சனி, 30 ஜூன், 2012

ஞாபகம் வருகின்றன

ஞாபகம் வருகின்றன 
*******************
ஏனோ 
மெலிதான 
ஒரு பியோனோ இசையில் 
உன் நெருக்கமும் 
பார்வையும்
புன்னகையும்
முத்தமும்
மழையும்
சிறு விரல்களும்

உருக்கமான
ஒரு வயலின் மீட்டலில்
உன் ஆசைகளும்
சமரசங்களும்
காரணங்களும்
ஊடலும்
இறுதித் தழுவலும்

எனக்கு ஞாபகம் வருகின்றன

நிசப்தமும் ஒரு இசை தான்
அப்பொழுது நீயும் என்னை
நினைத்துக் கொண்டிருப்பாய்


அவளில்லாத
தனிமையை வேண்டி
நான் அடைந்திருந்த இலக்கு
"பெருவனத்தின் மையம்".
நிசப்தமும், பேரிரைச்சலுமாய்
மாறும் நொடிகளில்
எந்த வேறுபாடுகளையும்
அறியத் தெரியா வஸ்துவை
நுகர்ந்திருந்தேன்.

சில்-வண்டுகளின்
ரீங்காரங்கள் அதுவரை
கேட்ட சிம்பொனிகளை
மறக்கடித்தது.
சுனை வழியே புரளும்
நீர்க் கோர்வை புரட்டும்
சிறு கற்களின் ஓசையில்
நான் பேசி வந்த
மொழியை மறந்தேன்.

சில நேரம் மீன்களோடும்,
சில நேரம் பறவைகளோடும்
என் பொழுதுகள் கரைந்தன.
மழையிலும், பனியிலும்
வெயிலிலும் என்னை தோய்த்து
எடுத்து என்னை மனித
இனத்திலிருந்து பரிணமித்துக்
கொள்ள முனைந்திருந்தேன்.

சில நேரம் நான் கனிகளையும்
சில நேரம் கனிகள் என்னையும்
தின்று கொண்டிருந்தோம்.
புற்களில் படுத்துறங்கும்
என் உடலிலும் பச்சையங்கள்
ஒட்டிக் கொண்டன.

இப்போது நான் வனத்தின்
மையத்தில் இல்லை,
வனம் என் மையத்தில்
இருந்தது - பூரணமாய்
நான் பெருவனமான
பொழுதில்,
யாரோ ஒருவன்
வனத்தை அழித்து
கான்க்ரீட் சமாதி செய்ய
ஆயுதங்களுடன் நுழைந்தான்.





—  Painting by Harry Wishard:.

ஞாயிறு, 24 ஜூன், 2012

கவிதை கதம்பம்



என் வெற்றுக் காதலைக் கொண்டு 
உருவகம் தொலைந்து போன
கவிதை படைத்து,
                    உண்டு,
                 செறித்து,
          வீசியெறிந்த, என் மொழிச் சேறு
யாரோ ஒருவனின் காதலிலும் 
படிந்திருந்தது 


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


காதலென்ற வேதியல்   
சமன்பாட்டில் மறைந்திருக்கும் 
உப்பு - காமம்



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்பு என் கனவுகளில் 
மொத்தமாய் குடியிருந்த அவள்,
இப்போதெல்லாம் நிமிடங்களில் 
தேய்ந்து விடுகிறாள் - ஆனாலும்
நொடிகளில் கரைந்துவிடும் அவளைத் 
தொடர்ந்திட யாருமில்லை.

அவள் மறைகின்ற 
ஒரு சூட்சும கணத்தில் தான் 
நான் பூரணமான சூன்யத்தில் 
கால் கொள்கிறேன்.
அவள் கரைந்து கொண்டே 
இருக்கட்டும் .....




-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுகளற்ற 
தனிமை வனத்தை 
உன் மிருகம் மட்டுமே 
ஆள முடியும்.


சமூகம் உனக்கு கொடுத்த 
உன் பண்பு,
         மதிப்பு,
         மதம்,
         அறிவு,
         அன்பு,
         காதல் 
என்பனவெல்லாம் அம்மிருகத்தின் 
கால் நகங்களில் படிந்திருக்கும் 



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உணர்வன்றி
வேறு ஆடை புணையா
ஏதுமற்ற எல்லாம்தான் காமம் 


 அதைச் சடங்காக்கி,
                காதலாக்கி,
            சித்திரமாக்கி,
         கவிதையாக்கி,
              புனிதமாக்கி,
  போர்வை போர்த்தி ஒழுக்கம் கற்பித்த உலகம் 

பின்னர் தன் அறிவைக் கொண்டு 
அதன் மூலம் தேடும் போதெல்லாம் 
பாறையில் முட்டிச் சாகும் 
மனித வரலாறு 
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
    




----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------                       
                              
உடலுக்கும் எனக்கும் 
உண்டான பௌதீக வேற்றுமைகளை 
சொல்லிட முயலும் போதெல்லாம் 
தோற்றே போகின்றேன் !!

அவை மொழியைக் 
கடந்த நிசப்தக் 
கூட்டினுள் மட்டுமே 
புலனாகின்றன 








----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவள் முறையாகப் பயின்றாளா?
"தெரியவில்லை ",
ஆனால் அவள் கோர்த்ததும் , 
வாசிப்பதும் எனக்கான ராகம்.

அவள் மீட்டி வரும் செல்லோ 
தந்தியின் தடம், 
என் முதுகுத் தண்டில் தெரிகிறது.
நான்கு டைட்டானியத் தந்திகளைக் 
கொண்டு என் மூளையை 
கட்டுக்குள் வைத்து விட்டாள். 

இறங்கி ஏறும் மீட்டல்கள் 
சப்தங்களால் என்னைப் 
புணர்ந்து முடிக்கும் வேளையில் 
முற்று பெற்ற இசைக்கு 
கரம் தட்டும் ஒலிகள் கூட
கேட்க இயலாமல் நான் 

நான் செவிடென்பதை 
மறக்க வைத்துவிடக் 
காரணம் யார் 
அவளா அவள் செல்லோவா?...


  


புதன், 20 ஜூன், 2012

புதிய நீதிக் கதைகள் - 2 /பானிபூரி




பிரபாகர் நெஞ்சம் படபடவென அடித்தது, "டேய் தடியா!! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?, அவ டெய்லி நம்ம தெருவிற்கு வாராடா, அவளோட கிளாஸ் மேட் வீடு இங்க இருந்து மூணு வீடு தள்ளி தான் இருக்கு, ரெண்டு பெரும் கம்பைன் ஸ்டடி பண்றாங்கன்னு நினைக்கிறேன் " என்று மூச்சு விடாமல் தன் வீட்டிற்குள் நுழையும் நண்பனிடம் அந்த சங்கதியை சொன்னான். "அப்போ இன்னைக்கு அவள பார்க்கப் போறியா? " என்று அவன் நண்பன் கேட்க, அதற்கு பிரபாகர் "எஸ்! அவள பார்க்கப் போறேன், நம்ம வீட்டிற்கு கூப்பிடப் போறேன்" என்றான்.

"டேய்!! பார்த்து டா ஏதாவது பிரச்சனை ஆகப் போகுது" என்று எச்சரித்தான் அவன் நண்பன். அதை சட்டை செய்யாத பிரபாகர் தன் உடையை மாற்றிக் கொண்டு, தீர்ந்து போன பாடி ஸ்ப்ரேயின் கழுத்தைப் பிடித்து தலைகீழாக குலுக்கி ஒரு அழுத்து அழுத்த அது திக்கு வாய் பையன் போல கொஞ்சம் நறுமணத்தை உமிழ்ந்தது."டேய் அவ என்னை விட கருப்பு டா எப்படிறா நீ அவள லவ் பண்ணுற ?" என்று அவனிடம் கேட்க, பிரபாகர் அதற்கு  முறைத்துக் கொண்டே பதில் சொல்லாமல் படி வழியே கீழிறங்கினான். தடியனும் அவன் கூட இறங்கினான்.

இருவரும் வீட்டு வாசலில் வந்து எதிர் எதிரே நின்றுக் கொண்டனர். பிரபாகர்,"டேய்! அவ இந்த தெருவிற்குள் நுழையும் போது எனக்கு சிக்னல் கொடு " என்று தடியனிடம் சொல்ல, தடியன்" அது சரி 
அவ போனதுக்கப்புறம் எனக்கு காளான் வாங்கித் தருவியா? " என்று அவனிடம் கேட்டான்."டேய் தின்றதிலேயே இருடா! கம்யூட்டர் கிளாஸ் கட் பண்ணி வரும் வழியில் தானே உனக்கு டீ,பப்ஸ் வாங்கித் தந்தேன்.. ஒழுங்கா அவ வர்றாளான்னு பாருடா" என்றான் பிரபாகரன்.

அவன் பேசி முடிக்கும் பொழுதே தெரு முனையில் அவள் நடந்து வருவது தடியனுக்குத் தெரிந்தது. வெளிர் நீல நிற சுடிதாரில், நீர் தொட்டியில் நனைத்து எடுத்த வாடாமல்லி மலர் போல், முகம் கழுவி மெலிதாக பவுடர் போட்டிருந்தாள். தலை படிய சீவி ஒற்றை சடைப் பின்னல் இட்டிருந்தாள் அவள் கூந்தல் அடர்த்தியாக மிக நீளமாக இருந்தது, அதைப் பார்த்து தான் பிரபாகர் அவள் பின்னாடியே ஒரு மாதமாக ஃபாலோ பண்ணிக் கொண்டிருந்தான் . தடியன் அப்படி என்னதான் இவள் கிட்ட இருக்கு என்று யோசித்துக் கொண்டே அவனுக்கு சிக்னல் கொடுக்க வேண்டியதை மறந்தான்.

தடியனின் முகம் திரு திருவென முழித்துக் கொன்டிருப்பதை பார்த்த பிரபாகர்," டேய் சொல்லுடா! அவள் வந்துட்டாளா டா , நான் திரும்பிப் பார்க்கட்டுமா?" என்றான். பிரபாகர் திரும்புவதற்கு அவசியமே இல்லை அவன் தடியனிடம் அவளைப் பற்றிக் கேட்கும் பொழுது சரியாக அவன் அருகில் சென்றுக் கொண்டிருந்தாள். அவன் பேசியது அவளுக்கு கேட்டிருக்க வேண்டும், பிரபாகர் "அவ வந்துட்டாளா" என்று கேட்கும் பொழுது தன்னைத் தான் தன் சீனியர் கேட்கின்றான் என்று ஸ்தம்பித்து அவன் அருகிலேயே நின்றாள்.

திடீர் என தன் கண் முன்னே நிற்கும் சுதாவைக் கண்ட பிரபாகர் செய்வதறியாமல் திகைத்தான் தடியன் மீது இருந்த கோபம் தலைக்கேறியது "ஒரு பாணி பூரிக்காக தன் திட்டத்தை கவிழ்த்துவிட்டானே" என்று மனம் குமுறியது. அதே சமயம் தன்னை ஒரு மாதமாக ஃபாலோ பண்ணும் சீனியர் அங்கே நிற்பதை எதிர் பாராமல் பார்த்த சுதாவும் "தன்னைப் பற்றி என்ன பேசுகிறான்?" என்றவாறு பிரபாகரை நோக்க, பிரபாகருக்கு ஒரு யோசனை தோன்றியது, ""ஆஹா இவ்ளோ சிம்பிளா தான் அவளை தொடர்வதை அவளுக்கு உணர்த்திவிட்டோமே" என்று ஒரு திருப்தியும் தெரிந்தது, 'பேசாம நேர அவளை வீட்டிற்கு கூப்பிடலாம்' என்று தோன்றியது அவன் அவளை அழைக்க முனைந்தான்.

அதே இடத்தில் மூன்றவதாக ஒருத்தன் இருந்தானே!! ஆம் அந்த தடியனும் யோசித்துக் கொண்டிருந்தான், "ஆஹா ! இவ வருவதை நாம சொல்லாம விட்டுட்டோமே! அது கூட பரவாயில்லை இவ வேற நாம பேசுறத கேட்டுட்டு நம்மள பத்தி தப்பா நினைச்சுட்டான்னா, அவன் என்னைக் காய்ச்சி எடுப்பானே! அதுக்கப்புறம் உன்னால தான் என் காதலே போச்சுன்னு சாபம் விடுவான், நம்மளையும் கவனிக்க மாட்டான். நண்பனா நாம ஏதாவது ஹெல்ப் பண்ணி இவனைக் காப்பாத்துவோம்" என்று மனதிற்குள் எண்ணிய தடியன், பிரபாகரன் சுதாவிடம் பேசுவதற்கு முன், அவனைக் காப்பாற்றுவதாய் எண்ணிக் கொண்டு தன்னை ஒரு ஜென்டில் மீனைக் காட்டிக் கொள்வதற்காக தன் தொண்டையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அவளிடம்," சிஸ்டர், யு டோன்ட் வொரி ஹீ இஸ் வெயிட்டிங் ஃபார் சம் அதர் , நாட் ஃபார் யூ" என்று அவன் பேசும்பொழுது அவன் கண் முன்னே அந்த ஸ்போக்கன் இங்கிலீஸ் வாத்தியார் தமிழ்செல்வன் வந்து போனார்.

தடியன் சொல்வதைக் கேட்ட இருவருமே அதிர்ச்சி அடைந்தார்கள், நொடிப் பொழுதில் தன்முகத்தை 
மாற்றிக் கொண்டு சுதா அங்கிருந்து விலகி நடந்து சென்றாள். தடியன் முகத்தில் பானிபூரியாய் வெற்றிச் சின்னம் தெரிந்தது, " என்னடா ! பிரபாகர் எப்டி ஆரம்பத்துல சொதப்பினாலும் இப்ப உன்னைக் காப்பத்திட்டேன்ல அவ ஏதும் தப்ப நினைக்க மாட்டாள்" என்றான். பிரபாகரன் தான் கரத்தை முறுக்கிக் கொண்டு தடியனின் வயிற்றிலே ஒரு குத்து வைத்தான், தடியன் வயிற்றைப் பிடித்துக் கொண்டே சரிந்தான். தடியனை அடிப்பதை சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த சுதா என்ன நினைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

நீதி: நண்பன் காதலுக்கு உதவி தான் செய்வான், ஆனால் நீங்கள் அவனைப் புரிந்துக் கொள்ள வேண்டும்- கொஞ்சம் அவனை கவனிக்க வேண்டும்.

அன்று பானிபூரி விலை வெறும் ஐந்து ரூபாய் தான். 

செவ்வாய், 19 ஜூன், 2012

சொக்கத் தங்கம்


  தங்கம் - உலகம் முழுமைக்கும் தேடித் தேடி சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு உலோகம். அது சமூகம், நாடு, குடும்பம், தனி மனிதன் என எல்லா அமைப்புகளிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 18ஆம்  நூற்றாண்டு வரை இந்தியாவின் சிக்கலற்ற பொருளாதார வாழ்விற்கு தங்கம் தான் காரணமாக இருந்து வந்தது. ஏன் இன்று வரை ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவுகளிலும், மந்தத்திலும் கூட நம்மை மீண்டும் எழ வைக்க இருக்கும் மிகப் பெரிய நம்பிக்கை நம் வீட்டு குடும்பப் பெண்களின் கைகளிலும் , கழுத்திலும் இருக்கிறது. ஏழையோ, பணக்காரனோ தங்கத்தை விரும்பாதோர் யாரும் இலர்.தங்கம் நமது பண்டையக் காப்பீட்டுப்(இன்சூரன்ஸ்) பொருளாய் இன்றும் திகழ்கிறது. நம் தங்கத்தை அகபரிக்கத் தான் பல்வேறு நாடுகளில் இருந்து படையெடுப்புகள் நடந்தன, இருப்புப் பாதைகள் வந்தன. 

இன்றும் கூட உலகத்திலேயே நம் நாடு தான் மிகப் பெரிய அளவில் தங்கத்தை நுகர்வு செய்யும் சந்தையைக் கொண்டுள்ளது. இது ஒன்றும் அரசின் திட்டங்களின் மூலம் உருவாகிய சந்தை அல்ல, நமது கலாச்சாரத்தில் ஊறிய சேமிக்கும் பண்பின் வெளிப்பாடு தான் இது.
 முன்பெல்லாம் பொருளாதாரத்தில் கடை நிலையில் ருப்பவர்கள் கூட தங்கத்தை சேமிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள், குண்டுமணி அளவிலாவது சேர்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். என்றும் மதிப்பு குறையா தங்கம் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அசூர வேகத்தில் நடுத்தர மக்களுக்கே எட்டாக் கனியாக மாறி வரும் தங்க ரகசியத்தை பற்றி கொஞ்சம் அலசுவோம்.

1991 வாக்கில் இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த பொழுது, தனது அயல்நாட்டு வர்த்தக பாக்கியை செலுத்தமுடியாமல் 67000 கிலோ தங்கத்தை அடகு வைத்தது. அன்று நம் நாட்டின் மதிப்பு மீது எத்தகைய அளவு குறைந்திருக்கும்? ஆனால் உண்மை நிலைமையோ வேறு கடந்த ஆண்டு நமது நாடு இறக்குமதி செய்த தங்கத்தின் மதிப்பு என்ன தெரியுமா? 615 கோடி அமெரிக்க டாலர்கள். சில ஆண்டுகளுக்கு முன் உலகமே ஸ்தம்பித்த பொருளாதார மந்தத்தில் கூட இந்தியா எளிதாக மீண்டு வரமுடிந்தமை எப்படி? நமது சேமிக்கும் பண்பு இன்னும் நம்மிடம் பலப்பட்டிருப்பதே.

ஆனால் நம் நாட்டில் தங்கம் இப்பொழுது எல்லோராலும் வாங்க முடிகிறதா என்ற கேள்விக்கு பதில் தேடும் அவசியம் இல்லை. இதற்கு என்ன காரணம் இது வெறும் சந்தைப் பொருளாதாரத்தின் விளைவு தானா? அப்படியென்றால் சந்தையில் நாம் ஒரு பொருளை அதிக அளவு நுகர்வு செய்யும் பொழுது அதன் மதிப்பு உயரும் என்பது எல்லாரும் அறிந்ததே அதனால் தான் நாம் தங்கத்தை நுகர்வு செய்கிறோம். ஆனால் அந்த விலை உயர்வு நியாமான முறையில் இருக்கின்றதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

தங்கத்தின் மதிப்பு உயரப் பல காரணங்களைச் சொல்லலாம், சர்வேதச அளவில் gold pool எனப்படும் அமைப்பில் தினமும் நடைபெறும் தங்கவர்த்தகத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப் படுகிறது,
ஆனால் அங்கு வெறும் சந்தை பரிவர்த்தனை மட்டும் தங்க விலையினை நிர்ணயம செய்து விடுவதில்லை. அது பெரும்பாலும் கம்மாடிட்டி ட்ரேடிங் எனப்படும் ஆன்லைன் சரக்கு வர்த்தகம் தான் தீர்மானிக்கிறது, இதில் தங்கத்தை கண்ணால் பார்க்கும் அவசியம் கூட கிடையாது அதுவும் தங்கத்திற்கான தொகையில் ஐந்து அல்லது பத்தில் ஒரு பகுதி கட்டினால் போதும் நாம் வாங்கிவிடலாம் வாங்கிய மறுநிமிடமே அதை சொற்ப லாபத்தில் விற்று விடலாம். ஆனால் வீட்டு உண்டியலிலும், சமையலறை டப்பாக்களிலும் பல நாட்களாக சேமிக்கப் படும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கிக் கொண்டிருந்த நடுத்தர குடும்பங்களுக்கு இன்று எட்ட முடியா உயரத்தில் சென்றுக் கொண்டிருப்பது எவ்வளவு கொடுமை?

உண்மையில் சேமிக்கும் பண்பைக் கொண்ட நமது கலாசாரத்தில் தங்கம் மகாலட்சுமியாக, ஒரு புனிதப் பொருளாக வாங்கப் படுகிறது. சில இடங்களில்  - தங்கம் சில வினாடிகளில் பணம் ஈட்டித் தரும் அற்பப் பொருளாக சில ஆன்லைன் வணிகர்களுக்கு பயன்படுகிறது. ஆனால் இன்றைய அரசும், தங்க நகை விற்கும் நிறுவனங்களும் யாருக்கு சாதகமாய் நடந்து கொள்கின்றன என்று பார்த்தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது .

இந்த பட்ஜெட்டில் மரியாதைக்குரிய பிரணாப் அவர்கள் விதித்த சில திருத்தங்கள் என்னவென்றால் தங்கம் இறக்குமதி செய்யவும், இரண்டு மடங்கு கலால் வரி செலுத்த வேண்டும் என்பதும், இரண்டு லட்சத்திற்கு மேல் ரொக்கத் தொகை கொடுத்து நகை வாங்கும் ஒருவரின் நிரந்தர வரி கணக்கு என்னை சமர்பித்து அதில் ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்றும், அன்பிராண்டட்(unbranded) நகைகளுக்கும் வரி விதிக்கப் பட்டது. 

 இந்த விதி கொண்டு வந்ததற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் 
1 . நம் அரசின் வணிகப் பற்றாக்குறை (trade deficit ) பெரும்பாலும் தங்கம் , கச்சா எண்ணை ஆகியவற்றை சார்ந்து தான் இருக்கும். அதனால் இறக்குமதியை குறைக்கும் திட்டங்கள் அரசிற்கு தேவைப் பட்டது 
2 . நம் நாட்டில் கருப்பு பணத்தை பெரும்பாலும் தங்கமாக மாற்றி பதுக்கும் வழக்கம் உள்ளதால், அதை மேற்பார்வை செய்ய ஒரு நிரந்தரத் தீர்வு தேவைப்பட்டது.

இதற்காக மேலே சொன்னவாறு சில விதிகளை வித்திட்ட மத்திய அரசு வரலாற்றிலேயே ஆச்சரியப்படும் வகையில் பட்ஜெட் முடிந்த ஒரு மாதத்திற்குள் இந்த விதி அமலுக்குள் வராமல் மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது . இத்தனைக்கும் அரசிற்கு இந்த முடிவால் 600 கோடி வரை வருமான இழப்பு ஏற்படும். எதனால் பின் வாங்கியது நம் அரசு ?? 

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம், விதைகள் திருத்த சட்டம், பல பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றல், எல்லாவற்றிற்கும் மேலாக பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை தனியார் கையில் ஒப்படைத்தல் போன்ற விசயங்களில் பொது மக்களிடமோ அல்லது மற்ற எதிர் கட்சிகள், தொண்டு நிறுவனங்களுடன் என்று யாருடைய எதிர்ப்பையும் , போராட்டங்களையும் புறந்தள்ளிவிட்டு தன் முடிவில் மிகக் கடுமையுடனும், அக்கறையுடனும் இருக்கும் நடுவன் அரசு நகைக் கடை உரிமையாளர்களின் போராட்டத்திற்கு மட்டும் உடனடியாக செவி சாய்த்தது ஏனோ?? வியாபாரிகள் கூறிய காரணமான தங்கம் வாங்கும் சிறு நுகர்வோர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள் என்று சொல்லும் வாதம் ஏற்புடையதா ?

இப்பொழுது ஏற்றப்பட்ட கலால் வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு விட, நகைக் கடையில் ரொக்கம் கொடுத்து வாங்கும் நகைகளுக்கு விதிக்கப்படும் TDS எனும் முறைக்கான வரம்பு இரண்டு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை உயர்த்தப் பட்டுள்ளது. உண்மையில் இது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் செயலா ?அல்லது கறுப்புப் பண ஆதிக்கத்தை பாதுகாக்கும் செயலா ? என்று நமக்குப் புரிவதில்லை.

அப்படி தங்க விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த முயலும் அரசுஎன்றால் முதலில் என்ன செய்யவேண்டும் ? ஆன்லைனில் தங்க வணிகப் பரிவர்த்தனைகளை அல்லவா முடக்கிய இருக்க வேண்டும்? மாறாக அரசிற்கு நஷ்டம் தரும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டிருப்பது கருப்பு பணம் ஒழிப்பதில் அரசிற்கு முழு அக்கறையும் இல்லை என்று தானே காட்டுகிறது.

பெட்ரோலில் விலையேற்றத்திலோ, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் எந்த அளவிற்கு மக்கள் விரோத கொள்கையைக் கடைபிடித்த இந்த அரசு, இதில் மட்டும் பொது மக்களின் நலன் கருதி குறைக்கப் பட்டது என்று சொல்வது கேலிக்கூத்து அல்லவா ? "என் தங்கம், என் உரிமை" என நமது கலாசாரத்தை முதலீடு செய்து நகைகளில் ஏய்ப்பு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு புறம், தங்கத்தை ஒரு சூது விளையாட்டுப் பகடையாக நிமிடங்களில் வாங்கி விற்கும் வியாபாரிகள் ஒரு புறம் , கருப்பு பணத்தை முடக்கும் கோடீஸ்வரர்கள் ஒரு புறம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் அரசு ஒரு புறம் என்று சூழ்ந்திருக்க, இவர்களுக்கு மத்தியில் தன் மகளுக்கோ, தங்கைக்கோ சேர்க்கும் தங்கத்திற்க்காக ஒவ்வொரு சராசரி மனிதனும் தன் வாழ்நாளின் பாதி சந்தோசங்களை துறந்து விடுகிறான். பொது மக்கள் நலன் மீது அக்கறை கொள்ளாத அரசு தனது ஆட்சியைப் பொற்காலம்  என்று பறை சாற்றிக் கொள்ளட்டும்.

சனி, 16 ஜூன், 2012

நகரவாசி !!

பணம் என்ற அச்சிலே சுழன்று கொண்டிருக்கும் என் வாழ்க்கை சக்கரத்தில் இருந்து அழகிய உலகிற்குள் அவ்வப்பொழுது வெளிவருவது இப்படித்தான்.

இயற்கை தன் இருத்தலில் எந்த மாற்றமும் கொள்ளவில்லை, அடங்குவதும், சீறுவதும், கொதிப்பதும்,சலனமற்று வெவ்வேறு காலநிலையில் இருப்பதும் அதன் இருத்தலே, நமக்கு தான் இவை மாற்றமாய் புலனாகிறது. சில நேரம் அவதியுறுகிறோம் , பல நேரம் அதன் இருத்தலை மறந்து விடுகிறோம், சில நேரம் நாம் அதை தரிசிக்கிறோம், மெய் மறக்கிறோம், கவி படிக்கிறோம், பாடுகிறோம் ,அதனுடன் எப்போதாவது மட்டுமே கலக்கிறோம்.

சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் அதன் தீவிரத்தை குறைக்காமல் இருந்து வந்தது ,நேற்று மாலை என் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது என் கைகளில் வழிந்துக் கொண்டிருக்கும் வியர்வைத் துளி என் வாகனத்தை நிறுத்தச் சொல்லியது. என் இடது கரம் மீது ஓடும் ஒரு வியர்வைத் துளியில் பிம்பமாய்த் தெரியும் ஓவியம் கண்டேன், கூட்டமாக தன்னை மறைத்த முகிலைக் கரைத்துக் கொண்டு புவியைப் பார்த்துக் கொண்டிருந்தது பரிதி. பரிதி மீது எனக்கு இருந்த வெறுப்பெல்லாம் நேற்று மாலை நான் கண்ட வானோவியத்தைப் பார்க்கும் பொழுது மறந்துவிட, என் மனம் புத்துணர்வு அடைந்தது. 

சில மாதங்களாக நித்தமும் சபித்துக் கொண்டிருந்த சுட்டெரித்த வெயில், நேற்று எனக்கு ஓவியமாய் காட்சியளித்தது. சூரியன் மேகம் சூழ்ந்திருந்த நகரத்தை மாலையிலும் தண்டித்திட முயன்று கொண்டிருந்தான், மேகக் கூட்டங்களைக் கரைத்துக் கொண்டிருந்தான். தன்னை விலக்கும் பரிதியின் கரம் ஒடுக்க இன்னும் சில முகிலினங்கள் சேர்ந்து கொண்டன. ரசிப்பதற்கு எதுவாய் கொஞ்சம் கடல் காற்றும் வீசி என்னை மகிழ்வித்தது. ஐந்து நிமிடங்களுக்குள் மறைந்து, ஒன்று சேர்ந்து, மரணித்துக் கொண்டிருந்த முகில்கள் எனக்கு மொழி பிறப்பதற்கும் முந்திய தெய்வச் செய்தி ஒன்றை உணர்த்தின. தன்னை முழுவதுமாக மறைத்த முகிலின் இடையைப் பற்றிஅக்குள் வெளியே வெளி வந்த கதிரவன் எனக்கு கடவுளாய் காட்சி அளித்தான், இப்பொழுது அவனிடம் ஆடை இல்லை. அது வரை நம்மை சுட்டெரித்தவன் மேல் என்னால் கோபம் கொள்ள முடியவில்லை. (மரம் வெட்டி, மண் திருடி, ஆற்றை மாசு படுத்தி உன்னை அழைத்தது நாங்கள் தானே ! !)

இன்னும் சற்றைக்கெல்லாம் மேகக் கூட்டங்கள் நிர்மூலமாக்கப் படும் என்று தோன்றியதால் என் கைப்பேசி மின்துகளியை எடுத்தேன். நான் படம் எடுக்க முயன்றதை அறிந்த பரிதியோ அங்கு கலைந்து கொண்டிருந்த ஒரு மேகக்காரியின் கூந்தலுக்குள் தன் தலையை விட்டுக் கொண்டு புன்னகைத்தான் மாபாவி - கொடூரன், நானோ அதையும் அழகு என்று படம் பிடித்தேன். 

மாலை நேரத்து மயக்கம் , அதுவும் வெப்பமான மயக்கம். என்னுடன் சேர்ந்து மேற்குலகை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பறவை ஒன்று ஏதோ ஒன்று என்னிடம் சொல்ல விளைந்தது. எனக்குத் தெரியும் அது அநேகமாக ஒரு கவிதை தான் என்று, ஆனால் அங்கே எதிர்பாரா வண்ணம் அருகில் சென்ற பேருந்தின் ஒலிப்பான் என் புறச் செவியை பிளந்து அகச்செவியை செவிடாக்கியது. அதன் பின்னர் பறவை "க்ரீ" என்று பழைய குரலில் கத்திக் கொண்டே பறந்தது தான் ஞாபகம் இருக்கிறது.

அந்தி சாய்ந்தது, இரவெல்லாம் நீங்காத அக்காட்சி என் மனதில் ஒரு விஷயம் சொன்னது ,அது ஒரு வசந்தக் காலத்தின் அறிகுறி என்று. அன்றைய நித்திரையிலும் என் கணங்களில் மேகம் கூடிக் குலாவிக் கொண்டே இருந்தது, காலை விழித்தேன் - வழக்கம் போல் தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து,மழையின்றி வறண்டு போன ஆழ்குழாய் கிணற்றின் மடுவை உறிஞ்சும் இயந்திரம் கொண்டு கரக்கலானேன். மீண்டும் என் இடக் கரத்தில் ஒரு துளி நீர், இது வியர்வை அல்ல புது நீர், மழை நீர்.... மழையைக் கொண்டாடவேண்டும்.

மழையைக் கொண்டாட நான் சக்கர பாகப் பறவை கிடையாது, வானம் பார்க்கும் பூமி கொண்ட அல்லது கரிசல் மண் உழவனோ கிடையாது, விடுமுறையை நோக்கும் சிறுவன் கிடையாது, கிட்டங்கியை நிரப்பும் திட்டம் கொண்ட அருசும் கிடையாது .. நான் ஒரு சாதாரண நகரவாசி !!!! இயற்கையினுள் என் அங்கமும் இருக்கின்றதை உணர்ந்த சந்தோச நகரவாசி !!

செவ்வாய், 12 ஜூன், 2012

கரைதல்


நித்தமும் துடித்திடுமாறு
சபிக்கப்பட்ட மனம்
காயங்களால்
கட்டப்பட்டிருக்க,
அதிகாரத் திமிரில்
ஆணவ மூளையோ
ஆசை காட்டியே
ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

மூளைக்கும் மனதிற்கும்
மையமான சூன்யத்தை
அகாலக் குழியிலிருந்து
மீட்டெடுக்க,
காமம் முனைந்திடுமுன்னே
மதம் தன்
கோட்பாட்டுக் கத்தியில்
அறுத்தெறிந்தது.

அறியாமையைப் புலர
வைக்கும் ஞானப் பரிதியோ!
காதலென்ற மயக்கத்தில்
உளறுகின்றது.
தளைகளை உடைத்தெறிய
தேவைப் படும் ஒரு கணம்
ஒவ்வொன்றாய் மடிந்து
போகின்றன..

வாழ்க்கை நதியில்
நீந்திக் கொண்டிருக்கும் நான்
மரணச் சாகரத்தில்
சங்கமிக்கும் முன்னர்
உள்ளீடற்ற மூங்கில் ஆவேனா ?
எந்தப் பக்கம் வீசும்
காற்றிலும் இசையாய்
பரிணமித்துக் கடலில்
கரைவேனா ??
 
 

வெள்ளி, 1 ஜூன், 2012

வாழ்தல் இனிது -Aathmarthi's Blog

வாழ்தல் இனிது, 



பதினான்கு தலைப்புகளில் ஒரே கட்டுரையில் ஒருவன் எழுத வேண்டும் என்றால் ஒருமுறை , இரண்டுமுறை முயற்சிக்கலாம் . ஆனால் இதுவே ஒரு தொடராக  எழுதுகிறான் என்றால்,  அவருடைய வாழ்நாளில் ஏதாவது சிறப்பு கால நீட்டிப்பு என்று கடவுளிடம் வரம் கிடைத்திருக்குமா என்று தோன்றுகிறது.(சுஜாதாவிடம் இப்படி கேட்டதற்கு அவர் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார் என்று ஒருமுறை வாசித்திருக்கிறேன்)


தலையங்கம் , தத்துவம் ,கேள்வி, கவிதை , வலைபூ , இணையம், புத்தகம் , சினிமா, கவிதை, காதல் இது எல்லாவற்றோடு ஒரு குறுங்கதை என வண்ண வண்ண பூக்கள் இருக்கும் மலர்ச் செண்டு போல் அல்லது பலவகைப் பதார்த்தங்களோடு  படைக்கப்பட்ட தாளி மீல்ஸ் போல ஒரு அனுபவம் இதில் .

வாழ்தல் இனிது, அதனினும் இனிது.."வாழ்தல் இனிது" "ஆல் இஸ் வெல்" போன்ற ஒரு மந்திர வார்த்தையாய் எனக்குத் தோன்றுகிறது.

முக்கியமாக பல படைப்பாளிகளை இவர் அறிமுகம் செய்து வைக்கும் பாங்கு, மிக மிக பாராட்டவேண்டிய ஒன்று. அவர் தன் பதிவுகளில் ,முக்கியமான படைப்பாளிகளை மற்றும் அயல் தேசத்து படைப்பாளிகளை மட்டுமல்லாமல் சீரியசாய் இயங்கிக் கொண்டிருக்கும் சில வலைப்பூ  எழுத்தர்களைக் கூட அறிமுகப் படுத்துகிறார். மிகவும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் அவருடைய மொழி புதிய சொல்லாடல்கள், சுவாரஸ்யமாக சொல்லுதல், தேவையான அளவு ஹாஸ்யத்தை எப்பொழுதும் தன் சமையலில் தூவுதல் போன்றன இவர் தனிச் சிறப்பாய் நான் கருதுபவை.

இந்த பதிவுகளை கோர்ப்பதற்கு அவர் கொணரும் பூக்கள் எத்தனித் தோட்டத்தில் மலர்ந்திருக்க வேண்டும்? இவரும் அதைப் பறிக்கா எங்கெல்லாம் தேடி அலைந்துக் கொண்டிருக்கவேண்டும். தேடல் மட்டும் தானே நம் வாழ்தலை வெறும் இருத்தலுக்கும் மேலானதாக செய்யும் செயல் ? 

அவரது முதல் தொகுப்பான அதனினும் இனிது பெற்ற வெற்றியைப் போல் அதன் மெருகூட்டிய வடிவம் இன்னும் பல வெற்றிகளைப் பெற்று வாசிக்கும் பழக்கத்தை நிறைய மக்களிடம் எடுத்து செல்ல ஒரு காரனியாய் அமைய வாழ்த்தும் நண்பன். 

என் நண்பர்கள் இந்த வலைப்பூவிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் -http://aathmaarthi.wordpress.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81/

- ஜீவ.கரிகாலன்