ஒவ்வொரு மாதமும்
சென்னையில் தன் வாசகர் வட்ட நிகழ்வுகளை நடத்தி வந்த கணையாழி, இந்த முறை மயிலாடுதுறையில்
தன் மாத நிகழ்வை மற்றும் படைப்புகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றியது. மயிலாடுதுறையில்
நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பேராசிரியர்;கலியபெருமாள் அவர்களும் அவரது மனைவி முனைவர்
க. செந்தமிழ்ச்செல்வி அவர்களும் எல்லா ஏற்பாட்டினையும் சிறப்பாக செய்து வைத்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில்
வரவேற்புரையை முனைவர் செந்தமிழ்ச்செல்வி வழங்கிட, கணையாழியின் அட்டைப் படங்கள் குறித்த
ஒரு சிறிய உரை என்னிடம் வழங்கப்பட்டது, கணையாழியில் சமீபத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்களாக
அட்டைகளிலேயே தென்படும் புதுமைகளை இந்தியாவின் தலை சிறந்த கலை இலக்கிய இதழ்களான
MARG, ART INDIA ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பேசினேன்.
அடுத்ததாக திரு.கால.சுப்ரமணியம்
அவர்கள் ஜூன் மாத இதழில் வெளிவந்த பிரமிள் குறித்த கட்டுரையைப் பற்றி பேசினார். முதலில்
பிரமிளை அறிமுகப்படுத்தும் விதமாக ஆரம்பித்த அவரது பேச்சு, அவர் சுட்டிக்காட்டியபடி
திராவிட இயக்கங்களைப் புறக்கணித்த இதழ்களின் அரசியல் குறித்தப் பதிவாகவே இந்த மேடையில்
அமைந்தது. அடுத்ததாக வந்த இமையம் அவர்கள் ஜூன் மாத இதழில் பரிசுக்குரிவர்களைத் தேர்ந்தெடுத்ததன்
காரணத்தை முன்வைத்து பேசினார். எளிமையாகவும், சமகாலத்தைப் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட
படைப்புகளை தான் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பொதுவாக மொழி
குறித்த பொதுமக்களின் எண்ணவோட்டத்தையும், தமிழாசிரியர்களின் தற்போதைய அக்கறையின்மை
பற்றியும், இதழ்களின் தீவிர செயல்பாட்டினால் மட்டுமே தமிழ் மொழி இன்னும் வளர்ச்சி பெருகிறது
என்று பேசினார். மொழி தான் ஒரு சமூகத்தின் அடையாளம் என்று தன் உரையை முடித்துக் கொண்டார்.
இமையம் தேர்ந்தெடுத்த
படைப்புகளை தன் இலக்கிய பரிச்சியத்தோடு பேராசிரியர் கலியபெருமாள் பாராட்டுரை வழங்கிட,
நிகழ்வைத் தலைமை ஏற்று நடத்திய ஐயா ம.ராஜேந்திரன் அவர்கள் கால சுப்ரமணியனின் கேள்விகளுக்கு
பதிலாக மணிக்கொடி காலத்திலேயே பாரதிதாசன் எனும் திராவிடப் படைப்பாளனுக்கு இடமிருந்ததைச்
சுட்டிக் காட்டியும், இது போன்ற இடைவெளி குறித்துப் பதியவே கணையாழி தன் ஜூன் இதழில்
முயற்சி செய்ததைச் சுட்டிக் காட்டினார். இமையம் கூறிய மொழி குறித்த கருத்துகளுக்கு
தன் பதிலாக, மொழியை நான் வளர்த்தெடுக்க முடியாது, மொழி தான் நம்மை வளர்த்தெடுக்க முடியும்
என்று ஆரம்பித்தார். தமிழில் வந்த பக்தி இலக்கியங்களினால் தமிழ் வளர்வில்லை, மாறாக
தமிழில் அவ்விலக்கியங்கள் வந்ததனால் தான் சைவமும், வைணவமும் ஏன் கிருத்தவமும், இசுலாமியமும்
கூட வளர்ந்தது என்றார். ஏனென்றால் -சிந்தனை தான் ஒரு சமூகத்தின் அடையாளமாக இருக்கும்,
அந்த சிந்தனையைத் தூண்டும் மொழியாக தமிழ் மொழி இருப்பதால் தமிழ் எந்த காலத்திலும் உயிரோடு
இருக்கும் என்று நிறைவு செய்தார்.
அக்கூட்டத்திற்கு
நூற்றிட்கும் குறையாத எண்ணிக்கையிலான அளவு வாசகர்கள் சரியான நேரத்தில் வந்திருந்தனர்
என்பது சென்னையில் காண்பது கூட அரிதானது. ”நான் சுமார் இருபத்தி ஐந்து வருடங்களாக கணையாழியின்
வாசகனாக இருக்கிறேன்” என்று பெருமையாக சொல்லியபடி தங்கள் ஊரில் நடைபெறும் நிகழ்வுக்கு
முன்னரே வந்து சில உதவிகளைத் தானே முன்வந்து செய்து கொண்டிருந்த இவரைப் போன்ற வாசகர்களே
கணையாழியின் மறுக்கமுடியாத பலம் என்பது நிச்சயம்.
கிட்டதட்ட ஐம்பது
சந்தாக்களின் மூலம் அந்த நிகழ்வில் கணையாழி வாசகர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது. இனிமேலாவது சென்னையிலேயே தீவாக இருந்து விடாமல் இது போன்ற முயற்சிகளை
மேற்கொண்டு தமிழகம் முழுவதும் மற்ற இதழ்களும் கூட்டங்கள் நடத்தினால் ஆரோக்கியமான வாசகர்கள்
நிறைந்த சமூகமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. சமகாலத்திற்கும், கல்வித்துறைக்குமான
இடைவெளி பெரிதாக இருக்கும் போது இது போன்ற இதழ்கள் தான் அதனை மிகச் சரியாக இணைக்க முடியும்
என்று முடிவுக்கு வந்தேன்.
- ஜீவ.கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக