வெள்ளி, 25 மார்ச், 2016

அது - 7

அவள் அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டாள் என்கிற உணர்வும், அவள் என்னிடம் ஏதோ மறைக்கப் பார்க்கிறாள் என்கிற உணர்வும் ஒரே நொடியில் கிளர்த்தது. புன்னகைத்தபடி அந்தக் கடிதத்தைக் கையில் கொடுக்கும் போது, அதை அவள் இப்போது படிக்கவில்லை என்றும், தேவைப்படும் பொழுது சொல்கிறேன் என்றும் அவளைப் பொய் சொல்ல வைத்தது. ’அது’ அவளையும் மாற்றியிருக்கிறது. ஆனாலும் அவள் சொல்வதால் அவற்றை ஏற்றுக் கொண்டேன்.

குணப்படுத்த முடியா புற்றுநோய் உலகில் உருவான  கதை பற்றி சாகக்கிடந்த காதல்காரன் ஒருவன் சொன்ன கதையொன்று ஞாபகம் வந்தது.
***
எல்லா உயிர்களுக்குமாக படைக்கப்பட்ட இவ்வுலகு டைனசர்களால் ஆளப்பட்ட போது, சர்வ வல்லமை பொருந்திய சாத்தான் மற்றும் தேவதைகள் ஆகிய இருவரின் தேவையையும் போக்கியது. மற்ற உயிர்கள் டைனசர்களின் ஆட்சியில் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை நடத்தின. படைப்பின் அம்சப்படி டைனர்களின் ஆட்சி வியப்பில்லாத ஒன்று தான். ஆனால், கடவுளையோ அல்லது சாத்தானையோ உயிர்கள் மறந்து போனது அதிர்ச்சியான ஒன்று. டைனசர்களை அழிக்கவேண்டிய நிர்பந்தம் சாத்தானுக்கும், கடவுளுக்கும் இருந்ததால். கூட்டு நடவடிக்கையில் அவ்வினத்தை அழித்துவிடலாம் என்று கடவுளுக்கும் சாத்தானுக்கும் ஏகமனதுடன் உடன்படிக்கை ஏற்பட்டது. 

பின்னர் பூமியின் ஈகோ சிஸ்டம் அழிந்துகொண்டிருந்ததால் நாங்கள் அதை அழித்தோம் என்று மேலதிகாரிகளிடம் பொய் சொல்லிக் கொள்ளலாம் என்றும் முன்தீர்மானம் செய்தாயிற்று. அதுவும் முதல் தகவல் அறிக்கையிலேயே இப்படித் தான் எழுத வேண்டும் என்று ஆட்களைத் தயார் செய்துவிட்டு தான். அவர்கள் என்கவுண்டர் ஆப்ரேஷனைத் தொடங்கினார்கள்.

டைனசர்கள் அழித்தொழிக்கப்பட்டன. ஆட்சி பீடம் வெற்றுக்கட்டிலானது. ஆனால், டைனசர்களால் ஆளப்பட்ட உலகத்தில் மற்ற உயிர்கள் மறந்து போன சாத்தானும் கடவுளும், அவ்வுயிர்களுக்கு முன்னே தோன்றினாலும் உலவினாலும் அவர்களும் இவ்வுலகத்தின் மற்றொரு ஜீவனைப் போலவே எடுத்துக் கொள்ளப்பட்டது. மிகுந்தக் கவலைக்குள்ளான அவ்விருவர்களும், டைனசர்களுக்கு பதிலாக இவ்வுலகை ஆளப் போகும் புதிய இனத்தை தோற்றுவிக்க வேண்டும் எனும் முடிவுக்கு வந்தனர்.

சாத்தானும், கடவுளும் கலந்த ஒரு உருவ அமைப்புடன் மனிதன் உருவானான். அதன் வாயிலாக கடவுள் மற்றும் சாத்தான் அவர்களின் திட்டம் வெற்றியானது.

1.   அவன் உலகை ஆளும் பொழுது உலகத்தின் ஈகோ சிஸ்டம் பாதிக்கப்படும்.
2.   மற்ற ஜீவராசிகளுக்கும் மனிதனே தலைவன் ஆவான்.

3.   மனிதன் வாழும் வரை மற்ற ஜீவராசிகள் தங்களைக் காப்பாற்ற ரட்சகர் வருவார் என்று நம்பிக் கொண்டிருக்கும், மனிதனும் நம்புவான்
ஆனால் இதில் ஒரு குழப்பமும் இருந்த, இந்த படைப்பிலும் அதே மானுஃபாக்ச்சரிங் டீஃபால்ட் வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற சந்தேகம் சாத்தானுக்கு வந்தது. சாத்தான் தான் சந்தேகத்தின் மூலக்கூறு ஆகிறான். ஆனால், அந்த சிருஷ்டியே  சந்தேகத்தின் தர்கத்தில்  தான் உருவாகிறது (அஃப்கோர்ஸ் வித் எக்ஸ்பைரி டேட்).

மனிதன் தங்களில் யாரோ ஒருவரையாவது குறைந்தபட்சம் மறக்காமல் இருக்க வேண்டும் என்றால் அவன் வாழ்நாளில் ஏதாவது ஒரு ஆபத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

”ஆம், மனிதன் தன்னை நினைத்துக் கொண்டே இருக்கும்படி நான் அவனுக்கு ஒன்றை தரப்போகிறேன் அவன் சாகும்வரை அதனால் என்னை நினைத்துக் கொண்டிருப்பான்” என்றது கடவுள்.

சாத்தான் அப்படியேதும் ஒன்றை அறிந்துவிடவில்லை. கடவுள் அளவிற்கு சாத்தானுக்கு புத்தி போறாது. கடவுள் வீட்டிற்கு எத்தனை முறை போய் வந்தாலும் கடவுளின் புத்திசாலித்தனத்தில் கொஞ்சம் கூட சாத்தானுக்கு வரவில்லை. சாத்தான் ஆர்வமுடன் கடவுளிடம் கேட்டான்.

“அப்படியா என்ன விஷயம் அவனை அப்படி பயமுறுத்தச் செய்து வாட்டி வதைக்கும்?”

“அதற்கு மனிதர்கள் கேன்சர் என்று பெயர் வைப்பார்கள்”

கடவுள், அதை சொல்லி முடித்ததும்வெடித்துச் சிரித்ததில், ஏராளமான மின்னல்களும் இடிகளும் பூமியில் தோன்றி மறைந்தன. அந்த வெளிச்சத்தில் கடவுளும், சாத்தானும் கூட்டுக்களவானிகள் என்று உலகமே அறிந்து கொண்டது. தப்பித்த ஒரேயொரு குட்டிடைனசரும், ”சனியனுங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டாய்ங்க” என்று சொல்லிக் கொண்டே அவர்களைச் சபித்தபடி மலையில் இருந்துக் குதித்துத் தற்கொலை செய்து கொண்டது.

சாத்தானும் இப்போது புன்னைகையோடுஇ ருக்க, புத்திசாலி கடவுளுக்குப் புரிந்து போனது.

“என்ன நீயும் அப்படி ஒரு விஷயத்தை மனிதனுக்குத் தரப்போகிறாயா?, அப்படி என்ன ஒரு அம்சம் கேன்சருக்கு இணையாக மனிதனை வாட்டி வதைக்கப் போகிறது?!!”

“அதற்கு அவர்கள் காதல் என்று பெயர் வைப்பார்கள், கேன்சரெல்லாம் இரண்டாமிடம் தான்”.

ஆனால் சாத்தானுக்கு பெருமிதம் மட்டுமே இருந்தது. கடவுளைப் பரிகசிக்கவில்லை.

”எப்படி இந்த யோசனை எனக்கு வாராமல் போய்விட்டதே!!” 

என்று கடவுள் தன்னைத் தானே திட்டிக் கொண்டது.சாத்தான் கடவுளின் வீட்டிற்கு வந்து செல்வதை நினைத்துப் பார்த்தது.

”காதல் . நிம்மதி ..  ஆவ்சம்”
***
நினைவில் புரண்டோடிய பழைய கதையுடன், வீடு வந்து சேர்ந்தேன். “அது” கால் மேல் கால் போட்டுக் கொண்டு, விசில் அடித்துக் கொண்டிருந்தது. அவள் முகத்தில் அப்பியிருந்த அதே போல் புன்னகை.
வலப்புற வயிற்றில் சிறிது நாட்களாக, வலி இருந்து கொண்டிருந்தது.  இப்போது அங்கே லேசான வலி கொஞ்சம் மிதமாக முன்னேறியது. தடவிப்பார்த்துக் கொண்டேன், அந்த இடத்தில் ஒரு கட்டி தென்பட்டது.

அது
அது என் காதலு
அது என் கடவுளு
அது என் சாத்தானு
அது என் கேன்சரு...

கேவலமான கானா பாடல் ஒன்று, ஆனால் அந்த உண்மை கசந்தும் இருந்தது. ஆடவேண்டும் போல இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக