"செண்பகமே செண்பகமே" என்றப் பாடல் அந்தப் பேருந்தில் உள்ள டீவியில் ஓடிக்கொண்டிருந்தது, பேரிரைச்சல் தரும் ஹாரன் ஒலியில் ஒரு மண் லாரியைக் கடந்து லாலாப்பேட்டை பாலத்தில் அந்த அரசுப் பேருந்து சென்றுக் கொண்டிருத்தது. முசிறியிலிருந்து கரூர் சென்றுக் கொண்டிருந்த அப்பேருந்தில் முன் வரிசையில் இருந்த மூன்று முகங்கள் மட்டும் பேரதிர்ச்சியுடனும், குழப்பத்துடனும், ஒருவருக்கொருவர் பேசாமலும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
அவர்கள் பயந்தபடியே கொஞ்சம் கொஞ்சமாக அசோக் தன் கட்டுப்பாட்டை இழந்து வந்தான். அவன் கண்களிலே நீர், தரை தாரையாக வடிந்துக் கொண்டிருந்தது. அவனை எப்போதும் அணைத்துக் கொள்ளும் தாய் கூட கலவரமடைந்த முகத்துடன் சற்று தள்ளியே இருந்தார். அசோக்கின் தந்தை தான் அவன் அருகிலே அமர்ந்து, அவன் தலையிலே கை வைத்துக் கொண்டு அவனை சமாதானப்படுத்தி வந்தார் ,"கண்ணு இன்னும் கொஞ்ச நேரத்துல கரூர் வந்துரும்பா அமைதியா பொறுத்திருப்பா ....... கொஞ்சம் பொறுமையா இருப்பா , பயப்படாதைய்யா " என்று அவனை ஆசுவாசப் படுத்திக் கொண்டே வந்தார் . அசோக்கோ தன்னால் முடியவில்லை என்றும் "ஒன்னு அவளை பஸ்ஸில் இருந்து இறக்குங்க இல்லை என்னை இறக்குங்க" என்று சொல்லிவிட்டு பற்களை கடித்துக் கொண்டிருந்தான்.தனக்கு பின்னால் இரண்டு சீட் தள்ளி ஒரு இளம்வயதுப் பெண்ணும் அவள் பெற்றோரும் இருந்தனர். அவர்களை அவ்வப்பொழுது திரும்பித் திரும்பிப் பார்த்தக் கொண்டிருந்தான் அசோக்.
வேறுவழியில்லை என்று கண்களால் அவன் அம்மா சைகை செய்தாள். "சித்தலவாய் இன்னும் அஞ்சு நிமிசத்தில் வந்துவிடும் கொஞ்சம் பொறுத்துக்கோ ராசா" என்று அவனிடம் அவன் அம்மா கெஞ்சினாள். அசோக் தன்னை மிகவும் இழந்திருந்தான், தன்னிடம் பேசிய தன் அம்மாவை அவன் முறைத்த விதம் முற்றிலுமாய் மாறியிருந்தது."சொன்னாப் புரியாது உனக்கு ?" என்றுக் கத்தினான். பேருந்திலிருப்போர் அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். சித்தலவாய் நகரம் உள்ளே பேருந்து நுழைந்தது ,"இதோ இறங்கிடலாம் பா " என்றபடி அவன் தந்தை கண்டக்டரிடம் கை அசைத்தார். பேருந்து நிற்கும் முன்னர், அந்த இருக்கைக்கு பின்னால் இரண்டு இருக்கை தள்ளி இருந்த தாய் ,தந்தை ,மகள் ஆகிய மூவரில் , அதன் குடும்பத் தலைவரிடம் சென்று அவர் பேசுக் கொடுத்தார். முதலில் 'தன் மகளைப் பற்றி இவர் ஏன் கேட்கிறார் ?' என்றாவறே பார்த்த அவர் பெற்றோர் . அசோக்கின் தந்தைக் கூறியதைக் கேட்டு ஆச்சரியப் பட்டனர். அந்தப் பெண்ணும் அவரையும் பின்னர், அசோக்கையும் பார்த்து திடுக்கிட்டுப் பதுங்கினாள். அதற்குள் பேருந்து அந்த நிறுத்தத்தில் நின்று விட்டதால், அவன் அம்மாவும் அவனும் முதலில் இறங்கினர். புறப்படத் தாரை இருந்த பேருந்தில், "எல்லாம் இரத்தினகிரீசுவரர்" துணை என்று அவன் தந்தை, அவளுடையத் தந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பேருந்திலிருந்து இறங்கினார்.
அசோக் இப்போது கொஞ்சம் நிதானம் அடைந்திருத்தான், ஆனால் அவன் அம்மாவோ தன் சேலை முகத்தைக் கொண்டு கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். மறுபடியும் நாம் பேருந்தில் போனால் நன்றாக இருக்காது என்று உணர்ந்த அவர் தந்தை, ஒரு வாடகைக் கார் பிடித்தார். யாரும் யாருடனும் பேசாமல் அந்தக் காரினுள் நுழைந்தனர். அசோக் தனியாக முன் சீட்டில் அமர்ந்தான், அவன் முழுதுமாக நிதானப் பட்டு விட்டாலும் சலனத்துடனும் கொஞ்சம் குழப்பத்துடனும் காணப் பட்டான். காரில் தனிமைப் பட்டு விட்டதால், அவன் தாய் தான் தேக்கிவைத்திருந்த கண்ணீரை எல்லாம் வடித்துக் கொண்டிருந்தாள். அவர் தந்தை மட்டும் கல்லாய்ச் சமைந்திருந்தார்.
மூவரும் அப்போது முசிறியிலே நடந்தச் சம்பவத்தை மறுபடியும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
(தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக