புதன், 20 ஜூன், 2012

புதிய நீதிக் கதைகள் - 2 /பானிபூரி




பிரபாகர் நெஞ்சம் படபடவென அடித்தது, "டேய் தடியா!! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?, அவ டெய்லி நம்ம தெருவிற்கு வாராடா, அவளோட கிளாஸ் மேட் வீடு இங்க இருந்து மூணு வீடு தள்ளி தான் இருக்கு, ரெண்டு பெரும் கம்பைன் ஸ்டடி பண்றாங்கன்னு நினைக்கிறேன் " என்று மூச்சு விடாமல் தன் வீட்டிற்குள் நுழையும் நண்பனிடம் அந்த சங்கதியை சொன்னான். "அப்போ இன்னைக்கு அவள பார்க்கப் போறியா? " என்று அவன் நண்பன் கேட்க, அதற்கு பிரபாகர் "எஸ்! அவள பார்க்கப் போறேன், நம்ம வீட்டிற்கு கூப்பிடப் போறேன்" என்றான்.

"டேய்!! பார்த்து டா ஏதாவது பிரச்சனை ஆகப் போகுது" என்று எச்சரித்தான் அவன் நண்பன். அதை சட்டை செய்யாத பிரபாகர் தன் உடையை மாற்றிக் கொண்டு, தீர்ந்து போன பாடி ஸ்ப்ரேயின் கழுத்தைப் பிடித்து தலைகீழாக குலுக்கி ஒரு அழுத்து அழுத்த அது திக்கு வாய் பையன் போல கொஞ்சம் நறுமணத்தை உமிழ்ந்தது."டேய் அவ என்னை விட கருப்பு டா எப்படிறா நீ அவள லவ் பண்ணுற ?" என்று அவனிடம் கேட்க, பிரபாகர் அதற்கு  முறைத்துக் கொண்டே பதில் சொல்லாமல் படி வழியே கீழிறங்கினான். தடியனும் அவன் கூட இறங்கினான்.

இருவரும் வீட்டு வாசலில் வந்து எதிர் எதிரே நின்றுக் கொண்டனர். பிரபாகர்,"டேய்! அவ இந்த தெருவிற்குள் நுழையும் போது எனக்கு சிக்னல் கொடு " என்று தடியனிடம் சொல்ல, தடியன்" அது சரி 
அவ போனதுக்கப்புறம் எனக்கு காளான் வாங்கித் தருவியா? " என்று அவனிடம் கேட்டான்."டேய் தின்றதிலேயே இருடா! கம்யூட்டர் கிளாஸ் கட் பண்ணி வரும் வழியில் தானே உனக்கு டீ,பப்ஸ் வாங்கித் தந்தேன்.. ஒழுங்கா அவ வர்றாளான்னு பாருடா" என்றான் பிரபாகரன்.

அவன் பேசி முடிக்கும் பொழுதே தெரு முனையில் அவள் நடந்து வருவது தடியனுக்குத் தெரிந்தது. வெளிர் நீல நிற சுடிதாரில், நீர் தொட்டியில் நனைத்து எடுத்த வாடாமல்லி மலர் போல், முகம் கழுவி மெலிதாக பவுடர் போட்டிருந்தாள். தலை படிய சீவி ஒற்றை சடைப் பின்னல் இட்டிருந்தாள் அவள் கூந்தல் அடர்த்தியாக மிக நீளமாக இருந்தது, அதைப் பார்த்து தான் பிரபாகர் அவள் பின்னாடியே ஒரு மாதமாக ஃபாலோ பண்ணிக் கொண்டிருந்தான் . தடியன் அப்படி என்னதான் இவள் கிட்ட இருக்கு என்று யோசித்துக் கொண்டே அவனுக்கு சிக்னல் கொடுக்க வேண்டியதை மறந்தான்.

தடியனின் முகம் திரு திருவென முழித்துக் கொன்டிருப்பதை பார்த்த பிரபாகர்," டேய் சொல்லுடா! அவள் வந்துட்டாளா டா , நான் திரும்பிப் பார்க்கட்டுமா?" என்றான். பிரபாகர் திரும்புவதற்கு அவசியமே இல்லை அவன் தடியனிடம் அவளைப் பற்றிக் கேட்கும் பொழுது சரியாக அவன் அருகில் சென்றுக் கொண்டிருந்தாள். அவன் பேசியது அவளுக்கு கேட்டிருக்க வேண்டும், பிரபாகர் "அவ வந்துட்டாளா" என்று கேட்கும் பொழுது தன்னைத் தான் தன் சீனியர் கேட்கின்றான் என்று ஸ்தம்பித்து அவன் அருகிலேயே நின்றாள்.

திடீர் என தன் கண் முன்னே நிற்கும் சுதாவைக் கண்ட பிரபாகர் செய்வதறியாமல் திகைத்தான் தடியன் மீது இருந்த கோபம் தலைக்கேறியது "ஒரு பாணி பூரிக்காக தன் திட்டத்தை கவிழ்த்துவிட்டானே" என்று மனம் குமுறியது. அதே சமயம் தன்னை ஒரு மாதமாக ஃபாலோ பண்ணும் சீனியர் அங்கே நிற்பதை எதிர் பாராமல் பார்த்த சுதாவும் "தன்னைப் பற்றி என்ன பேசுகிறான்?" என்றவாறு பிரபாகரை நோக்க, பிரபாகருக்கு ஒரு யோசனை தோன்றியது, ""ஆஹா இவ்ளோ சிம்பிளா தான் அவளை தொடர்வதை அவளுக்கு உணர்த்திவிட்டோமே" என்று ஒரு திருப்தியும் தெரிந்தது, 'பேசாம நேர அவளை வீட்டிற்கு கூப்பிடலாம்' என்று தோன்றியது அவன் அவளை அழைக்க முனைந்தான்.

அதே இடத்தில் மூன்றவதாக ஒருத்தன் இருந்தானே!! ஆம் அந்த தடியனும் யோசித்துக் கொண்டிருந்தான், "ஆஹா ! இவ வருவதை நாம சொல்லாம விட்டுட்டோமே! அது கூட பரவாயில்லை இவ வேற நாம பேசுறத கேட்டுட்டு நம்மள பத்தி தப்பா நினைச்சுட்டான்னா, அவன் என்னைக் காய்ச்சி எடுப்பானே! அதுக்கப்புறம் உன்னால தான் என் காதலே போச்சுன்னு சாபம் விடுவான், நம்மளையும் கவனிக்க மாட்டான். நண்பனா நாம ஏதாவது ஹெல்ப் பண்ணி இவனைக் காப்பாத்துவோம்" என்று மனதிற்குள் எண்ணிய தடியன், பிரபாகரன் சுதாவிடம் பேசுவதற்கு முன், அவனைக் காப்பாற்றுவதாய் எண்ணிக் கொண்டு தன்னை ஒரு ஜென்டில் மீனைக் காட்டிக் கொள்வதற்காக தன் தொண்டையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அவளிடம்," சிஸ்டர், யு டோன்ட் வொரி ஹீ இஸ் வெயிட்டிங் ஃபார் சம் அதர் , நாட் ஃபார் யூ" என்று அவன் பேசும்பொழுது அவன் கண் முன்னே அந்த ஸ்போக்கன் இங்கிலீஸ் வாத்தியார் தமிழ்செல்வன் வந்து போனார்.

தடியன் சொல்வதைக் கேட்ட இருவருமே அதிர்ச்சி அடைந்தார்கள், நொடிப் பொழுதில் தன்முகத்தை 
மாற்றிக் கொண்டு சுதா அங்கிருந்து விலகி நடந்து சென்றாள். தடியன் முகத்தில் பானிபூரியாய் வெற்றிச் சின்னம் தெரிந்தது, " என்னடா ! பிரபாகர் எப்டி ஆரம்பத்துல சொதப்பினாலும் இப்ப உன்னைக் காப்பத்திட்டேன்ல அவ ஏதும் தப்ப நினைக்க மாட்டாள்" என்றான். பிரபாகரன் தான் கரத்தை முறுக்கிக் கொண்டு தடியனின் வயிற்றிலே ஒரு குத்து வைத்தான், தடியன் வயிற்றைப் பிடித்துக் கொண்டே சரிந்தான். தடியனை அடிப்பதை சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த சுதா என்ன நினைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

நீதி: நண்பன் காதலுக்கு உதவி தான் செய்வான், ஆனால் நீங்கள் அவனைப் புரிந்துக் கொள்ள வேண்டும்- கொஞ்சம் அவனை கவனிக்க வேண்டும்.

அன்று பானிபூரி விலை வெறும் ஐந்து ரூபாய் தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக