சனி, 1 ஏப்ரல், 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 3

நான்காவதாக ஒன்று

.இக்கதையைப் பயன்படுத்தும் முறை:
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். என்னிடம் யாரும் இது குறித்து கேட்டுவிடாதீர்கள். சற்றுத் தள்ளியே இருங்கள்.

அப்படிப்பட்ட ஒரு கோடை வாஸஸ்தலத்தின், ஒரு மலை முகட்டில் அவர்களிருவரும் தங்கள் வாழ்வில் ஒருத்தரையொருத்தர் சந்தித்திருக்கவே கூடாதவர்கள். ஆனால் காலம் தனது உள்ளாடையை அவ்வப்போது மாற்றும்போது சில சமயம் தவறு நிகழ்ந்துவிடுகிறது, அந்த தவறுகள் தான் தத்துவங்களெனும் உருவில் யாராலேயோ கண்டடைகின்றபடியான ஒரு நிர்வாணம். அப்படியான ஒரு கணம் அவ்விருவர்களும் சந்தித்துக்கொள்வது.

ஆனால் நண்பர்களே!

அவர்களுக்கு மட்டுமே வாய்த்த இந்த அரிதான தருணத்தை நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்வில் சந்தித்ததாகவும் , அடிக்கடி சந்திப்பதாகவும் கருதிக்கொண்டிருக்கிறீர்களே அது தான் அபத்தத்தின் உச்சமென்று சொல்லலாம். இதை காலத்தின் குரலாக நீங்கள் கருதினால் உங்கள் பித்தத்திற்கும், ஸ்வரனை மற்றும் ஞாபகங்கள் ஆகிய எல்லாவற்றிட்கும் நல்லது. மாறாக இது யாரின் குரல் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால். உங்களுக்கு விபரீதம் நிகழும். அவர்களைப் போலவே.

”விபரீதத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நண்பா” என்கிற குரல் அவன் காதினில் முதன்முறையாக ஒலித்தது. இரண்டாமவன் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தான்.

தன் ஆய்வுகளைப் பற்றி அவன் முதலாமவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிவர, அவன் தன் தர்கங்களைப் பதிலாக வைத்துக்கொண்டிருந்தான்.

மெல்ல மெல்ல அவர்களைச் சுற்றி யார் கண்களிலும் புலப்படாத ஒரு விநோத ஒலிப்பாம்பு ஒன்று சுற்றிவந்துகொண்டிருந்தது. அது என்ன விநோத ஒலிப்பாம்பு என்று புதிதாக உங்களுக்குத் தோன்றுகிறதா. அவர்கள் அதைப்பற்றித் தான் பேசப்போகிறார்கள்.

ஃப்ராய்டினை முன்னிறுத்தி மனதின் கட்டமைப்பை மூன்றாகப் பிரித்த ஆய்வு தான் இதுவரை உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பகுப்பு என்று தன் ஆய்வுகள் அதையே வலுவாகக் கட்டமைக்கின்றன என்று இரண்டாமவன் சொல்லும்போது. அவனுக்கு இரண்டாமவனின் மீது எரிச்சலும் பொறாமையும் மிகுந்திருந்ததது உஷ்னமான அவனது மூச்சுக்காற்றில் தெரிந்தது, அதை உணர்ந்திருந்த முதலாமவன் அதற்கு மானஸ சஞ்சரரே என்று சம்பந்தமில்லாமல் பாடினான். அவன் பொறாமை கலந்த மூச்சில் இருந்து நஞ்சைப் பெற்ற ஒலிப்பாம்பு, அவன் பாடலில் உயிர்பெற்று. ஆக்ரோஷமாக இரண்டாமவனைத் தீண்டியது.

அவன் காலத்தின் அரிதான தரிசனத்தைப் பெற்றான். காலம் அவன் மீது வஞ்சகம் வைத்தது. அந்தப் பாடலை அவன் பாடி முடித்தான். ஒலிப்பாம்பு முழுவதுமாக தன் புலப்படாத ஆகிருதியை முழுவதுமாக அவன் மீது செலுத்தியது. இரண்டாமவன் திடீரென்று வீறிட்டு அழுதான்.

தன் ஆய்வுகள் யாவும் பொய்த்துப் போயின என்று ஒப்புக்கொண்டான். முதலாமவன் ஏகத்துக்கும் சந்தோஷம் ஆனான். நீங்கள் உங்கள் எதிரியின் தோல்வியைக் கண்டு அடைவீர்களே அதைப் போன்ற ஒரு சந்தோஷம் தான். சொல்லப் போனால் அது என்னுடைய அல்லது உங்களுடைய சந்தோஷத்தைக் காட்டிலும் சிறிது குறைவு தான். இந்த இடத்தில் உங்களை மட்டும் குறை பட்டுக்கொண்டிருந்தால், நான் எழுதுவதற்கு எந்த அர்த்தமும் கிடையாது தானே. சரி அழுதுக்கொண்டிருக்கும் இரண்டாமவனை கவனிப்போம்.

ஆனால் தான் இப்போது புதிய தரிசனம் ஒன்றைக்கண்டதாக அவன் மிகுந்த அகங்காரத்துடன் சொல்லும் போது. முதலாமவன் சிரித்துத் தொலைத்தான். சினமுற்ற இரண்டாமவன் அவற்றை விளக்க ஆரம்பித்தான்.

விபரீதத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நண்பா, சொல்வதைக் கேள். அடிப்படையில் மனம் மூன்றாக பகுக்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள். உண்மையில் அவை மூன்று அல்ல நான்கு.
முதலாமவன் தன் மூன்று விரல்களை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்தான்
அது (Id), அகம்(ego), அதியகம்(super-ego).

நாலாவது என்ன? அதன் தன்மை என்ன? அதை ஏன் ஆராய வேண்டும்? அதை எப்படி நிரூபிக்க முடியும்? பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.

இரண்டாமவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் பொழுது உடல் நீலமாக இருந்தது. அது என்ன என்று இப்போது பெயர் சூட்ட முடியாது, ஆனால் அது மூன்று படிநிலைகளுக்கும் எதிர்புறத்தில் உள்ளது, அதாவது மனநிலையில் அடிப்படையில் ஒரு பிளவு இருக்கிறது. முதல் மனநிலையில் தான் இதுவரை ஆய்வுகள் நடந்திருக்கின்றன இது மனம் செய்லபடுகின்ற இடத்தில் இல்லை, ஆனால் மனதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அது பிரபஞ்சத்தினைப் போன்று ஒருமை(oneness) அல்லது முழுமையிலிர்ந்து(wholeness) எல்லோர் மனதுக்கும் தொடர்புப்படுத்திக் கொள்வது. உண்மையில் அது எல்லோருக்கும் பொதுவானது, ஆனாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியானது, ஆனால் அது மனதோடு ஒன்றாகாமல் பிளவுபட்டும் இருக்கும் என்றான்.

முதலாமவனுக்கு சிரிப்பு தான் வந்தது. நீலமாக மாறியிருந்தவன் முகத்தில் திட்டுத்திட்டாய் சிவப்பு. நீரூபிக்கிறேன் என்றான்.

முதலாமவன் அனிச்சையாக அந்த விவாதத்தை துண்டித்துவிட்டு எழ ஆரம்பிக்கும் பொழுது. அவனுக்கு மீண்டும் ஒலித்தது “விபரீதத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நண்பா”. சட்டென அந்த மலையின் விளிம்பில் உள்ள சுவற்றில் ஏறி நின்றான். கண்களை மூடியபடி அவன் தன்னுள்ளே, இரண்டாமவன் சொன்னவற்றை எல்லாம் தனக்குள்ளே ஓட்டிப்பார்த்தான்.

மனதின் மூன்று நிலை அடுக்குகள், என்னவெல்லாம் செய்யும்?. இந்த மலை முகட்டில், விளிம்பில் நின்று கொண்டிருக்கிற என்னை மனம் பதட்டம் கொள்ளச் செய்யும். அது என்ன செய்யும்? அகம், அதியகம் என்னவெல்லாம் செய்யும்? நான்காவது ஒன்று இருந்தால் அது என்ன செய்யும். கண்களைத் திறந்து பார்த்தான்.

அது கலவரப்பட்டுக் கிடந்தது. அது மூளையில் பல சுரப்பிகளை தூண்டிவிட்டு உடலை பதட்டமடையச் செய்தது. அகம் மிகவும் பயந்துபோனது, இந்த உடல் சட்டெனக் கீழே விழுந்துவிடுமோ என உரக்கக் கூச்சல் போட்டது, அது உடலில் சில அசைவுகளை ஏற்படுத்தியது. மூன்றாவது மனநிலையான அதியகம் இரண்டாமவனை தோற்கடிக்க இது தான் சந்தர்ப்பம் என நம்பி அதற்காக, மிக தீர்கமாய் முடிவெடுத்தது. அது மூளையை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. அவன் அகச்செவி முழுக்க அவளுடைய குரலைப் போன்றே அதியகத்தின் திட்டப்படி ஒலிக்க ஆரம்பித்தது மிகவும் கர்வத்துடன், வெற்றி பெறப்போகும் மனநிலையில், குரூரமாக.

“.. குதி.. குதி.. குதித்துவிடு.. ம்ம்ம்ம் குதி குதி.. ம்ம்ம் விழு.”

சட்டென நான்காவதாக ஒன்று அங்கே தோன்றியது. அவன் உடல்முழுவதும் இருந்த சூடு முழுவதுமாக ஒரே கணத்தில் காணாமல் போனது. இரண்டாமவன் அவனை விட்டு எங்கேயோ போய்க்கொண்டிருந்தான்.

நான் முதலாமவனாக ஒருமுறை வாழ்ந்திருக்கிறேன். இரண்டாமவனாக இப்போது இருக்கிறேன். ஆனாலும் நீங்களும் நானும் மலைமுகட்டில் சந்தித்துக்கொண்ட அரிதானவர்களாக இல்லை. நமக்கு வேலை இருக்கிறது. பிழைப்பு இருக்கிறது. நாம் வீணாய்ப் போனவர்கள். ஆனாலும் நீங்கள் வீணாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பது என் வேண்டுகோள்.

-
ஜீவ கரிகாலன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக