வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)


என்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களாகிவிட்டன. அடடா இந்த சீரிஸில் 100வது பதிவாக எழுதறோமே ஏதாவது புது விஷயமா எழுதலாமேன்னு காலைல இருந்து யோசித்துக் கொண்டிருந்தபடி, ஐந்தரை மணிக்கெல்லாம் லைட்டைப் போட்டு தம்பியை எழுப்பிவிட்டதற்கு ‘சுப்ரபாதம்’ பாடினான். இரண்டு வருடம் தான் இளையவன் என்பதால் எனக்கு அண்ணின்னு ஒருத்தி வந்தா உன்னை அண்ணன்னு கூப்பிடுறேன்னு சொல்லியிருக்கான்.

இன்று அதிகாலையே தூக்கத்திலிருந்து அவனை எழுப்பி விட்டதற்காக என்னைப் பார்த்து உதிர்த்த வார்த்தை என்னவென்றால் “ஆமா இவரு பெரிய புடுங்கி”.
என்னடா இது ஐந்தரை மணிக்கு லைட்டைப் போட்டதற்கு அண்ணனைப் பார்த்து இப்படித் திட்டலாமா என்று நீங்கள் அறச்சீற்றம் கொள்ளலாம். அவனுக்குப் பத்து மணிக்கு லைட்டைப் போட்டாலும் கோபம் வரும். இரவா பகலா என்கிறீர்களா?

சரி பகலென்று வைத்துக் கொள்வோம்:

”ஏன் டா நீயெல்லாம் பெரிய எழுத்தாளன்னு சொல்றியே!! பீரோல தேடனும்னா பகல்ல ஜன்னலத் தொறந்து தேடனும்னு தோணாதா”
என்றபடி விளக்கைப் பட்டென அணைப்பான்.

இல்லை இரவென்று வைத்துக் கொண்டால்:
 “ இந்த ரூம்ல லைட்டப் போடும் போதே அந்த ரூம்ல லைட்டை ஆஃப் பண்ணனும்னு உனக்குத் தோணுமா தோணாதா “என்றபடி விளக்கைப் பட்டென அணைப்பான். நான் மட்டுமென்ன சும்மா விடுவேனா, தங்கைகளுடன் சேர்ந்து அவனைக் கலாய்ப்போம்,
”அவனுக்கு கல்யாணம் ஆச்சுன்னா அவனோட மனைவிக்கு அவன் ஏதாவது உன்னைக் கோபப்படுத்துனா வீட்ல இருக்குற லைட்டு ஃபேனை எல்லாம் ஆன் பண்ணு வழிக்கு வந்துடுவான்னு சொல்வோம்” என்று அவனைக் கடுப்பேத்துவோம். அப்புறம் எங்க நமக்கு மரியாதைக்கான வானிலை அறிக்கை.

விஷயம் என்னவென்றால், இதுவரை நான் என் நெருங்கிய நண்பர்களுக்கே அதிகம் அறிமுகப்படுத்தாதவன் என் தம்பி. வெறுமனே மின்சார சேமிப்பு மட்டுமல்ல, தன் 24 மணி நேரத்தில் பாத்ரூம் போவதிலிருந்து, என்னைத் திட்டும் வார்த்தைகள் வரை எல்லாவற்றிலும் ஒரு அட்டவணை இருக்கும், பட்டியல் இருக்கும் முன்திட்டம் இருக்கும். காலை தினம் எழுவதிலிருந்து, அலுவலகம் முடித்து வீடு திரும்பி, தூங்கும்வரை அவனது வாரநாட்கள் ஒரு நேர்க்கோட்டில் இருக்கும். அலுவலகத்திலிருந்து வந்தவுடன், மணிப்பர்ஸை வைக்கும் செல்ஃப் ரேக், போனை சார்ஜ் செய்யும் இடம் கூட மாறாது. யாராவது மாற்றி வைத்தால். எண்ணெயில் போட்ட பீ டி கடுகாய் தெறிப்பான் (என்ன சொல்ல இந்திய அரசாங்கத்திற்கே மரபணு மாற்றப்பட்ட கடுகை ஆதரித்துவிட்டது). இப்படி வாழ்பவன், தனக்கு சற்றே சம்பந்தமில்லாதவனை எப்படி மதிப்பான்.

“பெரிய புடுங்கியா?” என்று தான் கேட்பான்.

சின்ன வயதிலிருந்து நான் படுத்திய பாடும் அப்படி கிரிக்கெட் விளையாடும்போது (நாங்களிருவர் மட்டுந்தான்). எங்காவது பந்தடித்து போய்த் தொலைந்தது என்றால் அவன் தான் போய் தேடுவான். முள்செடியோ, குப்பை மேடோ. எனது பேட்டிங் முடிந்தவுடன் நான் தோற்றுவிட்டேன்.

“நீயே ஜெயிச்சதாக வச்சுக்கோ” என்று எஸ்கேப் ஆவேன். அவனுக்குப் பேட்டிங் பிடிக்க முடியாது. ஆனால் ஜெயிச்சிட்டேன் என்று சொல்வதால். அவனுக்கு டார்ச்சராக இருக்கும் அப்போதிருந்தே கேட்பான்.
“நீயென்னப் பெரிய புடுங்கியா” என்று.

வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் அவனுக்கு உறுதியானத் தேர்வு இருக்கும். அதற்கு சில சமயம் காரணங்கள் விநோதமாக இருக்கும் இருசக்கர வாகனம் வாங்குவதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாய் சேமித்தான். அவன் கடனில் பொருள் வாங்கக் கூடாது என்கிற கொள்கை கொண்டிருந்தான். 2008 வாக்கில் எனது வேலை பறிபோனதில், இருசக்கர வாகனத்திற்கு டியூ கட்டாமல், வெளியேவும் எடுக்காமல். வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்தது ஞாபகம் வந்தது. அவன் வாகனம் வாங்கும் போது முழுத்தொகைக் கட்டியே வாங்கினான். அதுவும் விக்ராந் எனும் வாகனம் ஏனென்றால் அவர் தேசியவாதியாம்.

கிரிக்கெட் பார்க்கும் போது பல முறை இன்னும் தோணி அவுட் ஆகலையா என்பேன். கிரிக்கெட் வெறும் சூதாட்டம் என்பேன்.
“இவரு பெரிய எழுத்தாளப் புடுங்கி” என்பான்.

விசயம் அவ்வளவு தான் அவனுக்கு நான் செய்யும் அநேகக் காரியங்கள் உருப்படியானவை அல்ல. ’எழுத்தாளன்’னு வீட்ல யாராவது பாராட்டுனாங்க என்றால் கூட அவனுக்குப் பிடிக்காது. நம்ம புத்தகம் வந்தபோது, அதை அவன் என் கண் முன்னே ஒரு சந்தோஷத்துக்காகக் கூடப் புரட்டிப் பார்க்கவில்லை. 'வா.மணிகண்டன்' எங்கள் குடும்பத்திலிருக்கும் பலர் அவரது வாசகர்கள், என் தம்பிக்கு ஏற்கனவே அறிமுகம், இருந்தும் புத்தக வெளியீட்டில் ஒரு மரியாதைக்குக் கூட ‘ஹல்லொ’ சொல்லாமல் பார்த்தும் பார்க்காமல், “ஒரு ஓரமாய் நின்றுக் கொண்டிருந்தார் உங்க தம்பி” என்று வா.ம சொல்லும் போது புரிந்தது. பிறகு தான் தெரிந்து கொண்டேன், அவனுக்கு வரயிஷ்டமில்லாது. அம்மாவின் வற்புறுத்தலால் தான் வந்தானென்றும் அறிந்தேன்.
‘ஏனென்றால் எழுத்தாளன்னா பெரிய புடுங்கியா என்ன.’

“பேங்க்ல உன் ஃப்யூச்சருக்குன்னு என்ன சேமிச்சிருக்க?” என்று கேட்டது ஞாபகம் வந்தது. அவனது கோபத்திலும் நியாயம் இருக்கிறது என்று அம்மாவும் அடிக்கடி சொல்லிவிட்டுப் போவார்.

அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது, பூஜைகளில் கலந்து கொள்ளமாட்டான். ஆனால் யாராவது வீட்டிற்கு மதப்பிரச்சாரம் செய்ய வந்தார்கள் என்றால் அவர்களுக்கு அர்ச்சனை நடந்தேறும்.
“ஏன்டா நம்ம சாமிங்க மீது உனக்கு தான் நம்பிக்கை இல்லையே!! அவுங்க வந்தா உனக்கு என்ன ப்ரச்சினை?”னு கேட்டா.

“நான் சாமியில்லைன்னு சொல்லல, கடவுள் இல்லைனு சொல்றேன்.” என்பான். கடவுள் மறுப்பு பேசுறவன், மயிரைப் புடுங்கு என்று சொல்றவன்.. ஏதோ சிங்க் ஆகுதுல்ல..

இப்படி எழுதிக்கொண்டிருக்கும் போது தேநீர் கோப்பையைத் தருவதற்காக வந்த அம்மாவும் இந்தத் தலைப்பைப் பார்த்து கண்டபடி ஏசினாள்.
அண்மையில் வெளியான என் சிறுகதைத் தொகுப்பில் அதிகமாக வரவேற்கப்பட்ட சிறுகதை “நீரோடை”, அவளுக்கும் கூடப் பிடித்திருந்ததாம். தொன்மத்தின் சுவடுகளை வரலாறு பதிந்து கொண்டேதானிருக்கிறது. அந்தத் தொடர்பை உணர முடியாதவர்களாக நாம் தான் மாறிப்போகின்றோம். இப்படித் தான் சில பண்பாடுகளென்ற, கலாச்சாரங்களென்ற நம்பிக்கைகளும், சடங்குகளும் தொடர்பு துண்டிக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு சிதிலமடைந்து மூடநம்பிக்கைகளாக பாவிக்கப்பட்டும் மறைந்துவிடுகிறது.
இப்படியாக மறைந்துபோனவற்றை அகழ்ந்தெடுப்பது வெறும் மண்களுக்கு அடியிலிருந்து மட்டுமல்ல, மூடநம்பிக்கை என்று கைவிட்ட சடங்குகளில் கூட சிலவற்றைத் தெரிந்து கொள்ள இடமிருக்கிறது. கெட்ட வார்த்தை என்று ஒதுக்கி விடுவதற்குள்ளும் சில வரலாற்றுத் தடயங்கள் இருக்கின்றன.

'மயிர் பிடுங்கி' எனும் சொல் ஒரு சமணத் தடயம். சமணர்களில் ஆன்மிகத்தில் தீவிரமானோர், துறவு கொண்டோர். எவ்வுயிருக்கும் இன்னா செய்யக்கூடாது என்று விரதம் இருப்பவர்கள். தன் முடியை மழிப்பதற்கு பதிலாக ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் முடியை மழித்தால் பேண் போன்ற சில உயிர்கள் இறப்பதற்கு நேரிடும் என்பதாலும், வலியைத் தாங்கிக் கொள்ளும் பழக்கமுடையவர்களாக மாறவேண்டும் என்பதாலும் தங்கள் தலை மயிர்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக்கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

பக்தியிலக்கியங்கள் காலக் கட்டத்தில் சமணர்களை எள்ளல் செய்யும் பாடல்கள் இடம்பெற்றன, சமண முனிகளை எள்ளல் செய்யும் வழக்கம் அங்கிருந்து பொது மக்களுக்குள்ளும் பரவ ஆரம்பித்திருக்க வேண்டும். ஒருவனைப் பார்த்து “நீ என்ன பெரிய மயிரைப் புடுங்கியா” என்று கேட்பது, நீ என்ன அவ்வளவு பெரிய சத்ய சீலனா, தர்ம சீலனா, ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவனா, வலிகளைத் தாங்கிக் கொள்பவனா, தர்மம் செய்து வருபவனா, கடவுள் வழிபாட்டை மறுப்பவனா, வியாக்கியானம் பேசுபவனா, விஞ்ஞானம் பேசுபவனா, மற்றவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசானா என்று கேட்பதற்கு சமானம்..

என் தம்பி நாத்திகம் பேசியும், பிற மதங்களை வெறுப்பதிலும் கூட சமணத் தடயம் இருக்கிறது, நீ என்ன பெரிய பிடுங்கியா என்பதில் கூட சமணத் தடயமிருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம் – எனக்கு நன்றாகத் தெரியும் அவன் நான் எழுதும் எல்லா ப்ளாக் போஸ்டுகள், ஃபேஸ்புக் பதிவுகள், கதைகள், ஏன் கசக்கியெறிந்த கடிதங்கள், ஒளித்து வைத்திருக்கும் காகிதங்களில் இருக்கும் அவளது பெயரைக் கூட மிச்சம் வைக்காமல் படித்துவிடுவான். ஆனால் எதையும் வெளியே காட்டாது, தன்னடக்கத்தோடு நடந்து கொள்வான்.

“பெரிய புடுங்கின்னு நெனப்பு”

ஆகவே நண்பர்களே, இந்த நூறாவது பதிவில் நான் சொல்ல வந்தது என்னவென்றால் (குறிப்பாக மயிரென்றாலே வாயிலேயே அடிக்கும் தங்கை ஒருத்திக்கு),  ‘மயிர் பிடுங்கு’ என்றால் கெட்ட வார்த்தையல்ல.. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆமாம் சந்தானம் அடிக்கடி சொல்வாரே – நீயென்ன அப்பாடக்கரா என்று இதற்கும் ஞானசம்பந்தருக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா???

எதற்கும் ஒரு வார்த்தை அகரமுதல்வனைக் கேட்டுவிடுவோம்.

ஜீவ கரிகாலன்
(பெரிய பிடுங்கி)



வியாழன், 8 செப்டம்பர், 2016

நெடுஞ்சாலை - (பஜ்ஜி சொஜ்ஜி - 99)

“கழுத எழுத உட்காந்தாலே புதுசு புதுசா ப்ரச்சனை வருது”

மனதில் ரொம்ப நாளாகவே ஓடிக்கொண்டிருக்கும் கதைக்குதிரையை நேற்றாவது கட்டி இழுத்து லாயத்தில் அடக்கிவைக்கலாம் என்று நினைத்து அமர்ந்தபோது. இரவு பதினோரு மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.

வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டச் சரக்கினை வணிகவரித்துறையினர், சரியான ஆவனங்களில்லை என்று சொல்லிப் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்லி ஒரு அழைப்பு. சுமார் 07 மணியிலிருந்து 09 மணி வரை சில நவீன கவிஞர்களை வசைபாடிக் கொண்டிருந்தேன். அப்போதே தோன்றியது அளவுக்கு மீறி பேசிக்கொண்டிருக்கிறேன், கவிஞர்கள் சாபம் நம்மைச் சும்மா விடாது என்று. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் என்று புரிந்தது.

ஐயப்பந்தாங்கலுக்கு சற்று வசதியான வீடென்று வந்த நாளிலிருந்து, கணினியில் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. கத்தி போய் வால் வந்தது என்கிற கதையாக RAM போய் ஹார்ட் டிஸ்க் பிரச்சனை வந்தது, ஹார்ட் டிஸ்க் போய் யூ.பி.எஸ் பிரச்சனை. 
இணையத்ட் தொடர்பில் பிரச்சனை என மாற்றி மாற்றி ஏதாவது ஒன்று மாற்றி மாற்றி வந்துக் கொண்டிருக்கும். ஒரு வழியாக எல்லாமும் சரியாகி ஒருவாரமாகியும் கணினி முன் உட்கார முடியவில்லை. நம்ம தலையெழுத்து நம்மை ஆல்ட் டேப்** எழுத்தாளராகவே வைத்திருக்குமா என்று நேற்றுவரை நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

நேற்றிரவும் அப்படித்தான் ஒரு மண் சார்ந்த கதையை எழுத வேண்டும் என்கிற ஆசையோடு சாணைக்கல்லில் உராயும் உலோகம் போல வண்டியைத் தேய்த்தபடியே ஓட்டிக்கொண்டு வந்தேன். தீட்டிய அரிவாளில் எழுமிச்சை சொருகி வேடிக்கை காட்டியது விதி.

பதினோரு மணிக்கு மேல் அலுவலகத்திலிருந்து ஒரு நபரை, வாகனத்திற்கானத் தகுந்த ஆவணத்தை பிரதியெடுத்து கையில் கொஞ்சம் பணத்துடன் வருமாறு சொல்லிவிட்டு நானும் கிளம்பலானேன்.
சும்மாவே நம்ம ஏரியால அம்மா-மகன் செண்டிமெண்ட் ஜாஸ்தி. இதுல பேலியோ டயட்னு ஒரு புண்ணியவதியின் டயட்டை தொடர்வதால். நான் இளைப்பதை ஒரு கண்ணில் ஆனந்தத்தோடும் மறுகண்ணில் வருத்தமுடனும் பார்க்கும் கதக்களி நயனங்கள் என் அம்மாவுக்கு உண்டு. போதாதைக்கு டயட்டில் 11 மணிக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கம் உருவாகிவிட்டதால்,  நான் என் வாகனத்தை எடுக்கப்போகிறேன் என்றதும் அம்மாவுக்கு ஒரே பதட்டம். ‘என்னமோ ஏதோ பிரச்சினை’ என்று நம்மைக் கேட்க, நான் இருக்கும் கடுப்பில் அவருக்கு நேரிடையாக எந்த பதிலும் சொல்லாமல் கர்நாடகா அரசின் மெத்தனத்தோடு வண்டியைக் கிளப்பினேன்.

போரூர் டோல்கேட்டைத் தாண்டி வாகனம் நிற்கிறது. அலுவலகத்திலிருந்து ஆள் வரும் வரை காத்திருக்கலாம் என்று அடைக்கவிருந்த ஒரு பேக்கரியில் வண்டியை நிறுத்தி, இருக்கின்ற கோபத்தை டயட் சீட்டிங் செய்து ஆற்றுப் படுத்தினேன். இப்படியாக நித்தமும் காரணம் கிட்டக் கடவுக.

டோல்கேட் ஒரு தனித்த உலகமாக இருக்கிறது, முன்பெல்லாம் பயணவழி உணவு விடுதி எனக்கு ஆச்சரியமான ஒன்றாக இருக்கும், நகரத்திலிருந்து துண்டித்து பெரும்பாலும் அருகே எந்த கிராமமும் இல்லாத விடுதிகளில் வேலை செய்யும் ஆட்கள் அவர்கள் வாழ்க்கையை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் சொல்வது 90களில் ஆரம்பித்த தசாப்தத்தை. (அதற்குப் பின்னர் அவ்வாறான விடுதிகள் மீது சாபமிடவே தோன்றுகிறது). இப்போது டோல்கேட்டும் அப்படித்தான்.

சுங்கசாவடி என்றழைக்கப்படும் சுங்கவரி வசூலிக்கும் கொள்ளைக் கும்பலோடு, சாலைப்போக்குவரத்து அதிகாரிகள், ரோந்து செல்லும் காவல் துறை, வணிக வரித்துறை அதிகாரிகள் என்கிற கும்பலும் இருக்கிறது. பகலை விட இரவு சுறுசுறுப்பாக இருக்கிறது, ஒன்றிரண்டு தேநீர் கடைகள், இளநீர் கடைகள் என ஆளுங்கட்சி உறுப்பினர் அட்டை வைத்துக் கொண்டவர்களுக்கு தொழில் செய்யும் இடமாகவும், நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்களை வைத்துப் பார்க்கும் போது, நெடுஞ்சாலைப் போக்குவரத்து உண்மையிலேயேக் காலத்தை மிச்சப்படுத்துகிறதா என்று யோசிக்க வைக்கிறது.

கோபு ராசுவேல் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, 2000ங்களில் கடலூரில் இருந்து பாரீஸுக்கு செல்லும் பேருந்துகளில் இடது முகப்பில் 3.30 மணி நேரம், 04 மணி நேரம் என்று சென்னைக்கு செல்லும் பேருந்துகளில் பயண நேரம் ஒட்டப்பட்டிருக்குமாம். ஆனால் இப்போது அதிவிரைவு ஆம்னி பேருந்தில் கூட நான்கரை மணி நேரம் ஆகின்றது, அரசுப் பேருந்துகளில் என்றால் 05.30 மணி நேரம் வரை ஆகிறது. சாலைப் போக்குவரத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும், விபத்துகளினால் ஏற்படும் மரணங்களின் சதவீதம் ஏறியதாகச் சொல்கிறார்கள். உடலுறுப்பு மாற்றம் செய்யப்பட்டவர்களின் SURVIVAL RATE போல விரிவாக்கப்பட்ட சாலைகளினால் உண்டாகும் பிரச்சனைகள் அதற்கு முன்பிருந்ததை விடவும் ஏராளம்.

பல்கிப் பெருகிப் போய் விழாக் காலங்களில், விடுமுறைக்காலங்களில் பல கிலோமீட்டர் நீளத்திற்கு க்யூவில் நிற்கும் பேருந்துகளும், லாரிகளும் மிக அபத்தமான சாலைப் போக்குவரத்து முறைகளைக் கொண்ட நாடுகளில் நிரந்தர இடம் பிடிக்கும் நாடாகவே காட்சியளிக்கிறது. RFID என்கிற தொழிற்நுட்பம் இந்தியாவுக்கு வந்து பிரபலமாகியது ஆம்னி பஸ்களின் காலத்திலிருந்தே தான், ஒவ்வொரு வாகனத்திலிருக்கும் ஆர்.எஃப்.ஐ.டி பார்கோடினை ஸ்கான் செய்தாலே அந்த வாகனத்திற்குறிய சுங்கக் கட்டணம் அதற்கான வங்கிக்கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளும்படி வைத்துக்கொண்டால் மிகப்பெரிய அளவில் இந்த நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஒரு பெரிய நிறுவனம் இந்தியா முழுக்க டெண்டெரெடுத்து, மக்களவையில் அறிவித்து, ஜனாதிபதி உரையில் அறிவித்து இதை ஒரு புரட்சியாக செய்தால் தான் டிஜிட்டல் இந்தியா உருவாகும் அல்லவா. ஆனால் இப்படியானத் தொழிற்நுட்பத்தை பல தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் கடுமையாக எதிர்ப்பார்கள்.
ஏனென்றால் முறையான உரிமம் பெறாத வாகனங்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது என்று ஒரு முன்னாள் சாலைப் போக்குவரத்து அதிகாரி சொன்னது ஞாபகமிருக்கிறது. 

நேற்றும் கூட வணிகவரித் துறையினர் நிப்பாட்டிய சில வாகனங்களில் கண்ணாடி கூட இறக்கப்படாமல் வாகனவோட்டிகள் செய்த சமிஞைகளுக்கு கட்டுப்பட்டு வாகனங்களை சோதனை செய்யாமல் அனுப்பிய அதிகாரிகள்(அல்லது அதிகாரிகளின் டிரைவர்கள்). அவர்களுடைய முகங்கள் இந்த தேசத்தின் சமரசங்களின் அடையாளம். நினைத்துப் பாருங்கள் வங்கிக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட கரன்சிகளில் நிரப்பிய அம்மூன்று கண்டெயினர்கள் எங்கெங்கு சென்றது என்பதை சுங்கச்சாவடியில் எடுக்கப்படும் ஆர்.எஃப்.ஐ.டி ஸ்கேன் அறிக்கைகளில் கண்டுபிடித்து விட முடியும். அமுல்படுத்தப்படும் புதிய சாலை விதிச்சட்டம் என்னென்ன கேடு தரவிருக்கிறதோ தெரியவில்லை, இந்த நல்ல விஷயத்தைக் கட்டாயமாக்கினால் புண்ணியம்.

சரி நம்ம கதைக்கு வருவோம், நம்ம வாகனம் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்க, தாளமுடியாத கொசுக்கடியில் இத்தனை சமாச்சாரங்களை அவதானித்துக் கொண்டிருந்த ஆர்வத்தின் செவிலில் பவ்யமாய் அறை விட்டது, ஓட்டுனரின் புலம்பல். அவர் தோளில் தட்டியபடி, அங்கு அபராதம் கட்ட வரிசையாக நின்று கொண்டிருந்தவர்களில் கடைசியாகப் போய்  நின்றுக் கொண்டேன். ஒவ்வொரு கோப்பினை முடிப்பதற்குள்ளும் பத்து முறையாவது கொட்டாவி வந்தது அந்த அதிகாரிக்கு. இத்தனை தாமதமாகப் போனதும் ஒருவிதத்தில் நல்லது தான். இருபத்தெட்டு லட்சமுள்ள பொருட்களுக்கு ஐந்து சதவீத அபராதம் என்று கால்குலேட்டரில் கணக்கு போட்டார். என் கையிலிருந்த சொற்ப பணம், அலுவலகத்திலிருந்த, சக ஊழியரிடமிருந்த பணமென்று நாங்கள் திரட்டிய பணம் வெறும் பதினோராயிரம் தான் இருந்தது.

இத்தனை யோக்யதை பேசுறோம், நம்ம நிறுவனத்திற்காக கையூட்டு கொடுப்பது மட்டும் எந்த விதத்தில் ஞாயம் என்று தோன்றினாலும், அதிகாரிகள் முகம் சற்று நேர்மையாளர்களாகத் தான் தெரிந்தது. எல்லாவற்றிட்கும் ரசீது கிழித்துக்கொண்டிருந்தார், அவருக்கும் டார்கெட் பிரச்சினை, டார்கெட் தாண்டிய பின்னர் தான தனக்கான வரும்படி போல. நமக்கு எதுக்கு வம்பு என்று நொந்தபடி “சார் பணம் கொஞ்சம் கம்மியா இருக்கு” என்றேன்.

”எவ்வளவு”

“வெறும் 11000 தான் சார் இருக்கு. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்”

“உங்களப்பார்த்தா பாவமா இருக்கு, இந்தப் பணத்தை எப்படி க்ளைம் பண்ணுவிங்க?”

“எங்க சார் கஸ்டமர் கிட்ட இருந்து வசூலிக்க முடியாது. எங்க மேலதான் தப்புன்னு சொல்வார்”

“சரி உங்களுக்காக மூவாயிரம் கொறச்சே வாங்க்கிறேன். ஆனா இனிமே இதமாதிரி நடந்துக்காதிங்க. நீங்கெல்லாம் படிச்சவங்க தானே!!”

அதிகாரிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு கடந்து செல்கையில் தான். ட்ரைவர் சிரித்தபடியே வந்துச் சொல்லிவிட்டுப் போனார்.

“28 லட்சத்துக்கு ஐந்து சதவீதமென்றால் 140800 தானே வரும்.. நீங்க என்ன ஒரு மூவாயிரத்தி சொச்சம் கம்மியாயிருக்குன்னு சொல்றிங்க அவரும் உங்களுக்காக வாங்கிக்கிறேன்னு சொல்றாரு… ” என்றார்.

“எப்படி எப்படி?”  என்று மறுபடியும் ஆவணத்தைப் பார்த்தேன் 28 லட்சத்து சொச்சத்தில் 05 சதவீதம் 140800ரூபாய்களே வந்தது. எப்படி எங்கள் கண்களுக்கு அது 14800 என்று தெரிந்தது.

மறுபடியும் ட்ரைவர் என்னிடம் “எப்படி சாரி நீங்க 14000னு சொன்னத அவரும் நம்பினார், அவர் தான கால்குலேட்டர்ல போட்டார்?” என்று கேட்டபொழுது.

எனக்கு தூத்துக்குடி கேசரி ஞாபகம் வந்தது. செல்போனில் அவளுக்கு ‘குட்நைட் J J’ என்று தகவலனுப்பிக் கொண்டே சிரித்தபடி ட்ரைவரிடம் சொன்னேன்.

“நான் பத்தாங்கிளாஸ்ல கணக்குல 97 மார்க் தாம்பா வாங்குனேன்”

“அப்போ அந்த அதிகாரி??”

“அவர் நூத்துக்கு நூறு மார்க்கும் வாங்கியிருப்பாரு” என்றேன்..

சலிப்பு, சிரிப்பு, கோபம் மூன்றும் கலந்த கலவையோடு சொல்லிக்கொண்டே போனார்.
“அதனால தான் நான் கணக்குல ஃபெயிலாயிட்டேன்”



- ஜீவ கரிகாலன்

பின் குறிப்பு :
**  ஆல்ட் – டேப் எழுத்தாளரென்றால் – கீ போர்டில் ஆல்ட் டேப் பொத்தான்களைப் பயன்படுத்தி யாரும் பார்க்காத பொழுது எழுதுபவர்கள் என்று அர்த்தம்.






சனி, 3 செப்டம்பர், 2016

எவ்ளோ நாளாச்சு..



வீட்டுல அம்மா கையால ஒரு கோப்பைத் தேநீரோடு இப்படி போஸ்ட் எழுதி. சுமார் இரண்டு வருடங்களிருக்கும். கணினியில் பழுதானவுடன் நிறுத்தினேன். சொல்லிக்கொள்ளும்படியாக புதிதாக எந்தக் கதையும் கட்டுரையும் எழுதவில்லை. ஆனால் நிறைய வேலைகள் இருந்தன, மீண்டும் பழுது பார்க்கும் வரை இவற்றை நிறுத்தி வைப்போம் என்ற முடிவில் இருந்தேன்.

புத்தக வெளியீட்டிற்கு அதிகப்பட்சம் 3000 – 4000க்குள் இதுவரை நடத்தியிருந்தோம். ஆனால் ஏதோ ஒரு பேராசை, இக்சாவில் சற்றே கூடுதலான பட்ஜெட்டில் ஒரு நிகழ்வு நடத்திவிட்டோம். ஏனென்றால், என் எழுத்தை கவனித்து யாரும் வரப்போவதில்லை. கிட்டதட்ட 40 கூட்டங்கள் வரை இந்த ஐந்து வருடங்களில் நடத்திய ஒரு மனிதனாக என்னை நண்பர்கள் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். கண்டிப்பாக நூற்றுக்கு குறையாது என்று நினைத்திருந்தேன். குறையவில்லை. வந்திருந்த அனைவருக்கும் நன்றி.

கௌதம சித்தார்த்தனும், அபிலாஷும் நான் சந்தித்தவரை நல்ல விமர்சகர்கள். ஆகவே, அவர்கள் வைக்கப் போகும் விமர்சனம் குறித்து அச்சமிருந்தது. அதனாலேயே வீட்டில் அம்மாவிடமும், மாமாவிடமும் மட்டும் சொல்லிவைத்திருந்தேன் (இவர்கள் தான் என்னை எந்தக் குறையுடனும் ஏற்றுக்கொள்பவர்கள்). ஆனால் சென்னை தினக் கொண்டாட்டத்தில் என்னுடைய நிழற்படத்தோடு செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. வீட்டில் விசாரித்த எல்லோருக்கும் அடுத்த நாள் நிகழவிருக்கும் புத்தக வெளியீடு பற்றிய செய்தியும் சொல்லப்பட, கிட்டதட்ட 15 பேர் கொண்ட குழுவாகத் தயாரானது. சரி, அதுவும் நல்லது தான் மழைக்காலத்தில் நண்பர்கள் வரமுடியாமல் போனாலும், பேச்சாளர்களுக்கு தெம்பாக இருக்கும் என்று நினைத்தேன். மழை போல நட்பு வந்தது. மழை வரவில்லை.

கடைசியாக நான் எழுதிய கதை – 23-04-2014. இந்தத் தொகுப்பில் இருக்கும் நீரோடை. 2010ல் எழுதப்பட்டிருந்த கரூரிலிருந்து மான்செஸ்டர் வரை என்கிற கதையும் இந்நூலில் உண்டு. ஓரளவுக்கு நல்ல பெயரெடுத்துக் கொடுத்திருக்கிறது இந்தத் தொகுப்பு. செலவோடு செலவாக கணினியும் பழுது பார்க்கப்பட்டது. இனித் தொடர்ந்து எழுத எனக்கு சாத்தியம் இருக்கிறது. பார்ப்போம்.

என் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம், என் அலுவலகம் தான். நான் எழுதுபவனாக என்னை, நிறுவனத்தின் இரு நிறுவனர்களும் அங்கீகரித்துள்ளனர். எனக்கான வெளியை சாத்தியப்படுத்தியது அதுதான். இல்லாவிட்டாலும் எழுதிக்கொண்டிருப்பேன். ஆனால் தனியாகத் தான். நண்பர்களோடு இப்படி சேர்ந்து இயங்கிட முடியாது.
மிக முக்கியமாக நான் குறிப்பிடப்படவேண்டியது, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாரதியைப் பற்றி, பாரதி என்றால் வெறும் பாரதி மட்டுமல்ல அவனது நான்கைந்து நண்பர்களோடு சேர்த்து தான். இதோடு நாகப்பிரகாஷையும் சேர்த்துக் கொள்ளலாம். தமிழில் வாசிப்புக் குறைந்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு, தமிழ் எழுத்தின் எதிர்காலம் என்ன என்று கேட்பவர்களுக்கெல்லாம் பதிலாக இவர்களைத் தான் பார்க்கிறேன்.

நாளைய எழுத்து இவர்களிடம் தான் இருக்கிறது. இவர்கள் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் தீவிர வாசிப்பு இருக்கிறது, முக்கியமாக தொழிற்நுட்ப சாத்தியங்கள் அவர்களுக்கு மிகப் பெரிய பாய்ச்சலை சாத்தியமாக்கும். ஆனால் இவர்கள் இன்றைய மடாதிபதிகளாக சுற்றித்திரியும் எழுத்தாள பிம்பங்களை நெருங்காமல் இருக்க வேண்டும். ஆசான், குரு என்று எவரையும் சொல்லிடக் கூடாது, அவர்களை POLLUTE பண்ணுவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்யத் தயாராகிவிடுவார்கள்.

இவர்கள் தீவிரமாக எழுத ஆரம்பிக்கும் காலக்கட்டம் இலக்கியத்தில் மீண்டும் ஒரு போக்கை உருவாக்கும். ஏனென்றால் 1990-2010வரை அல்லது 1995-2005 வரை சமூகச் சூழலில் அடிப்படையாக ஒரு குழப்பம் இருந்தது. தலைமுறை இடைவேளைகளில் இருந்த தூரங்கள் குறைந்ததிலிருந்து, தொழிற்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த திடீர் மாற்றங்கள், நுகர்வுத் தன்மை ஆகியன உருவாக்கிய சிக்கல்களில் எழுதிக் கொண்டிருந்தவர்கள், அதை மோசமான காலக்கட்டமாக பலர் சொல்லிக்கொண்டு வருவதைக் கேட்டிருக்கிறேன். குறிப்பாக 2000க்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த எழுத்தும் வரவில்லை என்று சொல்பவர்களுக்கு, நம்பிக்கை அளிக்கும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது என்று நான் நம்புகிறேன்.


நம்பிக்கை என்பதே ஒரு தொடக்கம் தானே.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

முட்டாளும் அதிர்ஷ்டசாலியும்

அந்தக் குளிர்சாதனப் பேருந்து பைப்பாஸிலிருந்து மாமல்லைக்குள் நுழைந்தது…..
இவ்வுலகில் அறிவை நம்புவது தான் ஆகச்சிறந்த மடத்தனமான செயலென்று, இன்னமும் இறுகப்பற்றினேன் அவள் கரங்களை. சட்டென உதரினாள். பெரிதாக எந்தக் காரணமுமில்லை. ஆனாலும் அவள் உதறினாள். இப்பொதும் அறிவென்கிற மூடநம்பிக்கை எல்லாவற்றையும் அனுமதித்தது.

“இவ்வுலகில்” 

“வாட்??”

“நாம் ஒரு மூவாயிரம் ஆண்டுப் பழைய நகரில் இருக்கிறோம்”

“அதுக்கு என்னடா இப்போ”

”நாம் தரையிலிருந்து சில நூறடிகள் மேலே இருக்கிறோம்”

“ம்ம்ம்… நீ மரியாதையா.. ஒழுங்காப்பேசுடா. இந்தசெந்தமிழ்ப் புலமையெல்லாம் எடுத்துக்கிட்டு என்கிட்ட வாராத”

“நமக்கு கீழ் இருக்கும் இவ்வொரு அடியும் ஒவ்வொரு தசாப்தங்கள் என்று நினைத்துக் கொள்”

“லூசா நீ”

”நம்மைச் சுற்றி நான்கு புறம் நீர் இருக்கிறது, எதிரே கடலும், நம்மைச் சுற்றி ஒரு நதியுமென நாம் சூழப்பட்டிருக்கும்”

“ஏ லூசு உனக்கு என்ன ஆச்சு?”

“கடல் விழுங்கிக் கொண்டிருக்கும் இந்நகரின், அந்த மூழ்கியத் தெருக்களில் கைகள் கோர்த்து நடமாடியப் பொழுதுகளோ, இல்லை நமக்குள் ஊடல் கொண்ட பொழுதுகளோ உனக்கு ஞாபகம் வரவில்லையா?”

“நீ இங்கயே பெனாத்திக்கிட்டு இரு…. நான் கீழே எறங்குறேன்”

 ‘இவ்வுலகில் முட்டாள்களுக்கு….’

அவள் கைகளைப் பிடித்து இழுத்தேன். ஆபரணங்களற்ற அவள் கைகளில் லேசான அந்த உரோமங்களே அவளது ஆபரணங்களாகத் தோன்றியது. அவள் உடலில் வலுவிருக்கிறது என்று தெரிவித்தாள். இன்றும் என் கண்களின் பாவனை அவளிடம் இரக்கத்தைக் கோரியிருக்கலாம். அவளும் கரிசனமிக்கவள் தான். ஆனால் அவளுக்கு நான் அவற்றையெல்லாம் காண்பிக்க முடியாது போய்விடும்.

வலுக்கொண்ட அவள் கரங்களுக்கு என் முதல் முத்தம் வைத்தேன். சட்டென மார்பில் குத்தினாள். சிரித்தேன். முறைத்தாள். ஏன் இவையெல்லாம் ஒரு ஒழுங்கில் நடக்கிறது என வியந்தேன். ஒவ்வொரு காலத்திலும் இதையே தான் நான் அனுபவித்திருக்கிறேன்.

 ‘இவ்வுலகில் முட்டாள்களுக்கு மட்டுமே ……’

இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவள் இறங்கியிருக்கலாம் என்று ஞாபகம் வர படிக்கட்டுகளை நோக்கி விரைந்தேன். திரும்பிய கணமே எதிரில் நின்றாள். அவள் போகவில்லை. என்ன என்று அவள் கண்கள் என்னை ஏளனமாகக் கேட்டன..

’இவ்வுலகில் முட்டாள்களுக்கு மட்டுமே …… அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றிருக்கிறது’

அவள் தோலின் நிறத்திற்கு மிக அருகாமையிலிருக்கின்ற மஞ்சள் வண்ணத்திலான புடவை அது. அதிகாலையில் சந்திப்பைத் தவிர வேறு எந்தத் திட்டமும் முடிவாகாது உறுதி செய்ததைப் போல, மஞ்சளைத் தவிர வேறு எந்த டிஸைனும், அலங்காரமும் இல்லாத உடை. அவள் அந்த ஆடைக்கு அலங்காரமாக இருக்கிறாள் என்று சொல்லிப் பார்க்கலாம். ஆனால் அவள் இந்த ஜோடனைகளில் சந்தோஷம் கொள்பவள் அல்ல.

’இவ்வுலகில் முட்டாள்களுக்கு மட்டுமே …… அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றிருக்கிறது. துரதிர்ஷடவசமாக அவர்களின் காதல் அறிவாளிகளுடன் அமைந்து விடுகிறது’

”ப்ளீஸ் இங்க வாடா”

அவள் புன்னகைத்தபடி வந்தாள்.

“ஹனி..”

“இங்கபாரு மறுபடியும் சங்ககாலம், முன் ஜென்மம்னு லூசு மாதிரிப்……” இடையோடு சுற்றிவளைத்து சுவரோரமாக அவளை அமர்த்தினேன். இரண்டாம் முத்தத்தை அவள் நெற்றியில். கொடுத்தேன்.

”லூசி மாதிரிப் பேசுன, நான் கீழே இறங்கிப் போயிடுவேண்டா”

நான் இனிப்பேசப்போவதில்லை. அவள் கண்களில் ஒன்னொன்றாக முத்தமிடும்போது

“சரி விடு் நாம ப்ப்ப்” இன்னும் கொஞ்ச நேரத்திற்கு எதுவும் சொல்ல மாட்டாள்.
அது வசந்தத்தை, மதுரத்தை, உயிரைத் தொட்டுக்காட்டியது, என்னுள் ஒடுங்கியிருக்கும் அவள் சின்ன உடலில் இருக்கும் வலிமையான ஆன்மா முழுமையாகப் பிரகாசமாய் இருப்பதாக, அவள் மூச்சுக் காற்று சொல்லியது. அந்த ஜீவனின் கதகதப்பில் சுரந்த சுரப்பிகள். இதுவரைப் பருகாதவொன்றை ஊற்றிக் கொடுத்தது. ஒன்று இரண்டு மூன்று என மிடருகளாய் என்னுள் இறங்கி என் இதயத்தின் பெரிகார்டியத்தை உறுதியாக வைத்திருக்கும்.

விலகினேன்

“லூசு..”

சிரித்தேன்.

’இவ்வுலகில் முட்டாள்களுக்கு மட்டுமே அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றிருக்கிறது. துரதிர்ஷடவசமாக அவர்களின் காதல் அறிவாளிகளுடன் அமைந்து விடுகிறது. அதனாலேயே அவர்கள் அதிர்ஷ்டவசமாக உண்மையிலேயே காதலித்து விடுகிறார்கள்’

சுற்றுமுற்றும் பார்த்தோம் வாரநாளொன்றில், உச்சிவெயிலில், அந்தக் கலங்கரை விளக்கில் ஏறிட யார் தான் விரும்புவார்கள். ஒரு முட்டாளும், ஒரு அறிவுள்ளவளும் இதில் விதிவிலக்கு. அன்றைக்கு அமாசை என்றாலும், வழமைக்கும் சற்று அதிகமாகவே ஆர்பரித்தது கடல். பன்னீர்த் தெளிப்பாக ஒன்றிரண்டு தூரல்களை வானம் தூவ. கொஞ்சம் அவளோடு நெருங்கினேன். அவளும் நெருங்கினாள். அவள் ப்ரவுன் நிறக் கண்களில், ஏதோ தெரிந்தது. முத்தமிடுவதற்கு முன்பாக, அவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்து, நெற்றியோடு நெற்றிவைத்து அவள் கண்களின் ஆழத்தில் செல்லலானேன்.

எங்கு நோக்கினும் உளியின் சப்தங்கள். சிலைகள் சில உயிர்பெற்றும் சில உயிர் பெறாமலும், சில வெறும் பாறைகளாகவும் தென்பட்டன. அவற்றின் மீது இன்றைய ஆடுகளைப் போலவே, தம்மையும் செதுக்கு அல்லது தம்மையும் வணங்கு என்று சொன்னபடி ஆடுகள், அது ஒரு திருவிழாக்கோலம் பெருந்திரளான மக்கட்கூட்டம், யாரோ நகர்வலம் வருகிறார்கள், கோயிலின் மணிச்சப்தம் சற்றே தொலைவிலிருக்கின்ற கடலலையோடு சேர்ந்து ஒலித்தது மனதை மயக்கநிலைக்கு ஆட்படுத்தியது.


அக்கணமே! அங்கே கூடியிருந்த மக்கள் சட்டென விலகி இருபுறமாகப் பிரிந்துவிட, ஒரு பல்லாக்கு அலங்காரத்துடன் அவ்வூரில் கோயிலை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது. தடித்த உருவமுடைய நால்வர் அதைச் சுமந்தபடி ஓடி வந்துக் கொண்டிருந்தனர். உச்சிவெயிலின் காரணமாக, வெயிலில் அதிகம்பட்டிருக்காத சந்தியாவேளையில் உள்ள சூரியனின் நிறம் கொண்டப் பேரழகியான அவள் கீழிறங்கியவுடன் சூரிய வெப்பத்தில் நிலை குலைந்தாள். அவள் கீழே விழும்முன் சட்டென அவளைத் தாங்கிப் பிடித்தான் பல்லாக்குத் தூக்குபவன். சுதாரித்த அந்தப் பேரழகி அவனுக்கு நன்றி சொல்லிப் புன்னகைத்து விட்டு கோயிலுக்குள் சென்றாள்.
அதுவரைப் பொறுமையாக இருந்த வேறு ஒரு அதிகாரி ஒருவன், அவளைத் தொட்ட அடிமைக்கு தண்டனையாகக் கசையடி கொடுக்க வேண்டும் எனத் திமிரினான். தடுக்க யாருமில்லை, மன்னிப்பை யாசிக்காத அடிமை அடி வாங்குவதற்குத் தயாராய் கண்களை மூடிக்கொண்டான். அப்பேரழகியின் சிவந்த, விரிந்த இதழ்கள் அவண் கண்களில் நின்றது, உதடுகள் புன்னகைத்தது..

அவனைப் பழிவாங்கத் துடிக்கும் சவுக்கின் நுனியில் இருந்த உலோகத் துண்டுகள் தோலினையே கிழித்துப்போட்டுவிடும். அவனை நோக்கு சுழன்றது அந்த அதிகாரியின் ஏவலுக்கு அடிபணிந்த மற்றொரு அடிமையின் கைகளில் இருந்தக் கசையானது. அதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் யாவரும் கண்களை மூடத் தயாரானார்கள். 
வன் அவளை நினைத்துக்கொண்டே இருந்தான்.

முதல் அடியிலேயே அவனது இடது தோளில் இருந்து முழங்கைகள் வரை தோல் கிழிந்து குருதி வடிந்தது.

கலங்கரை விளக்கத்திலிருந்து கீழே செல்லும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் கடலோசைகளுக்கு நேர்மாறாய் இருந்தது. என் இடது கைகளினூடாக அவள் இரண்டு கரங்களைக் கொண்டும் பற்றியபடி என் இடப்பக்கம் முழுமையாகச் சாய்ந்தாள்.. என் இடத்தோளிலேயே ஒரு முத்தமிட்டு என்னைப் பார்க்கமலேயே சொன்னாள்.

“நீ ஒரு லூசுடா…”


 இவ்வுலகில் முட்டாள்களும் அறிவாளிகளும், அதிர்ஷ்டசாலிகள் முத்தங்களை சமன் செய்து கொள்வார்கள். துரதிர்ஷ்டசாலிகள் மிச்சம் வைத்திருப்பார்கள். ஆகவே மற்றொரு ஜென்மத்திலும்.......

கீழே இருந்தபடி எங்களை ஒரே ஒரு சிறுவன் மட்டும் கவனித்துக் கொண்டிருந்தான். நான் புன்னகைப்பது அவனுக்குப் புரிகிறதா என்ன??



ஞாயிறு, 24 ஜூலை, 2016

கண்டனம்

இதற்கு முன்னர் ஜெயமோகனைக் கண்டித்து பெண்கள் சார்பில் முன்வைக்கப்பட்டக் கூட்டறிக்கையிலும், பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுந்தக் கூட்டறிக்கையிலும் கூட, இதுபோன்ற இன்னும் ஒன்றிரண்டு அறிக்கைகளில் நான் ஒப்பமிடவில்லை. ஏனெனில் அதன் பின்னணி அரசியலின் முழுமையும் தெரிந்து கொள்ளாதவரை அதன் மீது ஒரு நிலைப்பாடு எடுப்பது தவறு என்று கருதியிருந்தேன். இவை இலக்கியத்தில் புத்தக விற்பனையைக் கூட்டும் மலினச் செயல்பாடுகளில் ஒன்றாகவும் போய்விட்டது வருத்தத்திற்குரியச் செயல்பாடு தான்.
 லீனா மணிமேகலையின் செயல்பாட்டுக்கு எதிராக நிற்கும் இந்தக் கூட்டறிக்கை குறித்தும் அதே போன்ற முழுமையானப் பின்னணியை அறியாதவன் என்கிறப் புரிதலில் இதற்கு வெளியேவே இருக்க விரும்பினாலும்.
தன் சொந்தப் பெண்ணிடம் பொது இடங்களில் சரியாக நடந்து கொள்ளச் சொல்லுங்கள். பிறகு பெண்ணியம் பேசலாம்.” –
இதைப் போன்ற கருத்துகளைப் பொதுவில் பதிவது மிகுந்த உளைச்சலைத் தருகிறது. இதுபோன்ற கருத்து அவதூறாகப் பதிவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சகமனிதனாகவே இதற்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுநிலை என்பதும் ஒரு அரசியல் தான். இந்த முறை நான் அதைச் செய்ய விரும்பவில்லை. ஒரு தனிமனிதன் மீது அவதூறு செய்யும் எந்தச் செயல்பாட்டிற்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

திங்கள், 4 ஜூலை, 2016

கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள் - அபிலாஷ்

கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள், 



தினமும் CHILD ABUSE செய்திகள் தான் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் இந்நாவலை வாசித்தேன்.

அபிலாஷின் இந்தக் குறுநாவலை வெறுமனே க்ரைம் அல்லது டிடெக்டிவ் நாவல் என்று வகைப்படுத்த முடியவில்லை.

சமூகத்தின் இருண்ட பக்கங்களை தத்துவ ரீதியிலும், உளவியல் ரீதியிலும், துப்பறியும் நாவலாகவும் முக்கியமாக கதையின் தளமாக குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்முறைகளை எடுத்துக் கொண்ட விதம் மிகத் துணிச்சலானது. அதை மிகக் கவனமாகவும் கையாண்டிருக்கிறார். 

சுவாரஸ்யத்திற்காக எழுதப்படும் மற்ற வகை துப்பறியும் நாவலாக வந்துவிடக்கூடாது என்பதற்காக NARRATIVEஐ கையாண்டிருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. பாலியல் காட்சிகளை எழுதும்போது கூட அதை வெறுமனே சொல்லிவிட்டு நகர்வதாய் அமைந்திருப்பது பாராட்டிற்குரியது. துப்பறியும் நாவல் என்றாலே கிளுகிளுப்பாக எதாவது சொல்லனும் என்று கிளிஷேவாக ஏதும் முயற்சிக்கவில்லை.

அதே சமயம் கவிதைத்தனம் வந்துவிடக்கூடாது என்றும் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் அழுத்தமாக நிற்கிறது.

பெண்ணியம், தலித்தியம் தொடர்பாக தனது அரசியல் நிலைப்பாட்டைச் சொருகும் இடத்தில் மட்டுந்தான் எனக்கு சுஜாதாவின் ஞாபகம் வந்தது. 

மற்றபடி, சுவாரஸ்யம், கவிதைத்தனம் இவற்றோடு சுஜாதாத்தனமும் அந்நியப்படவேண்டும் என்று மெனக்கெட்டு இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். சர்ரியலிஸ்டிக்காக வரும் நீல நீள உருவம் வழியாக கதாப்பாத்திரங்களின் மனநிலையை எனக்கு கடத்தியது, இந்த நாவலின் சிறப்பாக இந்த நீல உருவம் வரும் இடங்களை நான் கருதுகிறேன்.

என்னடா யாரைப்பார்த்தாலும் ஒரே மன அழுத்தமும், பாலியல் துன்புறுத்தல்களும், PERVERSIONகளுமே கதை முழுக்கக் கட்டப்பட்டிருக்கிறதே என்று பார்த்தால். அது ஜார்ஜ் எனும் ஒரு போலீஸ் அதிகாரியின் மனநிலையில் இருந்து சொல்லப்படும் நாவல், ஒரு காவல்துறையைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் மீதிருக்கும் குருதி வாடையாக JUSTIFY பண்ண முடிகிறது.

 ‘முண்டா’ தன் கதையைக் கூறும் இடத்தில் உண்மையில் நம்மை நடுங்க வைக்கிறது, அது போல் தமிழ்ச்செல்வனின் ஆசிரிய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும். எனது நண்பர் ஒருவர் இதே துறையில் எழுதுவதற்காக நிறைய தகவல்களை சேமித்துக் கொண்டிருக்கிறார். மேற்சொன்ன அப்பகுதிகளை வாசிக்கும் பொழுது என் நண்பர் சொன்ன விஷயங்கள் எத்தனை தூரம் உண்மை என அச்சுறுத்துகிறது. இது போன்ற விஷயங்களை தினமும் நாளிதழ்களில் பார்க்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் இருள் பற்றியோ ஒளி பற்றியோ கண்களைத் திறக்கும் வரை நமக்கு ஒன்னும் தெரியாது.

கட்டுரையாளர் அபிலாஷாக – ஐ.ஐ.டி உரை நிகழ்த்தும் தமிழ்செல்வனின் வாயிலாக ஆசிரியரை கவனிக்க முடிகிறது, ஐரோப்பியத் தத்துவியலைப் பற்றி தனது பார்வையை கதைக்குத் தகுந்த உரையாகப் பேசும் இடங்கள் ஈர்க்கின்றன. வழக்கமான துப்பறியும் நாவல்களில் வருவது போல், ஜார்ஜ் திடமானவராகவோ வலிமையானவராகவோ சித்தரிக்கப்படவில்லை. 


மோகனின் தனிமையும், ஜார்ஜின் தனிமையும் அதை அவர்கள் எதிர்கொண்டு வரும் விதமும் கூட உண்மையில் GREY AREA தான்.ஜார்ஜ் நாவல் முழுதும் வலிமையற்றவனாக, பதட்டப்படுபவனாக, மனச்சிதைவில் அல்லாடுகிறான் இதுவும் மற்ற துப்பறியும் கதைகளில் இருந்து இந்நாவலை வெகு தொலைவில் விலகி நிற்க உதவுகிறது, இதையும் பாசிடிவான அனுகுமுறையாகத் தான் பார்க்கிறேன்.

 அபிலாஷின் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.



கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள். 
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் 102
விலை : 100/-

- ஜீவ கரிகாலன்

சனி, 11 ஜூன், 2016

டைரிக் குறிப்பாய் மாறிய நாளொன்றில்

ஆரவாரமாகச் செல்லும் புத்தகக்கண்காட்சி இந்த வருடம், அப்படி இப்படி என கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. இந்த ரெண்டு நாள் சேல்ஸ் தான்.
முட்டி தேய வாசகனாய் இருந்த சுதந்தரம் என்ன புத்தகம் வாசித்தாலும் யாரும் கேட்கப்போவதில்லை. மொத்த காசையும் காமிக்ஸுக்காகவே கொட்டிய ஒரு வருடத்திய புத்தகக் கண்காட்சியும், மற்றொரு வருடம் கல்வெட்டு சார்ந்த புத்தகளை வாங்கியதும் நினைவில் வந்து போனது. பணம் கொடுக்காமல் நட்புக்காகக் கொடுக்கும் புத்தகங்களை வாங்கத் தயக்கமாக இருக்கிறது, பதிப்பாளனாக நண்பர்களோடு சேர்ந்து பத்தாவது புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பும், காதலும் இப்படி புத்தகங்களோடு வாழ்க்கையை மாற்றிவிட்டது. ஒருவேளை இவைகள் நிரப்பிக்கொண்டிருக்கும் பள்ளம் பெரிய ஆபத்தானதாகக் கூட இருந்திருக்கலாம். நிரம்ப இன்னும் நிறைய இடமிருக்கிறது. சென்ற வருடமே ஒரு கதைத் தொகுப்பு கொண்டு வந்திருக்கலாம். இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. பதிப்பாளனாக மாறிவிட்டதால் என்னுடைய எழுத்தைப் பதிப்பிப்பதில் சிக்கல் வந்து விடுகிறது. ஆனால் ஒவ்வொரு நூலும் என் புத்தகமாகவே பார்த்து வருகிறேன், அது தான் நூலின் தயாரிப்பில் உள்ள ஈடுபாடாக இருக்கிறது.

ஏதோ சொல்ல வந்தும், சொல்ல முடியாமல் போவதாய் நினைக்கிறேன்
எழுத்து, வாசிப்பு எல்லாமே குறைந்து போனதாய் எண்ணும் நாளொன்றில் அடுத்த வருடம் பற்றி யோசித்தபடிக் கழிந்தது. என் இன்றைய நேற்று.

வெள்ளி, 3 ஜூன், 2016

புத்தகக் கண்காட்சி 2016 - 01

புத்தகக் கண்காட்சியில் நேற்று: எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்பு என்கிற அம்சம் மீது அக்கறையற்ற போக்காகத் தான் பபாஸியின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
தனது நண்பர்களேயானாலும், கிட்டத்தட்ட 25 பேருக்கும் அதிகமானோர் கௌ.சித்தார்த்தனின் உரையைக் கேட்பதற்கு வந்திருந்தார்கள்.
அரங்கு தயார்செய்யப்படாமல் இருந்ததில், அனைவரும் அரங்கிற்கு வெளியே திறந்தவெளியில் ஒரு கூட்டமாக அமர்ந்து ஆரம்பித்தோம்.
ஒருங்கிணைப்பு : டிஸ்கவரி புக் பேலஸ் அண்ணாச்சி
கௌதம சித்தார்த்தனின் கதைகளை முன்வைத்துப் பேச ஆரம்பித்த மனுஷி பாரதியின் உரை சிறப்பாக அமைந்தது. மிகச் சமீபத்தில் தான் நிகழ்வு குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால். அவரது உரைக்கான தயாரிப்பு மிகவும் அற்பணிப்போடு செய்யப்பட்டிருந்ததாய் உணர்ந்தேன்.
கௌதம சித்தார்த்தன் வழமையான உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பேச ஆரம்பித்திருந்தாலும், அவர் உரையின் மையத்தைத் தொடும்போது, அந்த அமர்வு வேறு ஒன்றாக மாறியது. தனது நீண்ட கால அனுபவத்திலும், வாசிப்பிலும் இருந்து மிகவும் உறுதியாக இலக்கிய உலகில் இருக்கும் மோசமான சூழலுக்கு இடைநிலைப் பத்திரிக்கைகள் தான் காரணம் என அவர் முன்வைத்தது, அவசியமான பார்வை தான். அதுவும் தற்காலச் சூழலில்.

பாப்புலர் கலாச்சாரத்தை ஏன் இடைநிலைகள் சுவீகரித்துக் கொண்டன என்பதை அடிப்படைப் பிரச்சனைகளோடு ஆரம்பித்து, விகடனின் தடம் இதற்கு ஒரு சிகரமாய் அமைகிறது என்கிற கருத்தாக அங்குப் பதிவு செய்யப்பட்டது.

ஓவியங்களை இதழ்களில் பதிவு செய்யும் விதம் இதழ்களின் ஆசிரியர்களளின் செயல்பாடுகள் மீதிருக்கும் விமர்சனங்கள், விமர்சனங்களின் போதாமை,தற்காலச் சூழலில் வாசிப்புக் குறைந்து போன நிலைமை, ஒரு நல்ல புனைவு சாதியத்தை எவ்வாறு அணுக வேண்டும்?, காமத்தை,வன்முறையை எவ்வாறு அணுக வேண்டும்?, ஒரு நாவலைத் தொடங்குவதற்கான மனநிலை எவ்விதம் இருந்தால் உகந்தது என பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசி முடித்தார்.

கௌதம சித்தார்த்தன் - ஒரு நிலத்தில் நின்று கொண்டு தான் தன் படைப்பிலக்கிக்கியம் குறித்தும் அரசியல் குறித்தும் பேசி வருகிறார். நிறையக் கோபமும், ஆதங்கமும் அவரை அடிக்கடி உணர்ச்சிவயப்பட வைத்து விடுகின்றன. ஆக நிறைய எதிரிகள், முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள் உருவாகிவிட்டார்கள். இதற்குப் பெரும்பாலும் அவர் தனித்தே இயங்குவதும் காரணம் ஆகிறது. சில நல்ல நண்பர்களை பட்டென அன்ஃபிரண்டு செய்தும் விடுகிறார்
பொதுவாக, தன் எழுத்துகளில் அவர் தன்னை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாகக் கூறிக் கொள்கிறார். ஆனால் அது ஒரு போதாமையாகத் தான் தோன்றுகிறது.
1990களுக்குப் பிறகு மூன்றாம் உலக நாடுகள் அநேகமாக இல்லாமலே போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
தன் மண் சார்ந்தும், வேர்களில் இருந்தும், சங்க இலக்கியத்திலிருந்தும் பண்பாட்டுக் கூறுகளை, MYTHகளை, புராணங்களை மீள் செய்யும், மறு ஆய்வு செய்யும் இவர், தன்னை மொழி சார்ந்த, இனம் சார்ந்த பிரதிநிதியாகப் பாவிப்பது அவசியம் என்று கருதுகிறேன். அப்போது உடனிருக்க நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்பது மட்டுமல்ல. உலகளாவிய கருத்துகளாக மாறும் போது அதைக் கொண்டு செல்ல இந்த அடையாளத்தை விட மூன்றாம் உலக நாட்டின் பிரதிநிதி என்பது சிறந்ததல்ல.
நன்றி

செவ்வாய், 3 மே, 2016

இந்தத் தேர்தலில் எது மாற்றம் // ப.சொ - 93

இந்தத் தேர்தலில் எது மாற்றம்
*
ஜீவ கரிகாலன்

*

தேர்தலின் சூடு வெயிலைப் போலவே சகிக்கமுடியாமல் இருந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் முதலமைச்சர் கனவு, வாக்குறுதி கூவல், தனிமனித அவதூறு என வியர்த்து வழிகிறது.

எப்போதும் இல்லாதது போல ஐந்து முதலமைச்சர் வேட்பாளார்கள் கனவோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த தேர்தல், ஒருவழியாக இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது. வழக்கம் போல திமுக, அதிமுக என்கிற நிலைமை தான்.

எப்போதும் போல நடுத்தர வர்கத்தினரின் கற்பிதமாக தேர்தலினை ஒரே ஒரேயொரு புரட்சிக்கான வாய்ப்பாக அதை நோடாவுக்கோ, வேறு யாருக்குமோ போடும் வழக்கமான ஸ்பெசல் கூட்டம் இந்தத் தேர்தலில் பெருகியிருக்கிறது. இவர்கள் தான் திமுக, அதிமுக வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்க வல்ல 5 – 10% வாக்களிப்பவர்களாக இருப்பார்கள்.

யார் வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் இந்தக் கூட்டத்தினர் மாற்று அரசியல் என்று முன்வைக்கப்படும் விவாதங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

உண்மையில் இந்த தேர்தலில் மாற்றம்என்கிற பதம் மிகச்சரியாக இன்னும் தூக்கிப்பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது தான் இந்தப் பதிவு எழுதக் காரணமும்.

பெரும்பாலும் மதுவிலக்கு என்பது பொதுபுத்தியில் ஒரு மாற்றமாக இருந்துவருகிறது, தேவைப்படும் அவசியமான மாற்றம் தான். மதுவிலக்கு என்பது ஒரு கனவாக இருந்துவருவதால் அதை ஒருமித்த குரலாக எல்லாக் கட்சிகளும் இப்போது கூவி வருகின்றன.

இலவசங்கள் வாங்கிப் பழகியதால் நடுத்தர வர்கங்கள் இலவசங்கள் மீதும், ரொக்கப் பணம் மீதும் ஆவலாக இருக்கின்றனர். இங்கே போய் என்ன மாற்று அரசியல் பேச முடியும் என்றால் உதிரியான வாக்காளர்களான அதே 10 சதவீத மக்களின் போக்கு எதனை மாற்றமாகப் பார்க்கவேண்டியிருக்கிறது என்று ஆய்வு செய்ய வேண்டும்.

கிட்டதட்ட திமுக, ம.ந.க., அதிமுக ஆகிய கட்சிகள் ஒரே மாதிரியான போன தேர்தலில் இருந்து சற்றே மெருகூட்டப்பட்ட மாய வித்தை தான். பா.ம.க முன்னெடுத்திருக்கும் அரசியல், சாதிவாரியாக பகுப்பினைக்கோரும் என்றாலும் அவர்கள் எடுத்து வைத்திருக்கின்ற அரசியல் பாய்ச்சலில் தலித் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிசமானது, இதே எண்ணிக்கை மற்ற கட்சிகளுக்குக் குறிப்பாக ம.ந.கூவில் இருக்கும் மற்ற கட்சிகளின் தலித் வேட்பாளர்கள் எண்ணிக்கையோடு கூட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இங்கே தேடிப்பார்ப்பதெல்லாம் ’மாற்றம்’ என்று சொல்லப்படுவது எது, உண்மையில் மாற்றமாகத் தேவைப்படுவது எது என்கிற வித்தியாசம் தான். இந்தத் தேர்தலில் சாத்தியப்படும் மாற்றம் என யார் எதை முன்வைக்கிறார்கள். தமிழகத்திற்கு தேவையான மாற்றம் என்பது எது.

என்னைப் பொறுத்தவரை சித்தாந்த ரீதியிலாக மாற்றத்தை முன்வைக்கும் பா.ம.க மற்றும் நாம் தமிழர் கட்சிகள் ஆகியன மட்டுமே.  நிற்க. இது தகவல் மட்டுமே, பாராட்டுப் பத்திரம் அல்ல.

ம.ந.கூ விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்த அன்றே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்று மருந்து எக்ஸ்பையரி ஆனது, மருந்து எப்போது ஆக்டிவேஷன்ல இருந்தது என்கிற கேள்வி வேறு. சாதியை முன்னிறுத்தும் எந்த கட்சியும் விஷமானது தான் என்றாலும், அந்தக் கட்சிகளுக்கு போட்டிபோட அதே சாதிக்காரர்களைத் தான் பெரும்பாலும் களமிறக்குகிறது என்பதில், அந்த அம்சமும் பொதுப்படையாகின்றது.

கட்சிகளின் வாக்குறுதிகளை நேரடியாக ஆதரிக்காமல், அதன் இயங்குமுறையில் பின்னணியில் இருக்கும் உணர்வு எதுவெனப் பார்த்தல்  தான் தற்போதைய தேவையாக இருக்கிறது ஒரு பொது அம்சம் மட்டுமே ”மாற்றமாக” இருக்க முடியும்.

அது நிச்சயமாக மதுவிலக்கு அல்ல, தொழில் வளமோ, இலவசங்களோ அல்ல, பூகோள ரீதியில்; மொழி அடிப்படையில், தமிழின பண்பாட்டுக் கலாச்சார உணர்வோடு கூடிய ஜாதிப்பாகுபாடுகளற்ற ஒரு தேசிய உணர்வு. 


பாதுகாப்பான சுற்றுச்சூழல், மின்சாரம், குடிநீர், உள்கட்டமைப்பு போன்றவற்றில் இருக்கின்ற பிரச்சினைகள், அண்டை மாநிலங்களால் நமக்கு வரும் அழுத்தங்கள், தேசிய ரீதியிலான இனப்பாகுபாடுகள் என தமிழகத்திற்கென இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு, தேசியக் கட்சிகளால் அரசியல் தீர்வாக ஒருபோதும் பயன்படும்படி ஏதும் செய்துத் தர முடியாது. ஆகவே பிராந்தியக் கட்சிகள் தான் ஆட்டத்தில் இருக்கின்றன, இருக்கவும் வேண்டும்.


சித்தாந்தமோ, கொள்கைகளோ காலத்திற்கேற்பவும், தேவைக்கேற்பவும் மாறாது இருந்துவந்தால் அது கிழிசல் மிகுந்த, வெளுத்துப்பொன ஆடை போன்று தான் மாறியிருக்கும். Equlaising factor என்பது நிரந்தரமானது கிடையாது. மற்ற மாநிலங்கள் தங்கள் தேவை முடிந்த பின் திராவிடச் சட்டையை உரித்துப் போட்டுவிட்டு தங்கள் பிராந்திய அடையாளத்தோடு வலம் வர ஆரம்பித்துவிட்டன. தமிழ்நாட்டில் தான் அதே ஓவர் கோட், பஞ்சகஜம், தோல் செறுப்பு, நாமப்பட்டையோடு ஜமீந்தார் போர்ட்ரெயிட் போட்ட பழைய ஓவியமாய் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது திராவிடம்.

திராவிடம் எனும் ஒரு சொல், தமிழினை மாற்று மொழிபேசுபவர்கள் திரிபாக உச்சரித்துவந்த ஒரு சொல். ஆனால் அதுவே இப்போது ஆழப்பொதிந்திருக்கும் சமூகப்பாகுபாடுகளை உள்ளடக்கிய ஆபத்தான கற்பிதங்களின் பதமாக மாறிவிட்டது. 

ஆனால் இங்கு தமிழ்தேசியம் என்றால் விஷம் கக்கும் முதல் வரிசையில் திராவிடத்தின் சங்கு ஒலிக்கப்படும்போது, அடிப்படையிலேயே ஒரு குழப்பம் வந்துவிடுகிறது, இந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் சாதியொழிப்பு என்கிற அம்சத்தில் குறிப்பிடும்படி எந்த முன்னேற்றத்தையும் திராவிடப் போராளிகள் கொண்டுவரவில்லை. கூடங்குளம், ஸ்டெரிலைட், மணற்கொள்ளை, இயற்கை வளங்கள் கொள்ளை என தேசிய நலனென காவு கொடுக்கப்பட்டு விஷயங்களில் திராவிட முற்போக்குகளின் எந்த முன்னெடுப்பும் செல்லக்காசு தான். ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டுக் கலாச்சார ரீதியிலான பேரிழப்பு, தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் விவசாய நிலங்களை இழந்து கொண்டிருக்கும் அவலம் என தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் இப்போது ஒரு தேவையைக் கட்டமைத்திருக்கிறது.
ஓவியம் கார்டூனிஸ்ட் பாலா
இந்த தேவைகளுக்கான ஒரு பொதுவான வடிவம் ஒன்று வரையறுக்க வேண்டியிருக்கிறது, எந்தப் பெயரால் ஒடுக்கப்படுகிறோமோ அந்தப் பெயரால் எழவேண்டியிருக்கிறது. 

அது தமிழ் தேசிய எனும் அடையாளமாக பரவ வேண்டிய ஒரு உணர்வு. இந்தத் தேர்தலில் பெறப்போகும் இடங்கள் சொற்பமாகவோ, அதுவும்கூட இல்லாமல் போகலாம். ஆனால் மாற்றம் என்ற ஒன்று இந்தத் தேர்தலில் முன்வைக்கப்பட்டிருந்தது என்றால் அது தமிழின உணர்வு மட்டுமே. இதுப் பிரிவினை வாதம் என்று சொல்பவர்கள் நாட்டு நடப்பு அறியாதவர்கள்.

அந்த ஒட்டுமொத்த உணர்வின் பகுதிகளாக தேவைப்படும் மற்றன எல்லாவற்றையும் இந்த ஒன்றே கட்டியமைக்கும். மராட்டியத்திலோ, தெலுங்கானாவிலோ இதுபோன்ற மாற்றங்கள் அடிப்படைவாதமாகத் தேசியவாதிகளுக்குத் தோன்றாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது அடிப்படைவாதம் என்று விமர்சிப்பார்கள்.

இந்தத் தேர்தலில் தமிழ் இன உணர்வை அடிப்படையாக வைத்து எழுப்பப்படும் குரல்கள் வெற்றியடையாமல் போகலாம், என்னளவில் நாம் தமிழர் கட்சி, பச்சைத் தமிழகம் ஆகிய கட்சிகள் மீது உருவாகி வரும் நம்பிக்கை கவனப்படுத்தப்பட வேண்டியது. மற்றபடி மதுவிலக்கு, இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் போன்றவை வழக்கமான செயல்பாடுகள் தான்.

 19ஆம் தேதி இந்தக் கட்டுரையை மீண்டும் வாசிக்கும் போது, இது மாற்றத்திற்கான அறிகுறியாக மாறியிருக்கிறதா என்று பார்க்கலாம்.

 ஜீவ கரிகாலன்


ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

அது - 9

”எதுவொன்றைப் புரிந்துகொண்டால் எல்லாமுமாக இருக்கமுடியுமோ அந்த ஒன்று தான் அதுவாக இருக்கிறது”


படிக்கட்டுகள் வழியே கீழிறங்கி வந்தால் அந்த அறையின் கதவு தென்படும். அறை முழுதும் ஆப்பிளின் நறுமணம் கமழ்ந்திருந்தது. பச்சை வண்ண விளக்கொளியில் அறையின் மையத்தில் ஒரு நீண்ட மீன் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. மீன் தொட்டிக்கு அருகிலேயே நீச்சல் குளம், கண்ணாடியாலன்றி பெரிய பெரிய கற்களால் ஆன நீச்சல் குளம். நவீனமயமாகக் கட்டப்பட்டிருக்கும் இவ்வறைக்குள்ளே, பாரம்பரியமான குளம். மேல்தளத்திலிருந்து சூரிய ஒளி படுவதற்குப் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூரை நீச்சல் குளத்திற்கு சரியாக மேற்புறம்.


அந்திவேளையின் வீரியம் குறைந்த சூரியன் ஒளி, சாளரங்களற்ற அந்த அறையின் பச்சை விளக்குகளின் ஒளியை FLOUROSCENTஆக மாற்றியிருந்தது.

சன்னமாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்துஸ்தானி இசைக்கு காதுகொடுத்தும், குமார சம்பவத்திற்கு கண்களைக் கொடுத்தபடி நான் தரையில் படுத்திருந்தேன்.

துவட்டாத மேனியோடு சாய்ந்து கொண்டாள் என் மீது.

மீன் தொட்டியைப் பார்த்தபடியே நீந்துவது அவள் வாடிக்கை. அவள் நீந்தும் போது அத்தொட்டியில் இருக்கும் தங்க மீனும் அவளோடு போட்டிபோடும். அவளுக்கு இணையாக மெதுவாக நீந்துவது தான் போட்டி. இந்த முனையிலிருந்து அந்த முனை வரை அவள் செல்லும் நேரத்தில், தங்க மீனும் இந்தப் புறத்திலிருந்து அந்தப் புறம் சென்றிருக்கும். இரவரும் நீந்திக் கொண்டிருப்பதை மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருப்பது இவன் வழக்கம்.

அவளுக்குப் பிடித்ததாக தன் வீட்டினை மாற்றிக் கொண்டே வந்தான். விளக்கொளி, நறுமணம், நீச்சலறை, மீன்தொட்டி எல்லாமுமே அவளுக்குப் பிடித்த்தென அவன் அறிந்து வாங்கியவை. அவளிடம் இவை பிடித்திருக்கிறதா என்று கேட்டதும் கிடையாது. அவளும் சொன்னது இல்லை.

எப்பொதும் அப்படித்தான் நான் பேசிக்கொண்டிருப்பவனாகவும், அவள் கேட்டுக் கொண்டிருப்பவளாகவுமே இருக்கிறாள். உண்மையில் அவள் குரல் மிக மிக வசீகரமானது. வசீகரமானது என்றால் அதை விவரிக்க முடியாது. விவரிக்க முடியாத உலோக உருளைக்குள் உருண்டுக் கொண்டிருக்கும் வாயுவின் ஓசையாக, ஆனால் வேக வேகமாகப் பேசக் கூடியவள். இருந்தும் நானே அதிகம் பேசுபவனாகவும். அவள் கேட்டுக் கொண்டிருப்பவளாகவும் இருக்கிறாள்.

அவளிடம் நான் என்ன கேட்பது, அவளைப் பற்றி நான் தெரிந்து கொள்வது. அவள் இப்பொழுது வாழும் காலத்தில் மட்டும் அவளுடைய தேவைகள் பற்றி அறிந்துவந்தால் போதுமா? அவளுக்கு முன்னர் எது தேவையாக இருந்தது, இனிமேல் என்னென்ன தேவையாக இருக்கும், அதற்கும் அப்பால் அவளுக்குத் தேவைப்படுவது என்ன என்று யுகங்களைக் கடந்து தெரிந்து கொள்ளும் சாத்தியம் இருந்திருந்தால் நான் ஒரேடியாகக் கேட்டுத் தெரிந்திருப்பேன். அதுவரை அவள் உணர்த்துவதைத்தான் நான் செய்ய முடியும்.

அந்த தங்கமீன் எங்களைப் பார்த்தபடி, கண்ணாடித் தொட்டியின் சுவர்களை முட்டிக்கொண்டிருப்பதாய் தோன்றியது. அது முட்டுவது போலவும் இல்லை, பசியோடு இருக்க வேண்டும், வாயை நன்றாகப் பிளந்து கொண்டிருந்தது

அவள் தலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஈரம் என் இதயத்திற்கு மேற்புறம் நின்று கொண்டிருந்தது. கைகளிலிருந்த புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு. அவள் கீழ்தாடையைப் பற்றிப் பிடித்தபடி அவளைத் தூக்கி என் பக்கம் இழுக்க முயன்றேன். அவள் உடல் வலுவாக இருந்தது. தலையின் கணம் என் நெஞ்சை அழுத்தியது. பச்சை நிற அறை அடர்த்தி மிகுந்திருந்தது. அவள் இன்னும் என் நெஞ்சை அழுத்தினாள், உடல் அழுந்தியது. ஆப்பிள் நறுமணம் திண்மையாகவும், தாங்க முடியாத நெடியுடனும் மாறியது. மீன் தொட்டியின் கண்ணாடிச் சுவர்களை, அந்த மீன் தன் பற்களால் கடித்துக் கொண்டிருந்தது. தொட்டியில் விரிசல் பெரிதாகிக் கொண்டிருந்தது.

நீச்சல் குளத்தில் யாரோ கைகளையும் கால்களையும் தண்ணீரில் அடித்துக் கொள்வது போல சப்தம். எழுந்து என்னால் பார்க்க முடியவில்லை. மீன் தொட்டியில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. சூரியன் முழுமையாக மறைந்து இருந்தது. என் நெஞ்சில் தலை சாய்த்தவள் முழுமையாக மேலேறினாள் உடல் அவளைத் தாங்க முடியாமல். சுவாசத்தைத் தடுத்தது. முகத்தில் யாரோ அறைந்தது போல் இருந்தது.

தலையைச் சுற்றிப் பிடித்திருந்த ஏதோவொன்று அகன்றுவிட்டதாய் விழித்துப் பார்க்க, அதே நாற்றத்துடன் கூடிய தண்ணீர் என் முகத்தில் வழிந்துக் கொண்டிருக்க, என் எதிரேயிருந்தப் பெண்மணி நான் விழித்ததைக் கண்டு புன்முறுவலித்தாள்.

”சார் , காலைல இருந்து எதுவும் சாப்பிடலையா சார்” என்று என் முகத்தில் தண்ணீர் தெளித்த தேநீர்கடைப் பையன் என்னைக் கேட்டேன் அவனுக்கும் பின்பு நான்கைந்து பேர் நின்றுக் கொண்டிருந்தனர். தண்ணீர் தெளித்தும் கண் விழிக்காததால், அவள் என்னை அறைந்திருக்கிறாள். கன்னம் வலித்தது. வயிற்றிலிருக்கும் கட்டியையும் தடவிப் பார்த்தேன், மருத்துவமனை என்னை அவ்வளவு எளிதில் விடாது என்று தோன்றியது.

நான் இப்போது என்ன செய்யட்டும்
தூக்கத்தை தேடட்டுமா?
மனநோய்க்கு மருந்து தேடவா?
வயிற்றை பரிசோதனை செய்யவா?

*
வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
சிரசாசனம் செய்துகொண்டிருந்தது அது.

ஒன்றும் பேசாமல் கட்டிலில் விழுந்தேன். என்னைப் பார்த்து உரத்தக் குரலில் கேட்டது?

“ மீன்களுக்கு அத்தனை வலிமையான பற்களா? ”

அடுக்களையில் ஏதோ ஒரு பாட்டில் விழுந்துடையும் சப்தம்.


அதனைப் புரிந்துக் கொள்ளுதல் என்பது ஒரு நாளும் அதுவாக ஆக முடியாது 







(மன்duk0101)