தங்கம் - உலகம் முழுமைக்கும் தேடித் தேடி சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு உலோகம். அது சமூகம், நாடு, குடும்பம், தனி மனிதன் என எல்லா அமைப்புகளிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 18ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் சிக்கலற்ற பொருளாதார வாழ்விற்கு தங்கம் தான் காரணமாக இருந்து வந்தது. ஏன் இன்று வரை ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவுகளிலும், மந்தத்திலும் கூட நம்மை மீண்டும் எழ வைக்க இருக்கும் மிகப் பெரிய நம்பிக்கை நம் வீட்டு குடும்பப் பெண்களின் கைகளிலும் , கழுத்திலும் இருக்கிறது. ஏழையோ, பணக்காரனோ தங்கத்தை விரும்பாதோர் யாரும் இலர்.தங்கம் நமது பண்டையக் காப்பீட்டுப்(இன்சூரன்ஸ்) பொருளாய் இன்றும் திகழ்கிறது. நம் தங்கத்தை அகபரிக்கத் தான் பல்வேறு நாடுகளில் இருந்து படையெடுப்புகள் நடந்தன, இருப்புப் பாதைகள் வந்தன.
இன்றும் கூட உலகத்திலேயே நம் நாடு தான் மிகப் பெரிய அளவில் தங்கத்தை நுகர்வு செய்யும் சந்தையைக் கொண்டுள்ளது. இது ஒன்றும் அரசின் திட்டங்களின் மூலம் உருவாகிய சந்தை அல்ல, நமது கலாச்சாரத்தில் ஊறிய சேமிக்கும் பண்பின் வெளிப்பாடு தான் இது.
முன்பெல்லாம் பொருளாதாரத்தில் கடை நிலையில் இ ருப்பவர்கள் கூட தங்கத்தை சேமிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள், குண்டுமணி அளவிலாவது சேர்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். என்றும் மதிப்பு குறையா தங்கம் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அசூர வேகத்தில் நடுத்தர மக்களுக்கே எட்டாக் கனியாக மாறி வரும் தங்க ரகசியத்தை பற்றி கொஞ்சம் அலசுவோம்.
1991 வாக்கில் இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த பொழுது, தனது அயல்நாட்டு வர்த்தக பாக்கியை செலுத்தமுடியாமல் 67000 கிலோ தங்கத்தை அடகு வைத்தது. அன்று நம் நாட்டின் மதிப்பு மீது எத்தகைய அளவு குறைந்திருக்கும்? ஆனால் உண்மை நிலைமையோ வேறு கடந்த ஆண்டு நமது நாடு இறக்குமதி செய்த தங்கத்தின் மதிப்பு என்ன தெரியுமா? 615 கோடி அமெரிக்க டாலர்கள். சில ஆண்டுகளுக்கு முன் உலகமே ஸ்தம்பித்த பொருளாதார மந்தத்தில் கூட இந்தியா எளிதாக மீண்டு வரமுடிந்தமை எப்படி? நமது சேமிக்கும் பண்பு இன்னும் நம்மிடம் பலப்பட்டிருப்பதே.
ஆனால் நம் நாட்டில் தங்கம் இப்பொழுது எல்லோராலும் வாங்க முடிகிறதா என்ற கேள்விக்கு பதில் தேடும் அவசியம் இல்லை. இதற்கு என்ன காரணம் இது வெறும் சந்தைப் பொருளாதாரத்தின் விளைவு தானா? அப்படியென்றால் சந்தையில் நாம் ஒரு பொருளை அதிக அளவு நுகர்வு செய்யும் பொழுது அதன் மதிப்பு உயரும் என்பது எல்லாரும் அறிந்ததே அதனால் தான் நாம் தங்கத்தை நுகர்வு செய்கிறோம். ஆனால் அந்த விலை உயர்வு நியாமான முறையில் இருக்கின்றதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
தங்கத்தின் மதிப்பு உயரப் பல காரணங்களைச் சொல்லலாம், சர்வேதச அளவில் gold pool எனப்படும் அமைப்பில் தினமும் நடைபெறும் தங்கவர்த்தகத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப் படுகிறது,
ஆனால் அங்கு வெறும் சந்தை பரிவர்த்தனை மட்டும் தங்க விலையினை நிர்ணயம செய்து விடுவதில்லை. அது பெரும்பாலும் கம்மாடிட்டி ட்ரேடிங் எனப்படும் ஆன்லைன் சரக்கு வர்த்தகம் தான் தீர்மானிக்கிறது, இதில் தங்கத்தை கண்ணால் பார்க் கும் அவசியம் கூட கிடையாது அதுவும் தங்கத்திற்கான தொகையில் ஐந்து அல்லது பத்தில் ஒரு பகுதி கட்டினால் போதும் நாம் வாங்கிவிடலாம் வாங்கிய மறுநிமிடமே அதை சொற்ப லாபத்தில் விற்று விடலாம். ஆனால் வீட்டு உண்டியலிலும், சமையலறை டப்பாக்களிலும் பல நாட்களாக சேமிக்கப் படும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கிக் கொண்டிருந்த நடுத்தர குடும்பங்களுக்கு இன்று எட்ட முடியா உயரத்தில் சென்றுக் கொண்டிருப்பது எவ்வளவு கொடுமை?
உண்மையில் சேமிக்கும் பண்பைக் கொண்ட நமது கலாசாரத்தில் தங்கம் மகாலட்சுமியாக, ஒரு புனிதப் பொருளாக வாங்கப் படுகிறது. சில இடங்களில் - தங்கம் சில வினாடிகளில் பணம் ஈட்டித் தரும் அற்பப் பொருளாக சில ஆன்லைன் வணிகர்களுக்கு பயன்படுகிறது. ஆனால் இன்றைய அரசும், தங்க நகை விற்கும் நிறுவனங்களும் யாருக்கு சாதகமாய் நடந்து கொள்கின்றன என்று பார்த்தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது .
இந்த பட்ஜெட்டில் மரியாதைக்குரிய பிரணாப் அவர்கள் விதித்த சில திருத்தங்கள் என்னவென்றால் தங்கம் இறக்குமதி செய்யவும், இரண்டு மடங்கு கலால் வரி செலுத்த வேண்டும் என்பதும், இரண்டு லட்சத்திற்கு மேல் ரொக்கத் தொகை கொடுத்து நகை வாங்கும் ஒருவரின் நிரந்தர வரி கணக்கு என்னை சமர்பித்து அதில் ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்றும், அன்பிராண்டட்( unbranded) நகைகளுக்கும் வரி வி திக்கப் பட்டது.
இந்த விதி கொண்டு வந்ததற்கு முக்கியமான இரண்டு காரணங்கள்
1 . நம் அரசின் வணிகப் பற்றாக்குறை (trade deficit ) பெரும்பாலும் தங்கம் , கச்சா எண்ணை ஆகியவற்றை சார்ந்து தான் இருக்கும். அதனால் இறக்குமதியை குறைக்கும் திட்டங்கள் அரசிற்கு தேவைப் பட்டது
2 . நம் நாட்டில் கருப்பு பணத்தை பெரும்பாலும் தங்கமாக மாற்றி பதுக்கும் வழக்கம் உள்ளதால், அதை மேற்பார்வை செய்ய ஒரு நிரந்தரத் தீர்வு தேவைப்பட்டது.
இதற்காக மேலே சொன்னவாறு சில விதிகளை வித்திட்ட மத்திய அரசு வரலாற்றிலேயே ஆச்சரியப்படும் வகையில் பட்ஜெட் முடிந்த ஒரு மாதத்திற்குள் இந்த விதி அமலுக்குள் வராமல் மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது . இத்தனைக்கும் அரசிற்கு இந்த முடிவால் 600 கோடி வரை வருமான இழப்பு ஏற்படும். எதனால் பின் வாங்கியது நம் அரசு ??
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம், விதைகள் திருத்த சட்டம், பல பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றல், எல்லாவற்றிற்கும் மேலாக பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை தனியார் கையில் ஒப்படைத்தல் போன்ற விசயங்களில் பொது மக்களிடமோ அல்லது மற்ற எதிர் கட்சிகள், தொண்டு நிறுவனங்களுடன் என்று யாருடைய எதிர்ப்பையும் , போராட்டங்களையும் புறந்தள்ளிவிட்டு தன் முடிவில் மிகக் கடுமையுடனும், அக்கறையுடனும் இருக்கும் நடுவன் அரசு நகைக் கடை உரிமையாளர்களின் போராட்டத்திற்கு மட்டும் உடனடியாக செவி சாய்த்தது ஏனோ?? வியாபாரிகள் கூறிய காரணமான தங்கம் வாங்கும் சிறு நுகர்வோர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள் என்று சொல்லும் வாதம் ஏற்புடையதா ?
இப்பொழுது ஏற்றப்பட்ட கலால் வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு விட, நகைக் கடையில் ரொக்கம் கொடுத்து வாங்கும் நகைகளுக்கு விதிக்கப்படும் TDS எனும் முறைக்கான வரம்பு இரண்டு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை உயர்த்தப் பட்டுள்ளது. உண்மையில் இது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் செயலா ?அல்லது கறுப்புப் பண ஆதிக்கத்தை பாதுகாக்கும் செயலா ? என்று நமக்குப் புரிவதில்லை.
அப்படி தங்க விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த முயலும் அரசுஎன்றால் முதலில் என்ன செய்யவேண்டும் ? ஆன்லைனில் தங்க வணிகப் பரிவர்த்தனைகளை அல்லவா முடக்கிய இருக்க வேண்டும்? மாறாக அரசிற்கு நஷ்டம் தரும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டிருப்பது கருப்பு பணம் ஒழிப்பதில் அரசிற்கு முழு அக்கறையும் இல்லை என்று தானே காட்டுகிறது.
பெட்ரோலில் விலையேற்றத்திலோ, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் எந்த அளவிற்கு மக்கள் விரோத கொள்கையைக் கடைபிடித்த இந்த அரசு, இதில் மட்டும் பொது மக்களின் நலன் கருதி குறைக்கப் பட்டது என்று சொல்வது கேலிக்கூத்து அல்லவா ? "என் தங்கம், என் உரிமை" என நமது கலாசாரத்தை முதலீடு செய்து நகைகளில் ஏய்ப்பு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு புறம், தங்கத்தை ஒரு சூது விளையாட்டுப் பகடையாக நிமிடங்களில் வாங்கி விற்கும் வியாபாரிகள் ஒரு புறம் , கருப்பு பணத்தை முடக்கும் கோடீஸ்வரர்கள் ஒரு புறம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் அரசு ஒரு புறம் என்று சூழ்ந்திருக்க, இவர்களுக்கு மத்தியில் தன் மகளுக்கோ, தங்கைக்கோ சேர்க்கும் தங்கத்திற்க்காக ஒவ்வொரு சராசரி மனிதனும் தன் வாழ்நாளின் பாதி சந்தோசங்களை துறந்து விடுகிறான். பொது மக்கள் நலன் மீது அக்கறை கொள்ளாத அரசு தனது ஆட்சியைப் பொற்காலம் என்று பறை சாற்றிக் கொள்ளட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக