எழுதப்படுபவைகளும் வாசிக்கப்படுபவைகளும் விதிவசத்தாலே தான் நிகழ்கிறது என்று முன்னாள் காம்ரேட் ஒருவன் சொன்ன நாளொன்றில் தான் இது நிகழ ஆரம்பித்தது.
“எது”
“அது தான்”
சொற்களில்
இருக்கின்ற அயற்ச்சிக்கு மொழியையும் பயிற்றுனரையும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை, நாற்பது நாட்களுக்கொருமுறையாவது முடிவெட்டுவதற்கு சலூன் செல்பவர்களால் இவற்றைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. வெட்டுவது, வளரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் முதலீட்டு அனுமதி தான். அந்த முன்னாள் காம்ரேடின் பயணத்தில் ஒன்றில் சூனியக்காரி ஒருத்தியைக் கண்டதில் அவன் வியந்ததாகச் சொல்லியிருந்தான். அன்றிலிருந்து நான் அவனை நம்ப ஆரம்பித்தேன். அதுவரை இல்லாமல் இப்போதுவரை நான் அவனை காம்ரேட் என அழைக்க ஆரம்பித்தேன். இப்போது அவன் சொன்ன வாக்கியம் எனக்கு முக்கியமாகத் தெரிகிறது
இதில்
சுவாரஸ்யம் என்ன என்றால், இந்த எழுத்துகளுக்கு ஆதாரமாக அவர் சொன்ன வாக்கியம் அமைவது தான். இன்று தன் ஆதர்ஸங்களின் ஒருவனின் மறைவை அனுஷ்டிப்பதற்காக மதுபுட்டியை எடுத்துக்கொண்டு செல்லும் வழியில் அவன் என்னோடு பேசினார். அப்போது தான் அந்த வாக்கியத்தை உணர்வுவயப்பட்ட
நிலையில் பேசினார். உணர்வுவயப்பட்டால் அதில் பொய் கலந்திருக்கமுடியாது அல்லவா? அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்
நூற்றுக்கணக்கான புத்தகங்களில் எந்த புத்தகம் வாசிக்கப்படவேண்டும் என்பதை உங்கள் விதி
தான் தீர்மானிக்கிறது. என்ன நம்பவில்லை, ஆகச்சிறந்த்தென நீங்கள் நம்பும் ஏதோவொன்றினை
விட்டுவிட்டு இப்போது இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களை விதி தானே அனுப்பிவைக்கிறது.
துரதிர்ஷடமாக இந்த வரிகளில் என் நண்பர் என்று அவரைக் குறிப்பிட்டதால், இவற்றிட்கு கொஞ்சமும்
சம்பந்தமற்ற என்னை இந்தப் பக்கங்களில் நுழைத்து விட்டதற்காக நான் தங்களிடம் மன்னிப்பு
கேட்கிறேன். ஏனென்றால் நான் மட்டும் இங்கே தனியாக வரவில்லை, அதுவும் உடன்வந்துவிட்டது.
ஆர்கெஸ்ட்ராவில்
ஒருங்கிணைப்பாளரின் கைகளைப் பார்த்துக் கொண்டே இசைப்பவனாய் என்னை இங்கே எழுதவைத்துக்
கொண்டிருக்கும் ’அது’வே, உம்மை மன்றாடிக் கேட்கிறேன் என்னை இந்த சம்பாஷனைகளில் இருந்து
உதிர்த்துவிடு, அப்படிச் செய்தால் இதை வாசிப்பவர்களுக்கு உன்னதமானது என்று நம்பும்
ஏதோ ஒன்றினை கட்டமைத்துத் தரயியலும். அது இயல்பாகவே என்னை ஏளனமாகப் பார்க்கும், இப்போது
அதனிடம் மன்றாடிக் கேட்கும் நிலையில் நான் இறங்கி வந்ததைப் பார்க்கும் போது அதன் சந்தோஷம்
பன்மடங்கு பெருகிவிட்டதை உணர்கிறேன்.
வாசிப்பதன் வழியாக
வருத்தப்பட்டு பாரஞ் சுமப்பவர்களே, இறைவன் இருப்பதை நம்புங்கள். விதி இருப்பதை நம்புங்கள்..
நீங்கள் வாசிப்பதை நிறுத்திவிட ஊழி மழை பெய்ய ஆரம்பிக்கலாம், பூமி அதிரலாம், கடல் பொங்கலாம்
வேறெதுவும் ஆகலாம்… அப்போது உங்களுக்கும் எழுதுவதற்கு நிறைய கிடைக்கலாம். ஆம்..
இலக்கியத்தில்
இருக்கும் PATTERN படி நான் இப்போது ஒரு ஃபிளாஷ் பேக் காட்சியைச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.
ஆனால் நான் அந்த பேட்டர்ன்களை நம்பவில்லை, இந்த எழுத்துகள் யாவும் பிழைகள் கூட திருத்தப்படாமல்
அப்படியே வரவேண்டும். ப்ரூஃப் ரீடர்கள் இந்த எழுத்துகளை பார்த்தால் விரைப்புவந்த சேவலாய்
மாறி இந்த அற்பக் கோழியினை வன்புணர்வு செய்வார்கள். கோழிக்கு முட்டை போடும் ஆசையெல்லாம்
வரவில்லை, அது தினமும் ஃபெமினிஸம் பேசும் ஆண்டி ஒருத்தி வீட்டின் கூரைக்கு சென்று வருவதால்
அதன் நிலை அப்படி. ப்ரூஃப் ரீடரோ, எடிட்டரோ கைகளால் தொட்டுப்பார்க்காத கன்னியாகத் தான்
இவ்வெழுத்துகள் உங்கட்கைகளைத் தேடி வரவேண்டும். ஏனென்றால், என்னால் முடிந்த குறைந்தபட்ச
அன்பு அதுமட்டுந்தான். இந்தப் பகுதியை முன்னுரையாக எடுத்துக் கொள்ளுங்கள் இதற்கு முன்னே
எழுதியிருக்கும் மூன்று பகுதிகளை ‘அது’ என் மீது செலுத்தி வரும் அதிகாரத்தின் உதாரணமாக
எடுத்துக் கொள்ளுங்கள்.
இனி நானும் உங்களுக்கு
ஊழிகாலத்தின் கதை ஒன்றினை அறிமுகம் செய்யப்போகிறேன். ஆம் கிட்டதட்ட அதன் விளிம்புக்குள்
நின்று கொண்டிருக்கும் நமக்கு அந்த காலத்தை முன் கூட்டியே அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்பாக
எடுத்துக் கொள்ளலாம்.
(முற்றும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக