சனி, 16 ஜூன், 2012

நகரவாசி !!

பணம் என்ற அச்சிலே சுழன்று கொண்டிருக்கும் என் வாழ்க்கை சக்கரத்தில் இருந்து அழகிய உலகிற்குள் அவ்வப்பொழுது வெளிவருவது இப்படித்தான்.

இயற்கை தன் இருத்தலில் எந்த மாற்றமும் கொள்ளவில்லை, அடங்குவதும், சீறுவதும், கொதிப்பதும்,சலனமற்று வெவ்வேறு காலநிலையில் இருப்பதும் அதன் இருத்தலே, நமக்கு தான் இவை மாற்றமாய் புலனாகிறது. சில நேரம் அவதியுறுகிறோம் , பல நேரம் அதன் இருத்தலை மறந்து விடுகிறோம், சில நேரம் நாம் அதை தரிசிக்கிறோம், மெய் மறக்கிறோம், கவி படிக்கிறோம், பாடுகிறோம் ,அதனுடன் எப்போதாவது மட்டுமே கலக்கிறோம்.

சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் அதன் தீவிரத்தை குறைக்காமல் இருந்து வந்தது ,நேற்று மாலை என் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது என் கைகளில் வழிந்துக் கொண்டிருக்கும் வியர்வைத் துளி என் வாகனத்தை நிறுத்தச் சொல்லியது. என் இடது கரம் மீது ஓடும் ஒரு வியர்வைத் துளியில் பிம்பமாய்த் தெரியும் ஓவியம் கண்டேன், கூட்டமாக தன்னை மறைத்த முகிலைக் கரைத்துக் கொண்டு புவியைப் பார்த்துக் கொண்டிருந்தது பரிதி. பரிதி மீது எனக்கு இருந்த வெறுப்பெல்லாம் நேற்று மாலை நான் கண்ட வானோவியத்தைப் பார்க்கும் பொழுது மறந்துவிட, என் மனம் புத்துணர்வு அடைந்தது. 

சில மாதங்களாக நித்தமும் சபித்துக் கொண்டிருந்த சுட்டெரித்த வெயில், நேற்று எனக்கு ஓவியமாய் காட்சியளித்தது. சூரியன் மேகம் சூழ்ந்திருந்த நகரத்தை மாலையிலும் தண்டித்திட முயன்று கொண்டிருந்தான், மேகக் கூட்டங்களைக் கரைத்துக் கொண்டிருந்தான். தன்னை விலக்கும் பரிதியின் கரம் ஒடுக்க இன்னும் சில முகிலினங்கள் சேர்ந்து கொண்டன. ரசிப்பதற்கு எதுவாய் கொஞ்சம் கடல் காற்றும் வீசி என்னை மகிழ்வித்தது. ஐந்து நிமிடங்களுக்குள் மறைந்து, ஒன்று சேர்ந்து, மரணித்துக் கொண்டிருந்த முகில்கள் எனக்கு மொழி பிறப்பதற்கும் முந்திய தெய்வச் செய்தி ஒன்றை உணர்த்தின. தன்னை முழுவதுமாக மறைத்த முகிலின் இடையைப் பற்றிஅக்குள் வெளியே வெளி வந்த கதிரவன் எனக்கு கடவுளாய் காட்சி அளித்தான், இப்பொழுது அவனிடம் ஆடை இல்லை. அது வரை நம்மை சுட்டெரித்தவன் மேல் என்னால் கோபம் கொள்ள முடியவில்லை. (மரம் வெட்டி, மண் திருடி, ஆற்றை மாசு படுத்தி உன்னை அழைத்தது நாங்கள் தானே ! !)

இன்னும் சற்றைக்கெல்லாம் மேகக் கூட்டங்கள் நிர்மூலமாக்கப் படும் என்று தோன்றியதால் என் கைப்பேசி மின்துகளியை எடுத்தேன். நான் படம் எடுக்க முயன்றதை அறிந்த பரிதியோ அங்கு கலைந்து கொண்டிருந்த ஒரு மேகக்காரியின் கூந்தலுக்குள் தன் தலையை விட்டுக் கொண்டு புன்னகைத்தான் மாபாவி - கொடூரன், நானோ அதையும் அழகு என்று படம் பிடித்தேன். 

மாலை நேரத்து மயக்கம் , அதுவும் வெப்பமான மயக்கம். என்னுடன் சேர்ந்து மேற்குலகை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பறவை ஒன்று ஏதோ ஒன்று என்னிடம் சொல்ல விளைந்தது. எனக்குத் தெரியும் அது அநேகமாக ஒரு கவிதை தான் என்று, ஆனால் அங்கே எதிர்பாரா வண்ணம் அருகில் சென்ற பேருந்தின் ஒலிப்பான் என் புறச் செவியை பிளந்து அகச்செவியை செவிடாக்கியது. அதன் பின்னர் பறவை "க்ரீ" என்று பழைய குரலில் கத்திக் கொண்டே பறந்தது தான் ஞாபகம் இருக்கிறது.

அந்தி சாய்ந்தது, இரவெல்லாம் நீங்காத அக்காட்சி என் மனதில் ஒரு விஷயம் சொன்னது ,அது ஒரு வசந்தக் காலத்தின் அறிகுறி என்று. அன்றைய நித்திரையிலும் என் கணங்களில் மேகம் கூடிக் குலாவிக் கொண்டே இருந்தது, காலை விழித்தேன் - வழக்கம் போல் தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து,மழையின்றி வறண்டு போன ஆழ்குழாய் கிணற்றின் மடுவை உறிஞ்சும் இயந்திரம் கொண்டு கரக்கலானேன். மீண்டும் என் இடக் கரத்தில் ஒரு துளி நீர், இது வியர்வை அல்ல புது நீர், மழை நீர்.... மழையைக் கொண்டாடவேண்டும்.

மழையைக் கொண்டாட நான் சக்கர பாகப் பறவை கிடையாது, வானம் பார்க்கும் பூமி கொண்ட அல்லது கரிசல் மண் உழவனோ கிடையாது, விடுமுறையை நோக்கும் சிறுவன் கிடையாது, கிட்டங்கியை நிரப்பும் திட்டம் கொண்ட அருசும் கிடையாது .. நான் ஒரு சாதாரண நகரவாசி !!!! இயற்கையினுள் என் அங்கமும் இருக்கின்றதை உணர்ந்த சந்தோச நகரவாசி !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக