- ஜீவ கரிகாலன்
பெரும்பாலும் அர்விந், இளங்கோ, ரமேஷ் இவர்களுடன் பேசும்போதோ அல்லது வேறுயாருடனுமோ உலகசினிமா, உலக இலக்கியம் பற்றிப் பேசும்
நாட்களில் நான் வெறும் MLAவாகத் தான் நடந்து கொண்டிருக்க வேண்டியிருகிறது. MLA என்றால்
Mouth Looking Agent. ஆங்கிலப் படங்களோ வேறெந்த மொழிப்படங்களோ பார்ப்பது என்றால் பெரும்பாலும்
வன்முறை, திகில் படங்களைத் தவிர்த்து விடுவதுண்டு. மார்வெல் வரிசை, அறிவியல் புனைவு
அல்லது ஃபேண்டசி படங்கள் தான் பெரும்பாலும் பார்த்து வருவது. ரொம்ப காலமாகப் பார்க்க
முடியாமல் போன படங்களில் ஒன்று தான் மேட்ரிக்ஸ் வரிசை. இன்று வரை அவற்றை முழுமையாகப் பார்க்கவில்லை. ஆயினும், அதில் ஒரு காட்சி ஒன்றைப் பார்க்கும் பொழுது பிரமித்தேன். இக்கட்டிலிருக்கும் கதாநாயகனுக்கு(நியோ)
உபாயமாக இரண்டு மாத்திரைகள் வழங்கப்படும், இக்கட்டிலிருந்து தப்பித்துக்கொள்ள அவற்றில் ஏதாவது ஒன்றை அவன் பயன்படுத்திக்
கொள்ளலாம். ஒன்று நீல நிற மாத்திரை, மற்றொன்று சிவப்பு நிற மாத்திரை. நீல நிற மாத்திரை
அவனது இக்கட்டிலிருந்து கிடைக்கப்பெறும் உடனடி நிவாரணத்திற்கானது, சிவப்பு மாத்திரை
அதுவரை அவன் இனம்காண முடியாத தன்னைச் சூழந்திருக்கும் பிரச்சினையை முழுமையாக தெரிந்து
கொள்ள வாய்ப்பளிக்கலாம். அவன் இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கிறான்? கதாநாயகன் ஒரு கணம்
கூட யோசிக்காது செயல்படுகிறான்.
எனக்கும் சில பிரச்சினைகள் என திங்களன்று ஒரு ஆலோசகரை சந்தித்தேன்.
உளவியல் ரீதியாக சில அவஸ்தகைகள், அதுவே உடலையும் பாதிக்க ஆரம்பித்த நேரம். மிகச்சரியான
நேரத்தில் மீட்கப்பட்டதாய் ஒரு உணர்வு அதனால் தான் எழுத முடிகிறது என்று கூட சொல்லலாம்.
அந்த 10-13 நாட்களாக இருந்து வந்த பாதிப்பில் என்னை மீட்பதற்கு அவர் என்னிடம் சொன்ன
உபாயத்தை ஏற்றேன். அன்றிரவு தான் இந்தப் படத்தைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சிக்குப்
பிறகு படத்தைத் தொடர்ந்து பார்ப்பதற்கு முடியவில்லை. அந்த ஆலோசகரிடமிருந்து எனக்குக்
கிடைத்தது நீல நிற மாத்திரையா, சிவப்பு நிற மாத்திரையா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
//
"You take the blue pill, the story ends. You wake up in your bed and believe whatever you want to believe. You take the red pill, you stay in wonderland, and I show you how deep the rabbit hole goes." The term redpill refers to a human that is aware of the true nature of the Matrix.
//
கதாநாயகன் என்றால் ஒரு கணம் கூட யோசிக்கத் தேவையில்லை உடனடியாகச்
செயல்படலாம், ஆனால் நான் கதாநாயகன் இல்லையே. ஆனால் அந்த ஆலோசகரைச் சந்தித்த பின்னே.
மனம் இயல்பாக இருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கிறது. ‘இயல்பு, நம்பிக்கை’ இவ்விரண்டு
சொற்களையுமே நிறைய ஆராய வேண்டியிருக்கிறது. மாறுவது தானே இயல்பு என்று யோசிக்க வைப்பது
– இயல்பு எனும் சொல்லின் தத்துவமாக இருக்க முடியுமா? இல்லை. மாற்றங்களை எதிர்நோக்கும்
போது தான் இயல்பாக இல்லை என்று சொல்வது தேங்கியிருக்கும், வளர்ச்சியுறாத நிலையைத் தான்
இயல்பென உணர்த்துகிறதா? இயல்பு என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை காலத்திற்கேற்ப
ஏற்றுக் கொள்வதாகவும் – எதிர்பார்க்காத மாற்றங்கள் இயல்புக்கு எதிரானதாகவும் நம்பப்படுகிறதா?
அப்படியென்றால் நம்பப்படுவது தான் இயல்பா? சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது என்று சொல்வது
உண்மையில் என்ன பொருள். மனிதர்கள் மீண்டும் ஒரு பெருநிலத்தை சீரழிக்கத் துவங்கிவிட்டார்கள்
என்று வைத்துக் கொள்வோமா. இந்தப் பெருநிலம் உண்மையில் மனிதர்களுக்கானது மட்டுமா.
இதுபோன்ற பெருவெள்ளம் நிகழ்த்திய வரலாற்றில் என்னவெல்லாம்
நடந்திருக்கிறது, புதிய கழிமுகங்கள், ஆறு தன் போக்கினை மாற்றிக் கொள்ளுதல், நீரூற்று,
சுனைகள், அருவிகள் என புதிதாக தோன்றுபவை இருக்கின்றன தானே!! ஒரு இடத்திலிருக்கும் வளம்
மற்றொரு இடத்திற்குப் புலம்பெயர்ந்திருக்கும் தானே. அவை தானே இயல்பு. புயல் ஒரு இயல்பான
விசயம் தானே. வெற்றிடத்தை நிரப்பும் காற்று தானே நாளை புயலாக மாறுகிறது. புயலோ, சுழிக்காற்றோ,
சூறாவளியோ ஒரு பக்கம் அழிவும் இன்னொரு பக்கம் வளமும் உருவாக்குவது இயல்பு தானே. ஆனால்
நாம் இவற்றை இயல்பென நம்பவில்லை.
இரண்டு கிலோமீட்டார் நீளத்திற்கு வடிந்து கொண்டிருக்கும்
வெள்ள நீரில் நடந்து செல்கையில் என் கால்களின் கீழிருந்த பல்லாயிரக்கணக்கான மண்புழுக்கள்
10 வருடங்களுங்கு முன்பு விவசாய நிலங்களாய் இருந்த அந்தக் குடியிருப்பினை வளமாக்கியிருக்க
வேண்டியது இயல்பாக நடந்திருக்க வேண்டிய ஒன்று தான். ஆனால் தார்ச் சாலைகளைக் கடக்க முடியாமல்
ஜல்லிகளில் சிக்குண்டு மடிந்து பூமிக்குள் போய்ச் சேரமுடியாது மிதிபட்டும், சக்கரங்களில்
ஒட்டியும் நிகழும் அவற்றின் மரணம் இயல்பானது அல்ல. பேரிடரால் இறந்து போன மனிதர்களின்
எண்ணிக்கையைக் கண்டு மட்டுமே அலருவது அவ்வாறே இயல்பானது அல்ல.
joseph gross |
சொல்லப் போனால் பேரிடர் என்று சொல்லுமளவுக்கு இயற்கையின்
நோக்கம் நடந்தேறவில்லை, இந்த மரண எண்ணிக்கை சில வருடங்களுக்குப் பின்னர் ஒரு ரயில்
விபத்தின் கணக்கோடு ஒப்பிடப்படும் பொழுது அது சாதாரணமாகத் தோன்றலாம். அதுகூடப் பரவாயில்லை
யாரோ ஒரு அரசியல் தலைவரின் சிறைவாசத்திற்கோ அல்லது இயற்கை எய்துதலுக்கோ உயிர் விடப்
போகும் எண்ணிக்கை முன்னர் மிக மிகக் குறைவாக இருக்கப் போகின்றது. இதுவும் இயல்பான இறப்புக்
கணக்கு தான். இன்னும் சாதி, மதக் கலவரங்கள், தொழிற்சாலை விபத்துகள் அல்லது யுத்தம்
என கணக்கிட்டுப் பார்த்தால், ஒருவேளை நானே பேரிடர் நடந்திருக்ககூடும் என்பதை மறந்தேவிட்டிருப்பேன்.
ஏனென்றால் அது தான் இயல்பு.
ஆழ்மனதில் இயல்பாக இல்லாத ஒன்று எதையோ உள்வாங்கிச் சொல்ல
சொல்கிறது அது என்னவென்றால், தன் நோக்கத்தை இயற்கை நிறைவேற்றியே தீரும் என்பது தான்.
தான் எடுத்துக் கொள்ள வேண்டிய கணக்குகுகளில் தவறு நிகழ்ந்தால், மீண்டும் முயன்று பார்க்காமலா
போகும் அதில் உபரியாகவோ, வட்டியாகவோ கூட எண்ணிக்கை கூடலாம். அது இயல்பான ஒன்று தான்.
அந்த கணக்கில் நானும் இருக்கலாம், ஏனென்றால் இன்றைய இயல்பான வாழ்க்கைகுத் திரும்பிய
சென்னை வாசிகளில் நானும் தானே ஒருவன்.
பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையிலிருந்து, தாம்பரம்-வேளச்சேரி
சாலையை இணைக்கும் சாலை வழியாக நேற்று வந்து கொண்டிருந்த போது. ஏரிகள் மீது கட்டப்பட்டுக்
கொண்டிருக்கும் அபார்ட்மென்ட் கட்டுமானங்களில் ஒரு கட்டடத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த
தொழிலாளி ஒருவனுக்கு ஏற்பட்ட விபத்தில், அவனை அள்ளிக் கொண்டு பறக்கும் எத்தனிப்பில்
கோவிளம்பாக்கம் சிக்னலில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸில் அவனது மரணம் நிகழ்ந்து
கொண்டிருப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான் 15-12-2015 செவ்வாய்க்
கிழமை அன்று என்னைப் போலவே சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது என்று நினைத்துக்
கொண்டேன்.
அரசாங்கத்தையும், சமுதாயத்தையும் கு.பட்சமாக சகமனிதன் வரை
குற்றம் காணும் என் பார்வை இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. நானும் சென்னையும் பழைய பன்னீர்செல்வமாகத் திரும்பி வர உத்தேசித்திருக்கிறோம்.
நீல நிற மாத்திரையை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
(கட்டுரை நிறைவடைகிறது….)
தொண்டையைக் கடந்து செல்லாமல்
சிக்கிக் கொண்ட
நீல நிற மாத்திரையை
என்ன செய்யட்டும் பைரவி,
நீலகண்டனாக நான் மாற வேண்டும்.
என் கழுத்தை நெறி.
நீ தான் என் சிவப்பு மாத்திரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக