வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

முட்டாளும் அதிர்ஷ்டசாலியும்

அந்தக் குளிர்சாதனப் பேருந்து பைப்பாஸிலிருந்து மாமல்லைக்குள் நுழைந்தது…..
இவ்வுலகில் அறிவை நம்புவது தான் ஆகச்சிறந்த மடத்தனமான செயலென்று, இன்னமும் இறுகப்பற்றினேன் அவள் கரங்களை. சட்டென உதரினாள். பெரிதாக எந்தக் காரணமுமில்லை. ஆனாலும் அவள் உதறினாள். இப்பொதும் அறிவென்கிற மூடநம்பிக்கை எல்லாவற்றையும் அனுமதித்தது.

“இவ்வுலகில்” 

“வாட்??”

“நாம் ஒரு மூவாயிரம் ஆண்டுப் பழைய நகரில் இருக்கிறோம்”

“அதுக்கு என்னடா இப்போ”

”நாம் தரையிலிருந்து சில நூறடிகள் மேலே இருக்கிறோம்”

“ம்ம்ம்… நீ மரியாதையா.. ஒழுங்காப்பேசுடா. இந்தசெந்தமிழ்ப் புலமையெல்லாம் எடுத்துக்கிட்டு என்கிட்ட வாராத”

“நமக்கு கீழ் இருக்கும் இவ்வொரு அடியும் ஒவ்வொரு தசாப்தங்கள் என்று நினைத்துக் கொள்”

“லூசா நீ”

”நம்மைச் சுற்றி நான்கு புறம் நீர் இருக்கிறது, எதிரே கடலும், நம்மைச் சுற்றி ஒரு நதியுமென நாம் சூழப்பட்டிருக்கும்”

“ஏ லூசு உனக்கு என்ன ஆச்சு?”

“கடல் விழுங்கிக் கொண்டிருக்கும் இந்நகரின், அந்த மூழ்கியத் தெருக்களில் கைகள் கோர்த்து நடமாடியப் பொழுதுகளோ, இல்லை நமக்குள் ஊடல் கொண்ட பொழுதுகளோ உனக்கு ஞாபகம் வரவில்லையா?”

“நீ இங்கயே பெனாத்திக்கிட்டு இரு…. நான் கீழே எறங்குறேன்”

 ‘இவ்வுலகில் முட்டாள்களுக்கு….’

அவள் கைகளைப் பிடித்து இழுத்தேன். ஆபரணங்களற்ற அவள் கைகளில் லேசான அந்த உரோமங்களே அவளது ஆபரணங்களாகத் தோன்றியது. அவள் உடலில் வலுவிருக்கிறது என்று தெரிவித்தாள். இன்றும் என் கண்களின் பாவனை அவளிடம் இரக்கத்தைக் கோரியிருக்கலாம். அவளும் கரிசனமிக்கவள் தான். ஆனால் அவளுக்கு நான் அவற்றையெல்லாம் காண்பிக்க முடியாது போய்விடும்.

வலுக்கொண்ட அவள் கரங்களுக்கு என் முதல் முத்தம் வைத்தேன். சட்டென மார்பில் குத்தினாள். சிரித்தேன். முறைத்தாள். ஏன் இவையெல்லாம் ஒரு ஒழுங்கில் நடக்கிறது என வியந்தேன். ஒவ்வொரு காலத்திலும் இதையே தான் நான் அனுபவித்திருக்கிறேன்.

 ‘இவ்வுலகில் முட்டாள்களுக்கு மட்டுமே ……’

இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவள் இறங்கியிருக்கலாம் என்று ஞாபகம் வர படிக்கட்டுகளை நோக்கி விரைந்தேன். திரும்பிய கணமே எதிரில் நின்றாள். அவள் போகவில்லை. என்ன என்று அவள் கண்கள் என்னை ஏளனமாகக் கேட்டன..

’இவ்வுலகில் முட்டாள்களுக்கு மட்டுமே …… அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றிருக்கிறது’

அவள் தோலின் நிறத்திற்கு மிக அருகாமையிலிருக்கின்ற மஞ்சள் வண்ணத்திலான புடவை அது. அதிகாலையில் சந்திப்பைத் தவிர வேறு எந்தத் திட்டமும் முடிவாகாது உறுதி செய்ததைப் போல, மஞ்சளைத் தவிர வேறு எந்த டிஸைனும், அலங்காரமும் இல்லாத உடை. அவள் அந்த ஆடைக்கு அலங்காரமாக இருக்கிறாள் என்று சொல்லிப் பார்க்கலாம். ஆனால் அவள் இந்த ஜோடனைகளில் சந்தோஷம் கொள்பவள் அல்ல.

’இவ்வுலகில் முட்டாள்களுக்கு மட்டுமே …… அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றிருக்கிறது. துரதிர்ஷடவசமாக அவர்களின் காதல் அறிவாளிகளுடன் அமைந்து விடுகிறது’

”ப்ளீஸ் இங்க வாடா”

அவள் புன்னகைத்தபடி வந்தாள்.

“ஹனி..”

“இங்கபாரு மறுபடியும் சங்ககாலம், முன் ஜென்மம்னு லூசு மாதிரிப்……” இடையோடு சுற்றிவளைத்து சுவரோரமாக அவளை அமர்த்தினேன். இரண்டாம் முத்தத்தை அவள் நெற்றியில். கொடுத்தேன்.

”லூசி மாதிரிப் பேசுன, நான் கீழே இறங்கிப் போயிடுவேண்டா”

நான் இனிப்பேசப்போவதில்லை. அவள் கண்களில் ஒன்னொன்றாக முத்தமிடும்போது

“சரி விடு் நாம ப்ப்ப்” இன்னும் கொஞ்ச நேரத்திற்கு எதுவும் சொல்ல மாட்டாள்.
அது வசந்தத்தை, மதுரத்தை, உயிரைத் தொட்டுக்காட்டியது, என்னுள் ஒடுங்கியிருக்கும் அவள் சின்ன உடலில் இருக்கும் வலிமையான ஆன்மா முழுமையாகப் பிரகாசமாய் இருப்பதாக, அவள் மூச்சுக் காற்று சொல்லியது. அந்த ஜீவனின் கதகதப்பில் சுரந்த சுரப்பிகள். இதுவரைப் பருகாதவொன்றை ஊற்றிக் கொடுத்தது. ஒன்று இரண்டு மூன்று என மிடருகளாய் என்னுள் இறங்கி என் இதயத்தின் பெரிகார்டியத்தை உறுதியாக வைத்திருக்கும்.

விலகினேன்

“லூசு..”

சிரித்தேன்.

’இவ்வுலகில் முட்டாள்களுக்கு மட்டுமே அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றிருக்கிறது. துரதிர்ஷடவசமாக அவர்களின் காதல் அறிவாளிகளுடன் அமைந்து விடுகிறது. அதனாலேயே அவர்கள் அதிர்ஷ்டவசமாக உண்மையிலேயே காதலித்து விடுகிறார்கள்’

சுற்றுமுற்றும் பார்த்தோம் வாரநாளொன்றில், உச்சிவெயிலில், அந்தக் கலங்கரை விளக்கில் ஏறிட யார் தான் விரும்புவார்கள். ஒரு முட்டாளும், ஒரு அறிவுள்ளவளும் இதில் விதிவிலக்கு. அன்றைக்கு அமாசை என்றாலும், வழமைக்கும் சற்று அதிகமாகவே ஆர்பரித்தது கடல். பன்னீர்த் தெளிப்பாக ஒன்றிரண்டு தூரல்களை வானம் தூவ. கொஞ்சம் அவளோடு நெருங்கினேன். அவளும் நெருங்கினாள். அவள் ப்ரவுன் நிறக் கண்களில், ஏதோ தெரிந்தது. முத்தமிடுவதற்கு முன்பாக, அவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்து, நெற்றியோடு நெற்றிவைத்து அவள் கண்களின் ஆழத்தில் செல்லலானேன்.

எங்கு நோக்கினும் உளியின் சப்தங்கள். சிலைகள் சில உயிர்பெற்றும் சில உயிர் பெறாமலும், சில வெறும் பாறைகளாகவும் தென்பட்டன. அவற்றின் மீது இன்றைய ஆடுகளைப் போலவே, தம்மையும் செதுக்கு அல்லது தம்மையும் வணங்கு என்று சொன்னபடி ஆடுகள், அது ஒரு திருவிழாக்கோலம் பெருந்திரளான மக்கட்கூட்டம், யாரோ நகர்வலம் வருகிறார்கள், கோயிலின் மணிச்சப்தம் சற்றே தொலைவிலிருக்கின்ற கடலலையோடு சேர்ந்து ஒலித்தது மனதை மயக்கநிலைக்கு ஆட்படுத்தியது.


அக்கணமே! அங்கே கூடியிருந்த மக்கள் சட்டென விலகி இருபுறமாகப் பிரிந்துவிட, ஒரு பல்லாக்கு அலங்காரத்துடன் அவ்வூரில் கோயிலை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது. தடித்த உருவமுடைய நால்வர் அதைச் சுமந்தபடி ஓடி வந்துக் கொண்டிருந்தனர். உச்சிவெயிலின் காரணமாக, வெயிலில் அதிகம்பட்டிருக்காத சந்தியாவேளையில் உள்ள சூரியனின் நிறம் கொண்டப் பேரழகியான அவள் கீழிறங்கியவுடன் சூரிய வெப்பத்தில் நிலை குலைந்தாள். அவள் கீழே விழும்முன் சட்டென அவளைத் தாங்கிப் பிடித்தான் பல்லாக்குத் தூக்குபவன். சுதாரித்த அந்தப் பேரழகி அவனுக்கு நன்றி சொல்லிப் புன்னகைத்து விட்டு கோயிலுக்குள் சென்றாள்.
அதுவரைப் பொறுமையாக இருந்த வேறு ஒரு அதிகாரி ஒருவன், அவளைத் தொட்ட அடிமைக்கு தண்டனையாகக் கசையடி கொடுக்க வேண்டும் எனத் திமிரினான். தடுக்க யாருமில்லை, மன்னிப்பை யாசிக்காத அடிமை அடி வாங்குவதற்குத் தயாராய் கண்களை மூடிக்கொண்டான். அப்பேரழகியின் சிவந்த, விரிந்த இதழ்கள் அவண் கண்களில் நின்றது, உதடுகள் புன்னகைத்தது..

அவனைப் பழிவாங்கத் துடிக்கும் சவுக்கின் நுனியில் இருந்த உலோகத் துண்டுகள் தோலினையே கிழித்துப்போட்டுவிடும். அவனை நோக்கு சுழன்றது அந்த அதிகாரியின் ஏவலுக்கு அடிபணிந்த மற்றொரு அடிமையின் கைகளில் இருந்தக் கசையானது. அதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் யாவரும் கண்களை மூடத் தயாரானார்கள். 
வன் அவளை நினைத்துக்கொண்டே இருந்தான்.

முதல் அடியிலேயே அவனது இடது தோளில் இருந்து முழங்கைகள் வரை தோல் கிழிந்து குருதி வடிந்தது.

கலங்கரை விளக்கத்திலிருந்து கீழே செல்லும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் கடலோசைகளுக்கு நேர்மாறாய் இருந்தது. என் இடது கைகளினூடாக அவள் இரண்டு கரங்களைக் கொண்டும் பற்றியபடி என் இடப்பக்கம் முழுமையாகச் சாய்ந்தாள்.. என் இடத்தோளிலேயே ஒரு முத்தமிட்டு என்னைப் பார்க்கமலேயே சொன்னாள்.

“நீ ஒரு லூசுடா…”


 இவ்வுலகில் முட்டாள்களும் அறிவாளிகளும், அதிர்ஷ்டசாலிகள் முத்தங்களை சமன் செய்து கொள்வார்கள். துரதிர்ஷ்டசாலிகள் மிச்சம் வைத்திருப்பார்கள். ஆகவே மற்றொரு ஜென்மத்திலும்.......

கீழே இருந்தபடி எங்களை ஒரே ஒரு சிறுவன் மட்டும் கவனித்துக் கொண்டிருந்தான். நான் புன்னகைப்பது அவனுக்குப் புரிகிறதா என்ன??



1 கருத்து:

  1. ஒரு பயணம், அந்த பயண இடத்திலிருக்கும் ஆதியென அத்தனையையும் முடிச்சுப் போட முடிகிற மனம் எல்லாக்காலத்திலும் திறந்தே இருக்கிறது. அதில் எழுதப்படுகிற குறிப்புகள் காலங்களை மீறிக்காட்டுகிறது..

    மாமல்லையில் பயணம், மாமல்லை உருவாகிய பயணம் இதில் இரண்டுக்கும் இடையே இருந்திட்ட காதல் புனைவாயினும் அப்படி ஒரு காதல் அன்று இருந்திடவே செய்திருக்குமென்று அழுத்தமாய் தோன்றியது..

    மறுபடியும் கல்கியையும் சாண்டில்யனையும் வாங்கிச் சேர்க்க மனம் இன்னும் வேகமாய் பிரியப்படுகிறது..

    அறிவு, முட்டாள் தனமென்ற இரண்டிற்குமான அறிதலே ஓர் அறிவு தானோ?

    அன்பின் மிகுதியில் முட்டாள்தனங்கள் அறிவாளித்தனம்.. அறிவாளித்தனம் குறைந்த முட்டாள்தனம்..அது எதிர் எதிரை எப்போதும் ஈர்க்கிறது.. அறிவு மூட நம்பிக்கையாகிடும் போது அதன் கண்மூடித்தனம் முட்டாள் தனத்தை ஏற்கிறதோ?

    எது எப்படியோ காலங்களைக் கடந்த அன்பிற்கு அறிவாளித்தனமும், முட்டாள்தனமும் தன்னைக் கடந்து வெளிப்படுகிற இடம் ஓர் உன்மத்தம்.. அங்கே கற்கள் சிலைகள்.. சிலைகள் ஆட்டின் இருக்கைகள்.. ஒரு சத்தத்தில் உருமாறுகிற தோற்றம் தான் முத்தத்திற்கும், முன் ஜென்மத்திற்குமான பயணவெளி.. அது அகத்திலிருந்து கிளம்பும் பல்லக்குத் தூக்கியின் நீண்ட தரிசனம்..

    தலைப்பு ரொம்பவும் கெட்டிக்காரத்தனமாய் இருக்கிறது..

    முட்டாளும் அறிவாளியும் மாறி அதிர்ஷ்டசாலியும் என்ற இடத்தில் மீள் வாசிப்பில் கதை இன்னும் சுவாரஸ்யமாகிறது..

    எனக்குப் பிடிச்சிருக்கு அண்ணா :)

    பதிலளிநீக்கு