ஞாயிறு, 24 ஜூன், 2012

கவிதை கதம்பம்

என் வெற்றுக் காதலைக் கொண்டு 
உருவகம் தொலைந்து போன
கவிதை படைத்து,
                    உண்டு,
                 செறித்து,
          வீசியெறிந்த, என் மொழிச் சேறு
யாரோ ஒருவனின் காதலிலும் 
படிந்திருந்தது 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காதலென்ற வேதியல்   
சமன்பாட்டில் மறைந்திருக்கும் 
உப்பு - காமம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்பு என் கனவுகளில் 
மொத்தமாய் குடியிருந்த அவள்,
இப்போதெல்லாம் நிமிடங்களில் 
தேய்ந்து விடுகிறாள் - ஆனாலும்
நொடிகளில் கரைந்துவிடும் அவளைத் 
தொடர்ந்திட யாருமில்லை.

அவள் மறைகின்ற 
ஒரு சூட்சும கணத்தில் தான் 
நான் பூரணமான சூன்யத்தில் 
கால் கொள்கிறேன்.
அவள் கரைந்து கொண்டே 
இருக்கட்டும் .....

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுகளற்ற 
தனிமை வனத்தை 
உன் மிருகம் மட்டுமே 
ஆள முடியும்.

சமூகம் உனக்கு கொடுத்த 
உன் பண்பு,
         மதிப்பு,
         மதம்,
         அறிவு,
         அன்பு,
         காதல் 
என்பனவெல்லாம் அம்மிருகத்தின் 
கால் நகங்களில் படிந்திருக்கும் 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உணர்வன்றி
வேறு ஆடை புணையா
ஏதுமற்ற எல்லாம்தான் காமம் 

 அதைச் சடங்காக்கி,
                காதலாக்கி,
            சித்திரமாக்கி,
         கவிதையாக்கி,
              புனிதமாக்கி,
  போர்வை போர்த்தி ஒழுக்கம் கற்பித்த உலகம் 

பின்னர் தன் அறிவைக் கொண்டு 
அதன் மூலம் தேடும் போதெல்லாம் 
பாறையில் முட்டிச் சாகும் 
மனித வரலாறு 
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
    
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------                       
                              
உடலுக்கும் எனக்கும் 
உண்டான பௌதீக வேற்றுமைகளை 
சொல்லிட முயலும் போதெல்லாம் 
தோற்றே போகின்றேன் !!

அவை மொழியைக் 
கடந்த நிசப்தக் 
கூட்டினுள் மட்டுமே 
புலனாகின்றன 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவள் முறையாகப் பயின்றாளா?
"தெரியவில்லை ",
ஆனால் அவள் கோர்த்ததும் , 
வாசிப்பதும் எனக்கான ராகம்.

அவள் மீட்டி வரும் செல்லோ 
தந்தியின் தடம், 
என் முதுகுத் தண்டில் தெரிகிறது.
நான்கு டைட்டானியத் தந்திகளைக் 
கொண்டு என் மூளையை 
கட்டுக்குள் வைத்து விட்டாள். 

இறங்கி ஏறும் மீட்டல்கள் 
சப்தங்களால் என்னைப் 
புணர்ந்து முடிக்கும் வேளையில் 
முற்று பெற்ற இசைக்கு 
கரம் தட்டும் ஒலிகள் கூட
கேட்க இயலாமல் நான் 

நான் செவிடென்பதை 
மறக்க வைத்துவிடக் 
காரணம் யார் 
அவளா அவள் செல்லோவா?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக