திங்கள், 22 மே, 2017

திமுகவின் சாபம்

காதலும் அரசியலும் தான் ஒரு தனி மனிதனை எங்கே வேண்டுமானாலும் துரத்திவிடும், அரவணைப்பதைப் போலவே.

ஃபேஸ்புக்கில் சிறிது நாள் விலகி இருந்தாலும், சில முக்கிய அலுவல் ரீதியான வேலைகளுக்காக பதிப்பக ஐடியில் நுழைந்துப் பார்த்தேன்.

விநாயக முருகனின் அருவருக்கத்தக்கப் பதிவுக்கு எழுந்த ஒரு கண்டனத்தை மட்டும் வைத்து இதனை எழுதவில்லை. அவருக்கு சென்னை மெட்ரோவிற்காக இறந்துபட்ட தொழிலாளர்களுக்குத் தன் முதல் நாவலைச் சமர்பித்த, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு உயர்நடுத்தர வாழ்க்கையினை நாவலாகவே எழுதிச் சலித்த ஒரு மனிதநேய எழுத்தாளர் அதற்கு மேல் வற்றிவிட்டதினால், தன் பார்வைகளை மாற்றியிருக்கக்கூடும்.

நேற்றைக்கு கோபியில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது, அவரைப் பற்றி வா.மவிடம் விசாரித்தேன், ஒரு காலத்தில் தீவிரமாக ஈழ ஆதரவு போராட்டங்களில் இருந்தவர். ஒரு கட்டத்திற்குப் பின்னர் இப்போது முழுமையாக ஆசிரியராக மாணவர்களோடு இருக்கிறார் என்றார். வா.மவின் அறக்கட்டளைக்கு நிறைய உண்மைக்கே உதவி தேவைப்படும் நன்கு படிக்கக்கூடிய மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொண்டு சேர்க்க பெரும் உதவி செய்கிறார். வத்திராயிறுப்பில் ஒரு மனிதரைக் கண்டிருக்கிறேன், ஜடாமுடியோடு இருக்கிறார். அவர் யாரோடும் பேசுவதில்லை, மிக இளைய வயதிலேயே வத்திராயிறுப்பில் கேம்ப் வைத்திருந்த இயக்கத்தின் மீது கொண்ட அபிமானத்தில் ஒரு ஈழ ஆர்வலராக ஈழம் கிடைக்கும் வரை யாரிடமும் சகஜமாகப் பேசவும் கூடாது, முடி வெட்டவும் கூடாது என்று இருக்கிறார் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்கள் தலைவர் இருக்கிறார் என்றே நம்புகிறார்கள், இல்லை என்று புரிந்தால் மட்டும் என்ன செய்ய முடியும்? இப்படி நிற்கதியாய் நின்று போனவர்களும் இருக்கிறார்கள், அந்த காயம் ஆராமல் புலம்புபவர்களும், சாபமிடுபவர்களும் இருக்கிறார்கள்.

இதுபோக, ஒரு புதிய இளைஞர் கூட்டம், இந்தத் தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டிற்கும், நெடுவாசலுக்கும், டாஸ்மாகிற்கு எதிராகவும் இன்று நிற்கும் பல புதியவர்கள் அந்த வலியிலிருந்து எழுந்தவர்கள் தான். அவர்களுக்கு ஒரு தலைவன் புகுத்தப்படவில்லை, ஆனால் ஏற்கப்பட்டிருக்கிறான். அரசியல் கற்பிக்கப்படவில்லை, ஊடக ஆதரவு இல்லை, எந்த எழுத்தாளனோ கலைஞனோ விழிப்புணர்வு செய்யவில்லை. ஆனாலும் கூடுகிறார்கள் - எப்படி?

ஒரு காலத்தில் திமுக காரன் என்று சொன்ன நிறைய பிராமணர்களே இருந்திருக்கிறார்கள். அவர்களையும் அனைத்துச் செல்லுமளவுக்கு விசாலமான கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. மொழிப்போர், சூழல், தொழில், சமூகக்கட்டமைப்பு, பகுத்தறிவு செயல்பாடு என நிறைய அம்சங்களால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். இன்று திமுகவில் இணைவது என்பது ஊருக்கு வெளியே நிலம் வாங்கிப் போடுவது போலே. ஆட்சியைப் பிடிப்பது என்பது வாங்கி வைத்திருக்கும் நிலம் அருகே பைபாஸ் வருவது போன்ற கனவு கொண்டிருக்கும் எழுத்தாளச் சமூகத்தில் இப்படி எழுதுபவர்களை ஒத்துக்கொள்ளப்போவதேயில்லை என்றாலும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு திமுகவைத் திட்டிக்கொண்டிருக்கும் அநேக தமிழ் தேசியவாதிகள் முன்னால் திமுக தான் என்பது சந்தேகமேயில்லாத உண்மை. ஆனால், சென்ற வருடம் முதல் கவனித்து வருகிறேன் திமுகவின் சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து அல்லது கடந்த தேர்தலிலிருந்து இதுவரை காட்டாதத் தன் முகத்தை காட்டுவதாகத் தெரிகிறது. அது தன் குற்ற உணர்வை மறைத்துவிட்டு, வீழ்ந்துவிட்ட எதிரியின் கல்லறையை அவமதிப்பது. சரி நீங்கள் உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள்.

திமுகவை விமர்சிக்கும் போது பல மூத்த ஆரம்பத்திலிருந்து கட்சிக்கு உழைத்த பலர் மவுனமாக அதைக் கடந்துவருவதை இன்றளவும் பார்த்து வருகிறேன். ஏனிந்த மாற்றம், இன்றைக்கு இனப்படுகொலையின் கறைகளிலிருந்து திமுகவைப் காப்பாற்ற நினைப்பவர்களை செலுத்துகின்ற விசை எது?

அடிப்படை பிழைப்புவாதமின்றி வேறேதுமில்லை, ஒரு பகுத்தறிவு இயக்கத்தால் பரிணமிக்கப்பட்டு வேறு எங்கோ தன் சமூகப்பொருளாதார நிலையை கொண்டு சென்றிருக்க வேண்டிய சமூகம். இன்று ஆளுனரும், ஸ்திரமான முதல்வரும் கூட இல்லாத மாநிலமாக மாறுவதற்குக் காரணம் திமுகவின் bio-memoryஆக மாறிவிட்ட இந்த அடிப்படைப் பிழைப்புவாதம் தான் காரணம்.

எத்தனைக் கடுமையாகவும் கட்சியையும், தலைமையையும் விமர்சித்திருந்தும் தன் தலைவன் பிரபாகரன் என்று சொல்லும் சில ஆறுதல் தரும் நல்லுள்ளங்களும், மவுனமாக தங்கள் பக்கத் தவறைக் கடந்து வேறு பணிகளுக்குச் செல்லும் அதிகாரம் கொண்டவர்களும் கூட உங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்று எனக்கும் மகிழ்ச்சி இருக்கிறது.
ஆனால், ஈழ ஆதரவு நிலைப்பாட்டால் திமுகவை எதிர்ப்பது என்பது வெறும் ஈழ ஆதரவு மட்டுமல்ல, கடந்த அறுபது ஆண்டுகளாக எங்களையும் எங்கள் வளங்களையும் சுரண்டி அகபரித்துக் கொண்டிருக்கும் உங்கள் சூப்பர் குடும்பமே ஒரு இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் என்று சொல்லலாம்.

அப்படியான ஈழத்துக்குக் குரல் கொடுக்க ஒன்று கூடி நினைவேந்தலை ஆரம்பித்த மக்கள் தான், மெதுமெதுவாக தமிழகத்தின் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுக்கும் அடிப்படைத்தமிழர் உணர்வை பலப்படுத்திக்கொண்டே வருகிறது. ஆம் பலப்பட்டுவருவது யார் – இப்போது நன்கு வாசிக்கக் கூடிய எழுதக்கூடிய எழுத்தாளனாய் இருக்க வேண்டிய அவசியமற்ற, ஐடி போன்ற பெரு நிறுவனங்களில் வேலை பார்க்கக்கூடிய சாமான்யனும் என்பதில் தான் இன்றை பிழைப்புவாதப் போராளிகளுக்கும், அரிப்பெடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும், அரசியல் கனவு காணும் இரண்டாம் தர முதலாளிகளுக்குமான எரிச்சல். ஆகவே கண்டபடி குமுறுகிறார்கள்.
இன்றைக்குத் தமிழ்நாட்டின் சூழல் சார்ந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் அடிப்படையாக இருப்பது சிவப்புச் சித்தாந்தமோ, திராவிடச் சித்தாந்தமோ இல்லை அது தமிழர் நலன் என்கிற நேரடி அரசியல், அது தற்காலத்திற்கு அவசியமான அரசியல்.

இன்று விவசாயிகளுக்காகப் போராடும் திமுக ஆதரவு கோஷ்டிகளுக்கு எண்டோ சல்பைன் நுழைந்த கதையும் தெரியாது, கேரளா போன்ற மாநிலம் தடை செய்திருந்தும், ரசாயன அமைச்சகமே கையிலிருந்தும் அது குறித்துக் கிஞ்சித்தும் பரிசீலிக்காத மந்திரியைப் பெற்ற கட்சி தான், ஈழப் போர் சமயத்தில் மந்திரி பதவிக்காகவே பரிதவித்தது – 13 ஜூன் 2009 (அழகிரி மந்திரியாகப் பொறுப்பேற்ற நாள்). உண்மையில் ஸ்டாலின் அன்றே கட்சித்தலைவராக இருந்திருந்தால் கூட இந்த மாதிரி அவப்பெயரை சுமந்துவந்திருக்க மாட்டார்கள் என்று கூட நினைத்துப் பார்த்ததுண்டு. அபத்தம் – இப்படி யோசனை செய்வதில்.

இப்படியான ஒவ்வொரு துறைக்கும் தன் மகன், மகள், பெயரன், பெயர்த்திகளை வைத்துத் தனித்தனியாக நிறுவனங்கள் நடத்தி ஊடகங்களைப் பிடித்து, வளங்களைச் சூரையாடி, ஜாதிச் சண்டைகளைப் பெரிதுப்படுத்தி எல்லாவற்றையும் தன் குடும்ப நலனுக்காகவே சமரசம் செய்துகொண்ட ஒருவரை தலைவராகப் பெற்ற சமூகம்.

உங்களுக்குத் தலைவர் திரு. கருணாநிதியாக இருந்துவிட்டுப் போகட்டும், அதனால் எங்களுக்குப் பிரச்சனையேயில்லை.

ஏனெனில் நாங்கள் தமிழர்கள், எங்கள் தலைவன் – ஒரு போராட்டத்திற்காக தன் குடும்பம் மொத்தத்தையும் களத்திலேயே போரிட்டு இழந்தவன். அதனை, அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் கிடைக்கப் போகும் லாபங்களை எண்ணி மட்டுமே திமுகவை ஆதரிக்கும் ஆர்வலர்/எழுத்தாள சமூகத்திற்கு புரிந்துகொள்ளவே முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக