நான் அதுவாக இருக்கிறேன்
ஜீவ கரிகாலன்
எந்த ஒரு விவாதத்திலும்
அவனால் ஒரு கோட்பாட்டினை உருவாக்க முடியும். எப்போதும் அவன் தானே இறுதியில் ஏதோ ஒன்றை
சொல்லும் அந்தஸ்த்தைப் பெற்றவனாக இருக்கிறான். அவன் நான் முந்நூற்றெம்பது மாதங்களாக
முயற்சித்துப் பிடித்த ஒரு பட்டாம்பூச்சியைப் பற்றிய கதையொன்றைச் சொன்ன போது. அவன்
மூன்னூறு பட்டாம்பூச்சிகள் பற்றிய கதை ஒன்றை எழுதி முடித்து இருப்பான். அவன் எனக்கு
விகாரமாகத் தெரிவான் அப்போதெல்லாம். யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்று என்னை தண்டித்தால்,
நடித்துக்கொண்டே நான் அவனைத் தேர்வு செய்வேன். ஆனாலும் அவன் என்னை மிஞ்சியவன் என்று
சொல்வதில் முதல் ஆளாகப் பெருமை படுகிறேன்.
பட்டாம்பூச்சி மட்டுமல்ல,
பயணம், உடை, நாகரீகம், சினிமா, கதை, காதல், உடல் என எல்லாவற்றிலுமே அவனோடு நான் சற்றே
அல்ல. சற்று கீழேயே இருப்பவன். அநேகமாக நான் யாரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்
என்றது புலப்பட்டால் உங்களுக்குத் தெரியும் அவன் எத்தனை மேலானவன் என்று. அதே போல அவன்
யார் என்று தெரியாவிட்டாலும் உண்மை இது தான் அவன் என்னைக் காட்டிலும் எல்லாத் துறைகளிலும்
மேலானவன் என்று.
ஒருவேளை இதைச் சொல்வதால்
அவனுக்குத் தெரிந்து போய்விடுமோ என்கிற அச்சமிருந்தாலும் அதனால் என்ன என்று தோன்றுகிறது.
பாருங்கள் சகமனிதன் மீது வைக்கின்ற பொறாமைக்கு தான் எத்தனை மெல்லிசான ராகமிருக்கிறது
என்று.
உண்மையில் அவனுக்கு
ஒருநாள் வேலை போய்விட்டதாக வருத்தத்துடன் சொன்னபோது, நான் பட்டாம்பூச்சிக்காக அலைந்து
கொண்டிருந்தேன். மிகுந்த மனவுளைச்சலா என்று தெரியாது, அவனுக்குள் அவநம்பிக்கையும்,
வெறுப்பும், ஏமாற்றமும் நானோ ட்யூப்ஸில் சாக விரும்பாத கேன்ஸர் கிருமியாக பெருகிவருகிறது.
அந்தப்பயலுக்கு மனதிடம் கொஞ்சம் அதிகம் என்பதால், அவன் தாக்குப்பிடிப்பான் என்று அவன்
அழைக்கும் போதெல்லாம் நான் பட்டாம்பூச்சி பிடித்தபடி இருந்தேன்.
அவனுக்கு வேலை பறிபோனதில்
இருந்த துக்கத்தை விட, அவனது நிலைமை தன் வீட்டிலுள்ள அம்மா அப்பாவிற்குத் தெரிந்து
போய்விடக்கூடாது என்கிற பயம் இருந்தது. தன் பயத்தைப் பற்றி இரவில் சொல்லும் போது கூட
பட்டாம்பூச்சியை பிடிப்பதாகக் கனவு கொண்டிருந்தேன். ஒருநாள் கிட்டதட்ட பட்டாம்பூச்சியைப்
பிடித்தேன். அடுத்த நாள் அதுவே என்னை பிடித்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அடுத்த
நாள் அதனிடமிருந்து விடுதலை அடைய வேண்டுவதாக உணர்ந்தேன். அது என்னை நெருக்கிப்பற்ற
ஆரம்பித்தது. பட்டாம்பூச்சியின் பிடியைத் தளர்த்த அவனிடம் யோசனை கேட்டேன், அவன் தன்
வேலையால் வந்துகொண்டிருக்கின்ற பிரச்சினைகளை விட, தன் அம்மாவிடம் தன் நிலையை மறைப்பதைப்
பற்றி மிகுந்த மனச்சோர்வடைந்ததாகத் தெரிந்து கொண்டேன். இருந்தாலும் என் பட்டாம்பூச்சியைப்
பற்றிய என் புலம்பல்களைக் கேட்டுக்கொண்டான். பட்டாம்பூச்சியின் இயல்புகளைப்பற்றி பாடம்
எடுக்க ஆரம்பித்ததும். அவன் மீது வழக்கம் போலவே எரிச்சல் வந்தது.
ஒரு நாள் அந்தப்பட்டாம்பூச்சி
தன் வேலை முடிந்துவிட்டதாகவும், கிளம்பிவிட விரும்புவதாகவும் சொல்லிற்று, நான் அவனிடம்
விழுந்தடித்து ஓடி என் கவலைகளைச் சொல்ல ஆரம்பித்தேன். அவன் அத்தனை கவலைகளோடும் மிகவும்
பொறுமையாக என் புலம்பல்களைக் கேட்டு, பட்டாம்பூச்சியின் இயல்பினைச் சொல்ல ஆரம்பித்தான்.
அது லார்வாவாய் இருந்ததை நீங்கள் உணருங்கள் என்றான். நீங்கள் ஒரு மலரென்று உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்
என்றான் . அந்த உதாரணம் என்னை குபீரென சிரிக்க வைத்தது. அவன் வசீகரமாகத் தெரிந்தான்,
அவனது கவலை குறித்துக்கேட்டேன். பட்டாம்பூச்சியை வழியனுப்பிவிட்டு வரச்சொன்னான்.
அப்படியான ஒரு நாளில்,
பாரமற்றும், பாரமாகவும் அவனிடம் வந்து சேர்ந்தேன். அவன் மிகவும் மனவுளைச்சலோடு தென்பட்டான்.
இன்று அவன் என்னை சந்திததும் என் நிலையைப் புரிந்துகொண்டதாய் கேள்வியெழுப்ப வந்தவனை
நான் இடைமறித்து அவனது பாரத்தைக்கேட்டறிந்தேன். வேலையற்ற நிலையில் வீட்டிற்குப் பணமனுப்ப
முடியாததைச் சொல்வதற்குத் தவித்தான். நான் அவனை வீட்டிற்குப் பேசுமாறு சொன்னேன். பணித்தேன்.
கட்டாயப்படுத்தினேன். சொன்னான்.
அவன் குரல் தளுதளுத்தது.
அவனிடமிருந்து முதல்முறையாகக் கேட்கும்பொழுது சந்தோஷமாக இருந்தது. என் மீதே எரிச்சலாகவும்
இருந்தது. அவனிடம் அம்மா என்ன சொன்னார்கள் என்றேன்.
அவனம்மாவும் அவனைப்போலவே
உளவியல் ரீதியாக எதையும் முன்கூட்டியே புரிந்துகொள்பவர்கள் என்று சொல்லியிருக்கிறான்.
அப்போதும் அம்மா அவன் சொல்லவந்ததை முன்கூட்டியே புரிந்து கொண்டார்கள் என்றான். அவனுக்கு
பாரம் இறங்கியதாகச் சொன்னான்.
அப்போது என்னை ஆச்சரியமாகப்
பார்த்தவன். பின்னர் நான் எப்படி பட்டாம்பூச்சியாக மாறினேன் என்று என்னிடம் கேட்டான்.
அவசர அவசரமாகக் கண்ணாடியைத் தேடினேன். ஆம் உண்மை தான். இப்போது அவனைத் தேடினேன், அவன்
ஒரு சிறுபுள்ளியாகத் தெரிந்தான்.
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக