திங்கள், 14 மார்ச், 2016

அது - 05

08/03/2016.     12:56 pm..    செவ்வாய்க் கிழமை:

இந்த வெயிலில்… உன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது… யாரோ பேஸ் கிட்டார் கொண்டு வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்… அதன் நோட்ஸ்களைப் பற்றி வேறெதுவும் எனக்குச் சொல்லத் தெரியாது.
சூழ்ந்துள்ள சப்தங்களை விழுங்கிவிட்டு மற்றவற்றை எழுதிப்பார்க்கும் துர்பாக்கியம் தான் என் முயற்சி என்றாலும்… நான் அதிர்ஷடசாலியும் தான். ஏனென்றால் அதில் நீயும் இருக்கிறாய் அல்லவா?
ஆமாம் நீ என்ன அமானுஷ்யமா?  பூக்கள் பற்றி எழுதினாலும், புயல் பற்றி எழுதினாலும் வந்துவிடுகிறாயே நீ.
நல்லவேளை இங்க் கேட்ரிட்ஜ்களைக் கொண்ட பேனாக்களை நான் உபயோகிப்பதில்லை, எழுதும் முன் தெளித்துப் பார்த்தாலும், அதில் நீ வந்துவிடுவாய் என்று அஞ்சியதால் சொல்கிறேன்.
அவலங்களுக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை பற்றிய சிந்தனைகள், உன்னோடு பேசிக்கொண்டிருக்கும்போதும் வருவது துரதிர்ஷடத்தின் நிழல் தான். ஆனால் அந்த அவலங்களும் என்னைப் போலவே இளைப்பாறத் துடிக்கின்றன. உன்னிடத்தில்.
After all, என்னைச் சுற்றியிருக்கும் அவலங்கள் என்னை விட பருமனானது தெரியுமா? இதுவும் எனக்கு ஓர் ஆறுதல் தான்.
நீ கேட்கிறாய்.. நான் தேடியது அந்த மூன்று வார்த்தைகளையா என்று?? இல்லை நான் தேடுவது நான்கு வார்த்தைகளை.
மூன்று, காலத்தால் சமைக்கப்பட்டு நான்காகிவிட்டது.. வேடிக்கையாய் இருக்கிறது அல்லவா?
“………………….”
இங்கே என்ன அபத்தமாய் இருக்கிறது என்கிறாயா?
காதலைச் சொல்வது கூட ஒரு காலத்தில் அபத்தமாய் இருந்திருக்கவேண்டும் என்று என் நண்பர் சொல்லியிருக்கிறார்.
ஆம். அது காதல் .. அது அரூபம்.. அது காற்று.. அது… அது தான்
அது இப்போது நான்கு வார்த்தைகளாக..
நான்கு வார்த்தைகளாக மாறும்பொழுது, காதல் தன்னை பரிணமித்திருக்கிறது.. அது தன்னைத் தானே ஜீவிக்கத் தெரிந்திருக்கிறது.
பிரிவுகளுக்கு அங்கீகாரமும், முன்னுரிமையும், வாழ்த்தும் கொடுக்கும் அதிகாரப் பீடங்களாக ஜனநாயகம் என்ற பெயரில்…. மாசாகும் சூழலைக் கண்டு மூக்கைப் பொத்திக்கொள்ள மட்டுமே சட்டம் பிறப்பிக்கின்றது.
காதல் எனும் உணர்வை, உணர்த்த இயலாமல், மொழியின் உதவியை நாடுவதே முதலில் காதலுக்கு காலம் கொடுத்த இறங்குமுகம் தான்.
சொல்லித்தான் புரிய வேண்டும்..
புரியும்படி சொல்ல வேண்டும்
சொல்லத் தெரிய வேண்டும்
புரியும்படி சொல்ல வேண்டும்
சொல்ல வேண்டும்
புரிய வேண்டும்
ஏனென்றால் வேண்டும். அது வேண்டும்.
அதற்கும் அது வேண்டும்
இப்போது அது
ஐந்து வார்த்தைகளாகவும் ஆகிறது
”AM IN LOVE WITH YOU” … It’s purely unconditional state.

நீ மறுத்தாலும், பிரிந்தாலும்… “AM IN LOVE” ஆக இருக்கும். மொழி தோற்கும் இடங்கள் உனக்குத் தெரியுமா?
·         பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குவது
·         கடவுளைப் பற்றி புரிய வைப்பது
·         உணர்கின்ற காதலை மொழியாக சொல்லிப் பார்ப்பது
என்ன செய்ய முடியும் இந்த அற்ப உயிரியால்.. அவனுக்கு மொழி மட்டுமே ஏதோ கொஞ்சம் கிடைத்திருக்கிறது.
பால்யத்தில் நம்மோடு நெருங்கி இருந்தவர்களோடு மொழியாலா வாழ்ந்தோம்?
மொழியாலா ஸ்நேகித்தோம்?
விளையாடினோம்?
சண்டையிட்டோம்?
முத்தங்கள் கொடுத்தோம்?
திரும்பப் பெற்றோம்?
ஆனால், அவையெல்லாமே காதல் தான்.. மொழி பிறந்ததும்.. எல்லாவாற்றுக்கும் அந்தந்தப் பெயர் வைக்கத் தெரிந்ததும் விலக ஆரம்பிக்கிறோம். மனிதர்களாகிய நாம் பிரிந்துக் கிடக்கிறோம். சேர்ந்திருக்க வேண்டிய நாம், இத்தனை ஆண்டுகளாய் பார்த்திருக்கவில்லை என்பதே உலகம் எத்தனை மாசுபட்டிருக்கிறது என்பதற்கு உதாரணம்.
உலகம் மாசுபட்டிருக்கிறது.. மனிதம் மாசுபட்டிருக்கிறது.
அமானுஷ்யமே மீட்க இயன்ற ஒரே சக்தி.
காதலே அமானுஷ்யம்
நீயே என் அமானுஷ்யம்
அதுவும் அமானுஷ்யம்….
உன் பாதங்களை எனக்குக் காட்டாதே. இரண்டு பிரச்சனைகள் வரக்கூடும்..
கவிதை எழுதுவேனா என்று கேட்கிறது வேறு பிரச்சனை…. அது சுவாரஸ்யமற்ற இரக்கமற்ற இலக்கிய உலகத்திற்காக வெட்டப்படப்போகும் காகிதக்கூழ் சூல்கொண்ட மரத்தின் வேதனை.
உன் பாதங்களை எனக்குக் காட்டினால், இருவருக்குப் பிரச்சினை. எனக்கும் ”அது’-க்கும்
நான் பாதங்களை நைஸாக ஸ்பரிஸித்து விடுவேன்
’அது’ உன் இருப்பைக் கண்டுவிடும்… துரத்த ஆரம்பிக்கும்..
ஆகவே நீ அமானுஷ்யமாக இரு..
நான் அமானுஷ்யமாக மாறி உன்னைக் கெஞ்சும் வரை, நீ திமிர்ப் பிடித்தவளாகவாவது நடி!!
ஏனென்றால், நாம் இக்காலத்தின் விதைகள். உன் உணர்வுகளை என்னால் புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு இறுக்கமானவளாய் இருக்க வேண்டும்.
*
டெடி பியர், ஆட்டுக்குட்டியாக மாறியதன் பெயர் ரசவாதமா.

“………………….”

!! அது தான் காதலா.. மீண்டும் சொல்கிறேன் கேள்!
*

டெடிபியர் ஆட்டுக்குட்டியாக மாறியது.
இந்தப் பிரபஞ்சத்தில் புதிய நடுகற்களை நட்டு வைத்திருக்கிறாள் நிமினி..
இப்போது பேஸ் கிட்டாரோடு சேர்ந்து, லீட் கிட்டார், ட்ரம்ஸ், சிந்தஸைசர் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.. எல்.ஈ.டி விளக்குகள், பல வண்ணங்களில் ஒளிரும் ஃபவுண்டெயின் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கின்றது.
போதை வஸ்து நிரம்பியிருக்கும் பாட்டிலை வேண்டாமென, ஒரு கிட்டாரிஸ்ட் சுவற்றில் வீசி எறிகிறான். பட்டுத் தெறிக்கிறது அது.. பாட்டும் தெறிக்கின்றது..
He is weird.. just like me..
அந்தக் கலைஞனும் காதலிக்கிறான்… மொழி தேவையில்லை.


*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக