திங்கள், 30 செப்டம்பர், 2013

Facebook - certainly not a poetry - 002



Certainly not a poetry - 002

Facebook

அந்தப் பிச்சைக்காரன் ?- வேண்டாம் - 8 லைக்ஸ்+2 கமெண்ட்ஸ்
கடல்? - வேண்டாம் - 15 லைக்ஸ் +2 கமெண்ட்ஸ்
மழை? - ஒகே ஆனால் மழை நிற்பதற்குள் - 50 லைக்ஸ்
ரோஜா?- ஓகே - 30 -40 லைக்ஸ் + 10-12 கமெண்ட்ஸ்
வேறு பூக்கள்? - சுமார் - 20-30 லைக்ஸ் + 50 கமெண்ட்ஸ்
அரசியல் - டேஞ்சர் - 50 லைக்ஸ் + 100 கெட்டவார்த்தைகள் கமெண்ட்ஸ்
இலக்கியம் -ஓகே ட்ரை - 15 -20 லைக்ஸ் + 2 கமெண்ட்ஸ்
சாமி - கார்த்திகை வரை காத்திரு - 50 லைக்ஸ் + 10 கமெண்ட்ஸ்
காதல் - டன் - 60-70 லைக்ஸ் + 35 கமெண்ட்ஸ்
முத்தம் - சூப்பர் சாய்ஸ் - 40 லைக்ஸ் + 10 பிரைவேட் மெசேஜ் + 20 கமெண்ட்ஸ்
காமம் - அட்வாண்டேஜ் - 10 லைக்ஸ் + 40 பிரைவேட் மெசெஜ் + 10 எதிரி + 2 கமெண்ட்ஸ்
அனுஷ்கா - பெஸ்ட் சாய்ஸ் - 100 - 110 லைக்ஸ் + 25 ஷேர்ஸ் + 74 கமெண்ட்ஸ்


நம் கவிஞனின் உழைப்பில்
இந்தியப் பங்குச் சந்தையில்
லிஸ்டிங் செய்ய யோசிக்கிறதாம்
ஃபேஸ்புக் !!!!!!!!!!!!!!!!!!1

certainly not - #Poetry - 001

certainly not - #Poetry

மழை

மழைக்கான இரவில் நகரம்
தன் கர்வம் இழந்துவிடுகிறது.

அல்பத் தும்மலுக்கு ஐநூறு ரூபாய்
மருத்துவரும் கால் கிலோ மாத்திரையும்;
அடுத்த நாள் Obituaryஇல் வரும்
விபத்துச் செய்திகளின் எண்ணிக்கை;
காயப்போட இடமில்லா அபார்ட்மெண்டில்
Dryer வேலை செய்யா
செமி ஆட்டோமெடிக் வாசிங் மெஷின்கள்;
இருந்தாலும்,
மழை நிற்பதற்குள்
கவிதையை முகநூலில் ஏற்றிவிட்டால்,
எப்படியும்
40 லைக்குகள் வாங்கிவிடலாம்

இத்தனை பட்டியல்களிலும்
ஒன்றிரண்டு ஞாயங்கள் இருக்கின்றன..
எப்படியாவது போரில் தண்ணீர் வந்துடும்..

சடசடவென
பெய்துக் கொண்டிருக்கிறது
நகரத்தின் மழை

-ஜீவ.கரிகாலன்

அல்லி பிறந்த கதை




அல்லி....
உன் சிலிர் கரங்கள் பற்றும்
என் உடலின் ஆன்மா
தகித்துக் கொண்டிருக்கிறது.

செய்ய வேண்டிய சாகசங்களை
நியூரான்கள் கட்டுப்படுத்திக்
கொண்டிருக்கின்றன.
மூளைக்கு காய்ச்சல் வருவதற்குள்
உன் நகத்தின் பிறையைத்
தடவிப் பார்க்கவாது அனுமதி

கரை தெரியா நடுக்கடலினுள்
நான்.
என் நீலமாக நீ...
என் தவமெல்லாம்
ஆயுள் முழுக்க
உன் மீது நீந்திக்கொண்டிருக்கும்
வரமே!!

அல்லி...
உன் கோழிமுட்டைக் கண்களில்
என்னை அலட்சியம் செய்து பார்க்கிறாயே
உன் பெயர் சொல்லும் வேளையிலெல்லாம்
கண்ணயர்ந்துவிடுகிறாய்
ஒழுங்காக நடி!!

உப்பு தடவிய மாங்காய் துண்டுகளை
நீ கடிக்கும் போது அல்ல
உன் திருமண அழைப்பை
நீட்டியப் புன்னகை தான்
அஷ்டக்கோணல்...

அல்லி ...
அந்த கணமே
உன்னை அவளிடம் இருந்து தான்
பிரித்து எடுத்துக் கொண்டேன்.
நாம் ஒரு புனைவுலகில்
சாம்ராஜ்யம் செய்கிறோம்
தட்டான்களாக

பஜ்ஜி - சொஜ்ஜி 40 / இலக்கிய விருதுகள் -அனுபவம்

ஜெயந்தன் நினைவு - செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை நடத்திய விருது நிகழ்வு ஒன்றின் அனுபவப் பகிர்வு: -

நாங்கள் நடத்தும் கூட்டங்களில் பெரும்பாலும் நான் பாடிகாட் வேலையை செய்வதால் நிகழ்வுக்கு முன்னும்
பின்னும் நடக்கும் உரையாடல்கள் மட்டும் தான் நினைவில் இருக்கும். அதுவே வேறு கூட்டங்களுக்கு செல்லும் போது தான் அந்த நிகழ்வு பற்றிய நினைவுகளை கொஞ்சம் எழுத முயற்சிக்க முடியும். ஆகவே என்னால் முடிந்த அளவு இது போல பங்குகொள்ளும் நிகழ்வுகளை பதிவது என்று முயற்சிக்கிறேன். நேரில் வாழ்த்தும் பொருட்டு , அகரமுதல்வனுக்கும், கதிர்பாரதிக்காகவும் தான் இவ்விழாவிற்கு நான் சென்றிருந்தேன்.

மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு செந்தமிழ் அறக்கட்டளை, மனப்பாறை நடத்திய ஜெயந்தன் நினைவு சாதனையாளர் மற்றும் படைப்பிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு நடந்து முடிந்தது.(தி.நகர் -ஆந்திரா கிளப்).
கூட்டத்தினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த செந்தமிழ் அறக்கட்டளை விருத்துக்காக தேர்ந்தெடுத்தவர்களை ஒரு நல்ல அரங்கில் கவுரவித்தது. குமாரசெல்வா, அசோகன் நாகமுத்து ஆகியோர் நாவல் பிரிவிலும், சுதாகர் கத்தாக், மாரி செல்வராஜ் ஆகியோர் சிறுகதைக்கான பிரிவிலும், கதிர்பாரதி மற்றும் அகரமுதலவன் கவிதைக்கானப் பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். எழுத்தாளர் பிரபஞ்சன் சாதனையாளர் விருதினைப் பெற்றார்.

இந்த நிகழ்வின் சிற்ப்பாக நான் கருதுவது விருது பெற்றவர்களின் தேர்வு, பல நூறு கி.மீ தாண்டி ஒரு ஊர் மக்களாக வந்து விழா எடுத்துச் சென்ற மனிதர்களின் அன்பு மிகச்சரியான மனிதர்களைத் தேடிச் சேறும் என்பதில் ஐயமில்லை. இந்நிகழ்வில் குமாரசெல்வாவின் கதைகளை நான் எப்படியாவது வாசிக்க வேண்டும் என்று உறுதி மொழி செய்துக் கொண்டேன். அழகிய பிரபஞ்சன்,பெரியவன், சுதாகர் கத்தாக், இளம்பிறை ஆகியோரின் பேச்சும் மற்றும் ரா.பார்த்திபனின் வழக்கம் போல் புதுமைப் பேச்சும் நிகழ்வில் கரைந்த நேரம் தெரியாமல் போகக் காரணமாயின.

இந்நிகழ்வின் சிறப்பாக கவிஞர் அகர முதல்வன், கதிர் பாரதி மற்றும் மாரி செல்வராஜின் பேச்சுகள், வருகைப் பதிவு செய்துவிட்டுக் கிளம்பிவிடுவோம் என்று போட்டிருந்த கணக்கினைத் தவிடு பொடியாக்கியது.. மாரி செல்வராஜ் - தன் மண்ணின் அநீதி இழைக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு படைப்பாளி என் கண் முன்னே தெரிந்தார். கவிதைகளின் அற்புத கணங்களை கைகளில் நிரப்பி மையூற்றிய நண்பர் கதிர்பாரதி வெற்றி கொண்டிருக்கும் தருணங்களை எப்போதும் தன் நண்பர்களோடு பகிர்ந்துண்ணும் மனம் படைத்தவராகத் திகழ்ந்தார் யாவரும்.காம் எனும் எங்கள் அமைப்பிற்கும், தக்கை, வதனம் என்கிற அமைப்பிற்கும் தன் நன்றிகளை விருந்தாக்கி பசியாறினார். ஈழக்கவிஞர் அகர முதல்வனோ தமக்கு கிடைத்திருக்கும் விருதினை கவிகளுக்கான விருதாக எண்ணாது, தமது அரசியலுக்கான விருதாக எண்ணி தன் நோக்கமாகிய, நன் இனத்தின் நோக்கத்திற்கு விருதினை இடம்பெயர்த்த கணம் நிச்சலனம்.

அநீதிகளின் வடுவை ஆற்று நீரில் ஏற்படுத்திய சமூகத்திற்கு மேலும் ஒரு பழியாய் விழுந்த -ஒரு போராளியின் துயரான முடிவில் இருந்து மீளாத மாரி செல்வராஜ் தன் விருதை இனப்போராளியான நீலவேந்தனுக்கும், இடஒதுக்கீட்டு அரசியல் பற்றிப் பேசி உணர வாய்த்த அவரது ஊர்க்காரர் - ஒருவருக்கும் சமர்பித்த கணம், சொந்த மண்ணின் விடுதலைக்காக பத்திரிக்கைகளின் வாயிலாக பல அரசியல் கட்டுரைகளில் கவிஞருக்கு அரசியல் பார்வையை தூண்டிய, இலங்கை நாடாளுமன்ற வாசலில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்  மாமனிதர் தராக்கி சிவராம்  அவர்களுக்கு சமர்பித்தார்....

”கலை சார்ந்த ஒரு அரங்கத்தில் இத்தனை கலவையான உணர்வுகளா??”என்று நினைக்கத் தோணிற்று கதிர்பாரது தன் விருதினை சமர்பித்த மனிதர்களின் கதை. அவரின் கல்லூரிக் காலங்களில், ஆல் இந்தியா ரேடியோவில் தன் கவிதைகள் சிலவற்றை வாசிக்கக் கிட்டிய வாய்ப்பில், அவற்றை ரேடியொவில் ஒலிபரப்பப்படும் பொழுது அதற்கு குழாய் -ஹாரன் கட்டி ஊரெல்லாம் கேட்கும்படி கட்டித் தொங்கவிட்ட தான் தாய்மாமன்கள் நால்வருக்கு அவர் அவ்விருதை சமர்பித்த இடமானது : உறவு, மரபுகளிலிருந்து நாம் காலத்திற்கும், காலநிலைக்கும் ஏற்ப உடைகளைத் தான் மாற்றியிருக்கிறோமே தவிர உடல் பாகங்களை அல்ல என்று புரிந்து கொள்ள உதவிற்று..

ஒரு நல்ல விருது வழங்கும் கூட்டத்தில் நானும் ஒருவனாக சிலரால் அடையாளம் காணப்பட்டு, கைகொடுத்து, அறிமுகம் செய்து கொண்டு, வாழ்த்தி விட்டு, கரை ஒதுங்கி வீடு வந்து சேர்ந்தேன்

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

பஜ்ஜி - 39 பெரியாரின் இந்துத் திருமணமப் பதிவு / A paradox



முகநூலில் வந்த இத்தகவல் (கீழே) என்னை ஒரு முக்கிய விவாதத்தை உருவாக்கக் கோரியது, இருந்தும் எனது வலைப்பூவில் பதிவதே வீணாய் வம்பிழுப்பவரிடம் இருந்து தப்பிக்கும் வழி, அதைத் தாண்டி வருபவர்கள் என் விருந்தினர்கள் என்பதால்...... :) தான் பதில்.... ஒகே... இனி சீரியஸ்...

******************************************************************************


முகநூல் தகவல்:-

பெரியார் ஈ. வே. ரா அவர்கள் திருமதி. மணியம்மாள் அவர்களைத் திருமணம் செய்து கொண்டது, இந்து திருமணச் சட்டத்தின்படிதான். பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று,பதிவாளர் முன்னர்தான்! இந்து திருமணச் சட்டப்படி ஒருவர் பதிவாளர் முன் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால், தான் ஒரு இந்து என்று உறுதி கூற வேண்டும்

பெரியார் ஈ. வே. ரா. இந்து மதத்தில் நம்பிக்கையில்லாதவர்; அதை வெறுத்தவர்; அதை வேரோடு அழித்தொழிக்கத் தம் வாழ்நாள் முழுவதும் இயக்கம் நடத்தியவர். ஆனால், சொத்துக்காக வாரிசு தேட (அவர் சொன்னபடி) திருமணம்செய்து கொண்டபோது, “நான் ஒரு பகுத்தறிவு இந்து” என்று பதிவாளர் முன்பு உறுதி கூறினார். அதன் பின்னர்தான் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

ம.பொ.சிவஞானம்
*அகநாழிகை பதிப்பக வெளியீடாக விரைவில் வரவிருக்கும்
‘தமிழர் திருமணம்‘ என்ற நூலிலிருந்து...

******************************************************************************

விவாதம் இப்படி எழுந்தது //ஊருக்கெல்லாம் சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தவர், சொத்தைக் காப்பாற்ற பகுத்தறிவு இந்து என்று சொல்லி இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்கிறார்.. //
அவர் செய்த சமூக விஞ்ஞானப் பரிட்சைகளாகவே (காந்தியின் சோதனைகளைப் போல) அத்திருமணங்களை பார்க்க இடமிருப்பதாக தோன்றினாலும், அது முக்கியமான மாற்றங்களை ஒரு சமூக அடையாளங்களில் இருந்து ஒரு குடும்பத்தை மீட்டெடுக்கும் ஒரு புதிய மரபை உருவாக்கும் பணியாக அது பெரும் வெற்றி பெற்றிருக்கக்கூடும்.. ஆனால் இந்தத் திருமணம் அதை தடுத்திருக்குமா என்றொரு விவாதம்....
ஆனால் இந்த விவாதத்தில் இன்னுமொரு முக்கிய சொல்லை மட்டும் தேர்ந்தெடுத்து அதன் வாயிலாக பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை மீது விவாதம் செய்ய விரும்புகிறேன்.

அந்தச் சொல் “நான் ஒரு பகுத்தறிவு-இந்து”. இந்த நிலையிலும், மற்ற மதத்தினைத் தழுவிய சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிக்கும் போது அவர்கள் மீது கடவுள் மறுப்புக் கொள்கையினை தினிக்காது (ஒரு இயக்கத்தில் சுதந்திரம் என்றாலும், கட்டுப்பாடு என்றாலும் எல்லாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும், பெரியார் வழி வந்தவர்கள் வலியுறுத்தியதோ “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” எனும் மந்திரங்களாக மாறிய நிலை இருக்க) ஒரு SECULAR மாதிரிச் சமூகத்தை உருவாக்க முயன்றார்.

நான் பெரியாரிடம் மட்டுமல்ல அல்ல பெரியாரிசம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட பகுத்தறிவுவாதத்தில் ஏற்க முடியாத முக்கிய விஷயமாக இருப்பது... அது இடமளிக்கும் கடவுள் மறுப்பு கொள்கையில் இருக்கும் ஸ்திரமின்மையை சுட்டிக் காட்ட முயல்கிறேன்...

பகுத்தறிவு நிலையில் மனிதன் ஒரு Ape Turned Human என்ற வாதத்தை டார்வினை, பரிணாமக் கொள்கையினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை..அப்படி ஏற்றுக் கொண்டிருந்தால் அது உண்மையான ஒரு Athiestகளுக்கான அமைப்பாக உருவெடுத்திருக்கும் சாத்தியம் இருந்தது, அவர் சிறுபான்மையினரை ஆதரிக்கிறார் என்பது Political Advantage. அதே சமயம் ஒட்டுமொத்த மத நிறுவனங்களையும் பாரபட்சமின்றி எதிர்த்திருந்தால் அது வெறும் ஒரு சமூக,அரசியல் அமைப்பாக மட்டுமின்றி, ஒரு பெரிய Masonic lodgeகளைப் போல வலிமையுள்ள அறிவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் எனப் பெருகி மிக வலிமையான் அமைப்பாக மாறியிருக்கும்.


 ஆனால் அதை தனி ஒரு தலைவனாக மட்டும் செய்ய முடியாது என்பதும் உண்மை, மேற்கில் உதயமான கம்யுனிசம் ஹெகல்,ஏங்கல்ஸ் என்பவர்களுடன் விவாதிக்கப்பட்டு மார்க்ஸ் அதை வலிமையாக போதித்தார்(கடவுள் மறுப்பை),அது ஒரு அடியுரமாக உலகின் வலிமையான சித்தாந்தங்களுல் ஒன்றாக உருவெடுத்தது.... ஆனால் லெனின், ஸ்டாலின் என்ற பிரதிகள் மதங்களுக்கான Spaceஇனை அரசியல் லாபமாகப் பார்த்துக் கொடுத்திருந்தன.. அதற்கு ஒப்ப நிலை தான்..பெரியாரிடமும்..... இன்றைய பெரியாரிசம் பேசும் பரவலான பகுத்தறிவுவாதிகள் மிகவும் வெளியே வந்து விட்டனர்..... இந்த Campன் tent சரியான இடத்தில் அமைக்க முடியவில்லை என்பது தெரிகிறது...

ஒரு மிகப் பெரிய சமூக மாற்றத்தினை கனவு கண்டிருந்த அந்த இயக்கம் அந்த பாதையில் பயணிக்கவில்லை.... அதனாலேயே இதை மேலும் ஒரு pseudo secular குழுவாகத் தான் நான் பார்க்கிறேன்.. அம்பேதகரை வழிகாட்டிக் கொண்டு தலித்தியம் பேசும் வலது சாரி இயக்கங்களோடு தான் இவர்கள் மறுபுறமாக இருக்கும் நாணயம் தானே தவிர, இவர்கள் நிரையைச் சமன் செய்ய வந்த மற்றொரு நாணயமாக இருக்க வில்லை.. ஆக இந்த நாணயங்களை வைத்துக் கொண்டு எந்த வித MODERN CIVIL SOCIETYக்கான மாற்றத்தினை விலைக்கு வாங்க முடியாது....


*பெரியாரை நீ எப்படி விசாரனை செய்யலாம்””என்றோ, ”மார்க்ஸை நீ எப்படி கேள்வி கேட்கலாம்” என்றோ சொல்லாதீர்கள்!!..பதிலினையோ, விவாதத்தினையோ மட்டும் செய்யுங்கள்.. மாறாக கண்டித்தாலோஅல்லது தாக்கி பேசினாலோ நீங்கள் ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் நிறுவ இருப்பதும் ஒரு மதம் தான், அங்கே உங்கள் கடவுளாக உங்கள் தலைவர் இருக்கிறார் - பகுத்தறிவின் சமாதியில் நின்றபடி..
(மிகச் சுருக்கமாக எழுத இணையம் நிறைய இடம் கொடுக்கிறது, அதனால் விரிவாக விவாதிக்கவும் நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன...........)
அதுவரை பெரியாரின் இந்துத் திருமணப் பதிவினை ஒரு முரணாகப் பார்க்கிறேன்..... Astrology, Time Travel Paradox மாதிரி....இங்கே நிறைய புனைவுகளுக்கும் சாத்தியம் இருப்பதால் இதை இப்படி dilute செய்ய கிடைக்கும் வெளியைப் பயன்படுத்தி..

முரண் களின் அழகியல் ததும்புகிறது 
அவை கலைகள் ஆகட்டும் -            என்று கூறி விடை பெறுகின்றேன்.




 -ஜீவ.கரிகாலன்


புதன், 25 செப்டம்பர், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 38 நனவாகும் நாளில்.........

ஒரு எழுத்தாளனின் புனைவில் இருக்கும் சில சம்பவங்கள் உண்மையாக மாறும் பொழுது (நல்ல விசயங்கள்) அது எத்தகைய நிறைவினை அவருக்குப் பெற்றுத் தரும்?? சமீபத்தில் ஒரு புனைவை அவர் வாசித்துக் கேட்ட பொழுது, அவர் தன் ஆசைய்னை புனைவாக தன் கிராமத்தில் (நகரத் தொடர்பே இல்லாத கிராமியம் படிந்திருக்கும் ஒரு கிராமம்) ஒரு ரயில் நிலையம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.... ஆனால் அவர் அதைச் சொல்லி முடிக்கும் பொழுதே அந்த திட்டம் விரைவிலேயே தொடங்க இருக்கிறது என்பதை நானறிந்தேன்....

அந்த மனிதர் அவ்வூருக்கு ரயில் நிலையம் வந்தவுடன் வரும் முதல் ரயிலிலேயே பிரயாணம் செய்ய வேண்டும், அப்பொழுது அவருடன் நானும் உடனிருக்க வேண்டும் என்று ஆசையுற்றேன்... இதுவும் ஒரு புனைவாக எனக்குள் எழுந்தது.....

அப்பொழுது எண்ணிக் கொண்டேன், “நம் வாழ்நாளிலேயே நதிநீர் இணைப்பு சாத்தியம் என்றால், நீரோட்டப் பெறும் வைப்பாற்றில் இருந்து தண்ணீர் மொண்டு பாரதியின் வீட்டிற்கு சென்று முற்றத்தில் ஊற்றிவிட்டு வர வேண்டும்”.......................

இது சொல்லப்பட வேண்டிய கதை


சனி, 21 செப்டம்பர், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 37

  வரமா ?? சாபமா? - Street Vendors Bill /2013

மத்திய அரசு கடந்த செப்டம்பர் 06ம் தேதி நிறைவேற்றிய 19 மசோதாக்களில் முக்கியமான Street Vendors Bill எனப்படும் நடைபாதை அல்லது நடமாடும் சிறு வியாபாரிகளுக்கான நலச்சட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்த சட்டத்திற்காக கிட்டதட்ட பத்து வருடங்களாகப் போராடி வந்த NASVI (National Association of Street Vendors of India)அமைப்பிற்கு இந்த வருடம் வெற்றி கிட்டியுள்ளது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசிடமிருந்து போராடிப் பெற்றுள்ள இந்த சட்டம் சிறுவர்த்தக(petty business) பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதில் எந்த சந்தேகம் இல்லை.



இந்த சட்டத்தின் படி நாடு முழுவதுமிருக்கும் இது போன்ற சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தள்ளு வண்டி, நடமாடும் வியாபாரிகள் என எல்லோரின் விவரங்களும் சேகரிக்கப் பட்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப் பட்டுவிடும். ஒவ்வொரு ஊரிலும் மக்கட்தொகைக்கேற்ப நகர வியாபார செயற்குழு(Town Vending Committee) அமைக்கப்பட்டு, நகரத்தில் வியாபாரம் செய்ய உகந்த இடங்கள் யாவும் மறு வரைவுக்குள்ளாக்கப்பட்டு விற்பனை மண்டலம்(vending zones) வரையறுக்கப் பட்டு விடும்.

Town Vending Committee :
நகர விற்பனையாளர்கள் செயற்குழு என்பது மக்கட்தொகைக்கேற்ப ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப் படும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கட்தொகையுள்ள ஊர்களில் 30லிருந்து 40பேர் வரை செயற்குழு உறுப்பினர்களாகவும், அதற்கு கீழே மக்கட்தொகையுள்ள ஊர்களில் வெறும் 20 பேர் வரை செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதுவே மாநகரங்களில் ஒன்றுக்கும் மேர்பட்ட மண்டலங்கள் பிரித்து அதில் செயற்குழுக்கள் செயல்படும். இந்த அமைப்பின் தலைவராக நகராட்சி, மாநகராட்சி அல்லது உள்ளூர் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் இருப்பார், இந்த செயற்குழுவில் 40% வியாபரிகளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (இதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33%) இருப்பார்கள், இது போக இந்த அமைப்பில் அரசாங்கத்தின் சார்பாக மட்டுமில்லாத உள்ளூர் அமைப்பு, சந்தை மற்றும் வணிக அமைப்பு, உள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம், அப்பகுதியில் இருக்கும் குடியிருப்போர் நலச்சங்கம், வங்கி மற்றும் தொண்டு நிறுவனத்தில் இருந்தும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுவர்.

 அதே போல ஒரு ஊரின் மொத்த சிறுவியாபரிகளின் உறுப்பினர் எண்ணிக்கை மக்கட்தொகையில் இருந்து 2.5% சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.


விற்பனை மண்டலம்:
பொது மக்களுக்கு இடையூறு இல்லாதவாறும், வேறு எந்த குடியிருப்பு பகுதியிலோ பாதுகாக்கப்படும் பகுதியிலோ, சுற்றுப்புறச் சூழலுக்கும்  நகரத் தூய்மைக்கும் பங்கம் விளைவிக்கும் வண்ணம் விற்பனை மண்டலம் அமைக்கப்படும், அதில் மட்டுமே உறுப்பினர்கள் தொழில் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். இது போக இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட சந்தையாக மாற்றப்பட்ட இந்த வணிகத்தில் வேறு எந்த சட்டத்திற்கு புறம்பான, தடை செய்யப்பட்ட எந்தப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அவய்ப்பிருக்கிறது, இது இதன் முக்கியமான சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இந்திய பொம்மைச் சந்தையினை அழித்த சீன பொம்மைகளின் விற்பனை பெரிய அளவில் இது போன்ற சந்தையில் தான் நிகழ்ந்தது என்பதும் உண்மை.
NASVIஐப் போலே சிறுவணிகத்தின் பலமறிந்த நாமும் இதை ஒரு பாதுகாப்புச் சட்டமாக இதை ஆதரிக்கலாம், ஆனால் நடைமுறைப் படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் தவறாகப் பயன்படுத்தப் பட்டால் ஏற்படும் விளைவுகள் ஏராளம்.

ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையாக மாற்றப்பட்ட இவ்வணிகம், தளர்த்தப்பட்ட சந்தைக்கு தேவைப்படும் மாற்றமாக இந்த சட்டத்தினை பார்ப்பதற்கு நிறையவே இடமளிக்கின்றது.

*முதல் பிரச்சினையாக,  வணிகப் பகுதி பெரிய பெரிய வணிக மால்கள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் பெரிய கடைகளின் தலையீட்டால் சிறு மற்றும் தெரி வியாபரிகளுக்கு பொருந்தாத இடமாக வரையறுக்கப்பட வாய்ப்புள்ளது.

*இந்த சட்டத்தின்படி, 40% வியாபாரிகளை உறுப்பினராகக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு இடம் வரையறுப்பது, தொழில் நிர்ணயம் மற்றும் உரிமம் வழங்குவது, தேவைப்பட்டால் மறுவரையறை செய்வது போன்றவற்றில் இவர்களுக்கான உரிமை போதிய அளவு இல்லாமல் இருக்கின்றது என்பது மிகப்பெரிய குறையாகும்

*மிக முக்கியமாக இந்த சட்டத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலம் குறித்த தெளிவான வரையறை இல்லாததும் முக்கியமான குறை என்பது வல்லுனர்களின் கருத்து.

*இதில் செயற்குழுவானது அரசியல்கட்சிகளின் தலையீடு இல்லாமல் அமைப்பது மிக அவசியம், ஆனால் இதன் சாத்தியம் குறித்து அச்சம் எழுகின்றது, ஆளுங்கட்சியோ அல்லது பிரதான சாதிக் கட்சியோ இந்த செயற்குழுவில் அங்கம் வகித்தால், அது உள்ளூரின் சந்தையை கடுமையாக பாதிக்கும்.

*நம் நாட்டில் மிகப்பெரிய எண்ணிக்கையில் சுயதொழில் வாய்ப்பை உருவாக்கித் தருவதே இது போன்ற சிறுவியாபாரிகளுக்கான சந்தை தான். இது போல சந்தை இடர்கள் ஏதுமில்லாது எளிதில் ஒரு தொழிலைத் தொடங்கவோ அல்லது நடத்திவரும் தொழிலில் இருந்து வெளியேறவோ இல்லை இடம்பெயரவோ அல்லது தொழிலில் மாற்றம் செய்யவோ எந்த ஒரு புறக்காரணிகளின் அனுமதிக்கும் காத்திருக்கத் தேவையில்லாதது தான். ஒரு Seasonal, Part-time வியாபாரியாகக் கூட எந்த தடையும் செய்ய யாருமில்லாது இருந்து வந்த சந்தையில் இப்படிப்பட்ட உரிமங்களின் தேவை கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ஒருவருக்கு உரிமம் வழங்கப்பட்டுவிட்டால் அவரால் முறையான அனுமதியின்றி வேறு எந்தவொரு மாற்றத்தினையும் தன் தொழிலில் செய்ய முடியாது.


சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் தள்ளுவண்டி, சாலையோர வியாபாரங்களில் தங்கள் லாபத்தில் 10-30% வரை, மாநகராட்சி வரி, அரசியல் ரௌடிகளின் மாமூல், காவல்துறையினருக்கு கொடுக்கப் படும் லஞ்சம் (பெட்டி கேஷ் என்ற பெயரில் மாதாந்திரக் கட்டணமாக காவல் நிலையங்கள் வசூலிக்கின்றன என்பதும் கூடுதல் செய்தி) போன்றவற்றால் இழப்பாக இருந்தும் சுயதொழிலாக உழைத்து வீடு சேர்க்கும் இவ்வியாபரிகளுக்கு நலனுள்ளதாக இல்லாமல் அதே அரசியல் தலையிடு, காவல் துறையினர் மற்றும் பெரிய வணிகர்களின் செல்வாக்கு ஆகியன இந்த செயற்குழுவில் தலையிட்டு லாபம் காட்டத் தொடங்கினால் நிச்சயம் இந்த சட்டம் ஒரு சாபமாகவே அமையும்.

உடனடியாக அமுல்படுத்தப் படுவதைக் காட்டிலும், அதை சரியான முறையில் செயல் படுத்த வேண்டும். ஏனென்றால், பார்கோடுகள் பதித்த MRP பொருட்களை மட்டுமே நுகர்வு செய்து, இந்த விலைவாசியில் நம் எல்லோராலும் வாழ்க்கையை நடத்த முடியாது தானே!!

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி - 36/ பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒரு அஜித் ரசிகன்

பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒரு அஜித் ரசிகன்



நான் இவனைப் பற்றி எழுத வேண்டும் என்று பல முறை நினைத்திருக்கிறேன். வாழ்வில் ஃபீனிக்ஸ் பறவை போன்று ஒரு லட்சியத்திற்காக பறந்து கொண்டே இருப்பவர்களை நாம் பொதுவாக வரலாற்று புத்தகங்களில் தான் பார்ப்போம், சாதனைக் கதைகளாக, வெற்றியடைந்தவர்களின் வரலாற்றில், அவர்கள் சந்தித்தப் பிரச்சினைகள், அடைந்த அவமானங்கள், அவர்களுக்கு நேர்ந்த தோல்விகள், விபத்துகள் என்றெல்லாம் வாசித்திருப்போம், ஆனால் அவர்கள் மட்டும் தான் சாதிப்பதற்காகவே பிறந்தது போல எண்ணுவதால் Inspireஆகும் வாய்ப்புகள் எல்லோருக்கும் கிட்டுவதில்லை, You can win, The monk who sold my ferrari, Ijobs எல்லாம் after-all ஒரு best book sellerகள் தான். அதே சமயம் நம்மிடம் இருந்து ஒருவர் அப்படி படிப்படியாக முன்னேறுவதை அவதானிப்பதும் மிகக் கடினம், ஏனென்றால் நம்மிடையே இருக்கும் ஒருவனின் வீரியத்தை, திறமையினை நாம் கண்டு கொள்வதேயில்லை, இல்லை அவனை de-motivate  செய்யும் factorஆகவே பெரும்பாலும் இருக்கிறோம். இது தான் நம் சமூகத்தின் பொதுவான பாங்கு என்று கருதுகிறேன். இது சமூகம் தாண்டி ஒரு தேசிய நோயாகவும் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் நம்மிடமிருந்து ஒருவன் சாதிப்பதைக் கண்டு அகமகிழும் போது, நாமும் ஆசிர்வதிக்கப் படுகிறோம் என்பது நமக்குத் தெரியாமலே நடந்து விடுகிறது. ஒருவரைப் பாராட்டும்பொழுது (வெறுமனே முகஸ்துதியாகவோ!! அல்லது ஜால்ராவாகவோ இல்லாமல்) நாமும் அவர்களோடு சேர்ந்து தூண்டப் படுகிறோம், பாரட்டப்படுவது மட்டுமல்ல பாராட்டுவதுமே self-motivation tool தான். IPL சிக்ஸருக்காக கிடைக்கும் கைதட்டல்கள், ஒரு ஆய்வுக் கட்டுரைக்கு கிடைப்பதில்லை, ஒரு 50 seater conferenceஇல் கிடைக்கும் சொற்பக் கைதட்டல்களின் மதிப்பை அளவிட முடியாது.

 இன்றைய உலகில் சாதனை என்பதைக் கூட சரியான எடை-நிறை போட்டு சொல்ல வேண்டிய அவசியமிருக்கிறது, ஏனென்றால் இது power starகளின் காலம், கலை தாகமும், கலையுணர்வும் உள்ள எத்தனையோ கலைஞர்கள் எட்ட முடியாத உயரங்களை சில power starகள் எட்டிவிட்டு சாதனையாகக் காட்டிக் கொள்வார்கள். 480க்கும் மேலே மதிப்பெண் வாங்கிய மாணவர்களாக பள்ளியில் சேர்த்து வெற்றி கொள்ளும் power starகளின் காலமிது. இரு நண்பர்களில் - படிப்பில், உழைப்பில், திறனில் எல்லாம் சமமாக இருந்தும் ஒருவன் தேர்ந்தெடுத்த துறை தகவல் தொழில் நுட்பமாகவும் இன்னொருவனுக்கு வேறு ஒரு அறிவியல் பாடமாகவும் இருக்க, ஒருவனுடைய வாழ்க்கையை இன்னொருவன் அடைந்திருக்கும் பொருளாதார அந்தஸ்துகளை வைத்து மதிப்பிட்டு இவன் சாதித்துவிட்டான் என்று ஒப்பிட்டுப் பார்த்து சொல்லும் அபாயகரமான சமூகத்தின் கதிர்வீச்சிலிருந்து கருப்பாம்பூச்சியாக போராடி வெற்றி கொள்ள வேண்டும் என்பது சாதாரணம் அல்ல.

அப்படிப்பட்ட ஒரு cockroach தான் என் நண்பன், அவனை நான் ஒரு பூச்சியோடு ஒப்பிடுகிறேன் என்று அவன் வருத்தப்பட மாட்டான், கருப்பாம்பூச்சி சுமார் 40-50 கோடி ஆண்டுகளாக பூமியில் நடந்த பல்வேறு மாறுதல்களையும் , பேரழிவுகளையும் தாண்டி நிலைத்து வாழ்ந்து வரும் ஒரு அதிசயம். இன்றைய மோசமான சுற்றுப்புற சூழலில் ஏற்படும் எந்தப் பேரழிவிலும் தப்பிப் பிழைக்கும் சாத்தியம் இதற்கு அதிகம், ஏனென்றால் எந்த முதுகெழும்புள்ள மற்ற உயிரினங்களைக் காட்டிலும் higher radiation resistance கொண்ட ஜீவன் அது, ஆனால் அது எங்காவது நடக்கும் போது ஒரு சிறிய விபத்தில் தலைகவிழ்ந்து விட்டால் அதோகதி தான், உயிரோடு இருக்கும் போதே எறும்புகளுக்கு இரையாகிவிடும். அதைத் தலைகீழாக வைத்துக் கொண்டே குற்றுயிரும் கொலையுயிருமாக எறும்புக் கூட்டம் நைட் supperக்கு எடுத்துச் சென்று விடும். அது போலத் தான், நாமும் லட்சியத்தினை நோக்கி பயணிக்கும் பொழுது தலைகவிழ்ந்து(அதாவது நம்பிக்கை இழந்து விட்டால்) விட்டால் அவ்வளவு தான். நம்மை பரிகசித்து, ரேட்டிங் செய்து, மார்க் போட்டு கோமாளியாக்கி விடும் இந்த சமூகம், சமூகம் என்ன சமூகம் நம்முடன் இருப்பவர்களே அதைச் செய்வார்கள், சிலருக்கு சொந்தக் குடும்பத்திலேயே தடைகள் இருக்கும்.

ஆனால், இது போன்ற அவமானங்கள், எடை போடுதல், தோல்விகள், ஆலோசனைகள், அறிவுரைகள், எல்லாவற்றையும் விட முக்கியமானதாக சமரசம் செய்து கொள்ளுதல் போன்ற எந்தக் கதிர்வீச்சிலும் பாதிப்படையாத ஒருவன் வரலாற்றின் உண்மையான ஏட்டில் இடம் பெறுகிறான், இவனும் அப்படித் தான். இதைப் போன்ற லட்சியவாதிகள் மீது விமர்சனங்களும் வரவே செய்யும், அது காந்தி, பாரதி போன்றோரின் வாழ்க்கை மீது படிந்திருக்கும் விமர்சனங்களைப் பார்த்தால் தெரியும்.. அவர்கள் அது போன்ற விமர்சனங்களுக்காக பயப்படவில்லை, அதை நிராகரிக்க தன் நேரத்தை செலவு செய்யவும் இல்லை, ஒன்று அதைப் பார்த்து புன்முறுவல் செய்ய வேண்டும் அல்லது ஏளனமாகப் பார்க்க வேண்டும். ஆனால் அந்தப் பக்குவமும் எளிதில் வந்து விடாது அல்லவா?? யாரையும் காக்கா பிடிக்கும் அவசியமோ!! பனிந்து போகும் சமரசமோ கொள்ளாத இவன் எத்தனை இடத்தில் பந்தாடப் பட்டிருந்தான்?? எல்லா இடத்திலும் இவனைக் கோபக் காரன் என்று விமர்சனம் செய்தார்கள். இன்று அவன் சிரிக்கக் கற்றுக் கொண்டான்.

ஆனால் அவ்வளவு லேசில் கிடைப்பதில்லை இது போன்ற புன்னகை, மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பள்ளியில் படித்த அவனுக்கு மருத்துவப்படிப்பிற்கான சீட் கிடைக்கும் அளவு மதிப்பெண் கிட்டவில்லை, ஆனால் Improvement option இருந்த போதும், தனது கனவினை விஸ்தீரனப்படுத்தி நுன்னுயிரியலில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று தன் இலக்கினை வைத்தான். வாழ்வில் எல்லோருக்கும் வரும் இடைஞ்சல்கள், கவனச் சிதறல்கள் எல்லாம் இங்கேயும் வந்து போயின, தன்னை முனைவர் பட்டம் பெறுவதற்கான தகுதியை, முனைவர் படிப்பில் சேறும் முன்னரே பெற்றிருக்கிறான் என்று என்னால் சொல்ல முடியும். வருங்காலத்தில் அவன் வெறும் வெற்றியடைந்த ஒரு முனைவராக மட்டுமின்றி பலருக்கு வழிகாட்டுபவனாகவும், முக்கியமான சூழலியலாளனாகவும் வருவான் என்பது என் உறுதியான நம்பிக்கை. ஏனென்றால் , முனைவர் பட்டத்திற்காக அவன் நுழைவதற்கு மட்டும் அவன் எடுத்துக் கொண்டு பிரயர்த்தனம் இந்த அரசாங்கத்தின் system மீது உமிழ்ந்து விடத் தோன்றுகிறது.

கிட்டதட்ட ஐந்து கல்லூரிகள் இடம்பெயர்ந்து தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டான், இங்கேயும் எண்ணற்ற இன்னல்கள் இருக்கின்றன, சமீபத்தில் அவன் ஒரு paper presentationக்காக சீனா செல்லும் வாய்ப்பினைப் பெற்றான், ஆனால் அதற்கான clearance மற்றும் அரசு அளிக்கிம் subsidies மற்றும் reimbursmentகளைப் பெற்றிட அவன் போராடிய முறையினை உடனிருந்தே கவனிக்கிறேன். இப்பொழுது அவனிடம் ஒரு நிதானம் இருக்கிறது( இது அவன் ஆன்மீக பலம்), தன்னம்பிக்கையிலே ஒரு துளி கூட இழக்கவில்லை (தன்னை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள இதுவும் ஒரு காரணம் என்கிறான்) ஆனால் போராட வேண்டிய களமோ மிகப் பெரியது. பத்து வருடங்களாக படிப்பு என்னும் பெயரில் தவமிருக்கின்றான். அவன் இன்று தன்னை மட்டுமல்லாது தன்னைப் போல வருடங்கள் பாராது முனைவர் பட்டத்திற்காக தவம் செய்யும் எத்தனையோ மனிதர்களின் தவத்தினையும் மதிக்கிறான். ஆனால் இந்தச் சமூகம் இவனை de-motivate செய்யாமல் பார்த்துக் கொள்ளும் கடமையினை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

ஆராய்ச்சியாளர்களாக தன்னை அறிவியலிடம் ஒப்படைத்துக் கொண்ட எத்தனையோ இந்திய அறிஞர்கள் இந்த இந்திய system செய்யும் குளறுபடிகளிலும், புதிர்களிலும் தோல்வியுற்றிருப்பார்கள் என்று அவதானிக்க முடிகிறது. ஆனால் அவ்வப்பொழுது சிலர் வெற்றியும் அடைகின்றார்கள், எல்லா கோப்புகளையும் , மேஜைகளையும், அப்ளிகேஷன்களிலும் அடிபட்டு வெளியே தெரிந்து, போராடி வெற்றி பெறுவார்கள். ஏனென்றால் சரித்திரத்திற்கு இவர்கள் தேவைப் படுகிறார்கள்.

HISTORY NEEDS YOU MY FRIEND



(தொடரும்)


சனி, 7 செப்டம்பர், 2013

வராக மண்டபம்: ஈகோவும், எகோவும். - மகாபலிபுரம் -07

வராக மண்டபத்து ஈகோவும், எகோவும்

மகாபலிபுரம் 07- பஜ்ஜி சொஜ்ஜி - 35


இது முழுமையாக சிற்பங்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் என்று நான் எழுத ஆரம்பிக்கவில்லை. சிற்பங்கள் பேசும் மொழியினை, அதன் பின் புலக் கதையினை, சிற்பத்தின் மனநிலையை, அதை நவீனச் சூழலுக்கு ஏற்ப ஒரு சாமாண்யன்யனால் அனுகக்கூடிய வாய்ப்புகளைப் பற்றியே இதுவரை தேடியிருக்கிறோம். இந்தச் சிற்பங்களின் வாயிலாக வரலாற்றில் நடந்திருக்கும் ஏதேனும் ஒரு பிழை அல்லது தவறு என முடிவுக்கு வரும் SPACEஐக் கூட அதே சிற்பங்கள் தான் தருகிறதே.. அது தான் வரலாற்றின் தன்மையே அது சார்பற்றது, அதை எந்தத் திசையில் இருந்தும் பார்ப்பதற்கு அதை அனுமதிக்கும். இவ்வாறே புராணங்களை வரலாற்றை அணுகும் விதம் போல நெருங்கினால் எந்த தீங்கும் இல்லை.

 யுத்தம் என்பது உலகின் எங்கோ ஒரு புள்ளியில் நடந்து கொண்டே தான் இருக்கின்றது, 300 -400 ஆண்டுகளுக்கு முன்பு Super power நாடுகளாக இருந்த இந்திய/சீன நாடுகளில் ஒவ்வொரு பிராந்தியமும் போர்ச் சூழல் கொண்டதாகவே இருந்து வந்தன, இன்றைய சூப்பர் பவர்களான அமெரிக்க மற்றும் ரஷ்யா அதைத் தான் செய்துக் கொண்டிருக்கின்றன. நாகர்கள் மீதான தெய்வங்களின் தொடர்ந்த யுத்த கணக்குகள் கூட, அதை சிற்பங்கள்/புராணங்கள் வாயிலாகக் காட்டிய கலைஞர்களின் முயற்சியில் தான் சாத்தியமாகிறது, இந்த கலைப் பதிவுகளே!! இப்புராணங்களுக்கும், கலைப் படைப்புகளுக்கும் எதிரான அரசியலை முன் வைக்கும் இடத்தையும் தாமாகத் திட்டமிட்டே தருகின்றன.

வராக மண்டப்த்தின் நாற்புறத்திலும் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து வெளியே வர முடியாமல், இன்னும் சில நேரம் அங்கு தங்க வைக்க மற்றுமொரு விசயம் இருக்கிறது, அதற்கு நீங்கள் அன்னாந்துப் பார்க்க  வேண்டும். அட!! இது சாதாரண ஸ்ரீசக்ரம் தானே என்று சொல்லலாம், அது தான் சரி, வாயில் வழியாக சென்றதும் அர்த்த மண்டபத்தின் கூரையில் செதுக்கப் பட்டிருக்கும் மூன்று தாமரைகள் (விரிந்த நிலையில் இருக்குமாறு Bird's iye viewல்), பக்தி மார்கத்தின் ஸ்ரீசக்ரமான இவற்றின் வண்ணங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழியும் நிலையில் இருக்கின்றது, காவி வண்ணம் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதற்கு கீழ் நின்று நீங்கள் சப்தமிட்டால், அதன் ரிங்கார எதிரொலிதான் இந்த மண்டபத்தின் மற்றுமொரு சிறப்பு, வெவ்வேறு இசை கேட்கும் வகையான தூண்கள் எல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்டது தான். ஆனால் இதில் சாதாரன எதிரொலியாக அல்லாமல், ஒரு சங்கு அல்லது இரண்டு மணி ஓசைகளுக்கு இடையே ஆன ஒரு ரிங்காரம்(இது கூட சரியான பதமா என்று தெரியவில்லை). அதன் ஓசை நமது அசையின் மாத்திரை நீளத்தை விட மிக அதிக நேரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் சரியான Syllable(அசை)யினை மிகச் சரியாக சொல்ல வேண்டும்.

நான் ஒரு பத்து பதினைந்து முறை, வெவ்வேறு இடங்களில் இருந்து எதிரொலி கேட்டேன், “ஓம்” என்பது மிக முக்கியமான அசை என்பதை மறுக்க முடியுமா.. நான் இப்படி கத்திக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு guide-உடன் வந்திருந்த ஒரு கொரிய நாட்டவன், என்ன Mantra சொல்ல வேண்டும் என்றான், "Whatever the syllable you like?" என்றேன். வெறும் “ம்” என்றான். அது“ம்ம்ம்ம்ம்”  என்று எவ்வளவு நேரம் ஒலித்துக் கொண்டே இருந்தது!!??.அவன் சென்ற பின்னர், மீண்டும் தனித்தே முயற்சித்துக் கொண்டிருந்தேன். மற்றொரு வடநாட்டவனும் என்னிடம் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என்று விசாரித்தான், சொன்னேன். அவ்வளவு தான் ஆவணி அவிட்டம் போல காயத்ரி மந்திரம் சொல்லிப் பார்த்தான், ஒரு ஓசையும் திருப்பிக் கேட்கவில்லை.

ஒரு எதிரொலியும் கேட்காததால் -என்னைப் பார்த்தான். “you are looking for the idol not his voice”என்றேன், சிரித்தான். மறுபடியும் ”ஓம்” என்று மட்டும் சொல்லிப் பார்த்திருக்கலாம், after-all மறுபடியும் ஒரு முன் பின் தெரியாத மனிதனிடம் தோல்வியடைவதா என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.  There is no place for Echo when Ego exists.

ஆனால் இந்த வடநாட்டவனுக்கு மட்டுமல்ல, என்னுடன் வந்த மொத்த குடும்பத்திற்கும் இது கிடைக்கவில்லை. என்னுடன் என் தங்கை மட்டும் சித்தி மட்டும் மீண்டும் மீண்டும் அதைக் கேட்டு ரசித்தோம். உண்மையில் என் குடும்பத்தினர் போல பலருக்கு அதில் நாட்டமில்லையா அல்லது அதில் அதிசயப்படுவதற்கோ அல்லது ஆச்சரியப் படுவதற்கோ ஏதுமில்லை என்று நினைக்கிறார்களா?? தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் தான் சரியென்றால் எனக்கு இது மேலும் ஒரு fiction..

ஆனால் நான் சொல்வதும் சரிதான், cymatics பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறிர்களா? ஒளி வடியம் போன்று ஒலியின் வடிவத்தை அறிவது, உண்மையில் முதன் முதலில் இது உணரும் (திறணாக)பயிர்ச்சியாக இருந்தது, இன்றைய நவீன அறிவியல் தான் இதை அறியும் திறனாக மாற்றியிருக்கிறது. சமஸ்கிருதத்தின் அக்‌ஷரம், நமது மொழியின் அசை என்ற அலகுக்கு ஒத்தானது.

ஓம், ஸ்ரீ போன்ற எல்லா அக்‌ஷரங்களுக்கும் ஒரு வடிவம் இருக்கிறது. இன்றைய அறிவிலறிஞர்கள் இந்த ஓம் எனும் அசையின் வடிவமாக இந்த ஸ்ரீயந்திரத்தின் வடிவத்தைக் காட்டுகின்றனர். இணையத் தரவுகளிலே நாமும் இதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம், இதற்கான மென்பொருளான டோனோ ஸ்கோப்பினை தரவிரக்கம் செய்து நாமும் பரிசோதித்துக் கொள்ளலாம்.

அந்த ஸ்ரீயந்திரம், சக்கரம் அல்லது தாமரை எனப்படும் வேலைப்பாட்டிற்கு கீழே நின்று ஓம் என்று கூறினால் உங்களால் மிக துல்லியமாக ஒரு ரிங்கார எதிரொலியைக் கேட்க முடியும், அதை யார் செய்தாலும் கேட்க முடியும். இந்த கலைப் படைப்பு யாரையும் பாகுபடுத்திப் பார்க்கவில்லை, நமக்கு தான் நம்பிக்கை இல்லை, ஓற்றுமை இல்லை, அன்பு இல்லை, பொறுமை இல்லை, சந்தோஷம் இல்லை , தேடல் இல்லை - பின்னர் வாய்ப்புகள் இருந்தும் கொடுப்பினை இல்லை.

அடுத்த பதிவில் கொஞ்சம் மலையேறுவோம் மகிஷாசுரமர்த்தினி காத்துக் கொண்டிருக்கிறாள்.

தொடரும்

ஜீவ.கரிகாலன்

ஆனந்த யாழின் அற்புத இசை

                                      தங்க மீன்கள் - பார்க்கத் தவற விடக் கூடாத படைப்பு


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்று தமிழராய் நம் பெருமையை சொல்லும் இனத்தவர் தானே நாம்? இதில் நமக்கு ஒரு கேள்வி -

அது எப்படி??? நம் பூமியில் கல்லும், மண்ணும் தோன்றும் முன்பே உலோகத்தை வைத்து செய்யப்படும் வாளோடு பிறந்த தொல்குடி என்று நம்மைச் சொல்லிக் கொள்ள முடியும்?? இந்த வரியானது புறப்பொருள் வெண்பாமாலையில் (அல்லது புறப்பாட்டு), போர் முடித்து வாகை சூடிச் செல்லும் இரு போர் வீரர்கள் கள்வெறியில்(போதையில்) உளறியதாம். அதனால் இதை வைத்து நம் பெருமை பேசியதை எல்லாம் அநியாயம் என்று உதறித் தள்ளிவிட முடியுமா?? தற்குறிப்பேற்ற அணியோ, ஏதோ ஒரு மிகைப்படுத்தல் வகையறா அணியோ என்று இலக்கணம் வகுத்து நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா??.. இவையாவுமே இலக்கியத்திற்கு மட்டும் தான் அனுமதியா?? அதையே ஒருவன் தன் சினிமாவில் சொன்னால்......??

”மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத் தான் தெரியும், முத்தம் என்பது காமத்தில் சேராது என்று!!” இந்த தொடக்கம் தானே பலருக்கு எரிச்சலூட்டியது?? அவர் கூறியது தவறாகவே இருக்கட்டும் !! எதற்காக இத்தனை கொந்தளிப்பு?? உணார்ச்சிவசம்?? ஆர்ப்பாட்டம்??.

இதை “I am the happiest man in the world” என்று சொல்லும் ஒரு தனி மனிதனின் சந்தோசமாகப் பார்ப்பதற்கு இடமிருக்கிறது இல்லையா?? இல்லை  Tranquilityல் இருக்கும் ஒரு நல்ல கலைஞனின்  அகந்தையாகப் பார்க்கலாமே!! இந்த வரிகளுக்கு இவ்வளவு ரியாக்‌ஷன் கொடுத்தலே போதும் என்று நினைக்கிறேன், அதை விடுத்து மொத்த படத்தையும் இந்த வரிகளைக் கொண்டு justify பண்ணுவது ரொம்பவே எரிச்சலூட்டுகிறது.


என் உலகம் மிகச் சிறியதாகவும் - அதில் என் குடும்பம் தவிர, சில உறவுகள் மட்டுமே இருக்குமெனில் என் தத்துவங்கள், சித்தாந்தங்கள் எல்லாம் உலகத்தோடு பொருந்தாது, அங்கே எனக்கென தர்ம நியாங்கள் வேறுபடும்.
அது போலத் தான காமம் என்பது ஒரு infinite matter, முத்தம் கூட தேவையில்லை காமத்திற்கு ஒரு கற்பனையான நிழலே போதுமானது, அதுவும் தனிமையில் வாழும் ஒரு மனிதனுக்கான காமமே வேறு தானே!!.

நான் கூடத் தான் இதுவரை சில முத்தங்களைப் பெற்றிருக்கிறேன் (சிறுவயதில்) அதில் யாவிலுமே நான் காமம் என்ற உணர்வைக் கண்டதில்லை, இன்னும் எனக்கு அடுத்த முத்தம் கிடைக்கும் வரை முத்தமெல்லாம் காமத்தில் சேராது என்று தான் நான் நம்புவேன்(அறிவு சொலவ்து வேறு). ஆனால் இந்த வெற்று தர்கங்களை வைத்துக் கொண்டு இந்த அற்புத, ஆமாம் இந்த அதி அற்புதப் படைப்பை பரிகசிப்பதோ, இல்லை குறைத்துப் பேசுவதோ மிகுந்த வருத்தத்தினை அளிக்கிறது.



வெறும் குழந்தைகளைப் பற்றிய படமாகத் தான் நினைத்துக் கொண்டு தியேட்டரில் நுழைந்தேன். அப்புறம் தான் தெரிந்தது அந்தப் படத்தில் நானும் இருக்கிறேன், அது போல என் குடும்பமும் அதில் இருக்கிறது என்று. ராம் தனது முதல் படத்தில் தமிழ் பட்டப்படிப்பைப் படித்தவனின் வாழ்க்கையை உலகமயமான கார்ப்பரேட் உலகில் சிக்கித் தவிப்பதை காட்டியிருந்தார். இந்தப் படத்திலும் அதன் நீட்சி இருக்கிறது, கல்வி பெரிய வணிகமாகிப் போனதும், நவீனமயமான உலகில் பல தொழில்கள் முடங்கிப் போவதும், இதில் Survivalக்காக fittஆக இல்லாத ஒருவனை இந்த சமூகம் எப்படி அலைய வைப்பதும், வெளிநாட்டிற்கு கடத்தப் படும் நமது தொல்பொருள்கள் என  நிறைய விஷயங்களை அவர் காட்சிப்படுத்தியிருந்தாலும், படம் ஒரு முழுமையான குடும்பப் படமாகவே இருக்கின்றது.. ஏனென்றால் இன்றைய சிக்கலானப் பொருளாதாரச் சூழலில் குடும்பம் எனும் அமைப்பு மிக முக்கியமான தீர்வாகவும் இருக்கும், அதுவும் nuclear familyயில் இருந்து திரும்பி கூட்டுக்கு செல்லும் அமைப்பில் இருக்கிறது. அதனால தான் இந்தப் படத்தில் ஒரு Negative பாத்திரம் கூட அமைக்கவில்லை. ராமின் மனைவி, தந்தை, தங்கை என எல்லோரும் கச்சிதம். Superb Casting

ஆனந்த யாழை மீட்டுகிறாய், மிக அற்புதமான பாடலிலேயே லயித்து விடுகிறது மனசு, பார்ப்பதற்கு அந்த குளம் செஞ்சிக் கோட்டை போல் இருக்கிறது. முதல் பாதியில் வரும் நாஞ்சில் தேசம் இதுவரை வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டோம், இரண்டாவது பாதியில் எர்ணாக்குளம் மற்றும் மலைத் தொடர் என கண்களை குளுமையாகவே வைத்திருக்கப் பணித்து விட்டார், போதாதைக்கு நான்கு - ஐந்து இடங்களில் நமக்கு கண்ணீர் வேறு உருண்டோடியது.

 “அப்படி கண்ணீர் விடுற அளவுக்கு இந்த படத்துல?” என்ன இருக்கு என்று கேட்டீர்களானால் :
1. நீங்கள் தொடர்ந்து பவர் ஸ்டார், சந்தானம், சிவா, விமல், சிவகார்த்திகேயன், சூரி என்று திரும்ப திரும்ப திருமப்வெளிவந்து கொண்டிருக்கும் படங்களை கைகொட்டிப் பார்ப்பவர்களாய் இருக்கவேண்டும்.
2. அல்லது, நீங்கள் ஒரு க்ரீமி லேயர் வாழ்க்கையை வாழ்ந்து, அனுபவித்து அல்லது ஏழ்மையை மறந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஏனென்றால், நான் ஒரு திருமணம் ஆகாதவன், ஏன் குழந்தை கூட இல்லாதவன்(இந்த இரண்டுக்கும் சம்பந்தமில்லை தானே!!) , நான் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன், ஏனென்றால் நான்இயக்குனர் ராமாகப் பல இடங்களில் என் தந்தையைப் பார்த்தேன், சில இடங்களில் என்னையும் பார்த்தேன், அது தான் என்னை நெகிழ வைத்திருக்கிறது போலும்.

“பணம் இல்லைன்னா சொல்லுங்களேண்டா!! எதுக்கு டா நாலு நாள் -அஞ்சு நாளுன்னு அலைய விடுறிங்க... இல்லைன்னு சொல்றது என்ன அவ்வளவு கௌரவ கொறைச்சலா??”

“பணம் இல்லாதவன எல்லாம் முட்டாள்னு நெனைச்சுடாதிங்கடா!!” பெற்றோரின் வைத்தியத்திற்கும், கடன் நெருக்கடியிலும், கல்லூரிக் கட்டணத்திற்கும் என்று எத்தனை கிலோ மீட்டர்கள்? எத்தனை கும்பிடுகள், கெஞ்சல்கள், அவமானங்களை சந்தித்திருப்பேன் நான்.  ஆக அந்த காட்சியில் இருப்பது நான் தானே!!

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, (எனது பள்ளிப் பருவத்தில்) நான் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் (அப்படி என் பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்), என் காதில் விழாதவாறு அல்லது அடுக்களையில் அல்லது மெதுவாக ஜாடையிலோ இன்றும் தனக்கு சம்பளம் வாராததை என் அப்பா என் அம்மாவுக்கு சொல்ல, என் பிறந்தநாளோ அலல்து தம்பியினோடதோ, பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டிய நாளோ இல்லை தீபாவளியோ வரும் காலண்டரின் தேதியில் என் அம்மாவின் ஏக்கப் பார்வை விழும். அந்த தவிப்பை எனக்கு கிருஸ்துமஸ் தாத்தாவைப் போல ராம் தன் மகளுக்குப் பேசும் காட்சியில் பார்க்கும் பொழுது வலி இரட்டிப்பானது.

பள்ளிக்கூடத்தில் ராம் பேசும் காட்சியிலும், க்ளைமேக்சில் ராம் பேசும் காட்சியிலும் வரும் வசனங்கள், இதே சமூகம் மீது நமக்கிருக்கும்(அட்லீஸ்ட் எனக்கிருக்கும்) அதே கோபத்தின் எதிரொலியாகக் கேட்கும் சாட்டையடி. பத்மப்ரியாவின் கணவரின் பாத்திரப்படைப்பிலிருந்து, நித்யஸ்ரீயின் பாத்திரம் வரை எல்லாமுமே மனதில் எளிதில் பகிர்ந்து கொள்கின்றன.


ராம் மற்றும் அவரது மனைவியின் பொருத்தம் படத்திற்கு கூடுதல் பலம், “நீ சொல்லி நான் வராமலா இருந்தேன்??” என்று ராமின் மனைவி அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதை நினைவு கொள்கையிலும், “நானும் செல்லம்மா மாதிரி தானே!!” “ஏன் காலையும் அமுக்கி விடு” என்று சொல்லும் காட்சிகள் அத்தனையும் கவிதைகள், ராம் இலக்கியத்தோடு மிக நெருக்கம் என்பதை டைட்டில் கார்டில் வேறு போட்டு விட்டார்கள் (வண்ணதாசன், பவா, மாரி செல்வராஜ், சாம்ராஜ்).

“ஏன் இந்த நாய அடிக்கிறிங்க??”
“அது மேலையாவது என் கோபத்தை காட்டுறேண்டி”

அதே போல டீவி விளம்பரங்களினால் ஒரு பாமரக் குடும்பத்தில் ஏற்படும் இன்னல்கள், நம்மை அறியாது நம் மூளைக்குள் சென்று பிராண்ட் நேம்களை விதைத்துச் செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதிருக்கும் கோபத்தையும் வெளிக்காட்டுகிறார். விளம்பரங்கள் குறித்து அவர் பேசும் வசனங்கள் எல்லாம் எனக்காகவும், என் சகநண்பர்களின் நலனுக்காகவும் பேசும் மற்றொரு நண்பனின் குரலாகவே இருந்தது. உண்மையில் இந்த விளம்பரம் தான் ஒரு சிறுமியினை தற்கொலை செய்யும் அளவிற்குக் கொண்டு செல்லும் பின்னணியில் இருக்கிறது என்பதை உணரலாம்.

”அவன் நல்லவங்க” - ராமின் தாய்
“அவன் ரொம்ப நல்லவன்டி, அதான் கொஞ்சம் கெட்டவனாகட்டும்” -ராமின் தந்தை மனமுடைந்து அழும் காட்சியில், “எங்க அண்ணன் வாங்கிக் கொடுத்தது என்று சாக்லேட்டை மகனிடமிருந்து சாக்லேட்டை பகிர்ந்து கொள்ளும் தங்கையின் வசனமும் - இயக்குனருக்கு இந்த மாறிவிட்ட நவீன இயந்திர வாழ்க்கைச் சூழலிலும் குடும்பம் எனும் அமைப்பு மீதும் உறவுகள் மீதும் இருக்கும் நம்பிக்கை தெரிகின்றது. இதையும் கெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய போலியான கல்வி மோகத்தினை தான் அறுத்து எரிவதென தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்கிறார் ராம்.

ராமின் நடிப்பினையும், பாடி லாங்குவேஜும் சிலர் ஓவர் ஆக்டிங் என்று சொன்னார்கள். ஒரு முறை தான் ராமினை நேரில் பார்த்திருக்கிறேன் என்றாலும் இந்த வசன உச்சரிப்பிற்காகவும், உடல் மொழிக்காகவும் இந்த படத்தில் மெனக்கெட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் குடும்பத்தின் பின்புலமாக கொஞ்சம் high class என்று சொல்லிக் கொள்ளும் பிள்ளை மார்  சமூகத்தின் சாயல்கள் தெரியுமாறு திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகின்றது ( வேறு சமூகமாகக் காட்டியிருந்தால் நிச்சயமாக ரோஹினி ஒரு மீனை அறுக்கும் காட்சியாவது வைத்திருப்பார்கள்) , இதுவும் கூட இந்த களத்திற்காக தேவைப்படும் பாத்திரப்படைப்பு தான், ராமின் அப்பா வெளித் திண்ணையில் அமர்ந்தபடிப் பாடும் தேவாரப் பாடல் தான் இந்தக் குடும்பத்தின் சமூகம் பற்றிப் பேச வைக்கின்றது..


***************************************************************************
தங்க மீன் தேவதையின் தேர்வு Justify செய்யப்பட்டுள்ளது.
அவள் கேட்கும் அத்தனை கேள்விகளிலும் குழந்தைகளுக்கான SPACE நமது அவசர யுகத்தில் (அதுவும் படத்தில் வருவது கிராமம் தான்) எத்தனை தூரம் காணாமல் போயுள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். இது குழந்தைகளுக்கான இலக்கியம், விளையாட்டு, பெற்றோர் மற்றும் பெரியவர்களின் அரவணைப்பு மிக முக்கியமாக நமது செயற்கையான தனியார் பள்ளிக் கல்வி மோகம் என  பட்டியலிடுகிறது.

படத்தின் தலைப்பாக வரும் தங்கமீனாக ஆகும் பொருட்டு குளத்தில் குதித்த குழந்தையைத் தேடி குதிக்கும் ராமின் பாய்ச்சலோடோ அல்லது குழந்தையைக் காப்பாற்றிய கணத்திலோ அந்த செல்லம்மாவின் பொம்மை குளத்தில் மிதப்பது போன்ற காட்சியிலேயே முடிந்து விடுகின்றது, ஆனால் வெகு சிறப்பாகக் காட்சிப் படுத்திய நிகழ்வுகளையே!! நாடக வடிவில் வெற்றி பெறும் மாணவியாகக் காட்டி நிம்மதியாக வீட்டுக்குப் போங்கள் என்று அறிவுரை சொல்லவும் முனைந்திருக்கிறார்.  அதையும் நாங்கள் நின்று கொண்டு கைதட்டிய படியே  தியேட்டரை விட்டு வெளியேறினோம்.

தாரே ஜமீன் பர் போன்ற ஜெர்க் இல்லை, முருக்கு இல்லை என்று கூவாமல், ஒரு நல்ல படத்திற்கு உங்கள் ஆதரவினைத் தாருங்கள்... இல்லையேல் உங்களுக்காக இந்த வாரம் வந்திருக்கிறது “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” உடனேயே ரிசர்வ் செய்யுங்கள்.

இயக்குநர் ராமின் கரங்களுக்கு என் முத்தங்கள்
         
         - என்ன லாஜிக் என்றே தெரியலையே இயக்குனரே!! இந்த படத்தின் மீது பலருக்கு இருக்கும் கோபம்???

- ஜீவ.கரிகாலன்