*Content not suitable for all - Myth is associated with curse :P
இவள் ஏன் முக்கியமானவள். உலகில் வாழ்ந்து வந்த மொத்த மனித இனத்தையும் வேட்டைச் சமூகத்திலிருந்து நாகரிகம் நோக்கி நகர்த்தி செல்வதற்கு பெருமனே உதவியவள் இவள். எல்லா தொல் மதங்களையும் இணைக்கும் புள்ளிக்கான மற்றொரு ஆரம் அவளே. அவள் அழகானவள், ஆயுதம் கொண்டவள், ஆற்றல் நிறைந்தவள் புத்தி படைத்தவள்.
*
இந்தியாவில் மட்டுமல்ல இன்றைய மியான்மர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பண்டைய நாகரிகங்களான ரோமன், கிரேக்க மற்றும் பாரசீக(zorastrian)பழங்கதைகளிலும் அதன் வழி வந்த மத நம்பிக்கைகளிலும், கலை வடிவங்களிலும் காணப்படும் ஒரு முக்கியமான பாத்திரம்/தேவதை தான் இவள்
*
இவளைப் பற்றிய கலை வரலாறு ஒன்றை தொகுப்பது மிக முக்கியமான வேலை என்று பேராசிரியர் வரதராஜன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, கலை வரலாறு குறித்து பேச்சு திரும்பியது. அதில் எனக்கு நாட்டமிருக்கிறது என்பதைப் புரிந்த கொண்ட அவர். குறிப்பிட்ட ஒரு அம்சம்/தத்துவம்/கதை புராணக் காலங்களில் இருந்து சமகாலம் வரை கலை வடிவங்கள் மூலம் அடைந்த மாறுதல்களைப் பதிவதன் முக்கியத்துவம் பற்றிக் கூறினார். அதற்கு உதாரணமாக சரஸ்வதியின் கலை வடிவத்தினைப் பற்றி, இந்திய தேசம் முழுக்க இருக்கும் அதன் வெவ்வேறு அம்சங்கள் குறித்து என்று தேடிப் பார்த்தால் இந்த துறை மீதும், myth மீதும் அபார ஈடுபாடு வந்துவிடும் என்றார். அவர் கூறிய உதாரணம் சரஸ்வதியின் வடிவங்களைப் பற்றி, இக்கட்டுரையும் அந்த கலை வரலாற்றை தெரிந்து கொள்ளத் தேவைப் படும் புவியியல் வரைபடம் ஒன்றை வரைந்து பார்க்கும் நோக்கம் தான் இக்கட்டுரை.
அது என்ன சரஸ்வதி பூஜை முடிந்த பின்னர் ஆயுத பூஜை என்று எதன் பொருட்டு ஆயுதம் ஏந்தாத தேவதையை பிரதானப் படுத்தி பூஜைகள் செய்கிறோம்??
*
Syncretism என்பது பல்வேறு தத்துவங்களை ஒரே/வேறொரு தத்துவத்தின் அடிப்படையாக /சாரம்சமாகப் பார்க்க வைக்கும் தன்மை ஆகும். அதன்படி மதங்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமைகளை வைத்துப் பார்க்கும் பொழுது ஒரே ஒரு பொருளை / பரம்பொருளை / மீப்பொருண்மையை நோக்கி தான் அதன் மைய நீரோட்டம் அமைந்திருக்கும், அதனில் இருந்து அம்மதத்தை பின்பற்றுபவர்களுக்கான சமூக அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கும் .சரஸ்வதியை உலகம் முழுக்க உள்ள அனைத்து தொல்நாகரிங்களிலும் வணங்கப்பட்டிருக்கும் விதம் அடிப்படையில் ஒரே மாதிரியானது. கோயில்களில் தேவதைகளுக்கு அணிவிக்கப்படும் ஆடை ஆபரணங்களில் இருக்கும் மாற்றம் மனித நாகரிகத்தோடு தொடர்புடையது என்பதை நீங்கள் அறிவீர்களா?
19ம் நூற்றாண்டு வரை எல்லாம் நம் சமூகத்தில் பெண்களுக்கான மேல்சட்டை அணியும் பழக்கம் பெரும்பாலும் இருந்தது இல்லை. மேல்தட்டு வர்கத்தினர் மற்றும் நடுத்தர வரகப் பெண்கள் அணியும் போதே தங்களது கடவுளர்க்கும் அது போன்ற உடைகளை அணிவிக்க ஆரம்பித்து விட்டனர். நாம் வணங்கும் தேவதைகளை இப்படித் தான் நம் காலத்திற்கு ஏற்றவாறும், நமக்கு ஏற்றவாறும் மாற்றிக் கொண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டில் தான் ராஜா ரவி வர்மாவின் சரஸ்வதி ஓவியம் அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்ட புரட்சி மிகு காலம். பின்னர் வரையப்பட்ட எல்லா ஓவியங்களிலும், காலண்டர் அட்டைகளிலும், நாடகங்கள், திரைப்படங்கள் என தேவியர்களின் ஆடை முறை மாறிவிட்டது. அதற்குமேல் நிர்வாணங்களில் வரைபவர்கள் கண்டிக்கப்படவும், தண்டிக்கப் படவும் ஆரம்பித்தார்கள்.
ஆடை ஒரு புறமிருக்க, சரஸ்வதி கையில் நூல் எப்படி வந்தவை என்று பார்த்தல் நலம். கணாபத்யம் எனும் தனி மதத்திலிருந்து பிள்ளையார் வழிபாட்டை ஸ்வீகரித்துக் கொண்ட இந்து மதத்தின் மரபு போன்று தான், சரஸ்வதிக்குப் பின்னால் இருக்கும் கதையும் இருக்க வேண்டும். சரஸ்வதியின் கைகளில் இருக்கும் சுவடியின் வயதுக்கும், சரஸ்வதி வழிபாட்டின் ஆரம்ப நிலைக்கும் இடையே கால வித்தியாசம் இருக்கும் என்று நம்புகிறீர்களா??
மனித நாகரிகம் வளர்ச்சி பெற ஆரம்பித்த பின்னர் கல்வி பயிலும் முறை, ஓலைச் சுவடிகளை கையாளும் முறை என்பனவெல்லாம் நன்றாக நாகரிகம் அடைந்த நாகரிகங்களில் தான் தோன்ற ஆரம்பித்தன. நன்றாக நாகரிகம் - என்பது வேட்டைத் தொழிலிருந்து விவசாய முறைகளைக் கையாளத் தெரிந்த நாகரிகம் என்று புரிந்துகொள்ளப்பட வேண்டியது.
விவசாய முறைகளைக் கையாள ஆற்றோரங்களில் உகந்த நிலங்களைக் கையகப் படுத்துவது, பின்னர் அந்நிலத்தைப் பண்படுத்துவது, விவசாயம் மூலமாக உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, அதை பாதுகாப்பது, பாதுகாக்க வேண்டி இருப்பதால், போர் செய்யவும் பழகுவது என இத்தனை செயல்களை புரிவதற்கான ஒரு சமூக அமைப்பினை உருவாக்குவது. ஒரு சமூக அமைப்பினை கட்டமைப்பிற்குள் கொண்டு வர மதகுரு உருவாக்கும் வழிபாட்டு முறைகளில் தான் மக்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், கருவிகள் தெய்வங்களிடமிருந்து கொடையளிக்கப் பட்டதாகக் கருதப்பட்டவை.
பெண் தெய்வ வழிபாடு மிகப் பழமையான எல்லா நாகரிகங்களிலும் இருந்தே வந்தன. சரஸ்வதியின் கைகளில் உழுவதற்கு தேவைப்படும் ஏர் போன்ற ஆயுதமும், போர் கருவிகளும் என அளிக்கப்பட்டிருந்தது. நாகரிகமடைந்திருந்த சமூகத்தில் ஏரினை வீணையும், போர் கருவியை சுவடிகளும் மாற்றாகப் பொருந்தின, இன்னும் இரண்டு கரங்களில் மாலை என்று தவக்கோலத்திற்கான வடிவத்துடன் பிரம்மனின் இணையாக இன்று நாம் பார்க்கிறோம்.
முதலில் நமது சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு தகுந்தவாறு - வேளான் மற்றும் போர்த் தொழிலுக்கு ஏற்றவாறு ஒரே பெண் தெய்வமே இரண்டாகப் பகுக்கப் படுகிறாள்(சரஸ்வதி -பார்வதி). உற்பத்தி முறை சமூகத்திலிருந்து, பண்ட மாற்று முறைகளை கற்றுக் கொண்ட பிறகு சமூகத்திற்கு தேவைப்படும் மற்றொரு தெய்வமென செல்வத்திற்கான ”லட்சுமி” எனும் வடிவம் பொருளாதாரத்திற்கான தேவதையாக உருவெடுக்கிறது. இத்தகைய மாற்றத்தைப் போலவே ஜப்பான் மற்றும் கிழக்குச் சீனாவில் வணங்கப் பெற்று வரும் BENZAITEN எனும் பெண் தெய்வமும் இப்படி ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு ஒரு கம்பித்தந்தி இசைக்கருவியை எடுத்துக் கொண்டாள்.
அனாஹிதா |
பார்ஸி இனத்தில் - ஜொராஸ்ட்ரிய மரபில் அனாஹிதா என்றும் , கிரேக்கத்தில் எதேனா என்றும், ருமானியத்தில் மினர்வா என்றும் அறிவின் தேவதையாக (GOD OF WISDOM) வணங்கப்படும் தேவதை , தாய்லாந்திலும், பிலிப்பைன்ஸிலும் சரஸ்வதியாகவே(suraswadee) வணங்கப்படுகிறாள்.
மினர்வா |
இப்பொது என் கையில் ஒரு நில வரைபடம் இருக்கிறது, சரஸ்வதி எனும் பெண் தெய்வம் / தேவதை வழிபடப்படும் பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள். ஆனால் நான் தெரிந்து கொள்ள விரும்புவது சரஸ்வதி எனும் தேவதை இந்தியா முழுக்க எவ்வாறெல்லாம் வணங்கப்பட்டு வருகிறாள்? அவளது உருவங்களில் இருக்கும் வேறுபாடுகள் என சேகரிக்க விரும்புகிறேன். அவற்றினைக் கொண்டு வேறுபாடுகளுடைய ஒவ்வொரு பகுதிகளிலும் சரஸ்வதி தன் சமூகத்தை எப்படிப் பிரதிபலிக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
அதற்கான முதல் முயற்சி - சரஸ்வதி எனும் நம்பிக்கையை(myth), அதன் அடிப்படையை உணர்ந்து கொண்டு நெருங்கிச் செல்வது. இப்போது அவள் எனக்கு மிக அருகில் இருக்கிறாள்.
-ஜீவ.கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக