திங்கள், 31 ஜூலை, 2017

வீணாய்ப் போனவர்கள் கதை - 12

அவர்கள் கேட்டத்தொகையை அவன் கொடுத்துவிட்டான். தனது தலைவலிக்காக பிரச்சனையை அவன் ஒருநாள் முழுமையாகச் சொன்னபிறகு, அவர்கள் அவனுக்குச் சிகிச்சையளிக்கத் தொடங்கினார்கள்.
அவன் சற்று இலகுவாகத் தன்னை உணர்ந்திருந்தான். ஏதோ அவனை விட்டு இறங்கியதாகத் தெரிந்தது. தான் எதற்காகச் சிகிச்சைக்கு சென்றிருந்தோம் என்பதையே மறந்திருந்தான். அது மருத்துவருக்கும் தெரியும் போல, தான் விடைபெறும் போது தன்னிடம் இருந்த கேஸ் ஹிஸ்டரி கோப்பினை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள். அவனுக்கு அது ஒரு கோப்பு என்று தான் ஞாபகமிருந்தது. அதில் என்ன இருந்தது என்பது துளி கூட ஞாபகம் இல்லை.

தான் மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம் என்பது மட்டும் ஞாபகமாய் இருந்தது. மீண்டும் வரத்தேவையில்லை என்று அந்த மருத்துவர் சொன்னவுடன், அவன் விடைபெறும் போது. ஏனோ அந்த மருத்துவர் அவனை ஆரத்தழுவியது ஞாபகமிருந்தது. அவர் ஏன் தன்னைத் தழுவினார் என்று தெரியவில்லை.

சில நாட்களாக அவன் கிளைகளில் இருந்த விடுபட்டிருந்த சுதந்திர இலையாய் உணர்ந்தவன், தான் மெல்ல மெல்ல காய்ந்து கொண்டிருப்பதாய் உணர ஆரம்பித்தான். உண்மையில் அவனுடைய ஏதோ ஒன்று இல்லாமல் போயிருந்தது. சிறிது நாட்களில் அவன் அது குறித்தே தீவிரமாய சிந்தித்துக் கொண்டிருந்தான். தான் எதற்காக மனநிலை மருத்தவரிடம் சென்றோம் எனத் தீவிரமாய் ஆய்வு செய்து கொண்டான். தனக்கு இருந்த டைரி எழுதும் பழக்கம் ஞாபகமிருந்தது. ஆனால் அவைகளைக் காணவில்லை, தனது கைப்பேசி, கணிணி போன்றவற்றில் நிறைய விஷயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தான். அதைத் தானே செய்திருக்கலாம், அதுவும் அந்த மருத்துவரின் ஆலோசனைப்படி தான் அவற்றைச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

நிச்சயமாக அவனுக்கு மருத்துவர் மீண்டும் உதவுவாறா என்று தெரியவில்லை. ஆனால் நித்தமும் அவனது சிந்தனை, ஏதோ ஒரு வெற்றிடத்தை நினைவுறுத்திக் கொண்டே இருந்தது. அதையே தொடர்ந்து சிந்திக்க ஆரம்பித்ததும் மீண்டும் தலைவலியால் அவதிப்பட ஆரம்பித்தான். இந்த முறை வேறு ஒரு மருத்துவர், ஸ்கேனிங்கில் ஒன்றும் தெரியாததால். அவர் வெறும் மாத்திரைகள் எழுதி சாப்பிட்டுவரச் சொன்னார். எதுவும் தேறவில்லை. மீண்டும் அந்தப் பெண் மருத்துவரையே சந்திக்கலாம் என்று தோன்றியது.

“you crazy, நீங்க இப்போ நல்லாருக்கிங்க. கொழம்பாம அலட்டிக்காம லைஃப ரீஸ்டார்ட் பண்ணுங்க”

“டாக்டர். ரீஸ்டார்ட்னு சொல்றிங்க. எனக்குத் தெரியல் என் லைஃப நான் எப்படி அழிச்சுக்கிட்டு இருந்தேன்னு. ஆனா தெரிஞ்சுக்காம என்னால இயங்கமுடியாது”

“தட்ஸ் இம்பாசிபில் நான் எல்லார்க்கும். இது போல இவ்ளோ தூரம் இறங்கி வந்து ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை. உங்களுக்காகக் கொடுத்திருக்கேன். நீங்க சில விஷயங்களை மறக்க வேண்டியிருந்தது. டெலிட் பண்ணேன். மத்தபடி அது உங்களோட முயற்சில மட்டுந்தான் சாத்தியமானது. சோ உங்கள நீங்களே கொழப்பிக்காதிங்க”

”அதுவும் மூன்றரை ஆண்டுகளாக”

அவன் அந்தக் கால இடைவெளியை சரியாகச் சொன்னபோது. அந்த மருத்துவர் சற்று அதிர்ச்சியானாள்.

“மூன்றரை ஆண்டுகளா சரியாகச் சொல்ல முடியுமா எந்த மாதத்திலிருந்து” என்று.

”ஆம், சரியாகச் சொல்லப்போனால் செப்டம்பர் மாசம் மூணாம் தேதியோ , ஐந்தாம் தேதியோ”

கிட்டத்தட்ட மிகச் சரியாகச் சொல்லிவிட்டான் என்கிற போது, அந்த மருத்துவருக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. உடனேயே அவனை மீண்டும் சிகிச்சைக்கு வரச்சொல்லியிருந்தாள். சிகிச்சை ஆரம்பிப்பதற்குள் தன் மூத்தவர்களோடு விவாதித்துக்கொண்டாள்.

அவனுடைய நினைவுகளில் இருந்த அவன் காதலியின் நினைவுகளை முழுவதுமாக ஆழ்மனப்பயணம் மூலம் அழித்துவிட்டிருக்க. அவளை அழித்தபின்பு ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களால் அவன் அல்லலுற்றிருந்தான் என்பதால், அந்த இடைவெளியை அவன் துல்லியமாகக் கணக்கிட்டு, மீண்டும் மனச்சிதைவுக்குள்ளாக ஆரம்பித்திருக்கிறான். இப்போது மீண்டும் அவனை குணப்படுத்த வேண்டுமென்றால் அந்த இடைவெளியை மீண்டும் அவனுக்கு நினைவாக மாற்ற வேண்டும்.

அதே கதை தான் சொல்லப்படவேண்டும், ஆனால் அவன் காதலிக்கும் எல்லா கணங்களிலும் காதல் நிகழாதவாறு சம்பவங்களை மாற்றிச் சொல்லி அவனை நம்ப வைக்க வேண்டும். அதே பெண் மீது அவனுக்கு காதல் வர எந்தக் காரணமும் வந்துவிடக்கூடாது. இப்போதெல்லாம் இது போன்ற சிகிச்சை மிகச்சாதாரணமாகி விட்டது.

மீண்டும் அவனுக்கு அட்மிஷன். ஒரு நீண்ட கோர்ஸ் ட்ரீட்மெண்ட் என ஆரம்பித்தார்கள். ரெகார்ட் செய்யப்பட்டிருந்த அவனது கதைகள் மீண்டும் அவனுக்கு மாற்றிச் சொல்லப்பட ஒரு எழுத்தாளரால் ஸ்க்ரிப்ட் செய்யப்பட்டு அவனுக்கு ஊட்டப்பட்டன. அந்த கோர்ஸ் முடித்து அவன் வெளியே வருகையில் மிக உற்சாகமாகக் காணப்பட்டான்.

சில மாதங்கள் கழித்து ஒருநாள் அந்த மருத்துவரை போனில் அழைத்தான்.

“வணக்கம் டாக்டர். இதை ஏன் நான் உங்ககிட்ட சொல்லனும்னு எனக்குள்ளே மிகுந்த உந்துதல் இருக்கோன்னு தெரியல.. ஆனா நான் இப்பொ என் நிலைமையைப் பற்றி உங்களுக்குச் சொல்லனும்”

மிகுந்த பயத்துடன் அவள் அவனுக்கு ம்ம்ம் கொட்டினாள்.

“டாக்டர் அம் லிவிங் வித் ஹெர் நவ்”
 “என்ன”

“வீ ஆர் லிவிங் டுகெதர்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக