சனி, 8 ஏப்ரல், 2017

வீணாய்ப்போனவர்களின் கதை - 7

செப்டம்பர் மாதம் 04ஆம் தேதி.

ன்று நிலவொளி இத்தனைப் பிரகாசமாயிருந்திருக்கக் கூடாது. அவளோடு வாழ்வதைப் பற்றிய பெருங்கனவின் நிறைவேறாத் துயரத்தை, என் எதிரிலிருக்கும் அந்த பரந்துக்கிடக்கும் ஏரியில் தெள்ளத்தெளிவாய் தெரிவதற்குக் காரனமாக மேகமற்றத் தனிமையில் நீரில் தன் பிம்பத்தை மீன்களுக்குப் புணரத்தரும் நிலவின் வெளிச்சமே கட்டுங்கடங்கா கொந்தளிப்பை என்னுள் எழுப்ப ஆரம்பித்துவிட்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் தொழிலில் நாம் செய்த அடிப்படை வேலைகளே மேலே மேலே உந்தவைத்து எங்கேயோ நம்மை நகர்த்திக்கொண்டு போய்விடுகிறது. சட்டென லிஃப்டினைப் போல வாழ்க்கையில் உயரப்பறத்தல் ஆர்கஸமாவதைப் போன்ற பரவசமடைதலைத் தருதல் தான் ஆனால் அது தற்காலிகமானது. ஆனால் மேலே சென்று கொண்டிருக்கும்போது அதெல்லாம் பிடிபடுவதில்லை. இறங்கும் போதும் பரவசத்தோடு இருந்தால் படிக்கட்டுகள் கூட சட்டென விலகி, நம்மைத் தள்ளிவிடும். 

முத்தங்களற்ற இயக்கத்தைப் போல வாழ்க்கை பரிசளித்தவைகளின் யாதொரு உறைகளும் இன்னும் பிரிக்கப்படவேயில்லை. இந்தக் கோடை வாஸஸ்தலத்தில் என் பின்னணியில் ஒரு அபஸ்வரம் ஒலித்துக்கொண்டிருக்கிறது அதை உங்களால் கேட்க முடியாது, ஒருவேளை அது உங்களுக்கு இதமான மெல்லிசையாகவோ, இரவினைச் சூடேற்றும் இசையாகவோ இருக்கலாம். அது எனக்கு அபஸ்வரம்.

ரிசார்ட்டின் புல்தரையில் தனியாக ஒரு இருக்கையில் கால்நீட்டியபடி, அந்த ஏரியைப் பார்த்துக்கொண்டிருக்கும் என்னை நீங்கள் வெற்றி பெற்றவனாகவோ, பைத்தியக்காரனாகவோ, குடிகாரனாகவோ அல்லது இன்னும் சற்று நேரத்தில் தற்கொலைக்குத் தயாராக இருப்பவனாகவோ என்னை நீங்கள் பார்க்கலாம். ஒருவேளை இவ்வனைத்துமே உண்மையாக இருக்கலாம். உங்களுக்கு நான் மட்டும் அவளைப் பற்றிய கதை ஒன்றைச் சொல்லத் தொடங்கினால், நீங்கள் என் மீது இரக்கப்படுவதை விட்டுவிட்டு அவள் மீது ஆர்வம் கொள்வீர்கள். உலகிலேயே மிகவும் வசீகரமான, காமத்தை நொடிப்பொழுதில் தூண்டும் வல்லமை பெற்ற, கோபத்தைப் பொசுக்கும் ஆகிருதியுடைய, தீர்கமான, எதையும் சட்டென எடைபோட்டுவிடும், பொய் சொல்ல அவசியமற்ற, ஒரேயொரு முறை கூட மன்னிக்கத் தயாராகாத, ஆனால் உங்களை வாழவைப்பதற்கான ஆசிர்வாதத்தை அளிக்கும் பரிவான ஒரு பார்வையை வைத்திருக்கும் அவளது கண்களைப் பற்றி நீங்களும் ஒருநாள் என்னைப் போல் புலம்புவீர்கள். 

சைவனென்றால் பாதாதி கேசம் தான் வர்ணிக்க வேண்டுமென்றாலும், அவள் பாதங்களை எனக்கு அவள் காட்டியதேயில்லை, அவள் அணிந்திருக்கும் உடையை சற்றே மேலே தூக்கி அவள் கால்களை தரிசிக்கும் போதெல்லாம், ”சீ ஃபெட்டிஷ்” என்று அவள் என்னை அறைந்து விடுவாள். ஒருமுறை கூட அப்படித்தான் ……

ஆனால் இப்போது நான் உங்களுக்கு கதையல்லவா சொல்லிக்கொண்டிருக்கிறேன்? ஆமாம் ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? ஒருவன் இரவில், நடுங்கும் குளிரில், காலி மதுக்கோப்பைகளோடு பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் சாதாரணமாகக் கடந்து செல்ல வேண்டியது தானே! இந்தக் கதையை நீங்கள் தெரிந்து கொள்வதன் வாயிலாக உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. என் சோகத்தைத் தெரிந்து கொள்வதால் என்ன பயன். ஒருவேளை அதைத் தெரிந்துக்கொண்டு “நீ ஒரு முட்டாள்” என நீங்கள் என்னைச் சொல்லலாம் அல்லது “அவள் ஆசிர்வதிக்கப்பட்டவள்” என நீங்கள் சொல்லலாம். அது கூடப்பரவாயில்லை என் மீது தேவையற்ற கருணை, இரக்கம், பரிதாபம் காட்டுவது கூடப்பரவாயில்லை, எனக்கு ஆறுதலாய் இருப்பதாய் நினைத்து அவளைக் குறைகூறிவிடாதீர்கள். அதற்கு உரிமையில்லை. ஆனால் நீங்களும் என்னைப் போன்ற தவறிழைக்காதீர்கள். பின்னர் ஒருநாள் நீங்களும் இப்படி என்னைப்போலவே உட்கார்ந்து வருந்திக்கொண்டு இருப்பீர்கள், வாழ்வை வெறுத்து முடித்து இருப்பீர்கள், தற்கொலை எண்ணம் உங்களுக்கு வந்து செல்லலாம்.

நில்லுங்கள் பயந்து ஓடாதீர்கள். நான் தான் என் கதையை உங்களுக்குச் சொல்லவில்லையே. நீங்களாக எதுவுமே தெரிந்துகொள்ள முடியாது. நீங்களாகத் தெரிந்து கொண்டதைத் தவறென உணருங்கள். உங்களால் இதிலிருந்து விடுபட முடியும்.

ஹாஹஹ்ஹா.. நீங்கள் இதில் சிக்கவில்லை என்றால் உங்களுக்குப் பிரச்சினையே இல்லை. உலகெங்கும் இப்படி காதல் கதைகள் புவிவெப்பமடைதலைப் போலவே அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அதில் மலிந்துபோன ஒன்றாகவே இதை எடுத்துக்கொள்ளுங்கள். என் தோழி ஒருத்தி கிரேட் பேரியர் ரீஃப் பற்றியக் கதையை, அதன் மாறிவிட்ட இயற்கைச் சூழலை உருக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்த போது, நான் என்னையே நினைத்துக்கொண்டிருந்தேன். காதல் நித்தியத்திற்கு இட்டுச்செல்கிறது என்று நம்பியிருந்தும் மனிதத்தவறுகளால் நாம் வாழும் கூடான இந்த நீலக்கோள் தன்னைத் தானே அழித்துக்கொண்டிருப்பது போல் என் கேவலமான எண்ணங்களால் நான் என்னையே அழித்துக்கொண்டிருப்பதாக என் தோழி சொன்னவற்றை கவனிக்காமல் நான் எங்கேயோ கவனித்துக்கொண்டிருந்தேன். நீங்களும் அவ்வாறே நான் சொல்வதை கவனிக்காமல் எளிதாக என்னைக் கடந்து செல்லலாம். மலைகள் சுரண்டப்படுவதை, ஆற்று மணல் கடத்தப்படுவதை, சதுப்பு நிலங்கள் கபளீகரம் செய்வதை நாம் ஹெட்போன் அணிந்து கொண்டு ஜாக்கிங் ஸ்யூட்டில் கடந்து செல்வது போல just like that கடந்து செல்லலாம்.

எனக்காகப் பரிவு கொள்பவர்களே! உங்களுக்காக ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். இதில் துயரம் மிகுந்து இருக்கிறது, வலி, சோதனை, ஏமாற்றம் எல்லாமும் மலிந்து தான் இருக்கின்றன. ஆனால் உண்மையில் சில விஷயங்களை ஆழ்ந்து நோக்கினால், அசல் என்பது பொய்யின் சூக்கும உடலுக்குள் வாசம் செய்கிறது. இப்போது எனது முகத்தில் புன்னகை பூத்திருக்கிறது கவனித்தீர்களா?

இtதனை அபஸ்வர இசை என்று சொல்கிறேனே இது உண்மையில் உங்களுக்குக் கேட்கும் அதே மெல்லிசை தான். ஆனால் இதை அபஸ்வரம் என்று பெயரிட்டு எனக்கு மட்டும் உரியதாக வைத்திருக்கிறேன். இந்தப் பெயர் வைத்ததால் தான் உங்கள் ப்ளூட்டூத் பற்கள் இரவல் கேட்காமல் இருக்கிறது இந்தப்பாடலை. இந்த Possessiveness தான் என் வாழ்க்கையை சூன்யமாக்கியது என்பதை உணர்ந்து கொண்டால், நீங்கள் ஒருவேளை உங்கள் உறவுகளை அசலாக நேசிக்கக் கற்று கொள்ளலாம். ஏன் நானே அப்படித்தானே, அந்த தனிமை, ஏமாற்றம், வலி, சோதனை எல்லாமும் தான் என் வாழ்க்கையில் வேறு எந்த வலியும், சோதனையும், அவமானமும், பற்றும், துரோகமும் என்னை செயலிழக்க, நம்பிக்கையிழக்கச் செய்யாமல் காபந்து செய்துகொண்டிருக்கும் அவள் தந்த பரிசு. எல்லாவற்றிட்கும் மேல் அவள் என் நினைவுகளில் பூரணமாகத் தங்கியிருக்கிறாள். இத்தனை முழுமையாக அவள் தன்னையே உணர்ந்திருக்க மாட்டாள். அவள் அதனை எனக்குப் பரிசாகத் தந்திருக்கிறாள்.

இப்போதும் உங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம், "இப்படியான ஒரு பைத்தியக்காரன் எப்படி தற்கொலை செய்யாமலிருக்கலாம்?” என்று, அது தப்பேயில்லை எனக்கும் அதே ஆச்சரியம் தான்..

ஆனால் அவள் எனக்கு ஒரு உறுதிமொழி அளித்திருக்கிறாள், “உன் தலையில் மயிர்கள் இருக்குமோ இல்லையோ, உன் வாய்களில் பற்கள் இருக்குமோ இல்லையோ, உன்னை இறுக்கப்பற்றியபடி அழுத்தமாக உனக்கு நான் ஒரு முத்தம் கொடுக்காமல், நீ சாகவே மாட்டாய்” என்று சொல்லியிருக்கின்றாள். அதை நான் இப்போதும் நம்புகிறேன்.

அதனால் தான் இந்த உன்மத்த நிலையிலும், எப்படியான மனக்கொந்தளிப்பும் சற்றைக்கெல்லாம் அடங்கிவிடுகிறது. பேசுவதற்குத் துணையாக காலி மதுக்கோப்பைகளே போதுமானதாக இருக்கிறது. போதாதைக்கு நிலாவைப் புணர்ந்து கொண்டிருக்கும் மீன் குஞ்சுகள் அவ்வப்போது என்னைப் பார்த்து ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லுகின்றன. ஆனால் அது எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும் விஷயம் தான். உங்களுக்கும் சொல்கிறேன்.

 “வாழ்க்கை மிக அழகானது”

- ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக