைந்து செல்போன் கேமிராக்கள் என்னைப் படமெடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும்
நான் எங்கேயும் ஓடவில்லை ஏனெனில் ஒரு அழகான யுவதி என் வலது காலினை ஏந்திக்கொண்டிருக்கிறாள்.
அழகான யுவதிக்கும் எனக்கும் ஒரு மாலில் என்ன நிகழ்கிறது என நீங்கள் பார்ப்பது என்னை
மேலும் எரிச்சலடையச் செய்கிறது. அது என் கால்களில் ஊற்றப்பட்டிருக்கும் ஆண்ட்டிசெப்டிக்
மருந்தைவிட அதிக எரிச்சலைத் தருகிறது. இரத்தத்தை துடைத்து விட்டு கால்களில் ஆண்ட்டிசெப்டிக்
ஊற்றிக்கட்டுப்போட்டு முதலுதவி செய்த இந்த பெயர் தெரியாத கண்ணம்மாவைத் தவிர உங்கள்
எல்லோர் மேலும் எனக்கு எரிச்சல் இருக்கிறது.
இப்போது அந்த மீனைக் கொல்லாமல் வந்துவிட்ட எரிச்சல் வேறு.
இரண்டாம் நாளும் அந்த மாலிற்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் நான் அந்த பெடிக்யூர்
கடையோடு சண்டைபோட வந்திருக்கிறேன் என்ற சமாதானம் செய்ய மாலின் பணியாளர்கள் தங்களுக்குள்
தகவலைப் பரிமாறிக்கொண்டு என்னைப் பிந்தொடர்ந்து வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் அந்தப்
பெயர் தெரியாத கண்ணம்மாவைத் தேடினேன். காணவில்லை. மீண்டும் அவனிடம் ஒரு நூறு ரூபாய்
நோட்டை நீட்டினேன். காயப்பட்ட கால்களை தண்னீருக்குள் விடக்கூடாது என்றான். எனது இடது
காலை மட்டும் நீட்டினால், காசைக் குறைப்பாயா என்றேன். சக மனிதர்களிடமிருந்து எந்தத்தொடுதலுமற்ற
ஜீவியாய் இருக்கேனென என்னை உற்றுநோக்கிக் கழிவிரக்கம் கொண்டிருக்கிறான் எனத் தெரிந்தது.
யாரோ ஒருவன் என் மீது செலுத்தும் இரக்கம் கூட என்னை ஹிம்சிக்கிறது.
“ஐம்பது ரூபா தாங்க வேறு ஏதும் ரிசிப்ட் கேக்காதிங்க” என்றான்.
இரக்கம் என்பது அப்படித்தான் அதன் மறுமுனை ஒரு ’சந்தர்ப்பம்’ என்கிற ஆதாயம்
கொண்டிருக்கிறது.
கோடையில் இறுக்கமான உடைகளணிந்த யுவதிகள் சில நூறுபேரை என் சிறுமூளை பார்த்துக்களித்ததில்
ஏறிப்போயிருந்த உஷ்ணம் யாவும் என் இடது காலின் மயிர்க்கால் வழியே வெளியேறிக்கொண்டிருந்தது.
மீன்கள் மொய்மொய்யென இடைத்தேர்தலில் வேலை செய்யும் எம்.எல்.ஏக்களாய் என் காலில் மொத்துக்கொண்டிருந்தன.
“இதுவரைக்கும் எந்த மீனும் யாரையும் கடிச்சதில்ல ப்ரோ” என்றான். விநோதமாகத்
தான் இருந்தது. அதன் அறிவியல் பெயர் காரா ரூஃபா என்பார்கள். அது எப்படி இரத்தம் வருமளவு
கடிக்கப்போகிறது?
மாறிவரும் நுகர்வுக்கலாச்சாரம் எல்லாவிதத்திலும் காசு பார்க்க பழக்கிவிட்டிருக்கிறது.
சதுரகிரியில் நண்பர்களோடு மலைஏறி இறங்கும் போது நொந்துபோன கால்களை அந்த நதியில் மீன்களிடம்
கடிக்கக்கொடுங்கள் என்று ஒரு சுக்குநீர்க்காரன் சொல்ல, நாங்களும் செய்தோம். வலி பறந்துவிட்டது.
அது சாதாரண ஐயிரை மீன் தான். ஆனால் இம்மாதிரியான ஸ்டால்களில் கிடைப்பது டாக்டர் ஃபிஷ்
என்றழைக்கப்படும் காரா ரூஃபா. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு
வருகிறது. ஒவ்வொரு மாலிலும் இதற்கான ஸ்டால்கள் இருக்கின்றன. வீட்டுற்குள் ஒருத்தருக்கு
ஒருத்தர் பிடிச்சுவிட்டது ஒத்தடம் கொடுத்தது எல்லாம் போயே போச்சு. மசாஜ் செய்திடக்கூட
100,150 ரூபாய்க்கு ஒரு நாற்காலி போதும். பதினைந்து நிமிடங்கள் நல்ல சேவை செய்கிறது.
அதற்குப் பின்னர் இன்னும் ”கொஞ்ச நேரம்டி” என்றாலோ, ”என் கண்ணுல்ல, ஐயோ உன் கைக்கு
மோதிரம் செஞ்சுப் போடனும், ஐயோ பாவம் போதும்மா உன் கை வேற நோகுது நான் சமாளிச்சுக்கிறேன்,
உன் கைகள்ள ஒரு ஹீலிங் பவர் இருக்கு ஹனி” என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு கூடுதலாக
கொசுறு மசாஜ் கிடைக்காது. மீண்டும் ஒரு முறை 150 ரூபாய் கொடுத்து அதனுடன் ஒப்பந்தம்
போடனும்.
ஏழெட்டு நிமிஷம் ஆகியிருக்கும். கால்கள் ஊற ஆரம்பிச்சுது. எந்தப்பிரச்சினையும்
இல்லை. பலர் என்னை வேடிக்கைப் பார்த்த அவலத்திற்காகவே இன்னொரு முறை நானா? மீனான்னு?
பார்த்துவிட முடியு பண்ணி தான் இன்றும் வந்தேன். இத்தனை நேரம் ஒன்றும் ஆகாததால் எனக்கு
ஒரு சந்தேகம் தோன்றிற்று, ’நேற்றுக் கடிச்சது மீனா தான் இருக்குமோ அல்லது வேறு என்னவாக
இருக்கும்’ என்று நினைத்த கணமே, மறுபடியும் உயிர் போகும் வலி. இந்த முறை இரண்டு துளைகள்.
இரத்தம் பீறிட்டு வர. அவன் என்னைத் தூக்கிவிட்டான்.
அருகிலிருந்தவர்கள் கத்தினார்கள். நேற்றைக்கு விட இன்று கூட்டமும், செல்போன்
படப்பிடிப்பும் அதிகமாகியது. இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. என்னைக் கடித்த மீன் எது
என்று தெரியவில்லை.
கூட்டம் கூட ஆரம்பிக்க. தலை சுற்றியது. முதலுதவி செய்ய ஒரு தடித்த சஃபாரி சூட்
ஆசாமி வந்தான். அவனைப் பார்த்ததுமே, சற்று மூர்ச்சையடைந்தால் தேவலை என்று நினைத்………
மூன்றாம் நாள்.
மனம் மிகுந்த மனவுளைச்சலாக இருந்தது. எனக்கிருக்கும் ஆயிரம் பிரச்சனைகளில் நான்
எதனைக் குறிப்பிட்டுச் சொல்ல உங்களிடம்? அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது, இன்னும்
மூன்று நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வந்தது. அதிநவீன ட்ராவ்லர்
படகு ஒன்று இறக்குமதி செய்துக்கொண்டிருக்கிறோம். உதிரிபாகங்களாகக் கொண்டுவது அதற்கு
சுங்கவரியைக் குறைத்து க்ளியர் செய்துவிட்டு அதனை அசெம்பிள் செய்துக்கொடுத்துவிட்டால்,
வாடிக்கையாளருக்கு நல்ல லாபம். இந்த யோசனையைக் கொடுத்தது நான் தான். இதனால் பெரிய ப்ராஜக்ட்
கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நிர்வாகம் நிச்சயமாக நல்ல சம்பளம் ஏற்றிக்கொடுக்கலாம்,
ஊக்கத்தொகையும் கிடைக்கும்.
கப்பல் இன்னும் இரண்டு நாள்களில் வந்துவிடும். அதற்குள் காயங்கள் ஆறிவிடனும்.
நான்காவது நாள் –
ஏற்கனவே இரண்டு முறை ட்டீ.ட்டீ. ஊசி போட்டுருக்கிறேன். மீன்கடிக்கு ட்டி, ட்டி
ஊசிப் போட்டவர்கள் யாரும் இருக்கிறார்களா?
இதுபோன்ற தரமற்ற பெடிக்யூர் பார்லர்களால் ஹெபடைடிஸ் ஸீ தொற்றுகிறது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அந்த ஸ்டால் ஓனர் யாரென்று கேட்டு அவர்களிடம் ஏதாவது பிரச்சினை பண்ணும் எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது.
மறுபடியும் நான் மாலில் செல்கிறேன். என்னைப் பலருக்கு அடையாளம் தெரிந்திருக்கிறது,
ஏதோ நாளிதழில் கூட இந்த மீன்கடியைப் பற்றி ஒரு கட்டம் கட்டிப்போட்டிருந்தார்களாம்.
என்னைப் பின்தொடர்ந்து சிலர் வந்தார்கள்.
இரு கால்களிலும் கட்டுடன் நான் ராஜா மாதிரி நடந்து சென்றேன். இம்முறை அவனிடம்
ஒரேயொரு கை மட்டும் என்று ஐம்பது ரூபாய் நீட்டினேன்.
அவன் முடியாது என்றான்.
சண்டையிட ஆரம்பிக்கவும் கூட்டம் கூடியது. மாலில் இருந்து வெளியேற்றினாலும் பரவாயில்லை
என்று நான் அவனிடம் சண்டையைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் முதல் நாள் முதலுதவி செய்தவள்
வந்துவிட்டாள். கனக்கச்சிதமான அந்தக் கருப்பு யூனிஃபார்ம், என்னை ஜெண்டில்மேனாக நடந்து
கொள்ளச் சொல்லாமல் சொல்லியது.
இருநூறு ரூபாய் கொடுத்தேன். நூறு ரூபாய்க்கான ரிசிப்ட் கிடைத்தது. தொட்டியில்
வழக்கமான இடத்தில் உட்காராமல் வேறு பக்கம் அமர்ந்தேன். சற்றுத் திரும்பினால், எல்லோரும்
கைகளில் செல்ஃபோனுடன் தயாராக இருந்தார்கள். சிகரெட்டிற்கு பதிலாய் பட்டாசு வைக்கும்
ஜனகராஜ் போல என்னை நான் உணர்ந்தேன். அந்த சிரிப்புக் காட்சி உண்மையில் எத்தனை வலி மிக்கது
என்று தோன்றிற்று. எல்லா மீன்களும் எதிர்புறத்தில் கும்பலாகச் சுற்றிக்கொண்டிருந்தன.
நான் நீரில் கையை நீட்ட, அங்கே நிசப்தம் படுபயங்கரமாய் இருந்ததும் என்னைத் திகிலூட்ட
ஆரம்பித்தது. தண்ணீர்ல் வைத்த வேகத்தில் கையை மேலே எடுத்துவிட எல்லோரும் சிரித்தார்கள்.
“ஃபக்”
செத்தாலும் பரவாயில்லை என்று நீரில் கைவிட்டேன். ஒன்றன் பின் ஒன்றாக மீன்கள்
மொய்க்க ஆரம்பித்தது. மூளைக்குள் ஒரு புது பரவசம். நான் இருக்கும் நான்காம் தளம் தனியாக
சுழல்வதைப் போன்ற பரவசம். எல்லா மீன்களும் மொய்த்ததாக நினைத்துக் கொண்டிருந்த தருணம்.
ஒற்றை மீன் மட்டும் உடலை ஆட்டியபடி நான் இருக்கும் இடத்திலிருந்து எதிர்புறத்தில் நீர்ல்
நின்றுக்கொண்டு என்னை பார்த்தபடி இருந்தது. அதன் கண்களில் வெறி இருப்பதாகத் தோன்றியது.
மிகத்துடிப்பாக இருந்தது, அதே இடத்திலிருந்து நகராமல் உடலை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தது.
கூட்டம் என் மிக அருகில் வந்து சூழ்ந்துகொண்டது. ஒரு சிறுவன் அந்த மீன் மட்டும் தனியாக
இருக்கிறது என்று சுட்டிக்காட்ட எல்லோரும் அதை ஜூம் செய்து படம் பிடித்தார்கள்.
எல்லோரும் நோக்கியது தான் தாமதம். சர்ரென நீரைக் கிழித்துக்கொண்டு வந்து என்
மோதிர விரலைக் கடிக்க, ரத்தம் பீய்ச்சியடிக்க.. கத்திக்கொண்டு எழுந்தேன். கூட்டமே பதறியடித்து
என்னோடு சேர்ந்து மிரண்டார்கள்.
***
“ட்ராய்லர் போட்னா என்னன்னு தெரியுமாடா தாயோளி”
“சார்.. என்ன சார் இப்படி பேசுறிங்க. நான் ரூல் 9 பாஸ் பண்ணிருக்கேன். ஏ.ஸி
கிட்ட கம்ப்ளையன் பண்ணுவன்”
“வேற எப்படி கர்த்தரேன்னு உங்கிட்ட மண்டி போடச் சொல்றியா…. இந்த கஸ்டம்ஸ்லாம்
மேல போடுற சட்டை தான், சட்டையக் கழட்டுனா இது மீனவ ஒடம்புதாம்லே. ஒனக்குத் தெரிமா - கடலெல்லாம்
எங்களுக்குச் சாமிலே, எங்க ஆத்தா மாதிரிலே. அக்ஸெசரிஸ்னு கள்ளத்தனமா இம்போர்ட் பண்ணி
அசெம்பிள் பண்ணி விக்குறியே அது என்ன தெரியுமா? அது கடலைக் கற்பழிக்குற அரக்கனோட ஆண்குறிலே..
உங்களையெல்லாம் அவ்ளோ ஈஸியா விடமாட்டேன்”
- ஜீவ கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக