14/03/2016 திங்கட்கிழமை இரவு -10.53
வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு வெளியேறும் வரை எந்த சத்தமும் இன்றி வெளியேறியதால், ‘அது’ தூங்கிக்கொண்டிருப்பதை கலைத்துவிடாமல் வந்துவிட்ட சந்தோசம் எனக்கு. அவள் என்னைச் சந்திக்க ஒப்புக்கொண்ட நாளொன்றின் நிபந்தனையாகக் காலண்டரில் நான் குறித்து வைத்தது அது தான்.
வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு வெளியேறும் வரை எந்த சத்தமும் இன்றி வெளியேறியதால், ‘அது’ தூங்கிக்கொண்டிருப்பதை கலைத்துவிடாமல் வந்துவிட்ட சந்தோசம் எனக்கு. அவள் என்னைச் சந்திக்க ஒப்புக்கொண்ட நாளொன்றின் நிபந்தனையாகக் காலண்டரில் நான் குறித்து வைத்தது அது தான்.
“அது உன் கூட வரக்கூடாது,
நீ மட்டும் தான் வரனும்”
அவள் வந்துகொண்டிருக்கின்றாள், எப்பொழுதும் போல எனக்கு படபடப்பு வரவில்லை இயல்பாய் இருக்கிறேன் என்பதே,
எனது இப்போதைய ஆச்சரியம். என் இயல்பு அவளையும்
சந்தேகிக்க வைக்கிறது. அவள் முகத்தில் பல கேள்விகள் பளிச்சிட்டன.
அவைகளும் அவளைப் போலவே அழகாக இருந்தன..
அவளை உற்றுப் பார்த்தவுடன், ’அது’வின் ஞாபகம்
வந்தது. எழுந்துவிடுமா??.. வேண்டாம் வேண்டாம்.
மீண்டும் இயல்புக்குத் திரும்பினேன்.
அவள் எனக்குள்ளே நான் பேசிக்கொண்டிருப்பதை
கவனித்துக் கொண்டே என்னிடம் கேட்டாள்.
“எப்படி நீ மட்டும்
வந்தாய் ‘அது’வரவில்லை?”
ஆஹா அவளே எழுப்பிவிடுகிறாளே, அவளையும் ஞாபகப்படுத்தி எழுப்பிவிடாதே என்று சொன்னேன். எத்தனை நாள் தான் அவஸ்தைகளை அனுபவிக்கப்போகிறாய் என்று அவள் எனக்குக் கேட்கும்போது,
அவள் பேசுவதில் உள்ள நியாயங்கள் தெரிந்தது. ஆம்
எத்தனை நாள் தான் இப்படியே இருப்பது. என் முகத்தின் மாற்றங்களை,
அவ்வளவு எளிதாக ஸ்கேன் செய்துவிடுகிறாள் என்று அது என்னிடம் எச்சரித்தவைகள்
ஞாபகத்திற்கு வந்து தொலைத்தன. ஆம் அவள் ஸ்கேன் தான் செய்கிறாள்
“ஆம் எத்தனை நாள்
தான் இப்படியே இருக்கமுடியும்.. வாழ்க்கைய ஓட்டித்தான ஆகனும்.
கடமைகள்னு உனக்கும் சில இருக்குல்ல?”
“என்ன தான் செய்யனும்”
என்று தீவிரமாக யோசித்தேன்.
நித்தமும் இப்படி யோசிப்பது தான், இன்று
அவளோடும் சேர்ந்து இதை யோசிக்கிறேன் என்பதில் தான் கூடுதல் லைட்டிங் எஃபக்ட் வந்துவிடுகிறது,
நான் என்ன செய்யட்டும்?
கரிசனமிக்க அந்த கண்கள், இப்படி சொற்களை உதிர்க்க தயாராகி இருக்கிறாள் என்று காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால்,
ஒருவேளை நான் கேட்காமல் இருந்திருப்பேன். ஆனால்
சொல்லிவிட்டாள். நானும் இசைந்துவிட்டேன்.
தோள்களில் தட்டிக் கொடுத்தாள்…. தீர்கமாய் செயல்படவேண்டும்.
1. அது
கொல்லப்பட வேண்டும்
2. அதற்கு
காரணம் அவளில்லை ”நான் தான்” என்று உலக்குக்கு அறிவிக்க வேண்டும்
3. அவ்வளவு
தான்..
முதல் இரண்டு நடந்தாலே வெற்றி தான்
வெற்றி, ’வெற்றி தான்’. ’ஆனால் யாருக்கு?’ பதில் தெரியாது. ஆனால் அவள் சொன்ன ஆலோசனை, நான் கேட்க வேண்டும். “அது” இருக்கும்
வரை அவள் சொன்னதைக் கேட்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதா?
’அதான் இப்பொதும் கேட்கிறேனே..’
எல்லாக் கட்டளைகளிடமிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும். விடுதலையின் தெவிட்டாத ருசி எனக்கு வேண்டும். கொல்வதற்கு
யத்தனிக்கும் என் மனது, உடலின் ஸ்திரத்தை, கழுத்தை நெறிப்பதற்கு ஏதுவாய் கரங்களுக்கே கடத்திக்கொண்டிருக்கிறது.
*
அதிர்ச்சி, வீட்டை நெருங்கவும் தான் தெரிகிறது. வீடு திறந்திருக்கிறது
என்று. கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு என் படுக்கையறையில் இங்கேயும்
அங்கேயுமாக நடந்துக் கொண்டிருக்கிறது. நான் ஒளிந்து கொண்டே,
இப்போது உள்ளே சென்றவுடன். அதை எப்படி சமாளிப்பது
என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். வேர்த்திருக்கும் என் உடலில்
யாரோ ஊதுவது போல் இருக்கத் திரும்பிப் பார்க்கலானேன். அது தான்
ஊதிவிட்டிருக்கிறது.
சத்தமில்லாமல் அதன் பின்னேயே
நடந்து சென்றேன். தூங்குவது பாவ்லா செய்தேன்.
போர்வையைப் பிடுங்கியது. ‘அது’ தான் அசலானத் தூக்கத்தையே பலிகேட்கும். இப்போது நடிப்பது
தெரியாமலா போய்விடும். எதற்கு எழுப்புகிறாய் என்று கேட்ட போது
தான். நான் ரகசியமாய் சென்று வந்ததை தெரிவித்தேன். எப்பவும் தலை கவிழ்ந்தே பேசுவது எரிச்சலாக இருந்தது, அவள் சொல்வது போல அதனைக் கொல்வது தான் சரியென்று மனசு ஒப்புக்கொள்கிறது.
அவளை விட வேகமாக என் மனதைப் படிக்கும் திறன்பெற்றது ‘அது’.
“உன்னால் என்னைக்
கொல்ல முடியாது”
“என்ன முழிக்கறே!!
உன்னால் என்னைக் கொல்லவே முடியாது முட்டாள்”
“நான் சாக வேண்டும்
என்று விரும்புகிறாயா?”
“ஆம்” என்று சொல்லும் போது இதயம் துடிக்கும் ஓசை உடலுக்கு வெளியேயும் கேட்குமளவுக்கு
தாறுமாறாக மாறிக்கொண்டிருந்தது. கொஞ்சம் பெருமூச்சு இழுத்துவிட்டுக்
கொண்டிருந்தேன்.
ஆமாம் நீ சாக வேண்டும்”
“அப்படியென்றால்
இந்தக் கடிதத்தை கொடுத்துவிடு, இதை அவள் வாசித்து நடந்து கொள்ள
வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை இன்னும் 7 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி அவள்
செய்தால் நானே என்னை மாய்த்துக் கொள்வேன். எந்த மானிடப் பதர்களாலும்
என்னைக் கொல்ல முடியாது முட்டாளே!!”
கடிதத்தை என் தலையணைக்கு
அடியில் தான் அது ஒளித்து வைத்திருக்கின்றது இதுநாள் வரை. இல்லை ஒருவேளை இன்று தான் எழுதியதா. திறந்து பார்க்கலாமா
என்று தோன்றிய மனதோடு அதனை நோக்க, அது கூடாது என்று தலையாட்டி
மறுத்தது.
நீட்டிய கரங்களிலிருந்து
தென்பட்ட கடிதச்சுருளினை எடுத்துக் கொண்டு, அவள் வீட்டை நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறேன். வியர்த்தொழுகும் போதோ, திடீர் மழையோ இக்கடிதத்தை அழித்துவிடும் முன், நான் அவளிடம்
இதனைக் கொடுத்து விட வேண்டும் என்று விரைந்துக் கொண்டிருக்கின்றேன். கடிதம் எனும் ரகசியம் என் கையில் தான் சுருண்டுக் கிடக்கிறது, விதி எனும் கயிறு கண்களுக்குத் தெரிவதில்லை, ஆனாலும்
கட்டுண்டதாகவும், கட்டுப்பட்டதாகவும் மனதை எங்கோ நிலை நிறுத்தியிருக்கிறது.
தொலைந்து போகட்டும்.
‘இதோ வந்துவிட்டேன்’
இந்நேரம் விழித்திருப்பாளா? என்றபடி கதவருகில் நின்றுக் கொண்டு கதவைத் தட்ட யோசித்துக் கொண்டிருந்தேன்..
கதவைத் தட்ட கைகளை நீட்டும்
முன்னே,
கதவுத் திறக்கப்பட்டது. சிவப்பு நிற ஆடையில் அவள்.
அந்தச் சிவப்பு நிற ஆடையில்
ஆச்சரியப்படும் விதத்தில் நீல வாசமும், வெள்ளை வாசமும்
நறுமணமாய் திகழ்ந்தன. ஓடிவந்த மூச்சிரைப்பும் அவளைப் பாத்த பிரமிப்பும்
குறைவதற்குள். அவள் மிக இயல்பாய் பேசினா:ள்.
”ம்ம் கொண்டு வந்துட்டாயா
அந்தக் கடிதத்தை?
ம் ? என்ன இப்படி ஈரமாக இருக்கின்றது”
என் கைகளில் இருந்து அவளுக்கு
அக்கடிதச் சுருள் இடமாறியது
*
பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு
துணுக்கு கோள் எதிர்பாராத விதமாகப் பற்றியெரியத் தொடங்கியதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை
என்று இன்னிக்கு சாமக் கோடங்கி சகுனம் சொல்லுவானாக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக