வியாழன், 9 பிப்ரவரி, 2012

முத்தம் ......முத்தம் என்றால் என்ன ??
வெறும் இதழ் கொண்டு 
முத்திரை பதிக்கும் அஞ்சலின்
சொல்லும் செய்திதான் என்ன ?

எச்சில் கொண்டு ஈரம்
கொடுக்கும் பசை தனில்
ஒட்டிக் கொள்ளும்
உறவுகளும் யாவை ??

இச் என்ற சப்தத்திலோ
வேறொரு ஒலியிலோ
அவை மீட்டு வரும்
நினைவுகள் யாவை ??

எனக்கு யார் முதலில்
முத்தம் கொடுத்தது ??

மலடிப் பட்டம் தவிர்த்த
என் தாயா??

தன் குலத்தின் நீட்சியைக்
கண்ட என் தந்தையா??

தொப்புள் கொடி அறுத்தவளை
அன்று நான் உதைக்க,
எனை உச்சி முகர்ந்த
என் ஆச்சியா? பாட்டனா ?

சொல்லிக் கொடுத்த
"அ" சரியாக வந்ததால் -எனை
அள்ளி அணைத்த டீச்சரா?

வீட்டில் சுட்ட பணியாரத்தை
திருடி வந்து யாசகமிட,
எனைக் கண்ணனாய்ப் பார்த்த
பிச்சைக் காரக் கிழவியா??
இல்லை நான் வளர்த்த நாயா ??

இவைகளை எல்லாம் 
மறந்து உன் எச்சிலுக்காக 
பிச்சை எடுக்கிறேனே !!!
அதில் என்ன சிறப்பு 
இருக்கிறது????

1 கருத்து: