வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பஜ்ஜி - சொஜ்ஜி - 66 / மண் வாசனை

கோடை எல்லார் வீட்டிலும் பட்ஜெட்டை எகிற வைக்கும் விரயங்களுக்கான மாதம் என்பது பொருந்தும். அதிகளவு குடிதண்ணீர், மின்சாரம், தர்பூசனி, ரஸ்ணா, பொவண்டோ, நைசில் போன்ற variable costகளோடு சில fixed costஐயும் உருவாக்கும். அது ஒவ்வொரு வீட்டிற்கும் தகுந்த மாதிரி ஏர் கூலர், ஏர் கண்டிஸன், யூபிஎஸ்/இன்வெர்ட்டர், பேட்டரி ஃபேன் போன்ற இமாலய செலவுகளையும் வைத்துவிட்டு பல்லிளித்தபடி யாரிடமாவது கை நீட்டச் செய்யும். என் நண்பர்கள் தமது குழந்தைகளுக்கு சம்மர் கோச்சிங், ப்ளே ஸ்டேஷன், தீம் பார்க், ஷாப்பிங் என்றெல்லம் தமது குழந்தைகளுக்காக, பள்ளிக் கட்டணம் போகவும் இது போன்ற செலவுகளுக்கு ஆளாகும் போது, பேச்சிலராகவே வாழ வேண்டும் என்கிற எண்ணம் வந்து சூடம் ஏற்றி சத்தியம் செய்து கொள்கிறது. இத்தனை கடினங்களையும் சமாளித்து தன் மனைவி மக்களை ஊருக்கு அனுப்பிவிட்டு கிடைக்கும் பத்து நாட்களில் தான் வாழ்ந்த அடையாளமாக தன் வரலாற்றில் பதிய முனைகிறான் என் நண்பன்.

“லக்‌ஷ்மிபதி ஓடியா ஓடியாஎன்று நண்பர்களை அழைத்த படி தன் கோடையை கொண்டாடத் துவங்குகிறான்.
****


தெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும், என்னுடைய கோடை கொண்டாட்டம் பற்றியும் சொல்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக எனக்கு இருந்ததெல்லாம் ஒரே திட்டம் தான். அது என் சொந்த ஊருக்கு சென்று மூன்றே நாளில் திரும்பி வருவது எனும் திட்டம் தான். அந்த கரிசல் கிராமத்தில், சுடுமணலில், சிமெண்ட் சாலைகளில், நெருஞ்சி முட்கள் மீது என ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் மிதித்துப் பார்ப்பது மட்டுமே எனது பயண அனுபவம். ஆனால் போன வருடம் வரை அங்கு செல்வது என்றால் ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருக்கும்.

அது ஐந்து வயது வரை மட்டுமே நான் வாழ்ந்த ஊர். பிழைப்பு தேடி பிறகு எங்கள் குடும்பம், எங்கெங்கோ அலைந்து திரிந்து இறுதியில் சென்னையில் சங்கமித்தாகிவிட்டது. சென்னையைப் பொறுத்தவரை நாம் எப்போதுமே யாரோ ஒருவன் தான், இங்கே கோடீஸ்வரனும், பாமரனும் கூட யாரோ ஒருவன் தான். எல்லோருக்குமே வேலை இருக்கிறது, வேலையே செய்யாதவனுக்குக் கூட மற்றவர்களைப் பார்த்து அலட்டிக் கொள்ளத் தேவைப்படாமல் கடந்து செல்வதற்கு காரணங்கள் இருக்கின்றன.

ஆனால் கிராமத்தின் நிலை வேறு, அங்கே நான் வாழ்ந்த சுவடு முற்றிலும் போய்விடவில்லை, எங்களைத் தெரிந்தவர்கள் யாரேனும் மட்டுப்படுகிறார்கள்; அவர்களிடம் கதைகள் இருக்கின்றன; அச்சம் இருக்கின்றன; நினைவுகள் வந்து செல்கின்றன. அடுத்த வருடம் எப்படி வரவேண்டும் என்று வாழ்வை இயக்குவதற்கான அச்சானியாகிறது. பால்யத்தில் பார்த்த நண்பர்களின் முகத்தை அவர்களின் ஏதோ ஒரு சொல்லிலோ, தொனியிலோ கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. எல்லாவாற்றிற்கும் மேலே தலைமுறை தலைமுறை நம்மைக் காப்பதாக நினைத்து ,ஒரு கோயிலை உருவாக்கி, காலங்காலமாக கை கூப்பி வணங்கி வந்த எங்களது முன்னோர்களின் வார்த்தைகள் அங்கே இருக்கின்றன. கோரிக்கைகளாக, மன்றாடல்களாக, வரமாக இருக்கும் அவ்வார்த்தைகள் கோயிலுக்குள் எப்போது சூழ்ந்திருக்கும் ஒரு கப்பிய வாசனையாய் நிறைந்திருக்கிறது. அதே போல நிராசைகள், வஞ்சனைகளும் துருப்பிடித்த கதவுகளின் ஈன முனகலாக சேர்ந்தே இருக்கின்றன.

இப்படியெல்லாம் ரசித்துக் கொண்டிருந்த ஊருக்கு ஒவ்வொரு வருடமும் செல்வது எனக்கு உற்சாகமானது. அந்த ஊருக்கென உரித்தான பண்டங்களுடன் அந்த நாட்களை கழிப்பது மேலும் உற்சாகம் தரக்கூடியது. எல்லாம் போன வருடம் வரை தான்.

****

சென்னையை எத்தனை தூரம் ஒரு காலத்தில் வெறுத்திருக்கிறேனோ அத்தனை தூரம் இன்று ரசிக்கிறேன் அதற்கு மற்றுமொரு காரணம் தான் மேற்கூரிய அக்காரணம். போன வருடம் அப்படித்தான், கடைத் தெருவில் நடந்து வருகையில் இரு வயதானவர்களுடன் பேச்சு கொடுத்தேன் :

ஒரு இருபது வருடங்களுக்கு முன்னரெல்லாம் கிராமத்திலிருந்து நகரம் தேடி செல்பவர்கள் இரண்டு விதம். ஒருவர் தன் கிராமத்திலிருந்து கடன் வாங்கி வெளியூரில் தொழில் தொடங்குபவர்களும் அல்லது வேலை/ படிப்புக்காக இடம்பெயர்பவர்கள் முதல் வகை. இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் இங்கே வாங்கியிருந்த கடனால ஊரில் வாழ முடியாமல் வேறு ஊர் சென்றவர்கள்.

யார் எப்படி சென்றாலும் சரி, உழைத்து முன்னேறியோ, படித்து முன்னேறியோ இல்லை, அதிர்ஷ்டத்திலேயே முன்னேறியோ நகரத்தில் வாழ்பவர்கள் தான் கிராமத்திற்கு திரும்புவதற்கான தகுதியைப் பெற்றவர்கள் போன்ற ஒரு பிம்பம் உருவாகிவிட்டது. முதலாளி சரியில்லை, தொழில் அமையவில்லை, கம்ப்யூட்டர் வகுப்பில் சேராமல் விட்டு விட்டேன் என்றெல்லாம் அவர்களிடம் பதில் சொல்ல முடியாது. வெற்றிக்கான அடையாளமாக தன் சொந்த ஊர்க்காரர் முன் காரிலாவது வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குறைந்த பட்சம் குடும்பத்திற்கு ஒரு TCS emplyeeஆவது உருவாகி தன் குடும்பத்தை எப்படி லிஃப்ட் பண்ண முடியும் என்று காண்பித்து விடுகிறான்.

இந்த திறந்தவெளியில் உனது இடத்தைப் பெற/தக்கவைக்க ஒரு பெரிய போட்டியில் ஜெயித்தாக வேண்டும். ஆனால் இந்த போட்டியின் வெற்றியை ஆடும் திறமை, ஆட்டக் களம், உபகரணங்கள், பயிற்சி, சக ஆட்ட வீரர்கள் அவர்களது திறமை போன்றவற்றை விட ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னே போடும் டாஸ் ஏற்படுத்தும் விளைவுகள் தான் அதிகமாக இருக்கும். படிப்பிலோ, வேலையிலோ, நிறுவனத்திலோ அல்லது வேறு ஏதேனும் வாய்ப்பிலோ நாம் சொல்லும் yes or no தான் deciding factor. மற்ற சமாச்சாரங்கள் எல்லாம் பின் தொடரும் காரணிகளே.
நகரம் சிதறி விட்ட சில்லறைக் காசுகளில் சிலருக்கு ஐம்பது பைசா, சிலருக்கு ஒரு ரூபா, சிலருக்கு ஐந்து, வெகு சிலருக்கு பத்து ரூபா. நம் கையில் இரண்டு ரூபா காயின் தானே கிடைத்தது என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டாலும். கொட்டப்பட்ட சில்லறைகளில் நாம் தான் சரியாக பொறுக்கவில்லையோ என்று நம்மையே வலுவற்றவர்களாக்கி விடுகின்றது இவர்களின் ஒப்பீடுகள்.

எத்தனையோ புத்தகங்களில், சிலரது பேச்சுகளின் வழியே நாம் கற்றுக் கொண்ட நிதானங்கள் இது போன்ற மனிதர்களின் விஷமத்தனமான பேச்சில்  தகர்த்து விடுகிறது. ஒரு குடும்பத்தின் தோல்வியை தன் ஆயுள் முழுக்க பார்த்து வந்திருப்பதாக ஒருவர் சொல்வதைப் பார்க்கும் பொழுது நடுங்கவே செய்தேன். அவருக்கு பதிலாக என்னிடம் ஒரு சொல் கூட உயிரோடு இல்லை. உலகம் நம்புகின்ற அளவுகளின்படி தன்னை வெற்றி பெற்ற மனிதனாக நிரூபித்துக் கொள்ளாதவனின் குற்ற உணர்வுடன் வீடு சேர்ந்தது அத்தனை எளிதாக மறக்க முடியாதது தான்.

சில நாட்கள் என் பெற்றோர்களிடமே சரியாகப் பேச முடியாத அளவுக்கு குற்ற உணர்வு இருந்த்தை எண்ணிப் பார்த்தாலும் வியப்பாகத் தான் இருக்கிறது. எப்படி எத்தனையோ முறை பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என விமர்சனங்களை கடந்து வந்த நம்மை சம்மந்தமே இல்லாத ஒருவர் எப்படி காயப் படுத்தியிருக்க முடிந்தது? என்று. மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பம் தேய்ந்த கதையை வேறு ஒருவன் இத்தனை ரசனையாக சொல்ல முடியுமா? என்று தெரியவில்லை. ஒருவேளை உங்கள் ஊரிலும் நீங்கள் பேருந்தில் இறங்குவதைப் பார்த்தபடி உங்களை விசாரிக்க வரும் ஒரு பழைய ஆசாமியிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முழுவதும் உண்மையாகவும், அதிகம் பொய் இல்லாமலும் பதில் சொல்லத் தயாராக வேண்டும்.

இன்னும் இந்தக் கதை முடியவில்லை என்பதால் தான் இந்த வருடமும் செல்கிறேன். இந்த வருடமும் அவரைப் பார்க்க நேரலாம். அதே கேள்விகள் என்னை துளையிடலாம், நான் தோற்றுப் போகலாம். ஆனால் காலத்திடன் இதற்கான பதில் இருக்கிறது. அது யாருக்கு சாதகாமான பதிலை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த எதிர்காலம் ஒளித்து வைத்திருக்கும் பதில் தான் இந்த வருடமும் ஊருக்கு செல்ல எனக்கு தைரியம் கொடுக்கிறது. கிளம்பிவிட்டேன்.

அந்த மனிதர் என்னிடம் கடைசியாக கேட்ட கேள்வி,  இவர்களை பொருட்படுத்தாமல் நம் பாதையே சரி என்று நம்பி செல்வதற்கு காரணமாக அமைந்தது.

“தம்பி, அப்படியே நமக்கு ஒரு நன்னாரி சர்பத் ஒன்னு வாங்கிக் கொடேன்

- ஜீவ.கரிகாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக