வியாழன், 6 ஏப்ரல், 2017

வீணாய்ப்போனவர்களின் கதை - 5

உச்ச நடிகர்

பெரிய அளவில் ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்த கஃபேயினைத் தடை செய்ய வேண்டுமென. இது சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கான உரிமையை மறுப்பதால் சர்வதே அளவில் தொழில் நடத்தும் மற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு இந்த விவகாரம் எடுத்துச்செல்லப்படும் என்று மிரட்டல் வர, அரசு தடை விதிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. காணாமல் போன அந்த உச்ச நடிகரைத் தேடி நாடே கொந்தளித்தது. எல்லோரும் பெரிய பெரிய பட்டங்களைப் பறக்கவிட்டு விமானங்கள் பறப்பதை இடையூறு செய்தனர்.

அஸ்ட்ரல் கஃபே நிறுவனம் எந்நேரமும் தாக்குதலுக்குள்ளாக்கப்படலாம் என்று அரசாங்கத்திடம் போதிய பாதுகாப்பைக் கேட்டிருந்தாலும், எப்படியாவது தமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய. அந்நிறுவனத்தின் உயர்மட்ட ஆர்.என்.டி குழு கூட்டம் கூடியது. எப்படி அது சாத்தியமானது என்று யாருக்கும் தெரியவில்லை. அவரது உடல்திறன் சரியாக இருந்ததால் தான் அவரை அனுமதித்தோம் என்று பணி அதிகாரிகள் சான்றிதழைக் காண்பித்தார்கள்.
உலகத்தின் தலையாய METAPHYSICAL COLLIDER என்று அழைக்கப்பட்டு வந்த ஆஸ்ட்ரல் கஃபே உண்மையில் ஒரு டெலிபோர்டல் ஆய்வுகளுக்காக உரிமம் பெற்ற நிறுவனம் மட்டுமே, அதன் நிதித்தேவைகளுக்காக கேளிக்கைச் சுற்றுலா மையமாக இந்த உடலை விட்டு வெளியேறி சுற்றிவரும் அனுபவத்திற்கான ரிசார்டினை இந்தியாவில் முதன்முதலாகத் திறந்தது. தொடங்கி இரண்டே வருடங்களான இந்த கஃபேயிற்கு இதுவரை உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான பேர்கள் முன்பதிவு செய்திருக்கின்றனர். உலக அளவில் மிகக்கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்துக்கொண்டிருக்கும் MOST HATRED COMPANY.

பூமிக்குள்ளாக உடலை விட்டு விட்டு வெளியே உலாவிட்டு வரலாம். அதிகப்பட்சம் மூன்று நாட்கள் தான். ஆர்வமாக முன்பதிவு செய்த அந்த உச்ச நடிகர் ஆஸ்ட்ரல் பயணத்தை ஆரம்பித்து 6 நாட்களாகியும் இன்னும் எந்த முன்னேற்றமும் ஆகாததால். அதற்குப் பின்னர் யாரும் உள்ளே செல்லவில்லை. அந்த இடமே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கப்போகும் பலூன் போல அழுத்தத்தால் ஊதிக்கொண்டிருந்தது.
புலனாய்வு அதிகாரிகள், சர்வதேச புலனாய்வு அதிகாரிகள் என எல்லோரும் தேடிக்கொண்டிருந்தனர்.

தொலைக்காட்சி விவாதங்கள் சூடுபிடிக்கப் பறந்தன, வரப்போகும் அடுத்த திரைப்படத்தை வெற்றி பெறச்செய்யும் யுக்தியென அவரது போட்டி ரசிகர்கள் நக்கலடித்தனர். அதேசமயம் அறிவியல் நிறுவனமாகத் தம்மைக் காட்டிக்கொண்டிருக்கும் டெபிபோர்ட்டல் கார்ப் மீது நிறையவே விமர்சனங்களை விஞ்ஞானிகள் வைத்தார்கள்.

இதற்காக தாய்லாந்திருந்து செயல்படும் நிறுவனம் சில வேலைகளில் இறங்கியது. சமூக ஊடகத்தின் வாயிலாக இந்தச் செய்திகுறித்துப் பேசிய ஒட்டுமொத்த ஜனங்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டன, அவர்களைப் பேசச்செய்யும் ஜெனரேட்டர்கள் மற்றும் அதிகம் பரவச்செய்யும் ட்ரான்ஸ்ஃபார் மனிதர்கள் குறித்த தகவல் திரட்டப்பட்டு ஒரு பெரிய தொகை பங்கிடப்பட்டது. உச்சநடிகரின் பயோ மெட்ரிக் தகவல்களை வைத்திருந்த தேசிய தகவல்கள் பாதுக்காக்கும் கிட்டங்கியில் அவரது தகவல்கள் கரெப்ட் செய்யப்பட்டது குறித்து சில சப்பாணி ஊடகங்கள் மட்டுமே குரல்கொடுத்தன, சமூக ஊடகக்கடத்திகள் அதை கண்டுகொள்ளாமல் தடுத்தனர்.

உச்சநடிகரின் க்ளோனுடன் களவாடப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை பொருத்தி சரிபார்த்தனர். எல்லாம் சரியாக இருந்தது. இருந்தபோதும் அவரை உச்ச நடிகராகவே மாற்றிட சில காலம் வரை பயிற்சி பெற வேண்டியிருக்கும் என்பதால், மக்களை நம்புவதற்காக ஏதாவது செய்ய வேண்டும்.

அரசியல் அழுத்தங்கள் வேறு அந்த நிறுவனத்திற்கு அதிகமாகிக் கொண்டிருந்தது. தன் சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அது பிரகடனம் செய்தது. இருந்தாலும் உச்சநடிகரை ஒப்படைப்பதாக வாக்குக்கொடுத்தது. இதற்காக உயர்மட்ட ரகசியக் குழு ஒரு தனி கமிட்டியை உருவாக்கியது. அவர்கள் சினிமா ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து மாஸ் ஹீரோக்களின் நடவடிக்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தனர். சில தசாப்தங்களுக்கு முன்னர் வாழ்ந்து வந்த அந்த மற்றொரு நடிகரைப் பற்றித் தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இருவருக்குமான அத்தனை ஒற்றுமைகள் இருந்தன. அந்த ஹீரோவை ஆனால் மக்கள் மறந்துவிட்டனர், அவரது ஃபார்முலாவில் தான் இவரும் தொழிலில் முன்னேறியவர் என்பதால் அந்த நிறுவனம் தன் செயல்திட்டத்தைத் தொடங்கியது.

இறுதியில் அந்த குழுவின் பரிந்துரை மற்றும் கவனிப்பிற்கிணங்க சமூக ஊடகங்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன. உச்சநடிகர் இமயமலையில் தியானத்தில் இருக்கிறார் என்று தகவல்களை ஷேர் செய்ய ஆரம்பித்தன, இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்கள் பேச்சு எடுபடவில்லை. ரசிகர்கள் நம்ப ஆரம்பித்தார்கள், அவர்களுக்குப் பழைய உச்ச நடிகர் கூட இதே போன்ற ஆன்மீக நம்பிக்கை உடையவர் அவரைப் போன்ற அம்சங்களை உடைய இவரும் அவ்வாறான ஆன்மீகப் பயணத்தில் இருப்பதாகவே நம்பவைக்க ஆரம்பித்தனர்.

வேகவேகமாக காலிடருக்குள் தியானம் இருக்கக் கூடாது என்கிற விதிமுறையை வாடிக்கையாளருக்கான ஒப்பந்தப்படிவத்தில் ஏற்றப்பட்டது. க்ளோன் வெற்றிகரமாகத் தயாரானதும் அதனை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். உச்சபச்ச நடிகர் ஆனாலும் யாருடனும் பேசாமலிருப்பதை சில ஊடகங்கள் சந்தேகம் எழுப்பினாலும், எல்லா இடத்திலும் பணம் விளையாண்டுக்கொண்டிருந்தது.
ஒருவழியாக ஒரு முன்னணி ஊடகத்துடனான நேர்காணல் ஒன்றினை அந்த நிறுவனமே ஏற்பாடு செய்ந்திருந்தது, கேள்வி பதிலிற்கான ஸ்க்ரிப்டுகளை ஏற்கனவே க்ளோனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தது நிறுவனம். அக்கேள்விகளில் அந்நிறுவனத்தின் எதிர்காலப் பாதுகாப்பும் , சில திடீர் சந்தர்ப்பவாத லாபங்களும் பொதித்து வைக்கப்பட்டிருந்தன, அந்த க்ளோனாகிய உச்ச நடிகரையே தூதுவராக நிறுவும் திட்டமும் அதிலிருந்தது.

உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது என்று ஆரம்பித்த கேள்வி, மிகச்சரியாக பதில்சொல்லிக்கொண்டிருந்தது அது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அந்த விபத்து நடந்தது. க்ளோன் தன் சிந்தனையிலிருந்து ஸ்க்ரிப்ட்டில் எழுதப்படாத பதில் ஒன்றைத் தந்தது.

“ நின்று போன உங்கள் திரைப்படத்தை எப்போது மறுபடியும் தொடங்குவீர்கள்? ”

“இல்லை இப்போது வேறு திட்டங்கள் இருக்கிறது”

“அப்படியா ஆச்சரியமாக இருக்கிறது.. அந்தப்படம் அவ்வளவு தானா?”.  ஸ்க்ரிபிடிலிருந்து விலகிய பதிலை ஊர்ஜிதம் பண்ண முயற்சித்தாள் நிகழ்வை நடத்தியவள். 

“ஆம் அவ்வளவு தான் முக்கியமான திட்டமிருக்கிறது”

“அப்படியானால் அது என்ன திட்டம் என்று சொல்ல முடியுமா?”

“இமயத்தில் ஆழ்ந்த யோகத்திலிருக்கும் போது என் பிறவி நோக்கம் புரிந்தது. ஆகவே நான் அரசியலில் இறங்கப்போகிறேன். அடுத்த வாரமே புதுக்கட்சித் தொடங்குகிறேன்”

பல ஆண்டுகளாகக் கேட்டிடாத அந்தச் சப்தம் மீண்டும் நாடு முழுக்க கேட்க ஆரம்பித்தது.

“தலைவா!!! எங்களை ஆளப் பிறந்த ஆண்டவா!!”

ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக