செவ்வாய், 29 டிசம்பர், 2015

பஜ்ஜி-சொஜ்ஜி - 91 சிற்பம் சொல்லும் ஆருடம்

தமிழகம் 2004க்குப் பிறகு சந்தித்திருக்கும் இயற்கைப் பேரிடருக்கு வெறும் இயற்கையை மட்டும் காரணம் சொல்ல முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தாலும், உலகம் முழுவதும் சென்னை எனும் மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்த காட்சிகளைப் பார்த்தது. அதே வேளையில் பாரிஸில் நடைபெற்ற சூழலியல் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளுக்கான உதாரணமாகவும், பாடுபொருளாகவும் மாறியது. இந்திய ஊடகங்களால் மிக மிகத் தாமதமாகவே கண்டுகொள்ளப்பட்ட இப்பேரிடர், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை ஊடகங்கள் மட்டுமின்றி பிரதானமாக சமூக ஊடகங்கள் வழியும் அதன் வழியாக இயங்கிய தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகள், என்.ஜி.ஓக்கள் எனத் தமிழகத்தில் நடைபெற்ற காட்சிகளில் புதிய அனுபவங்களை உருவாக்கியிருக்கிறது. கட்செவி அஞ்சலிலிருந்தும், சமூக ஊடகங்கள் வழியாகவும் முக்கிய ஊடகங்கள் வழியாகவும் பலயிடங்களில் ஒலிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சொற்றொடரை இங்கே கவனிக்க வேண்டியிருக்கிறது.

 “வரலாறு காணாத வெள்ளம்”.

வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மிகவும் பயன்படும் சொற்றொடராகவும் மாறிப் போனதில், அவை வளர்ச்சியடையா அல்லது வளர்ந்து வரும் நாடுகளை அச்சுருத்தப் பயன்படுத்தும் சொற்றொடராகவும் மாறிப் போயிருப்பதை நம்மில் அநேகம் பேர் உணர்வதில்லை. “கார்பன் கிரெடிட்” போன்ற சூழலை வைத்து ஆடப்படும் சூதாட்டங்களைப் பற்றிப் பேசும் வெளி கூட நம்மிடம் இல்லாமலிருக்கிறது. இது அதிகாரம் மிக்கவர்கள் அதிகாரத்திற்குக் கீழ் உள்ளவர்களைத் தொடர்ந்து அச்சுருத்தி வைத்திருக்க உதவும் மிகப்பழமையான யுக்திதான் மற்றொரு சொற்றொடர்

உலகம் அழியப் போகின்றது

  ரக்‌ஷிக்க இருப்பது யார்??

  • இயேசுவா, விஷ்ணுவா ?
  • அமெரிக்காவா, சீனாவா ? (ருஷ்யாவா என்ற கேள்வியைக் கேட்க முடியாத எதார்த்தத்தில் இருக்கின்றமைக்கு மன்னிக்க)

உண்மையில் வரலாறாக நமக்குக் கிடைத்தவற்றின் வழியாக இந்தப் பெருமழை ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் மிகவும் அதிகமானதுதான் என்றாலும் அதையும் நிறுத்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது. அப்படியென்றால் வரலாறு இன்றைக்கும் நம்பத்தகுந்த மதிப்புகளால் கட்டப்பட்டிருந்தாலும் முற்றிலும் உண்மையானவற்றை மட்டுமே சொல்கின்றது என்று நம்புவதற்கில்லை. ஆனாலும் அறிவியல் பூர்வமான அளவீடுகள், புள்ளியியல் விவரங்கள், அணுகுமுறை (Yardsticks, Approach, Datas) ஆகியன மட்டுமே இங்கே கணக்கில் கொள்ளப்படும்.

ஆனால் அசலான கலை, இலக்கியங்கள் வெறுமனே இதனால் கிடைக்கும் தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை, அது தன் சாளரங்களால், புனைவுகளால் பாதை அமைத்துப் பல சமூகப் பிரச்சினைகளை, அமைப்புகளை அகழ்ந்தெடுக்கிறது, அடையாளம் காண்கிறது/ பயன்படுத்துகிறது/ கட்டுடைக்கிறது/ நிர்மாணம் செய்கிறது படைப்புகளின் வழி மாற்றங்களைக் கட்டமைக்க முயல்கிறது.

ஏற்கனவே இருக்கும் கலை வடிவங்களை DECODE செய்வது இத்தகைய முயற்சிகளில் ஒன்று தான். அது நமக்கு விட்டுச் சென்றிருக்கும் செய்தி சமகாலத்துடன் பொருத்திப் பார்க்க முடிகின்றதா என்று? ம.ரா ஐயாவிடம் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில் போது ஒரு செய்தி கிடைத்தது அது நெடுநல்வாடையின் பாடல் ஒன்றிலிருந்து.

வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை . . (நெடுநல்வாடை)


இதில் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென என்கிற வரியில் “புதுப்பெயல்” எனும் சொல் புதுமழை எனப் பொருள்பட்டாலும். உரையாசிரியர் வழியாக அதுவரை கிடைத்திருந்தச் செய்தியாக  புதுப்பெயலென்பது அந்தப் பருவத்தின் முதல் மழையாக மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டி, ஆனால் ஒரேநாளில் 350மீமீ மழையைப் புதிதாக்க் கண்டிருக்கின்ற நமக்குப் புதுப்பெயலுக்கான பொருள் மாறியிருக்கிறது என்று சொல்லும் பொழுது, வேறு சில கலைப்படைப்புகளையும் அதன் மடிப்புகளையும் விரித்துப்பார்க்க முடிகின்றதா என்று தோன்றியது.

மேலும் அந்தப் பாடல் ஒர் இடப்பெயர்வையும் காட்சிப்படுத்துகிறது. கோவலர் என்கிற சமூகத்தின் இடப்பெயர்வு அது. மாடுகள் தங்கள் கன்றுகளுக்குப் பால் கொடுக்க மறுக்கின்றன, புள்ளினங்கள் மரங்களிலிருந்து வீழ்ந்து சாகின்றன, மந்திகள் குளிரில் கூனிக்குறுகின, விலங்குகள் மேய்தலை மறக்கின்றன என்கிற செய்தி அது ஒரு சாதாரண வெள்ளம் அல்ல என்று உணரச்செய்கின்றது. இவை எல்லாவற்றையும் “புதுப்பெயல்” என்கிற சொல்லில் கிடைத்த சாவியைக் கொண்டுத் திறந்துப் பார்க்க முடிகின்றது. 2000 - 3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பெற்றிருக்கும் பாடல் ஒரு பெருமழையைப் பற்றிய செய்திகளைச் சொல்லும் போது. இந்தப் பாடலைச் சுமந்தபடியே உலகம் முழுவதும் ஒரு சுற்று வலம் வர இடமளிக்கவும் செய்கிறது, இது பெருமழை, பெருவெள்ளம், ஊழிக்கால மழை என்று விரிகிறது.

இதிகாச, புராணங்களையும் அதன் தாக்கத்தால் எழுந்த நுண்கலைகளிலிருந்து வடிவங்களாகக் கிடைத்தவற்றிலிருந்து பெருவெள்ளக் கதையை உலகம் முழுவதும் கேட்கமுடிகின்றது என்பது தனியொரு கோட்பாடாகக் கூடப் பார்க்க முடிகிறது, இதில் பல்மதத் தன்மை அடங்கியிருக்கிறது (Syncretism), நவீன அரசியல், மேலாண்மை தத்துவமாகவும் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது குடிமக்களின் அச்சமே மூலதனமாகவும், அதிகாரத்தை உறுதி செய்யப் பயன்படுவதாகவும் இருக்கின்றது.

பொதுவான காலத்திற்கு முந்தைய (COMMON ERA) காலத்தைச் சேர்ந்த பத்துப்பாட்டுப் பாடலில் இருந்து கிடைக்கும் குறிப்பு நோவா வெள்ளம் என்று சொல்லப்படும் காலக்கட்டத்தைக் குறிக்கின்றதா என்றால் அடிப்படையில் நெடுநல்வாடை பெருமழையைப் பற்றிக் குறிக்கும் பாடல் அவ்வளவே. ஆனால் படைப்புகள் வழியாகச் சொல்லப்படும் மனிதயினத்தின் தவிப்பு, சூழலின் மாறுபாடுகள் போன்ற செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவற்றினிலிருந்து சமகாலத்திற்கு தேவையான தகவல்கள் அல்லது எச்சரிக்கைகள் கிடைக்கலாம். இல்லாவிட்டாலும் வரலாற்றிலேயே முதன்முறை என்கிற அரசியல் பொய்களையாவது நிறுத்துப் பார்க்க முடியும்.

நோவா வெள்ளம் போன்ற அழிவுக் கோட்பாட்டை அநேக மதங்கள் சொல்லியிருக்கும் விதம் மிக மிக ஆச்சரியமூட்டுமளவுக்கு ஒற்றுமையாக இருக்கின்றது. உலகம் முழுக்க உள்ள புராணங்களில் இருக்கும் இத்தகைய ஒற்றுமைகள் இருப்பதை முற்றிலுமாக யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் உலகம் முழுமைக்கும் உள்ள புராணங்கள் ஒரே ஒரு உண்மையைத்தான் மறைத்துக் (உணர்த்தி) கொண்டிருக்கின்றன. இந்தப் புராணங்களுக்கு மத்தியில் இருக்கும், ஒற்றுமைதான் மனித இனத்தையே ஒன்றாக இணைக்கிறது. நோவா வெள்ளம் பற்றிய கதை பைபிளின் வழியே உலகம் முழுதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் இதற்கு முன்னோடியான ஒரு புராணம் இருக்கிறது. புராணம்தான் முன்னோடியே தவிர இந்த நோவா வெள்ளம் என்று குறிப்பிடப்படும் காலத்திற்கு இணையாக மச்சாவதாரத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

உலக அளவில் உள்ளப் பெருவெள்ளக் குறிப்புகளைப் பற்றிய செய்திகளை இன்று தெரிந்து கொள்ள DILUGE GEOLOGY என்கிற ஒர் அறிவியல் துறை இருக்கின்றது. அது நோவா வெள்ளம் எனறு சொல்லப்படும் ஜெனிஸிஸ் புத்தகத்தை ஓரளவுக்கு  ஏற்றுக்கொள்கிறது. அது இஸ்ரேலைப் போல, எகிப்திய, தென்னமெரிக்க, மெசபடோமிய, சிந்துச் சமவெளிகளில் உலவிய/உலவி வரும் புராணங்களில் இருக்கும் பெருவெள்ளக் கதைகளைப் போன்ற பாதிப்புகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கின்றது என்று சொல்கிறது.

அந்தப் பெருவெள்ளத்தில் உலகமே அழியப்போகுமளவு வெள்ளம் ஏற்பட்டு இருந்ததாகவும், அந்த நிலத்தின் மிகவும் உயர்ந்த குணங்களைப் படைத்த ஒரு மனிதனின் குடும்பம் மட்டும் தன் குடும்பத்தாரையும் ஒரு பெரிய படகில் ஏற்றிவிட்டு அவர்கள் பின்னர் வாழப்போகும் நிலத்தில் வாழவேண்டிய உயிர்களின் இணையை மட்டும் அதில் பத்திரப்படுத்தித் தப்பித்துக் கொள்ள இறைவன் வாய்ப்பளித்ததாக ஒரு பொதுவான கதையைப் பண்டைய நாகரிகங்களின் பல்வேறு நிலத்திலிருந்து காண முடிகிறது. அதைக் கலை வடிவங்கள் மூலமாக நாம் இன்றும் காண முடியும்

  •    சுமேரிய அரசனான ஜயுசூத்ராவின் (ZIUSUDRA) பிழைத்தல் இந்த வரிசையில் முதலாவதாகப் பார்க்க முடிகிறது.
  •            சுமேரிய நாகரிகத்தில் கில்காமெஷ் என்றழைக்கப்படும் இதிகாசத்தில் பெருவெள்ளம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
  • பைபிளில் நமக்குக் கிடைக்கும் நோவா பெருவெள்ளம்.
  • நோவா பெருவெள்ளம் பற்றிய தத்தமது சிந்தாந்தங்களுக்கேற்ப – யூத, கிறுத்துவ, இசுலாமிய, யாழிடிப் பழங்குடி கதைகள்.
  • தென்னமெரிக்காவில் கிடைக்கும் சில TRIBAL ARTகளின் வழி கிட்டிய தகவல்களின் படி, இந்நம்பிக்கையும், ஆச்சமும் மிகப்பெரிய அளவில் மாயன்களிடமும் இருந்திருக்க வாய்ப்பிருக்கின்றது.
  • இந்தியாவில் என்று சொல்வதை விட சிந்துச் சமவெளிப் பகுதியிலும், தமிழகப் பகுதியிலும் என இருவேறு நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டால் மச்ச அவதாரம் எனும் புராணம் நோவோ வெள்ளக் கதைக்கு ஒப்பான கதையினையே சொல்கிறது.
  •   குமரிக் கண்டம் எனும் நிலமழிந்த பேரழிவுக் கதைகளை நாம் அறியாதவர்களாக இருக்க மாட்டோம் என்றாலும் அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப் படாமலேயிருக்கிறது என்பது வேறு விசயம். ஆனால் கதைகளாக இவற்றுடன் இணைக்க இடமிருக்கிறது
  •   மச்ச அவதாரத்தினை அடுத்து திருமால் தனது எட்டாவது அவதாரத்திலும் கூட்த் தன் இனமான யாதவர்களைக் காப்பாற்றும் கதையும் இதே தன்மையில் காண முடிகிறது என்றாலும் இது பேரிடராக மாறவில்லை தவிர்க்கப் படுகின்றது. இயற்கையை வெல்லும் திறனை ஒரு GOD MAN எடுத்துக் கொள்கிறான். யாதவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். (அது முதல் சுற்று எனக் கொள்க)

பத்துப்பாட்டில் வரும் நெடுநல்வாடைப் பாடலும் இப்படியான ஒர் அழிவின் அச்சத்தால் நிகழ்ந்த புலம்பெயர்தலையே குறிக்கின்றது என்று புரிந்து கொள்வதற்கும் இடமிருக்கிறது. இதுபோன்ற பாடல்களின் நோக்கம் மக்களிடம் அச்சத்தை விளைவிக்க முடியுமா என்றும் இருந்திருக்கலாம். பயத்தில் நடுங்குவோர்கள் தானே அபய முத்திரைகளைக் கண்டு வணங்குவோர்களாக மாறுவர்.

 இதில் கோவர்த்தனகிரியை நினைவுக்கு கொண்டு வர, 7ஆம் நூற்றாண்டில் உருவாக்கம் பெற்றிருந்த கலைப்படைப்பான மாமல்லையின் குடைவரைச் சிற்பத் தொகுதியை நினைக்கும் பொழுது, தன் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த பல்லவனின் மனநிலை இந்தச் சிற்பத்தொகுதியை உருவாக்க அவனைத் தூண்டியிருக்கலாம். வெவ்வேறு வகையான பொருளாதார அமைப்பைச் சேர்ந்த தன் நிலத்து மக்களுடன் பசுவினங்கள், மந்தி, நாய், மான் , சிம்மம் என சகல ஜீவ ராசிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தவனாய் இருக்கும் கிருஷ்ணனும் மலை ஏந்திய படி நிற்க, அக்குடைவரையே மலையாக மாற்றப்பட்டு அதைப் பார்க்க வருபவர்களையும் தன் நிழலுக்குள் கொண்டு வரும் அதிகாரம் கொண்டவனாகவும், பாதுகாப்பு அளிப்பவனாகவும் இருக்க,  இது கிருஷ்ணன் செய்யும் மாயமா ? அல்லது சிற்பியின் படைப்பாக்கமா என்கிற மயக்க நிலை ஒரு புறமிருக்கட்டும். பாகவதத்திலிருந்தும், உத்தவ கீதையிலிருந்தும் கிடைக்கப் பெற்ற செய்திகளைக் கொண்டு ஒரு விசயத்தை உணர்த்துகின்றன இப்பெரும் படைப்புகள் முதலில் மக்களுக்கு இந்த உலகம் ஷ்ருஷ்டி என்றும் அது ஆபத்தைச் சந்திக்கும் என்று சொல்லப்படுகின்றன. அச்சம் தான் ஒரு தலைவனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை உருவாக்கும்.

இயற்கையின் பேரிடர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது, அதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. பிரபஞ்சம் தன்னைத் தானே உருவாக்கியது என்பதுதான் அநேக மேதைகள் ஏற்றுக்கொண்ட அறிவியல் கோட்பாடு, ஜைன, பௌத்த மதங்கள் கூட படைப்பாளி என்கிற ஒருவனையும், படைப்புக் கோட்பாட்டையும் மறுத்து உருவானவையே.

பிரபஞ்சம் தனக்குத் தேவையானவற்றை தானே உருவாக்கிக் கொண்டும், கழித்துக் கொண்டும் இருக்கின்றது. உயிர்கள் வசிக்கும் ஒரே கிரகம் என்று நம்பப்படும் பூமியின் செயலும் அதுதான், தன் இருப்பில் அடிக்கடி நிலத்தைக் கூட்டிக் கழித்து சமன்படுத்திக் கொள்கிறது. புயல்களைக் கொண்டு அழிவு, வளம் இரண்டையும் உருவாக்குகிறது.

வாழ்க்கைச் சக்கரத்தில், சூழலில், உணவுச்சங்கிலியில் இடையூறு நிகழ ஆரம்பிக்கும் போது தான் டைனசர்களின் இனமே அழிந்திருக்க வேண்டும். மனிதர்களின் எண்ணிக்கை கூட அவ்வப்பொழுது பேரிடர்கள் சமன்படுத்தப் படுகிறது. என்ன மனிதன் செயற்கையாக அழிவுகளையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டான். புதிய உலகம் (New World Order) என்கிற பெரிய கனவுகள், பிரபஞ்சத்தில் வேறெங்காவது புலம்பெயரும் கனவையும் ஆராய்கிறான், சோதிக்கின்றான். சாவுகளைத் தடுக்கிறான், உணவுச் சங்கலியைத் தன் கையிலெடுத்துக் கொள்கின்றான். மழையை, நதியை, கடலை, காற்றினை மாசு படுத்துகின்றான் கட்டுப்படுத்துகின்றான். ஆனால் உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல.

கோவர்த்தனகிரியில் பெருமழையில் அழிந்துபட வேண்டிய மக்களை, இயற்கையின் பிடியிலிருந்து ஒரு GODMAN காப்பாற்றுகிறான். ஆனால் ஏற்கனவே கிடைத்த ரிஷியின் சாபத்தாலும், பின்னர் காந்தாரியின் சாபத்தாலும், நாட்டின் யாதவ குலமே ஒருவருக்கொருவர் பொறாமை கொண்ட மனிதர்களாகத் தனித் தனியாகப் போரிட்டு மாண்டுகொண்டிருக்கும் தன்னினம் அழியப் போகின்றது என்பதை அறிகிறான் கிருஷ்ணன். பலராமன் தவத்திற்குள் சென்று விடுகிறான். இறுதியில் கோவர்த்தனகிரியில் இயற்கை தன் நோக்கம் பொய்த்ததால், மற்றொரு வாய்ப்பிற்குக் காத்திருந்த கடல் துவாரகையைத் தனக்குள் எடுத்துக் கொள்கிறது.

காவிரியும் கொள்ளிடமும் தன் போக்கினை மாற்றியிருக்கும் செய்தியை நாம் இலக்கியங்கள் வாயிலாகக் கேட்டறிந்திருக்கிறோம். இது போன்ற பேரிடர்களில் பிழைத்துக் கொள்வதற்கு வழியாக அவற்றை ஏற்றுக் கொண்டு, அதற்குத் தயராக இருந்த அரசின் நிர்வாகத்தில் வாழத் தெரிந்திருந்த மக்களிடம் நல்ல கலையும் கட்டுமானமும் இருந்தது. இன்று அவர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள், உலகின் அதிகமான சதவீத நகரமயமாதலைக் கொண்டிருக்கின்ற நகரத்திற்கு வெளியே உழவு செய்துகொண்டிருந்த நிலங்களும், உதவிக்கொண்டிருந்த ஏரிகளும் குடியிருப்பாய் மாறிப் போக,– மழை நீர்ச் சேமிப்பு போன்ற கட்டாயங்களுக்கு எதிராக செயலாற்றும் மனிதனுக்கு அரசின் இலவச போதையும், பேரம்கேட்க இயலாத போதையும் அரசே உருவாக்கித் தர. ஒட்டுமொத்த நாசத்தை விளைவிக்காத கருணை மிக்க இயற்கை அச்சுருத்திப் பார்க்கத்தான் இம்மழை பெய்தது. மனிதனே உருவாக்கிக் கொண்ட இப்பேரிடரில் பெரும்பாலோரால் சாமர்த்தியமாகப் பிழைக்கவும் முடிகின்றது பலர் பலிகடாக்களும் ஆகின்றார்கள்.

அதுவும் சொல்லப் போனால் பேரிடர் என்று சொல்லுமளவுக்கு இயற்கையின் நோக்கம் நடந்தேறவில்லை, இந்த மரண எண்ணிக்கை சில வருடங்களுக்குப் பின்னர் ஒரு ரயில் விபத்தின் கணக்கோடு ஒப்பிடப்படும் பொழுது அது சாதாரணமாகத் தோன்றலாம். அதுகூடப் பரவாயில்லை யாரோ ஒரு அரசியல் தலைவரின் சிறைவாசத்திற்கோ அல்லது இயற்கை எய்துதலுக்கோ உயிர் விடப் போகும் எண்ணிக்கை முன்னர் மிக மிகக் குறைவாக இருக்கப் போகின்றது. இதுவும் இயல்பான இறப்புக் கணக்கு தான். இன்னும் சாதி, மதக் கலவரங்கள், தொழிற்சாலை விபத்துகள் அல்லது யுத்தம் எனக் கணக்கிட்டுப் பார்த்தால், ஒருவேளை நாமே பேரிடர் நடந்திருக்கக்கூடும் என்பதை மறந்தேவிட்டிருக்கலாம்.

ஆனால் இது போன்ற காலங்களில் மண்ணை வளமாக்கப் பிறக்கின்ற, வெள்ள நீரில் வடிந்து வரும் மண்புழுக்கள் மண்ணிற்குள் செல்ல முடியாமல் தார்ச்சாலைகளில் சிக்கிக்கொண்டு மனிதனின் கால்கள் பட்டும், சக்கரங்கள் பட்டும் நசுங்கிச் சாகின்றதைப் பார்க்கும் பொழுது ஒருவருக்கொருவர் தங்கள் சமூகத்தின் பெருமையை, மனிதத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசும் ஊடகங்களையும், அரசியல்வாதிகளையும் போற்றிப் புகழ்வது துவாரகாவின் நிலையைப் போலவே இப்பெருநகரத்தையே மாற்றக் கூடும்

அரசின் முகமும், சகமனிதர்களின் மனிதநேயமும் ஒட்டப்பட்டிருந்த நிவாரணப்பொருட்கள் ஏற்படுத்தியிருக்கும் மாசும், குப்பையும் ஒருவேளை அப்புறப்படுத்தப்பட்டால் எப்படியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில்தான் கொட்டப்படும். கொடுத்த பணத்தை வாங்கும் நடுத்தரக் குடும்பங்களில் பழுதாய்ப் போன செல்போன்கள் புதிதாக மாறப் போகின்றன.


மனிதம் மட்டும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கட்டும்!! 

-ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக