சனி, 30 ஜூன், 2012



அவளில்லாத
தனிமையை வேண்டி
நான் அடைந்திருந்த இலக்கு
"பெருவனத்தின் மையம்".
நிசப்தமும், பேரிரைச்சலுமாய்
மாறும் நொடிகளில்
எந்த வேறுபாடுகளையும்
அறியத் தெரியா வஸ்துவை
நுகர்ந்திருந்தேன்.

சில்-வண்டுகளின்
ரீங்காரங்கள் அதுவரை
கேட்ட சிம்பொனிகளை
மறக்கடித்தது.
சுனை வழியே புரளும்
நீர்க் கோர்வை புரட்டும்
சிறு கற்களின் ஓசையில்
நான் பேசி வந்த
மொழியை மறந்தேன்.

சில நேரம் மீன்களோடும்,
சில நேரம் பறவைகளோடும்
என் பொழுதுகள் கரைந்தன.
மழையிலும், பனியிலும்
வெயிலிலும் என்னை தோய்த்து
எடுத்து என்னை மனித
இனத்திலிருந்து பரிணமித்துக்
கொள்ள முனைந்திருந்தேன்.

சில நேரம் நான் கனிகளையும்
சில நேரம் கனிகள் என்னையும்
தின்று கொண்டிருந்தோம்.
புற்களில் படுத்துறங்கும்
என் உடலிலும் பச்சையங்கள்
ஒட்டிக் கொண்டன.

இப்போது நான் வனத்தின்
மையத்தில் இல்லை,
வனம் என் மையத்தில்
இருந்தது - பூரணமாய்
நான் பெருவனமான
பொழுதில்,
யாரோ ஒருவன்
வனத்தை அழித்து
கான்க்ரீட் சமாதி செய்ய
ஆயுதங்களுடன் நுழைந்தான்.





—  Painting by Harry Wishard:.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக