சனி, 7 செப்டம்பர், 2013

ஆனந்த யாழின் அற்புத இசை

                                      தங்க மீன்கள் - பார்க்கத் தவற விடக் கூடாத படைப்பு


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்று தமிழராய் நம் பெருமையை சொல்லும் இனத்தவர் தானே நாம்? இதில் நமக்கு ஒரு கேள்வி -

அது எப்படி??? நம் பூமியில் கல்லும், மண்ணும் தோன்றும் முன்பே உலோகத்தை வைத்து செய்யப்படும் வாளோடு பிறந்த தொல்குடி என்று நம்மைச் சொல்லிக் கொள்ள முடியும்?? இந்த வரியானது புறப்பொருள் வெண்பாமாலையில் (அல்லது புறப்பாட்டு), போர் முடித்து வாகை சூடிச் செல்லும் இரு போர் வீரர்கள் கள்வெறியில்(போதையில்) உளறியதாம். அதனால் இதை வைத்து நம் பெருமை பேசியதை எல்லாம் அநியாயம் என்று உதறித் தள்ளிவிட முடியுமா?? தற்குறிப்பேற்ற அணியோ, ஏதோ ஒரு மிகைப்படுத்தல் வகையறா அணியோ என்று இலக்கணம் வகுத்து நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா??.. இவையாவுமே இலக்கியத்திற்கு மட்டும் தான் அனுமதியா?? அதையே ஒருவன் தன் சினிமாவில் சொன்னால்......??

”மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத் தான் தெரியும், முத்தம் என்பது காமத்தில் சேராது என்று!!” இந்த தொடக்கம் தானே பலருக்கு எரிச்சலூட்டியது?? அவர் கூறியது தவறாகவே இருக்கட்டும் !! எதற்காக இத்தனை கொந்தளிப்பு?? உணார்ச்சிவசம்?? ஆர்ப்பாட்டம்??.

இதை “I am the happiest man in the world” என்று சொல்லும் ஒரு தனி மனிதனின் சந்தோசமாகப் பார்ப்பதற்கு இடமிருக்கிறது இல்லையா?? இல்லை  Tranquilityல் இருக்கும் ஒரு நல்ல கலைஞனின்  அகந்தையாகப் பார்க்கலாமே!! இந்த வரிகளுக்கு இவ்வளவு ரியாக்‌ஷன் கொடுத்தலே போதும் என்று நினைக்கிறேன், அதை விடுத்து மொத்த படத்தையும் இந்த வரிகளைக் கொண்டு justify பண்ணுவது ரொம்பவே எரிச்சலூட்டுகிறது.


என் உலகம் மிகச் சிறியதாகவும் - அதில் என் குடும்பம் தவிர, சில உறவுகள் மட்டுமே இருக்குமெனில் என் தத்துவங்கள், சித்தாந்தங்கள் எல்லாம் உலகத்தோடு பொருந்தாது, அங்கே எனக்கென தர்ம நியாங்கள் வேறுபடும்.
அது போலத் தான காமம் என்பது ஒரு infinite matter, முத்தம் கூட தேவையில்லை காமத்திற்கு ஒரு கற்பனையான நிழலே போதுமானது, அதுவும் தனிமையில் வாழும் ஒரு மனிதனுக்கான காமமே வேறு தானே!!.

நான் கூடத் தான் இதுவரை சில முத்தங்களைப் பெற்றிருக்கிறேன் (சிறுவயதில்) அதில் யாவிலுமே நான் காமம் என்ற உணர்வைக் கண்டதில்லை, இன்னும் எனக்கு அடுத்த முத்தம் கிடைக்கும் வரை முத்தமெல்லாம் காமத்தில் சேராது என்று தான் நான் நம்புவேன்(அறிவு சொலவ்து வேறு). ஆனால் இந்த வெற்று தர்கங்களை வைத்துக் கொண்டு இந்த அற்புத, ஆமாம் இந்த அதி அற்புதப் படைப்பை பரிகசிப்பதோ, இல்லை குறைத்துப் பேசுவதோ மிகுந்த வருத்தத்தினை அளிக்கிறது.



வெறும் குழந்தைகளைப் பற்றிய படமாகத் தான் நினைத்துக் கொண்டு தியேட்டரில் நுழைந்தேன். அப்புறம் தான் தெரிந்தது அந்தப் படத்தில் நானும் இருக்கிறேன், அது போல என் குடும்பமும் அதில் இருக்கிறது என்று. ராம் தனது முதல் படத்தில் தமிழ் பட்டப்படிப்பைப் படித்தவனின் வாழ்க்கையை உலகமயமான கார்ப்பரேட் உலகில் சிக்கித் தவிப்பதை காட்டியிருந்தார். இந்தப் படத்திலும் அதன் நீட்சி இருக்கிறது, கல்வி பெரிய வணிகமாகிப் போனதும், நவீனமயமான உலகில் பல தொழில்கள் முடங்கிப் போவதும், இதில் Survivalக்காக fittஆக இல்லாத ஒருவனை இந்த சமூகம் எப்படி அலைய வைப்பதும், வெளிநாட்டிற்கு கடத்தப் படும் நமது தொல்பொருள்கள் என  நிறைய விஷயங்களை அவர் காட்சிப்படுத்தியிருந்தாலும், படம் ஒரு முழுமையான குடும்பப் படமாகவே இருக்கின்றது.. ஏனென்றால் இன்றைய சிக்கலானப் பொருளாதாரச் சூழலில் குடும்பம் எனும் அமைப்பு மிக முக்கியமான தீர்வாகவும் இருக்கும், அதுவும் nuclear familyயில் இருந்து திரும்பி கூட்டுக்கு செல்லும் அமைப்பில் இருக்கிறது. அதனால தான் இந்தப் படத்தில் ஒரு Negative பாத்திரம் கூட அமைக்கவில்லை. ராமின் மனைவி, தந்தை, தங்கை என எல்லோரும் கச்சிதம். Superb Casting

ஆனந்த யாழை மீட்டுகிறாய், மிக அற்புதமான பாடலிலேயே லயித்து விடுகிறது மனசு, பார்ப்பதற்கு அந்த குளம் செஞ்சிக் கோட்டை போல் இருக்கிறது. முதல் பாதியில் வரும் நாஞ்சில் தேசம் இதுவரை வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டோம், இரண்டாவது பாதியில் எர்ணாக்குளம் மற்றும் மலைத் தொடர் என கண்களை குளுமையாகவே வைத்திருக்கப் பணித்து விட்டார், போதாதைக்கு நான்கு - ஐந்து இடங்களில் நமக்கு கண்ணீர் வேறு உருண்டோடியது.

 “அப்படி கண்ணீர் விடுற அளவுக்கு இந்த படத்துல?” என்ன இருக்கு என்று கேட்டீர்களானால் :
1. நீங்கள் தொடர்ந்து பவர் ஸ்டார், சந்தானம், சிவா, விமல், சிவகார்த்திகேயன், சூரி என்று திரும்ப திரும்ப திருமப்வெளிவந்து கொண்டிருக்கும் படங்களை கைகொட்டிப் பார்ப்பவர்களாய் இருக்கவேண்டும்.
2. அல்லது, நீங்கள் ஒரு க்ரீமி லேயர் வாழ்க்கையை வாழ்ந்து, அனுபவித்து அல்லது ஏழ்மையை மறந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஏனென்றால், நான் ஒரு திருமணம் ஆகாதவன், ஏன் குழந்தை கூட இல்லாதவன்(இந்த இரண்டுக்கும் சம்பந்தமில்லை தானே!!) , நான் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன், ஏனென்றால் நான்இயக்குனர் ராமாகப் பல இடங்களில் என் தந்தையைப் பார்த்தேன், சில இடங்களில் என்னையும் பார்த்தேன், அது தான் என்னை நெகிழ வைத்திருக்கிறது போலும்.

“பணம் இல்லைன்னா சொல்லுங்களேண்டா!! எதுக்கு டா நாலு நாள் -அஞ்சு நாளுன்னு அலைய விடுறிங்க... இல்லைன்னு சொல்றது என்ன அவ்வளவு கௌரவ கொறைச்சலா??”

“பணம் இல்லாதவன எல்லாம் முட்டாள்னு நெனைச்சுடாதிங்கடா!!” பெற்றோரின் வைத்தியத்திற்கும், கடன் நெருக்கடியிலும், கல்லூரிக் கட்டணத்திற்கும் என்று எத்தனை கிலோ மீட்டர்கள்? எத்தனை கும்பிடுகள், கெஞ்சல்கள், அவமானங்களை சந்தித்திருப்பேன் நான்.  ஆக அந்த காட்சியில் இருப்பது நான் தானே!!

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, (எனது பள்ளிப் பருவத்தில்) நான் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் (அப்படி என் பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்), என் காதில் விழாதவாறு அல்லது அடுக்களையில் அல்லது மெதுவாக ஜாடையிலோ இன்றும் தனக்கு சம்பளம் வாராததை என் அப்பா என் அம்மாவுக்கு சொல்ல, என் பிறந்தநாளோ அலல்து தம்பியினோடதோ, பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டிய நாளோ இல்லை தீபாவளியோ வரும் காலண்டரின் தேதியில் என் அம்மாவின் ஏக்கப் பார்வை விழும். அந்த தவிப்பை எனக்கு கிருஸ்துமஸ் தாத்தாவைப் போல ராம் தன் மகளுக்குப் பேசும் காட்சியில் பார்க்கும் பொழுது வலி இரட்டிப்பானது.

பள்ளிக்கூடத்தில் ராம் பேசும் காட்சியிலும், க்ளைமேக்சில் ராம் பேசும் காட்சியிலும் வரும் வசனங்கள், இதே சமூகம் மீது நமக்கிருக்கும்(அட்லீஸ்ட் எனக்கிருக்கும்) அதே கோபத்தின் எதிரொலியாகக் கேட்கும் சாட்டையடி. பத்மப்ரியாவின் கணவரின் பாத்திரப்படைப்பிலிருந்து, நித்யஸ்ரீயின் பாத்திரம் வரை எல்லாமுமே மனதில் எளிதில் பகிர்ந்து கொள்கின்றன.


ராம் மற்றும் அவரது மனைவியின் பொருத்தம் படத்திற்கு கூடுதல் பலம், “நீ சொல்லி நான் வராமலா இருந்தேன்??” என்று ராமின் மனைவி அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதை நினைவு கொள்கையிலும், “நானும் செல்லம்மா மாதிரி தானே!!” “ஏன் காலையும் அமுக்கி விடு” என்று சொல்லும் காட்சிகள் அத்தனையும் கவிதைகள், ராம் இலக்கியத்தோடு மிக நெருக்கம் என்பதை டைட்டில் கார்டில் வேறு போட்டு விட்டார்கள் (வண்ணதாசன், பவா, மாரி செல்வராஜ், சாம்ராஜ்).

“ஏன் இந்த நாய அடிக்கிறிங்க??”
“அது மேலையாவது என் கோபத்தை காட்டுறேண்டி”

அதே போல டீவி விளம்பரங்களினால் ஒரு பாமரக் குடும்பத்தில் ஏற்படும் இன்னல்கள், நம்மை அறியாது நம் மூளைக்குள் சென்று பிராண்ட் நேம்களை விதைத்துச் செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதிருக்கும் கோபத்தையும் வெளிக்காட்டுகிறார். விளம்பரங்கள் குறித்து அவர் பேசும் வசனங்கள் எல்லாம் எனக்காகவும், என் சகநண்பர்களின் நலனுக்காகவும் பேசும் மற்றொரு நண்பனின் குரலாகவே இருந்தது. உண்மையில் இந்த விளம்பரம் தான் ஒரு சிறுமியினை தற்கொலை செய்யும் அளவிற்குக் கொண்டு செல்லும் பின்னணியில் இருக்கிறது என்பதை உணரலாம்.

”அவன் நல்லவங்க” - ராமின் தாய்
“அவன் ரொம்ப நல்லவன்டி, அதான் கொஞ்சம் கெட்டவனாகட்டும்” -ராமின் தந்தை மனமுடைந்து அழும் காட்சியில், “எங்க அண்ணன் வாங்கிக் கொடுத்தது என்று சாக்லேட்டை மகனிடமிருந்து சாக்லேட்டை பகிர்ந்து கொள்ளும் தங்கையின் வசனமும் - இயக்குனருக்கு இந்த மாறிவிட்ட நவீன இயந்திர வாழ்க்கைச் சூழலிலும் குடும்பம் எனும் அமைப்பு மீதும் உறவுகள் மீதும் இருக்கும் நம்பிக்கை தெரிகின்றது. இதையும் கெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய போலியான கல்வி மோகத்தினை தான் அறுத்து எரிவதென தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்கிறார் ராம்.

ராமின் நடிப்பினையும், பாடி லாங்குவேஜும் சிலர் ஓவர் ஆக்டிங் என்று சொன்னார்கள். ஒரு முறை தான் ராமினை நேரில் பார்த்திருக்கிறேன் என்றாலும் இந்த வசன உச்சரிப்பிற்காகவும், உடல் மொழிக்காகவும் இந்த படத்தில் மெனக்கெட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் குடும்பத்தின் பின்புலமாக கொஞ்சம் high class என்று சொல்லிக் கொள்ளும் பிள்ளை மார்  சமூகத்தின் சாயல்கள் தெரியுமாறு திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகின்றது ( வேறு சமூகமாகக் காட்டியிருந்தால் நிச்சயமாக ரோஹினி ஒரு மீனை அறுக்கும் காட்சியாவது வைத்திருப்பார்கள்) , இதுவும் கூட இந்த களத்திற்காக தேவைப்படும் பாத்திரப்படைப்பு தான், ராமின் அப்பா வெளித் திண்ணையில் அமர்ந்தபடிப் பாடும் தேவாரப் பாடல் தான் இந்தக் குடும்பத்தின் சமூகம் பற்றிப் பேச வைக்கின்றது..


***************************************************************************
தங்க மீன் தேவதையின் தேர்வு Justify செய்யப்பட்டுள்ளது.
அவள் கேட்கும் அத்தனை கேள்விகளிலும் குழந்தைகளுக்கான SPACE நமது அவசர யுகத்தில் (அதுவும் படத்தில் வருவது கிராமம் தான்) எத்தனை தூரம் காணாமல் போயுள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். இது குழந்தைகளுக்கான இலக்கியம், விளையாட்டு, பெற்றோர் மற்றும் பெரியவர்களின் அரவணைப்பு மிக முக்கியமாக நமது செயற்கையான தனியார் பள்ளிக் கல்வி மோகம் என  பட்டியலிடுகிறது.

படத்தின் தலைப்பாக வரும் தங்கமீனாக ஆகும் பொருட்டு குளத்தில் குதித்த குழந்தையைத் தேடி குதிக்கும் ராமின் பாய்ச்சலோடோ அல்லது குழந்தையைக் காப்பாற்றிய கணத்திலோ அந்த செல்லம்மாவின் பொம்மை குளத்தில் மிதப்பது போன்ற காட்சியிலேயே முடிந்து விடுகின்றது, ஆனால் வெகு சிறப்பாகக் காட்சிப் படுத்திய நிகழ்வுகளையே!! நாடக வடிவில் வெற்றி பெறும் மாணவியாகக் காட்டி நிம்மதியாக வீட்டுக்குப் போங்கள் என்று அறிவுரை சொல்லவும் முனைந்திருக்கிறார்.  அதையும் நாங்கள் நின்று கொண்டு கைதட்டிய படியே  தியேட்டரை விட்டு வெளியேறினோம்.

தாரே ஜமீன் பர் போன்ற ஜெர்க் இல்லை, முருக்கு இல்லை என்று கூவாமல், ஒரு நல்ல படத்திற்கு உங்கள் ஆதரவினைத் தாருங்கள்... இல்லையேல் உங்களுக்காக இந்த வாரம் வந்திருக்கிறது “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” உடனேயே ரிசர்வ் செய்யுங்கள்.

இயக்குநர் ராமின் கரங்களுக்கு என் முத்தங்கள்
         
         - என்ன லாஜிக் என்றே தெரியலையே இயக்குனரே!! இந்த படத்தின் மீது பலருக்கு இருக்கும் கோபம்???

- ஜீவ.கரிகாலன்

3 கருத்துகள்:

  1. *
    // நான் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன், ஏனென்றால் நான் ராமாகப் பல இடங்களில் என் தந்தையைப் பார்த்தேன், சில இடங்களில் என்னையும் பார்த்தேன். //

    ஒரு திரைப்படத்தில் மனம் ஒன்றிப் போவதற்கான காரணங்களாக
    தனிமனிதனின் ஏக்கமும் விருப்பமும் ஏக காலத்தில் நிகழ வேண்டும் என்பது அவசியமில்லை.

    ஆனால் அப்படி நிகழ்வது ஓர் அபூர்வம் தானே..!
    அதை தங்க மீன்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

    முக்கியமான பதிவு கரிகாலன்..
    வாழ்த்து..

    ப்ரியங்களுடன்
    இளங்கோ

    பதிலளிநீக்கு
  2. என்னே ஒரு விமர்சனம் இன்னும் பார்க்காத இந்த திரை படத்தை பார்க்க கோவிலுக்கு போவது போல என்னை தயார் செய்கிறேன் ,

    பதிலளிநீக்கு