சனி, 21 செப்டம்பர், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 37

  வரமா ?? சாபமா? - Street Vendors Bill /2013

மத்திய அரசு கடந்த செப்டம்பர் 06ம் தேதி நிறைவேற்றிய 19 மசோதாக்களில் முக்கியமான Street Vendors Bill எனப்படும் நடைபாதை அல்லது நடமாடும் சிறு வியாபாரிகளுக்கான நலச்சட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்த சட்டத்திற்காக கிட்டதட்ட பத்து வருடங்களாகப் போராடி வந்த NASVI (National Association of Street Vendors of India)அமைப்பிற்கு இந்த வருடம் வெற்றி கிட்டியுள்ளது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசிடமிருந்து போராடிப் பெற்றுள்ள இந்த சட்டம் சிறுவர்த்தக(petty business) பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதில் எந்த சந்தேகம் இல்லை.



இந்த சட்டத்தின் படி நாடு முழுவதுமிருக்கும் இது போன்ற சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தள்ளு வண்டி, நடமாடும் வியாபாரிகள் என எல்லோரின் விவரங்களும் சேகரிக்கப் பட்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப் பட்டுவிடும். ஒவ்வொரு ஊரிலும் மக்கட்தொகைக்கேற்ப நகர வியாபார செயற்குழு(Town Vending Committee) அமைக்கப்பட்டு, நகரத்தில் வியாபாரம் செய்ய உகந்த இடங்கள் யாவும் மறு வரைவுக்குள்ளாக்கப்பட்டு விற்பனை மண்டலம்(vending zones) வரையறுக்கப் பட்டு விடும்.

Town Vending Committee :
நகர விற்பனையாளர்கள் செயற்குழு என்பது மக்கட்தொகைக்கேற்ப ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப் படும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கட்தொகையுள்ள ஊர்களில் 30லிருந்து 40பேர் வரை செயற்குழு உறுப்பினர்களாகவும், அதற்கு கீழே மக்கட்தொகையுள்ள ஊர்களில் வெறும் 20 பேர் வரை செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதுவே மாநகரங்களில் ஒன்றுக்கும் மேர்பட்ட மண்டலங்கள் பிரித்து அதில் செயற்குழுக்கள் செயல்படும். இந்த அமைப்பின் தலைவராக நகராட்சி, மாநகராட்சி அல்லது உள்ளூர் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் இருப்பார், இந்த செயற்குழுவில் 40% வியாபரிகளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (இதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33%) இருப்பார்கள், இது போக இந்த அமைப்பில் அரசாங்கத்தின் சார்பாக மட்டுமில்லாத உள்ளூர் அமைப்பு, சந்தை மற்றும் வணிக அமைப்பு, உள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம், அப்பகுதியில் இருக்கும் குடியிருப்போர் நலச்சங்கம், வங்கி மற்றும் தொண்டு நிறுவனத்தில் இருந்தும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுவர்.

 அதே போல ஒரு ஊரின் மொத்த சிறுவியாபரிகளின் உறுப்பினர் எண்ணிக்கை மக்கட்தொகையில் இருந்து 2.5% சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.


விற்பனை மண்டலம்:
பொது மக்களுக்கு இடையூறு இல்லாதவாறும், வேறு எந்த குடியிருப்பு பகுதியிலோ பாதுகாக்கப்படும் பகுதியிலோ, சுற்றுப்புறச் சூழலுக்கும்  நகரத் தூய்மைக்கும் பங்கம் விளைவிக்கும் வண்ணம் விற்பனை மண்டலம் அமைக்கப்படும், அதில் மட்டுமே உறுப்பினர்கள் தொழில் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். இது போக இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட சந்தையாக மாற்றப்பட்ட இந்த வணிகத்தில் வேறு எந்த சட்டத்திற்கு புறம்பான, தடை செய்யப்பட்ட எந்தப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அவய்ப்பிருக்கிறது, இது இதன் முக்கியமான சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இந்திய பொம்மைச் சந்தையினை அழித்த சீன பொம்மைகளின் விற்பனை பெரிய அளவில் இது போன்ற சந்தையில் தான் நிகழ்ந்தது என்பதும் உண்மை.
NASVIஐப் போலே சிறுவணிகத்தின் பலமறிந்த நாமும் இதை ஒரு பாதுகாப்புச் சட்டமாக இதை ஆதரிக்கலாம், ஆனால் நடைமுறைப் படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் தவறாகப் பயன்படுத்தப் பட்டால் ஏற்படும் விளைவுகள் ஏராளம்.

ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையாக மாற்றப்பட்ட இவ்வணிகம், தளர்த்தப்பட்ட சந்தைக்கு தேவைப்படும் மாற்றமாக இந்த சட்டத்தினை பார்ப்பதற்கு நிறையவே இடமளிக்கின்றது.

*முதல் பிரச்சினையாக,  வணிகப் பகுதி பெரிய பெரிய வணிக மால்கள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் பெரிய கடைகளின் தலையீட்டால் சிறு மற்றும் தெரி வியாபரிகளுக்கு பொருந்தாத இடமாக வரையறுக்கப்பட வாய்ப்புள்ளது.

*இந்த சட்டத்தின்படி, 40% வியாபாரிகளை உறுப்பினராகக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு இடம் வரையறுப்பது, தொழில் நிர்ணயம் மற்றும் உரிமம் வழங்குவது, தேவைப்பட்டால் மறுவரையறை செய்வது போன்றவற்றில் இவர்களுக்கான உரிமை போதிய அளவு இல்லாமல் இருக்கின்றது என்பது மிகப்பெரிய குறையாகும்

*மிக முக்கியமாக இந்த சட்டத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலம் குறித்த தெளிவான வரையறை இல்லாததும் முக்கியமான குறை என்பது வல்லுனர்களின் கருத்து.

*இதில் செயற்குழுவானது அரசியல்கட்சிகளின் தலையீடு இல்லாமல் அமைப்பது மிக அவசியம், ஆனால் இதன் சாத்தியம் குறித்து அச்சம் எழுகின்றது, ஆளுங்கட்சியோ அல்லது பிரதான சாதிக் கட்சியோ இந்த செயற்குழுவில் அங்கம் வகித்தால், அது உள்ளூரின் சந்தையை கடுமையாக பாதிக்கும்.

*நம் நாட்டில் மிகப்பெரிய எண்ணிக்கையில் சுயதொழில் வாய்ப்பை உருவாக்கித் தருவதே இது போன்ற சிறுவியாபாரிகளுக்கான சந்தை தான். இது போல சந்தை இடர்கள் ஏதுமில்லாது எளிதில் ஒரு தொழிலைத் தொடங்கவோ அல்லது நடத்திவரும் தொழிலில் இருந்து வெளியேறவோ இல்லை இடம்பெயரவோ அல்லது தொழிலில் மாற்றம் செய்யவோ எந்த ஒரு புறக்காரணிகளின் அனுமதிக்கும் காத்திருக்கத் தேவையில்லாதது தான். ஒரு Seasonal, Part-time வியாபாரியாகக் கூட எந்த தடையும் செய்ய யாருமில்லாது இருந்து வந்த சந்தையில் இப்படிப்பட்ட உரிமங்களின் தேவை கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ஒருவருக்கு உரிமம் வழங்கப்பட்டுவிட்டால் அவரால் முறையான அனுமதியின்றி வேறு எந்தவொரு மாற்றத்தினையும் தன் தொழிலில் செய்ய முடியாது.


சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் தள்ளுவண்டி, சாலையோர வியாபாரங்களில் தங்கள் லாபத்தில் 10-30% வரை, மாநகராட்சி வரி, அரசியல் ரௌடிகளின் மாமூல், காவல்துறையினருக்கு கொடுக்கப் படும் லஞ்சம் (பெட்டி கேஷ் என்ற பெயரில் மாதாந்திரக் கட்டணமாக காவல் நிலையங்கள் வசூலிக்கின்றன என்பதும் கூடுதல் செய்தி) போன்றவற்றால் இழப்பாக இருந்தும் சுயதொழிலாக உழைத்து வீடு சேர்க்கும் இவ்வியாபரிகளுக்கு நலனுள்ளதாக இல்லாமல் அதே அரசியல் தலையிடு, காவல் துறையினர் மற்றும் பெரிய வணிகர்களின் செல்வாக்கு ஆகியன இந்த செயற்குழுவில் தலையிட்டு லாபம் காட்டத் தொடங்கினால் நிச்சயம் இந்த சட்டம் ஒரு சாபமாகவே அமையும்.

உடனடியாக அமுல்படுத்தப் படுவதைக் காட்டிலும், அதை சரியான முறையில் செயல் படுத்த வேண்டும். ஏனென்றால், பார்கோடுகள் பதித்த MRP பொருட்களை மட்டுமே நுகர்வு செய்து, இந்த விலைவாசியில் நம் எல்லோராலும் வாழ்க்கையை நடத்த முடியாது தானே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக