“கழுத எழுத உட்காந்தாலே புதுசு புதுசா ப்ரச்சனை வருது”
மனதில் ரொம்ப நாளாகவே
ஓடிக்கொண்டிருக்கும் கதைக்குதிரையை நேற்றாவது கட்டி இழுத்து லாயத்தில் அடக்கிவைக்கலாம்
என்று நினைத்து அமர்ந்தபோது. இரவு பதினோரு மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.
வாடிக்கையாளருக்கு
அனுப்பப்பட்டச் சரக்கினை வணிகவரித்துறையினர், சரியான ஆவனங்களில்லை என்று சொல்லிப் பிடித்து
வைத்திருப்பதாகச் சொல்லி ஒரு அழைப்பு. சுமார் 07 மணியிலிருந்து 09 மணி வரை சில நவீன
கவிஞர்களை வசைபாடிக் கொண்டிருந்தேன். அப்போதே தோன்றியது அளவுக்கு மீறி பேசிக்கொண்டிருக்கிறேன்,
கவிஞர்கள் சாபம் நம்மைச் சும்மா விடாது என்று. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
என்று புரிந்தது.
ஐயப்பந்தாங்கலுக்கு
சற்று வசதியான வீடென்று வந்த நாளிலிருந்து, கணினியில் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து
கொண்டே இருக்கிறது. கத்தி போய் வால் வந்தது என்கிற கதையாக RAM போய் ஹார்ட் டிஸ்க் பிரச்சனை
வந்தது, ஹார்ட் டிஸ்க் போய் யூ.பி.எஸ் பிரச்சனை.
இணையத்ட் தொடர்பில் பிரச்சனை என மாற்றி
மாற்றி ஏதாவது ஒன்று மாற்றி மாற்றி வந்துக் கொண்டிருக்கும். ஒரு வழியாக எல்லாமும் சரியாகி
ஒருவாரமாகியும் கணினி முன் உட்கார முடியவில்லை. நம்ம தலையெழுத்து நம்மை ஆல்ட் டேப்**
எழுத்தாளராகவே வைத்திருக்குமா என்று நேற்றுவரை நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நேற்றிரவும் அப்படித்தான்
ஒரு மண் சார்ந்த கதையை எழுத வேண்டும் என்கிற ஆசையோடு சாணைக்கல்லில் உராயும் உலோகம்
போல வண்டியைத் தேய்த்தபடியே ஓட்டிக்கொண்டு வந்தேன். தீட்டிய அரிவாளில் எழுமிச்சை சொருகி
வேடிக்கை காட்டியது விதி.
பதினோரு மணிக்கு
மேல் அலுவலகத்திலிருந்து ஒரு நபரை, வாகனத்திற்கானத் தகுந்த ஆவணத்தை பிரதியெடுத்து கையில்
கொஞ்சம் பணத்துடன் வருமாறு சொல்லிவிட்டு நானும் கிளம்பலானேன்.
சும்மாவே நம்ம
ஏரியால அம்மா-மகன் செண்டிமெண்ட் ஜாஸ்தி. இதுல பேலியோ டயட்னு ஒரு புண்ணியவதியின் டயட்டை
தொடர்வதால். நான் இளைப்பதை ஒரு கண்ணில் ஆனந்தத்தோடும் மறுகண்ணில் வருத்தமுடனும் பார்க்கும்
கதக்களி நயனங்கள் என் அம்மாவுக்கு உண்டு. போதாதைக்கு டயட்டில் 11 மணிக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கம்
உருவாகிவிட்டதால், நான் என் வாகனத்தை எடுக்கப்போகிறேன் என்றதும் அம்மாவுக்கு
ஒரே பதட்டம். ‘என்னமோ ஏதோ பிரச்சினை’ என்று நம்மைக் கேட்க, நான் இருக்கும் கடுப்பில் அவருக்கு
நேரிடையாக எந்த பதிலும் சொல்லாமல் கர்நாடகா அரசின் மெத்தனத்தோடு வண்டியைக் கிளப்பினேன்.
போரூர் டோல்கேட்டைத்
தாண்டி வாகனம் நிற்கிறது. அலுவலகத்திலிருந்து ஆள் வரும் வரை காத்திருக்கலாம் என்று
அடைக்கவிருந்த ஒரு பேக்கரியில் வண்டியை நிறுத்தி, இருக்கின்ற கோபத்தை டயட் சீட்டிங்
செய்து ஆற்றுப் படுத்தினேன். இப்படியாக நித்தமும் காரணம் கிட்டக் கடவுக.
டோல்கேட் ஒரு தனித்த
உலகமாக இருக்கிறது, முன்பெல்லாம் பயணவழி உணவு விடுதி எனக்கு ஆச்சரியமான ஒன்றாக இருக்கும்,
நகரத்திலிருந்து துண்டித்து பெரும்பாலும் அருகே எந்த கிராமமும் இல்லாத விடுதிகளில்
வேலை செய்யும் ஆட்கள் அவர்கள் வாழ்க்கையை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
நான் சொல்வது 90களில் ஆரம்பித்த தசாப்தத்தை. (அதற்குப் பின்னர் அவ்வாறான விடுதிகள்
மீது சாபமிடவே தோன்றுகிறது). இப்போது டோல்கேட்டும் அப்படித்தான்.
சுங்கசாவடி என்றழைக்கப்படும்
சுங்கவரி வசூலிக்கும் கொள்ளைக் கும்பலோடு, சாலைப்போக்குவரத்து அதிகாரிகள், ரோந்து செல்லும்
காவல் துறை, வணிக வரித்துறை அதிகாரிகள் என்கிற கும்பலும் இருக்கிறது. பகலை விட இரவு
சுறுசுறுப்பாக இருக்கிறது, ஒன்றிரண்டு தேநீர் கடைகள், இளநீர் கடைகள் என ஆளுங்கட்சி
உறுப்பினர் அட்டை வைத்துக் கொண்டவர்களுக்கு தொழில் செய்யும் இடமாகவும், நீண்ட வரிசையில்
நிற்கும் வாகனங்களை வைத்துப் பார்க்கும் போது, நெடுஞ்சாலைப் போக்குவரத்து உண்மையிலேயேக் காலத்தை மிச்சப்படுத்துகிறதா என்று யோசிக்க வைக்கிறது.
கோபு ராசுவேல்
சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, 2000ங்களில் கடலூரில் இருந்து பாரீஸுக்கு செல்லும் பேருந்துகளில்
இடது முகப்பில் 3.30 மணி நேரம், 04 மணி நேரம் என்று சென்னைக்கு செல்லும் பேருந்துகளில்
பயண நேரம் ஒட்டப்பட்டிருக்குமாம். ஆனால் இப்போது அதிவிரைவு ஆம்னி பேருந்தில் கூட நான்கரை
மணி நேரம் ஆகின்றது, அரசுப் பேருந்துகளில் என்றால் 05.30 மணி நேரம் வரை ஆகிறது. சாலைப்
போக்குவரத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும், விபத்துகளினால் ஏற்படும் மரணங்களின்
சதவீதம் ஏறியதாகச் சொல்கிறார்கள். உடலுறுப்பு மாற்றம் செய்யப்பட்டவர்களின்
SURVIVAL RATE போல விரிவாக்கப்பட்ட சாலைகளினால் உண்டாகும் பிரச்சனைகள் அதற்கு முன்பிருந்ததை
விடவும் ஏராளம்.
பல்கிப் பெருகிப்
போய் விழாக் காலங்களில், விடுமுறைக்காலங்களில் பல கிலோமீட்டர் நீளத்திற்கு க்யூவில்
நிற்கும் பேருந்துகளும், லாரிகளும் மிக அபத்தமான சாலைப் போக்குவரத்து முறைகளைக் கொண்ட
நாடுகளில் நிரந்தர இடம் பிடிக்கும் நாடாகவே காட்சியளிக்கிறது. RFID என்கிற தொழிற்நுட்பம்
இந்தியாவுக்கு வந்து பிரபலமாகியது ஆம்னி பஸ்களின் காலத்திலிருந்தே தான், ஒவ்வொரு வாகனத்திலிருக்கும்
ஆர்.எஃப்.ஐ.டி பார்கோடினை ஸ்கான் செய்தாலே அந்த வாகனத்திற்குறிய சுங்கக் கட்டணம் அதற்கான
வங்கிக்கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளும்படி வைத்துக்கொண்டால் மிகப்பெரிய அளவில் இந்த
நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஒரு பெரிய நிறுவனம் இந்தியா முழுக்க டெண்டெரெடுத்து,
மக்களவையில் அறிவித்து, ஜனாதிபதி உரையில் அறிவித்து இதை ஒரு புரட்சியாக செய்தால் தான்
டிஜிட்டல் இந்தியா உருவாகும் அல்லவா. ஆனால் இப்படியானத் தொழிற்நுட்பத்தை பல தொழிலதிபர்களும்,
அரசியல்வாதிகளும் கடுமையாக எதிர்ப்பார்கள்.
ஏனென்றால் முறையான
உரிமம் பெறாத வாகனங்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது என்று
ஒரு முன்னாள் சாலைப் போக்குவரத்து அதிகாரி சொன்னது ஞாபகமிருக்கிறது.
நேற்றும் கூட வணிகவரித்
துறையினர் நிப்பாட்டிய சில வாகனங்களில் கண்ணாடி கூட இறக்கப்படாமல் வாகனவோட்டிகள் செய்த
சமிஞைகளுக்கு கட்டுப்பட்டு வாகனங்களை சோதனை செய்யாமல் அனுப்பிய அதிகாரிகள்(அல்லது அதிகாரிகளின்
டிரைவர்கள்). அவர்களுடைய முகங்கள் இந்த தேசத்தின் சமரசங்களின் அடையாளம்.
நினைத்துப் பாருங்கள் வங்கிக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட கரன்சிகளில் நிரப்பிய அம்மூன்று கண்டெயினர்கள் எங்கெங்கு சென்றது என்பதை சுங்கச்சாவடியில் எடுக்கப்படும்
ஆர்.எஃப்.ஐ.டி ஸ்கேன் அறிக்கைகளில் கண்டுபிடித்து விட முடியும். அமுல்படுத்தப்படும்
புதிய சாலை விதிச்சட்டம் என்னென்ன கேடு தரவிருக்கிறதோ தெரியவில்லை, இந்த நல்ல விஷயத்தைக்
கட்டாயமாக்கினால் புண்ணியம்.
சரி நம்ம கதைக்கு
வருவோம், நம்ம வாகனம் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்க, தாளமுடியாத கொசுக்கடியில் இத்தனை
சமாச்சாரங்களை அவதானித்துக் கொண்டிருந்த ஆர்வத்தின் செவிலில் பவ்யமாய் அறை விட்டது,
ஓட்டுனரின் புலம்பல். அவர் தோளில் தட்டியபடி, அங்கு அபராதம் கட்ட வரிசையாக நின்று கொண்டிருந்தவர்களில் கடைசியாகப்
போய் நின்றுக் கொண்டேன். ஒவ்வொரு கோப்பினை
முடிப்பதற்குள்ளும் பத்து முறையாவது கொட்டாவி வந்தது அந்த அதிகாரிக்கு. இத்தனை தாமதமாகப்
போனதும் ஒருவிதத்தில் நல்லது தான். இருபத்தெட்டு லட்சமுள்ள பொருட்களுக்கு ஐந்து சதவீத
அபராதம் என்று கால்குலேட்டரில் கணக்கு போட்டார். என் கையிலிருந்த சொற்ப பணம், அலுவலகத்திலிருந்த,
சக ஊழியரிடமிருந்த பணமென்று நாங்கள் திரட்டிய பணம் வெறும் பதினோராயிரம் தான் இருந்தது.
இத்தனை யோக்யதை
பேசுறோம், நம்ம நிறுவனத்திற்காக கையூட்டு கொடுப்பது மட்டும் எந்த விதத்தில் ஞாயம் என்று
தோன்றினாலும், அதிகாரிகள் முகம் சற்று நேர்மையாளர்களாகத் தான் தெரிந்தது. எல்லாவற்றிட்கும் ரசீது கிழித்துக்கொண்டிருந்தார், அவருக்கும் டார்கெட் பிரச்சினை, டார்கெட் தாண்டிய பின்னர் தான தனக்கான வரும்படி போல. நமக்கு எதுக்கு வம்பு என்று நொந்தபடி “சார் பணம் கொஞ்சம் கம்மியா இருக்கு” என்றேன்.
”எவ்வளவு”
“வெறும் 11000
தான் சார் இருக்கு. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்”
“உங்களப்பார்த்தா
பாவமா இருக்கு, இந்தப் பணத்தை எப்படி க்ளைம் பண்ணுவிங்க?”
“எங்க சார் கஸ்டமர்
கிட்ட இருந்து வசூலிக்க முடியாது. எங்க மேலதான் தப்புன்னு சொல்வார்”
“சரி உங்களுக்காக
மூவாயிரம் கொறச்சே வாங்க்கிறேன். ஆனா இனிமே இதமாதிரி நடந்துக்காதிங்க. நீங்கெல்லாம்
படிச்சவங்க தானே!!”
அதிகாரிகளுக்கு
நன்றி சொல்லிவிட்டு கடந்து செல்கையில் தான். ட்ரைவர் சிரித்தபடியே வந்துச் சொல்லிவிட்டுப்
போனார்.
“28 லட்சத்துக்கு
ஐந்து சதவீதமென்றால் 140800 தானே வரும்.. நீங்க என்ன ஒரு மூவாயிரத்தி சொச்சம் கம்மியாயிருக்குன்னு
சொல்றிங்க அவரும் உங்களுக்காக வாங்கிக்கிறேன்னு சொல்றாரு… ” என்றார்.
“எப்படி எப்படி?” என்று மறுபடியும் ஆவணத்தைப் பார்த்தேன் 28 லட்சத்து
சொச்சத்தில் 05 சதவீதம் 140800ரூபாய்களே வந்தது. எப்படி எங்கள் கண்களுக்கு அது
14800 என்று தெரிந்தது.
மறுபடியும் ட்ரைவர்
என்னிடம் “எப்படி சாரி நீங்க 14000னு சொன்னத அவரும் நம்பினார், அவர் தான கால்குலேட்டர்ல
போட்டார்?” என்று கேட்டபொழுது.
எனக்கு தூத்துக்குடி கேசரி
ஞாபகம் வந்தது. செல்போனில் அவளுக்கு ‘குட்நைட் J J’ என்று தகவலனுப்பிக் கொண்டே சிரித்தபடி
ட்ரைவரிடம் சொன்னேன்.
“நான் பத்தாங்கிளாஸ்ல
கணக்குல 97 மார்க் தாம்பா வாங்குனேன்”
“அப்போ அந்த அதிகாரி??”
“அவர் நூத்துக்கு
நூறு மார்க்கும் வாங்கியிருப்பாரு” என்றேன்..
சலிப்பு, சிரிப்பு,
கோபம் மூன்றும் கலந்த கலவையோடு சொல்லிக்கொண்டே போனார்.
“அதனால தான் நான்
கணக்குல ஃபெயிலாயிட்டேன்”
- ஜீவ கரிகாலன்
பின் குறிப்பு
:
** ஆல்ட் – டேப் எழுத்தாளரென்றால் – கீ போர்டில் ஆல்ட்
டேப் பொத்தான்களைப் பயன்படுத்தி யாரும் பார்க்காத பொழுது எழுதுபவர்கள் என்று அர்த்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக