திங்கள், 30 செப்டம்பர், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி 40 / இலக்கிய விருதுகள் -அனுபவம்

ஜெயந்தன் நினைவு - செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை நடத்திய விருது நிகழ்வு ஒன்றின் அனுபவப் பகிர்வு: -

நாங்கள் நடத்தும் கூட்டங்களில் பெரும்பாலும் நான் பாடிகாட் வேலையை செய்வதால் நிகழ்வுக்கு முன்னும்
பின்னும் நடக்கும் உரையாடல்கள் மட்டும் தான் நினைவில் இருக்கும். அதுவே வேறு கூட்டங்களுக்கு செல்லும் போது தான் அந்த நிகழ்வு பற்றிய நினைவுகளை கொஞ்சம் எழுத முயற்சிக்க முடியும். ஆகவே என்னால் முடிந்த அளவு இது போல பங்குகொள்ளும் நிகழ்வுகளை பதிவது என்று முயற்சிக்கிறேன். நேரில் வாழ்த்தும் பொருட்டு , அகரமுதல்வனுக்கும், கதிர்பாரதிக்காகவும் தான் இவ்விழாவிற்கு நான் சென்றிருந்தேன்.

மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு செந்தமிழ் அறக்கட்டளை, மனப்பாறை நடத்திய ஜெயந்தன் நினைவு சாதனையாளர் மற்றும் படைப்பிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு நடந்து முடிந்தது.(தி.நகர் -ஆந்திரா கிளப்).
கூட்டத்தினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த செந்தமிழ் அறக்கட்டளை விருத்துக்காக தேர்ந்தெடுத்தவர்களை ஒரு நல்ல அரங்கில் கவுரவித்தது. குமாரசெல்வா, அசோகன் நாகமுத்து ஆகியோர் நாவல் பிரிவிலும், சுதாகர் கத்தாக், மாரி செல்வராஜ் ஆகியோர் சிறுகதைக்கான பிரிவிலும், கதிர்பாரதி மற்றும் அகரமுதலவன் கவிதைக்கானப் பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். எழுத்தாளர் பிரபஞ்சன் சாதனையாளர் விருதினைப் பெற்றார்.

இந்த நிகழ்வின் சிற்ப்பாக நான் கருதுவது விருது பெற்றவர்களின் தேர்வு, பல நூறு கி.மீ தாண்டி ஒரு ஊர் மக்களாக வந்து விழா எடுத்துச் சென்ற மனிதர்களின் அன்பு மிகச்சரியான மனிதர்களைத் தேடிச் சேறும் என்பதில் ஐயமில்லை. இந்நிகழ்வில் குமாரசெல்வாவின் கதைகளை நான் எப்படியாவது வாசிக்க வேண்டும் என்று உறுதி மொழி செய்துக் கொண்டேன். அழகிய பிரபஞ்சன்,பெரியவன், சுதாகர் கத்தாக், இளம்பிறை ஆகியோரின் பேச்சும் மற்றும் ரா.பார்த்திபனின் வழக்கம் போல் புதுமைப் பேச்சும் நிகழ்வில் கரைந்த நேரம் தெரியாமல் போகக் காரணமாயின.

இந்நிகழ்வின் சிறப்பாக கவிஞர் அகர முதல்வன், கதிர் பாரதி மற்றும் மாரி செல்வராஜின் பேச்சுகள், வருகைப் பதிவு செய்துவிட்டுக் கிளம்பிவிடுவோம் என்று போட்டிருந்த கணக்கினைத் தவிடு பொடியாக்கியது.. மாரி செல்வராஜ் - தன் மண்ணின் அநீதி இழைக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு படைப்பாளி என் கண் முன்னே தெரிந்தார். கவிதைகளின் அற்புத கணங்களை கைகளில் நிரப்பி மையூற்றிய நண்பர் கதிர்பாரதி வெற்றி கொண்டிருக்கும் தருணங்களை எப்போதும் தன் நண்பர்களோடு பகிர்ந்துண்ணும் மனம் படைத்தவராகத் திகழ்ந்தார் யாவரும்.காம் எனும் எங்கள் அமைப்பிற்கும், தக்கை, வதனம் என்கிற அமைப்பிற்கும் தன் நன்றிகளை விருந்தாக்கி பசியாறினார். ஈழக்கவிஞர் அகர முதல்வனோ தமக்கு கிடைத்திருக்கும் விருதினை கவிகளுக்கான விருதாக எண்ணாது, தமது அரசியலுக்கான விருதாக எண்ணி தன் நோக்கமாகிய, நன் இனத்தின் நோக்கத்திற்கு விருதினை இடம்பெயர்த்த கணம் நிச்சலனம்.

அநீதிகளின் வடுவை ஆற்று நீரில் ஏற்படுத்திய சமூகத்திற்கு மேலும் ஒரு பழியாய் விழுந்த -ஒரு போராளியின் துயரான முடிவில் இருந்து மீளாத மாரி செல்வராஜ் தன் விருதை இனப்போராளியான நீலவேந்தனுக்கும், இடஒதுக்கீட்டு அரசியல் பற்றிப் பேசி உணர வாய்த்த அவரது ஊர்க்காரர் - ஒருவருக்கும் சமர்பித்த கணம், சொந்த மண்ணின் விடுதலைக்காக பத்திரிக்கைகளின் வாயிலாக பல அரசியல் கட்டுரைகளில் கவிஞருக்கு அரசியல் பார்வையை தூண்டிய, இலங்கை நாடாளுமன்ற வாசலில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்  மாமனிதர் தராக்கி சிவராம்  அவர்களுக்கு சமர்பித்தார்....

”கலை சார்ந்த ஒரு அரங்கத்தில் இத்தனை கலவையான உணர்வுகளா??”என்று நினைக்கத் தோணிற்று கதிர்பாரது தன் விருதினை சமர்பித்த மனிதர்களின் கதை. அவரின் கல்லூரிக் காலங்களில், ஆல் இந்தியா ரேடியோவில் தன் கவிதைகள் சிலவற்றை வாசிக்கக் கிட்டிய வாய்ப்பில், அவற்றை ரேடியொவில் ஒலிபரப்பப்படும் பொழுது அதற்கு குழாய் -ஹாரன் கட்டி ஊரெல்லாம் கேட்கும்படி கட்டித் தொங்கவிட்ட தான் தாய்மாமன்கள் நால்வருக்கு அவர் அவ்விருதை சமர்பித்த இடமானது : உறவு, மரபுகளிலிருந்து நாம் காலத்திற்கும், காலநிலைக்கும் ஏற்ப உடைகளைத் தான் மாற்றியிருக்கிறோமே தவிர உடல் பாகங்களை அல்ல என்று புரிந்து கொள்ள உதவிற்று..

ஒரு நல்ல விருது வழங்கும் கூட்டத்தில் நானும் ஒருவனாக சிலரால் அடையாளம் காணப்பட்டு, கைகொடுத்து, அறிமுகம் செய்து கொண்டு, வாழ்த்தி விட்டு, கரை ஒதுங்கி வீடு வந்து சேர்ந்தேன்

3 கருத்துகள்: