வியாழன், 29 மே, 2014

ஆகவே.....ஜல்லிக்கட்டு வேண்டும். (பஜ்ஜி - சொஜ்ஜி -70)

ப்ளுக்ராஸ் அமைப்பில் வரும் பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்தபடி இருப்பது எனது வாடிக்கைகளில் ஒன்று, ஒரு நாள் அவர்கள் பதிந்த செய்தியில்  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் எதிரொலியாக காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டுகளில் இருந்து காப்பாற்றப் பட்ட காளைகள் கேரளாவில் அடிமாடுகளாகக் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை பகிர்ந்திருந்தது. இதில் இரண்டு அதிர்ச்சிகள் 

1. காளைகளினால் வேறு பயனில்லாததால் அவை அடிமாடுகளாகிப் போன துயரம்.
2. நமது வாழ்க்கை முறை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக ஜல்லிக்கட்டினை தவறாகப் புரிந்து கொண்ட ஒரு மேட்டிமைத்தனம் உருவாகியிருப்பது.

*
சுதந்திரம் அடையும்போது நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்த இந்தியாவில், இன்றைக்கு கிட்டதட்ட 30 வகையான நாட்டு மாடுகளே இன்றைக்கு இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதில் ஒரு இனம் அழிந்த வரலாற்றை உங்களுக்கு சொல்கிறேன், காங்கயம் காளைகளைப் போல் ஒரிஸ்ஸாவின் தட்பவெப்பத்திற்கும் வறட்சியில் வாழ்வதற்கு ஏற்ற அவ்வூரின் பூர்வீகக் காளை இனம் - காரியார் காளைகள்.

அந்த ஊரின் வறட்சிக்கு நிவாரணத் திட்டம் வழங்குவதற்காக சாமன்விதா எனும் திட்டத்தை ஒரு தொண்டு நிறுவனம் கொண்டுவந்தது. இதன்படி அவ்வூர் மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் நிலமும், அதில் பயிரிடுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட கொன்றை மரக் கன்றுகளைத் தந்தது.(1970-80களில் கிழக்காசிய நாடுகள் முழுவதும் வறட்சி நிவாரணமாகவும், காடுகள் வளர்ப்பிறகாகவும் வளர்ககப்பட்ட மரவகை - எதிர் விளைவுகளையே கொடுத்தவை).

இப்படி இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டவர்களுக்கு மற்றொரு நிபந்தனை, விளம்பரமாக அம்மக்கள் கண்ணுக்குத் தெரிந்தது. அவர்களின் பசுக்களுக்கு அதிக பால் சுரக்கும் என்று ஜெர்ஸி காளைகளின் உயிரணுக்கள் செலுத்தப்பட்டன, காரியார் காளைகள் விதையறுப்பு செய்யப்பட்டன. அவர்கள் சொன்னது போல அதிக பால் சுரக்கவில்லை, வளர்த்து வந்த மரக்கன்றுகள் ஒரு முறை வெட்டப் பட்டாலும் மறுபடியும் துளிர்க்கும் என்று அவர்கள் சொன்ன வாக்குறுதியும் பொய்த்தது. தனது திட்டத்தை நிறைவேற்றியவுடன் சாமன்விதா திட்டம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. அவர்கள் திட்டம் - காரியார் எனும் காளை இனத்தை அழிப்பது. இந்த திட்டத்தின் தோல்வியினால் அந்தப் பகுதியில்ஏற்பட்ட வறட்சி கடுமையாக பத்தாண்டுகள் வரை நீடித்தது என்கிறார் இதழாளர் திரு.பி.சாய்நாத் அவர்கள்.

1970களில் ஆரம்பிக்கப்பட்ட வெண்மைப் புரட்சி  வெளிநாட்டு ஜெர்ஸி பசுக்களைப் போன்ற இறக்குமதி இனங்களை இந்தியாவில் கொண்டு வந்து, அரிய இனங்கள் பலவற்றை முழுதுமாக அழித்ததற்கு மேற்சொன்ன கதை ஒரு சோறு பதம்.

*
உண்மையில் வெண்மை புரட்சி, பசுமைப் புரட்சி போன்ற திட்டங்கள் எல்லாம் இந்த தேசத்தின் சுயத்தை, அதன் மரபின் தொடர்ச்சியை, பன்முகத் தன்மையை அறுத்தெரியும் முயற்சிகளாக இருந்து வருகின்றன என்றே உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஜல்லிக்கட்டு எனும் ஏரு தழுவுதல் விளையாட்டு மீது இன்றைய நாகரிகத்தின் கண்ணோட்டத்தில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். மிருக வதை, சாதியத்தை ஆதரிக்கின்றது என்று பல குற்றச்சாட்டுகள் நியாங்களின் கூறுகளோடு இருக்கலாம். ஆனால், அந்த விளையாட்டுகளில் பொதிந்திருக்கும் சமூகக் கட்டமைப்புகளை ஆராய்ந்தால், இதன் முக்கியத்துவம் தெரியும். தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டு முழுதும் நீர் செழிப்பான மாநிலமாக இருந்தது கிடையாது. 

விவசாயத் தொழில் மாடு வளர்த்தலோடு தான் நிறைவான சுழற்சியைத் தந்து ஒரு குடியானவனைக் காப்பாற்றுகின்றது. வெறும் விவசாயியாகவோ அல்லது மாடுகளை வளர்ப்பவனாகவோ தன்னைக் காப்பாற்றிக் கொள்வது மிகக் கடினமானது. விவசாயத்தில் களைகள், வைக்கோல் என்று நிலத்தில் உபரிகளையும், தேவையற்றதுகளையும் மாடுகளுக்குக் கொடுத்து, அவற்றை விவசாயத்திற்குப் பயன்படுத்தி உழுவதற்கும், உரத்திற்கும் என தமிழர்களின் வாழ்க்கைச் சூழலில் ஒரு முக்கிய இடத்தில் இருக்கும் மாடுகளைப் பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே.

மாடுகளுக்கு வரும் நோய்களில் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்கு அதன் மரபணுவிலிருந்தே அடிப்படை எதிர்ப்பு சக்தி அமைய வேண்டும். அதற்கு உள்ளூரின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ற மாதிரியான திடகாத்திரமான சந்ததியாக கன்றுகளைத் தான் மாடுகள் ஈன வேண்டும். இவை யாவுமே காளைகளைப் பொறுத்து தான் அமையும். விளையாட்டுகளில் பங்கேற்கும் காளைகள் மூர்கமாக, காட்டு விலங்கினைப் போல் இருக்கும். அதற்குத் தரப்படும் உணவுகளும், அதைப் பராமரிக்கும் விதமும் தலைமுறை தலைமுறையாக நாம் பெற்ற அனுபவத்திலிருந்து தான் உருவாக்க முடியும். வருடத்தில் ஒரு மாதம் மட்டும் இது போன்ற விளையாட்டில் பங்கேற்கும் காளைகள் அதன் பின்னர் இனவிருத்திக்காக பயன்படுத்தப்படும், அதுவே நாட்டு மாடுகளை ஆரோக்கியமாக வளர்க்க அடிப்படை.

இப்பொழுது உச்சநீதி மன்றம் விதித்திருக்கும் தடை ஒரு விளையாட்டு மீதான தடை இல்லை, விவசாய நாடான இந்த நாட்டின் ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை மீதான தடை. கலாச்சாரம், பண்பாடு போன்ற விழுமியங்களை நாகரிகம், நவீனம் என்ற கருத்துகளைக் கொண்டு ஒரேடியாகப் புறந்தள்ளுவது என்பது அபத்தமானது. இந்த தீர்ப்பினை எப்படிப் பார்க்க வேண்டும் என்றால், இன்றைய சமூகத்தின் நவீன தர்கங்களின் எதிர்வினையாகத் தான் பார்க்க வேண்டும். கிராமங்களின் சமூக அமைப்பினை ஒரே ஒரு காரணம் சொல்லி புறந்தள்ளுவது எதிர்காலத்தில் பல ஆபத்துகளை விளைவிக்கும்.

சங்ககாலத்தில் இருந்து, சிந்துச் சமவெளிகாலத்திலிருந்தே மாடுகளுக்கும் ந்மக்குமான தொடர்பினைப் பறைசாற்றும் தொடர்ச்சியாக இந்த ஏறு தழுவுதல் விளையாட்டைப் பார்த்திருந்தால், ஜல்லிக்கட்டு விளையாட்டினை நவீனப்படுத்தி சுற்றுலாத் தளமாக மாற்றியிருக்கலாம், அல்லது விதிமுறைகளைக் கடுமைப்படுத்தியாவது இப்போதிருக்கும் வடிவத்திலேயே செயல்படுத்த அனுமதிக்கலாம். பொறுப்புள்ள அரசு என்ற ஒரு அரசாவது இந்த ஜனநாயகத்தில் சாத்தியப்பட்டிருந்தால் இவ்விளையாட்டு இன்று உலக அரங்கில் பேசப்பட்டிருக்கும்.

இன்று வேண்டுமானால் நம் அன்றாடப் பிரச்சினைகளை அடிக்கோடிட்டு விட்டு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறைவு என்று பேசிக் கொள்ளலாம். ஆனால் இது போன்ற முன்னுதாரணங்கள் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை விவாதிக்க வேண்டியது மிக்க அவசியமான ஒன்று. இந்தப் பிரச்சினையின் அடிப்படை ஜல்லிக்கட்டினைப் பற்றிய தவறான பார்வை மக்களுக்கு இருப்பதே, சட்டங்கள் பெரும்பான்மை மக்களின் பொதுபுத்தியில் தான் இயங்க விரும்புகிறது. வடஇந்தியாவில் ஜல்லிக்கட்டினை அவர்கள் மதச்சடங்குகளுக்கு எதிரானதாகவும் காட்டுமிராண்டித்தனமாகப் பார்க்கப்படலாம். ஆனால், அதை மட்டுமே பொதுவானதொரு கருத்தாக வைத்துக் கொண்டு இவ்விளையாட்டை ஒரு அநீதியாக பாதித்து அதை தடை செய்யும் முறை, இந்தியா முழுமைக்குமான ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆகும். உண்மையில் இந்த அளவுகோல் தான் காட்டுமிராண்டித் தனமானது.

ஆகவே.....ஜல்லிக்கட்டு வேண்டும்.

-ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக