திங்கள் காலை : 11:30
“ம்ம்.. என்ன அந்த லெட்டர அவ படிச்சாளா?”
நான் பதில் சொல்லவில்லை. அது காலாட்டிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு,
“ஓகே நான் செத்தொழிஞ்சா பரவால்லனு தோணுதோ”
ஆமாம் எனக்கு தோணுது.
“அவளுக்கும் தோணுதா?”
அதிலென்ன சந்தேகம் உனக்கு
“சரி… நான் தூங்கப் போறேன்”.
முதன்முறையாக ஓர் இரவில் தூங்கச் செல்கிறது அது.
“இந்த இரவில்… நீ சந்தோஷமாய் இரு” சபித்தலின் மிக இளகிய குரல்
அது.
*
(அது இல்லாத இரவு)
நான் ஆழ்ந்த தூக்கத்தில் இல்லை என்று மனம் சொல்கிறது
அந்த விபத்திற்குப் பின்பு, அது இல்லாத இரவாக இன்று கிடைக்கப்பெற்றிருக்கிறது.
முகம் கழுவிவிட்டு என் அறைக் கதவை திறக்கும் போது, என் அறையின் நிறம் மாறியிருந்தது.
நிறம் மாறிய அறை குறித்த கவலைப்பட அவகாசம் இல்லை. என் எழுது
மேஜக்கு கீழே படுக்கையை விரித்து, நானும் படுத்துக் கொண்டேன். அது இல்லாத இரவில், கண்களை
மூடினால் தூக்கம் வந்துவிடும் என்று யாரோ சொல்லியது போன்ற ஞாபகம். விசித்திரமான இரவாக
இருந்தாலும், ஏற்கனவே எனக்குப் பழக்கப்பட்ட இரவு தான். வயிற்றில் கூடியிருக்கின்ற சின்ன
கட்டியை தடவிப் பார்த்தேன். சதைக்குள்ளே சட்டை பொத்தான் அளவு உருண்டிருந்தது.
படுக்கைக்கு எதிரே நான் படிக்கும்/எழுதும் மேஜையும், நாற்காலியும்
இருந்தது. இப்போதெல்லாம் எதையும் உருப்படியாக எழுதுவது இல்லை, ஏன் வாசிப்பது கூட இல்லை.
அது இல்லாத இரவில், தூக்கம் எளிதானது தான் என்றாலும், உடனேயே
கண்களை மூடக் கூடாது என்று கவனமாய் இருந்தேன். இந்த தனிமையை, இந்த வெற்றிடத்தை, இந்த
நிசப்தத்தை உணர வேண்டும். எத்தனைக் கொடுமையான இரவுகளைக் கடந்திருக்கேன்?. ஒருநாள்
‘அது’ தொல்லை பொறுக்க முடியாமல் அதன் கைகளையும் கால்களையும் சங்கிலியால் கட்டிப்போட,
அது சங்கிலியைத் தரதரவென இழுத்தபடி என்னைத் தொல்லை செய்தது. எத்தனையோ ஸ்லீப்பிங் ப்பில்களை
ஜெம்ஸ் சாக்லேட் போல் கடித்துத் தின்றும், அது தூங்காமல் என்னை வாட்டி வதைத்த இரவுகள்
எத்தனையோ.
வெற்று மேஜையை எத்தனை நேரம் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும்,
ரொம்ப நாட்களுக்குப் பிறகு முதல் கொட்டாவிக்கே மரியாதை செலுத்தி கண்ணயர்ந்தேன்.
ஆழ்ந்த தூக்கத்தில் இல்லை என்று மனம் சொல்கிறது. ஜீரோ வாட்ஸ்
பல்பின் ஒளி, தூண்டி விடும் அரிக்கேன் விளக்கைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாக அறையை வெளிச்சத்தில்
நிரப்ப ஆரம்பிக்கின்றது. கண்களைத் திறக்க முடியாமல் தவிக்கிறேன். திறந்தால் குருடாகும்
சாத்தியமிருப்பதாய் தோன்றியது. இந்த இரவு ஏன் இத்தனை குரூரமாக மாறியது? ஜீரோ வாட்ஸ்
விளக்கிருக்கும் திசைக்கு எதிரிபுறம் ஒருக்களித்துப்படுத்தேன். என் தனிமையைப் போன்ற மேஜையின் தோற்றம் ‘உம்’மென்று
இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமாக எரிந்துக்கொண்டிருந்த விளக்கு, தன் பழைய ஒளிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
சற்றைக்கெல்லாம் அறை எப்போதும் போல இயல்பாக மாறிவிட, கண்களை மூடிப் புரண்டு படுத்தேன்.
கொசுவர்த்திச் சுருளின் நாற்றம், வீட்டில் தான் கொசுவர்த்திச்
சுருள் இல்லையே, பக்கத்து வீட்டிலிருந்து நீள்கிறதா என்று செயற்கையான முடிவுடன். உறக்கத்திற்குத்
திரும்பினேன். ஃபேன் சப்தம் இரைச்சல் மிகுந்ததாய் தோன்றியது. ஆனாலும் கடிகாரத்தின்
நொடிமுள்ளின் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்தது.
கண்களைத் திறந்து பார்த்தேன் கண்முன்னே என் மேஜையும், நாற்காலியும்.
எதிர்புறம் ஒருக்களித்துப்படுத்து மீண்டும் கண்களைத் திறந்தேன்
மேஜையும், நாற்காலியும்
மீண்டும் எதிர்புறம் படுத்துப் பார்த்தேன் அதே காட்சி.
சரி மல்லாக்க படுத்துப்பார்க்கலாம் என்று தோன்றிட அதே காட்சி.
என் மேலே விழுந்துவிடுமோ என்று பயந்தபடி எழ
முயலும் போது, தலையில் தட்டியது நாற்காலி.
பீதியில் கரைந்து கொண்டிருந்தது இரவு. இருள் புதிய நிறத்தில்
பயமுறுத்திக் கொண்டிருந்தது.
சங்கிலியோடு பிணைக்கப்பட்டிருந்த அது தரதவென்று இழுத்ததைப்
போல, இந்த மேஜையையும், நாற்காலியையும் இழுத்து அறையின் வெளியே போட்டேன்.
வெறும் அறை ஃபேனின் சப்தத்தை மட்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
கொஞ்ச காலமாகவே சரியாகத் தூங்காமல் இருக்கும் எனக்கு, தூக்கம் மிக அவசியமானதாகத் தோன்றியும்
தூங்க முடியாமல் என்னை மிரட்டுகின்ற இந்த உருவங்கள், திகிலூட்டுகின்றன. இப்போது அறையில்
எந்தப் பொருளும் இல்லை. கண்ணயர்ந்தேன்.
கனவு உலுக்கிக்கொண்டு விழித்துப் பார்க்கத் தூண்டியது. கண்களை
இறுக்கி மூடிக் கொண்டேன் அந்த மேஜை இப்போது எப்படியும் என்னை மீண்டும் மிரட்டும் என்று
நம்பினேன். என் கண்களைத் திறப்பதர்காக மேஜை முயற்சிப்பதாகத் தோன்றியது. சற்று நேரத்திற்கெல்லாம்
அந்த மேஜையும், நாற்காலியும் இங்கும் அங்கும் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
நரநரக்கும் சப்தங்கள் ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும்
மூளையை இன்னும் உஷ்னப் படுத்த, நரம்புகளுக்கு மூளை இடும் கட்டளைகள் வீபரீதத்தை துவக்கியிருந்தது.
கை கால்கள் வெட்டி இழுக்க ஆரம்பித்தன. இறுதியில் நான் ஓலமிட்டேன்.
என்னைக் ரட்சிக்கப் போகும் கடவுள் யார் ?
*
மனநல
மருத்துவரிடம் சென்ற விஷயத்தை அவளுக்கும், அதுவுக்கும் தெரியாமல் மறைக்க வேண்டும்
என்கிற பதட்டம் வேறு. ஸ்லீப்பிங் டிஸ் ஆர்டர் என்று சொல்கிறார்கள், இன்சோம்னியா
என்று சொல்கிறார்கள்.
ஆனால்
குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் கூட அந்த மருத்துவர் நான் சொன்னதைக் கேட்கவில்லை.
தூங்க முடியவில்லை என்றதும் அவர் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.
”ஸ்ட்ரெஸ்ஸா
ஃபீல் பண்றிங்களா?, சூசைடல் பத்தி யோசிக்கிறிங்களா?”
அதற்கு
சரியான பதிலைச் சொல்லும் முன் ‘அது’வைப் பற்றி முதலில் அறிமுகப்படுத்த
வேண்டியிருந்தது. ஆனால் என் பதிலுக்காகக் காத்திராமல் ஏழு எட்டு மாத்திரைகளின்
பெயர்களை அந்தத் தாளில் எழுத ஆரம்பித்தார். மனம் கூடுதலாக எரிச்சலடைந்தது. அந்த
மருத்துவர் கொடுத்த குறிப்பைத் தூர எறிந்துவிட்டேன்.
மாத்திரை
சாப்பிட்டு அல்சரில் சாவதைவிட, இன்சோம்னியா நோயாளியாகவே இருந்துவிடலாம் என்று
தோன்றுகிறது. அதே போல இன்சோம்னியாவாக இருப்பதற்கு பதில் ‘அது’வுடன் இருந்துவிடலாம்
என்று தோன்றியது. ’அது’ – ஆனால் நான் நோயாளியாக ஆனதற்கும் அது தானே காரணம்.
நண்பர்களை
விட்டு வெகு தூரம் வந்துவிட்டேன். ஒருவேளை அவர்கள் என்னுடனிருந்தால் எனக்கு இவை
நேராமல் இருந்திருக்கலாம், அதுவும் தான். ஏதோ ஒன்றைக் கையில் கொடுப்பதும், பின்னர்
அதைப் பிடுங்கிக் கொள்ளவும் செய்கிறது காலம். இப்போதும் அவர்களைத் தொடர்பு
கொள்ளமுடியும், அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ஏதோ தடுக்கிறது.
ஆரம்பத்தில் ‘அது’ நண்பர்களின் பிரிவை ஈடுகட்டியது, இப்பொது ‘அது’வைப் பிரிந்தால்
நண்பர்கள் தான் ஈடுகட்ட முடியும். ஆனால் நான் அவர்களிடம் செல்லும் பொழுது,
இப்படியான நிலையில் செல்லக் கூடாது. தூங்காத விழிகள், வெயிலுக்கு ஈடுகொடுக்க
முடியாமல் சுனங்கிக் கொண்டிருந்தது.
ஒரு
தேநீர் கடையில் பழச்சாறு ஆர்டர் செய்தேன்.
அவள்
என்னை அழைத்தாள், இன்னும் ஆறுநாட்கள் தான் இருக்கிறது என்றாள்.
அவள் ஏன்
என்னை விட ‘அது’ இறந்துப் போவதை விரும்புகிறாள் என்று எனக்கு வியப்பளித்தது. நான்
அவளிடம் என் அவதிகளைச் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். உண்மையில் அவள் எனக்காகத்
தான் சொல்கிறாளா? இல்லை ‘அது’ அவளையும் துன்புறுத்தியிருக்கிறதா? வாய்ப்பில்லையே.
ஆர்டர் பண்ணியிருந்த பழச்சாறு என் மேஜையில் வைக்கப்பட்டது
அருகில்
அமர்ந்திருந்த நடுத்தரவயதுப் பெண்மணியின் மொபைல் அந்தப் பாடலை ஒலிபரப்பியது. அந்த
மெல்லிய பியானோவும், கிட்டாரும் என்னுள் கணமாக இறங்க ஆரம்பிக்க. கண்களை மூடினேன்.
தொடரும் - அது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக