வியாழன், 22 மே, 2014

ப்ராஜக்ட் சாரு நிவேதிதா



சென்ற புத்தகச் சந்தை நிறைவடையும் பொது என் நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த விஷயம் light reading எனும் வாசிப்புத் தன்மை பற்றி உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? Light reading என்று சொல்லப் படும் புத்தகங்களை ஒரு நல்ல வாசகன் திரும்ப வாசிக்கவே கூடாதா? எல்லா வாசகனுமே இந்த வாசல் வழியாகத் தான் வந்திருப்பார்களா என்றெல்லாம் வாசித்தபடி தேநீர் கடைக்காரனின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தோம்.

அவர்களுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தேன் - அது புத்தக வாசிப்பைப் பற்றிய என் நண்பனுடைய அனுபவக் கதை


*

நண்பர்களுடன் தங்கி ஒரு நான்காண்டு காலம் பேச்சிலர் ரூம் வாழ்கை. எந்தக் கட்டுப்பாடுகளுமற்ற வாழ்க்கை, பெருநகரங்களில் வாழும் பேச்சிலர்களுக்கான எல்லா இலக்கணங்களுடனும் வாழ்ந்த காலங்கள் அவை. அந்த அறையின் ஐடியா மணியாக அடியேனே இருந்தேன். அது என்ன ஐடியா மணி என்கிறீர்களா?, ஐடியா மணி என்பவன் தான் ரூமைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.  அது அதிகாரத்தின் தொனியல்ல, ஐடியாவின் தொனி.

ஐடியா மணியின் இலக்கணங்கள் யாவை?, அவனின் தகுதிகள் என்னென்ன??
ஐடியா மணி என்பவன், தங்களுக்கு ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் யோசனைகளுக்காக அனுக வேண்டியவன் அவனே. எல்லாமும் தெரிந்தவன் என்கிற பிம்பம் எப்போதும் அவன் மீது படிந்திருக்கும். ஆனால் ஐடியா மணியாக உருவாகுவது அத்தனை எளிதல்ல முதலில் அளவு கிடந்த மொக்கை போட வேண்டும், நம்ம பேச ஆரம்பித்தால் அதற்கு பயந்தே நாம் சொல்ல வந்த விஷயத்தை ஒப்புக் கொள்வார்கள். அதே சமயம் அதற்காக சில இழப்புகளையும் சந்திக்க வேண்டு வரும், வீட்டு ஓனரைச் சரி கட்டுவது, ஏதாவது குறைகள் சொன்னால் சமாளிப்பது போன்ற இது போன்ற பிரச்சினைகளை முன்னின்று தலையிட வேண்டும். இப்படி எல்லாம் செய்து பட்டம் வாங்கினால் என்ன லாபம் ? 

“மூணே மூணு இட்லி, ஒரு வடை, கொஞ்சமா கட்டிச் சட்னி” என்று இலவசமாக ஆர்டர் செய்து கொள்ள முடியும். இது போன்ற லாபத்திற்காகத் தான் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்தேன்.

ஆனால் இந்த பதவி அவ்வளவு சீக்கிரமாக உங்களுக்கு கிடைத்து விடாது? அதற்கு நீங்கள் அதிகம் புத்தகங்கள் படிக்க வேண்டும்!! புத்தகம் என்றால் ஒரே வெரைட்டியாக இருக்கக் கூடாது கன்னாபின்னாவென்று வேறு வேறு வெரைட்டிகளைப் படிக்க வேண்டும். பேசும்பொழுது அடிக்கடி “இந்த புத்தகத்துல இந்த Author என்ன சொல்ல வர்றார்னா ” என்கிற மாதிரியான reference தர வேண்டும்.  சாதாரணமான ராஜேஸ்குமார் புத்தகம் படிக்கிறீர்கள் என்றாலும் அதை “ராஜ தந்திர யுத்த களப் பிரசங்கங்கள்” போன்ற புத்தகத்திலோ அல்லது “Angels and demons” போன்ற புத்தகத்திலோ வைத்து படிக்க வேண்டும்.

நண்பர்கள் யாராவது கண்டுபிடித்தால் கூட சலனமே இல்லாமல்,  “இந்த ரா.கு SEMIOTICS பத்தி ஒரு நாவல் எழுதியிருக்கிறதா ஒரு நண்பன் சொன்னான், அதான் இதை வாசிச்சு டான் பிரவுன் கிட்ட இருந்து எங்கவெல்லாம் இவர் காப்பியடிச்சு இருக்கிறார் என்று நோட்ஸ் எடுக்கிறேன் மச்சி” என்று நிதானமாக சொல்லியவாறே அவன் சந்தேகம் தீரும் வரை கொட்டாவியைக் கட்டுப்படுத்திக் கொண்டாவது Angels and Demonsஐ வாசிக்க வேண்டும். இப்படியெல்லாம் தான் இமேஜை தக்க வைக்க வேண்டும். ஆனால் ஒரு சில நபர்களை நீங்கள் என்ன செய்தாலும் கவர முடியாது.

அப்படித்தான் புதிதாக ஒரு நண்பன் எங்கள் அறைக்கு வந்தான். அவன் அந்த அறையில் அதுவரை வசித்து வந்த மற்றொரு நண்பனின் அண்ணன். அவன் வெளிநாடு போகவும், இந்த அறையில் இடம் காலியாவதை அறிந்து அவன் அண்ணனைச் சேர்த்து விட்டான். மற்றவர்களுடன் எளிதாகப் பழகும் சுபாவமற்றவனாக இருந்தான். சேர்ந்து சாப்பிடும் பொழுது கூட சரியான கூட்டாளியாக இருக்க மாட்டான், யாரிடமும் அதிகமாகப் பேசவும் மாட்டான். ஏற்கனவே ஐடியா மணியாக இருந்த என்னை அவன் சட்டை செய்வதேயில்லை. மூன்று வருடங்களுக்கு முந்தைய புத்தகச் சந்தைக்கு சென்று புத்தகங்கள் வாங்கத் திட்டமிட்டோம் ( அப்போது எல்லா நண்பர்களும் சேர்ந்து வாசிக்க ஆரம்பித்து இருந்தோம் இவனைத் தவிர) நானும் மற்ற அறை நண்பர்களும் செல்வதற்கு திட்டமிட்டோம். அவனும் உடன் வருகிறேன், நானும் சில புத்தகங்கள் வாங்கி வாசிக்க ஆரம்பிக்கிறேன் என்றான்.

இது தான் அவனைப் பழி வாங்குவதற்குத் தக்கச் சமயம் என்று திட்டம் தீட்டினோம், அதற்குப் பெயர் தான் ப்ராஜக்ட் சாரு நிவேதிதா. ஒரு முன் கதை- நாங்கள் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பின் அடிக்கடி ப்ளாகில் வசைபாடப்பட்டுவரும் பெயர் இது என்று தெரிந்தவுடன், முதன் முதலில் “ஜீரோ டிகிரி” எனும் புத்தகத்தை வாங்கி ஆளுக்கு இருபது பக்கங்கள் என கிழித்துக் கொண்டோம். இப்போ தான் எக்ஸைல் வந்திருக்காமே!! அதைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வாங்கிவிடச் செய்து விடுவோம். அதோடு நம்ம ஏரியாவுக்கே வர மாட்டான் என்று திட்டம் தீட்டினோம்.

இரவெல்லாம் சாருவைப் பற்றி தான் பேச்சு, “அவரைப் படித்த பின்னர் இசை, கலவி, சமூகம், இஸ்பானியக் கலாச்சாரம் என்றெல்லாம் நம் ரசனை மாறிவிட்டது அல்லவா??” என்று எங்களுக்கும் பேசிக் கொண்டோம் அவன் காது கொடுத்து கேட்குமாறு.

 “ஜீரோ டிகிரி எனும் நாவல் போஸ்ட் மாடர்னிசம் என்று சொல்கிறார்கள் தெரியுமா?”

 “ம்ம்ம்!!”

“அதில் ஒரு வரி வருது பாரு... அதை வாசிக்கும் பொழுது போரைச் சந்திக்கும் எந்த இனத்திலும், ஒரு பகுதி மோசமான அழிவைச் சந்திக்கும் பொழுது நடைபெறும் விஷயங்கள் உலகம் முழுக்க ஒன்றாக இருக்கின்றது என்று அந்த வரியை வாசிக்கும் போது தான் டா உணர்ந்தேன்”

“ம்ம்ம்!!”

“இந்த முறை சாருவோட இன்னொரு மகத்தான் நாவல் வந்துருக்கு டா.. அத நான் என் காசு போட்டு வாங்கிக்கிறேன். ஏன்னா எல்லாரும் வாசிச்சதுக்கப்பறமா நான் அதை பத்திரப்படுத்தி அப்பப்போ வாசிக்கனும் என்றேன்”

“ம்ம்ம்!!” என்றான். ஆனால் இந்த முறை என் நண்பன் இல்லை, எங்கள் திட்டப்படி நாங்கள் பேசிக் கொண்ட சுவாரஸ்யத்தில் எங்கள் வலையில் விழுந்த டார்கெட்.

அடுத்த நாள், புத்தகக் கண்காட்சிக்கு சென்றோம், இவனைக் கவிழ்ப்பதற்கான சரியான இடம், அந்த சந்தையில் புதிதாகக் கடை போட்டிருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் தான் என்று முடிவெடுத்தோம். ஏற்கனவே எங்கள் பட்டியலில் இருந்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டே டிஸ்கவரி புக் பேலஸிடம் சென்றோம். வேடியப்பன் அப்பொழுது ஒரு ஸ்டால் மட்டும் தான் புக் பண்ணி அரங்கு அமைத்திருந்தார், இருந்தபோதும் கையில் அரிவாள் இல்லாத குறையாய் அந்த பக்கம் போவோர், வருவோரை எல்லாம் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். நாங்களே உள்ளே சென்றோம்,  என் நண்பன் என்னைப் பார்த்து கண் சிமிட்டினான், நான் அவனுக்கு வலை விரிக்கலானேன்.

“அந்த போஸ்ட் மடர்னிசத்தில புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறதே!! அதன் பெயர் என்னவென்று சொன்னாய்??” என் நண்பன் என்னிடம் கேட்டேன்

“யாரு சாரு புக்கா” -இது நான்

“எக்ஸைல் தான” - இது எங்கள் டார்கெட்.

நானும் என் நண்பனும் கை குலுக்கிக் கொண்டோம்.

“ஆஹா!! அமௌண்ட் கொறையுதே ” என்று பர்ஸைத் தடவினேன்.

“பரவாயில்ல, இத நான் வாங்கிக்கிறேன், நானும் புத்தகம் வாசிக்கலாம்னு ஆசப்படுறேன்” என்றேன்.

“இதாண்டா நீ வாங்கும் ஃபர்ஸ்ட் அண்டு லாஸ்டு புக் ” என்றேன். வேடியப்பனின் தம்பி சஞ்சய் எங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

“பாஸ் கண்டுக்காதிங்க!! எப்டியோ உங்களுக்கு சேல்ஸ் ஆகுதுல்ல” என்று சிரித்துக் கொண்டே வெளியேறினோம்.

ஆப்ரேஷன் சாரு நிவேதிதா சக்ஸஸ்.

“என்னங்கடா இது செக்ஸ் புக் மாதிரி இருக்கு?? நீங்க என்னென்னமோ சொன்னிங்க??”

நாங்கள் இதுவரை தொடாத அந்த புத்தகத்தை, அவன் முதன் முதலாக வாசிக்க ஆரம்பிக்கும் போது - புலம்பிக் கொண்டே தான் வாசித்தான். நாங்கள் அவன் புலம்பல்களை ரசித்துக் குதூகலித்துக் கொண்டோம் அவனுக்குத் தெரியாமலே.

திடீரென்று அடுத்த வாரம் ஒரு நாள் அறைக்குத் திரும்புகையில் அவன் கையில் மகாபாரதம்.

“எக்ஸைல் என்னாச்சு??” என்றேன்

“முடிச்சுட்டேன், இனிமே சினிமா போறத கொறைச்சுட்டு புக் வாசிக்கனும்” என்றான்.

***

இந்தக் கதையை முடிக்கும் பொழுது என் அருகில் இருந்த நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

“Light Reading, Entrance Exam, Channel என்றெல்லாம் வாசிப்பிற்கு எந்த அவசியமும் இல்லை.. எவனுக்கு எந்த கதை தன் சொந்த அனுபவத்தையோ இல்லை தான் கண்டிருந்ததை/அறிந்ததைப் பற்றிப் பேசி மறுத்தோ அல்லது ஒப்புக்கொள்ளவோ செய்கிறதோ?? அது தான் அவனைத் தொடர்ந்து வாசிக்கத் செய்யும், என்றபோதும் இங்கே யாராலும் வாசகனின் pulseஐ பிடித்துப் பார்க்க முடியாது. ஒரு வாசகன் எவனை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவோ!! மறுத்து போகவோ முடியும் - அவனை கட்டுப்படுத்த முடியவே முடியாது” என்றேன்.

மேலும் “ இல்லாவிட்டால், வாசகனாகக் கூட இல்லாதவன், வாசிப்பினால் ஈர்க்கப்பட்டு இன்று பதிப்பாளனாக வரும் வரை மாறுவதற்கு சாரு நிவேதாவின் எக்ஸைல் தன் காரணம் என்று ஒருவன் இருக்கிறான் என்றால் நம்புவீர்களா?” என்று கேட்டேன். THUS PROVEN YOU CAN'T IGNORE CHARU

யாரைச் சொல்கிறேன் என்று எல்லோரும் என்னைப் பார்க்க என் பக்கத்து டேபிளில் - டிஸ்கவரி புக் பேலஸில் மட்டும் 3000 ரூபாய்க்கு கார்டு தேய்ச்ச ட்ரூத் ப்ரெஷ்ஷைப் பார்த்தேன். அநேகமாக என் ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் அவனைத் தெரியும் தான். அவன்.... (இந்த சுட்டியை க்ளிக்கி பாருங்கள்)


ஜீவ.கரிகாலன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக